நம் அப்பன் வீட்டுச் சொத்து எது?

வைகுந்தமெனும் பரமபதம் நம் முதுசொம் என்று பார்த்தோம். அங்கு செல்வதற்கான வழியும் சொன்னோம். செல்வதற்கான தகுதி என்னவென்றும் பார்த்தோம். பரோபகரியான இறைவன் ஏன் எல்லோரையும் அழைத்துக் கொள்வதில்லை என்றும் கண்டோம்.

இப்படியொரு பிரம்மாண்டமான படைப்பைப் படைத்திருக்கிறான். அதிலொரு சின்னஞ்சிறு அங்கமான நாம், சுடர் விடும் அறிவைக் கொடுத்த பின்னும், "ஈதென்ன பிரம்மாண்டம்? இது என்ன விந்தை? எளிதாகத் தோன்றும் அத்தனை பொருளும் உண்மையில் complex-ஆக அமைந்திருப்பது ஏன்? ஒரு கேள்வி கேட்கப் போய் ஆயிரம் கேள்வியில் வந்து நிற்பதேன்? உலகில் எதைத் தொட்டாலும் ஒரு super engineer, ஒரு super mathematician, ஒரு super scientist, ஒரு super artist, ஒரு super yogeswaran கையெழுத்து இருக்கிறதே? என்று எண்ணி எப்படி நம்மால் வியக்காமல் இருக்கமுடிகிறது? எத்துணை அறிவு, எத்தனை திறமை, என்ன கைவேலை!! அப்பப்பா!

Yes! இதை அவன் எதிர்பார்க்கிறான். இந்த வியத்தலை! இப்பிரபஞ்ச சிருஷ்டிக்குப் பின்னாலுள்ள பெருமாளை (super Being)! இது கூட சுய தம்பட்டத்திற்காக அல்ல. ஒரு அன்பால்தான். ஏன்? தாயின் பிள்ளைகள் அம்மா மடியில் இருக்கும் போது தன் அன்னையை ஒத்த அழகு யாருக்கும் இல்லை என்று நினைக்கும். அப்படிச் சொல்லும் போது தாயார் முகத்தைக் கவனித்து இருக்கிறீர்களா? ஒரு மந்தகாசம் வரும்! இந்த வாஞ்சை நம்மிடம் இருக்கிறதா? என வேடிக்கை பார்க்கிறான் இறைவன்!

அவன் அலகிலா விளையாட்டு உடையவன். தனக்கென தனி உலகமொன்று. படைப்பிற்கென்று ஒரு விளையாட்டு உலகம் என்று படைத்துவிட்டு, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவ இவனால் முடிகிறதா? என்று பார்க்கிறான்.

மொழியில் வியத்தல் ஒருவனை கவிஞனாக்குகிறது! அறிவில் வியத்தல் ஒருவனை விஞ்ஞானியாக்குகிறது, இசையில் வியத்தல் ஒருவனை வித்வானாக்குகிறது, அழகில் வியத்தல் ஒருவனை ஓவியனாக்குகிறது, நிகழ்தலை வியத்தல் ஒருவனை கலைஞனாக்குகிறது! இதற்குப் பின்னாலுள்ள ரகசியத்தை எண்ணி வியப்பனை முமுட்சு ஆக்குகிறது!

நம் எல்லோருக்கும் கொஞ்சம், கொஞ்சம் இவையெல்லாம் இயற்கையாகவே உண்டு. அதிலிருந்து தொடங்க வேண்டும் ஆத்ம விசாரத்தை. எல்லாப் பாதையும் ரோமாபுரிக்கு இட்டுச் செல்லும் என்பது போல் அனைத்துக் கேள்விகளும் அவனிடமே இட்டுச் செல்லும். நல்லதோர் வீணை அன்றோ நாம்! அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திடலாமோ? உள்ளத்தின் வீணை மீட்டப்படும் போது எழும் இன்னிசை அவனே! கேள்விகள் உரசுவதால் பிறக்கும் ஞானத்தீ அவனே! அப்படி இருக்கும் போது எப்படி இத்தனை நாள் நம்மால் முமுட்சுவாக மாறாமல் இருக்கமுடிகிறது? இந்த ஞானத்தீ உட்புகுந்துவிட்டால்? வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!! என்கிறார் நம்மாழ்வார்.

வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர்
வைகுந்தன் தமர்எமர் எமது இடம் புகுத! என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே? 10.9.9

நமக்கு நம் அப்பனைக் காட்டிய முதற்தாய் சடகோபன் வைகுந்தம் வந்து சேர்கிறார். இவர் அடியார்க்கு அடியர், எனவே வாயிற்காப்போன் இவர் நாரணர் தமரோ (அடியாரோ!) என்று எண்ணி, அடியார், அடியாரை நேசிப்பது இயல்பு என்றவாறு இவரை உள்ளே அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அங்கு வாழும் நித்யசூரிகளோ! கடலிலே உள்ள நீர் மலைக்குள் உட்புகுவது போல் சம்சாரக் கடலில் மூழ்கி இருக்க வேண்டியவன் வைகுந்தம் வந்து விட்டானே! என்று மூக்கில் விரல் வைக்கின்றனர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்!

என்று இந்த விளித்தலை அப்படியே வார்த்தை ஆக்குகிறார் பொய்யாப்புலவரும்!

சரி, வைகுந்தம் புகுவது திண்ணம் என்று தெரிகிறது! ஆனாலும், எப்படி என்பது பலருக்குப் புரிவதில்லை!

படைப்பு இருக்கிறது, அதன் பின்னால் படைத்தவன் என்ற காரணி இருக்க வேண்டும் என்று ஏன் பலருக்குத் தோன்றவில்லை? ஏன் படித்த பலர் அரை முட்டாளாக காலத்தைக் கழிக்கின்றனர்? சரி, படைத்தவன் இருப்பதை உணர்ந்து கொண்டால் மட்டும் போதுமா? சாப்பாடு இருக்கிறது என்று தெரிகிறது. தெரிந்து என்ன பயன், சாப்பிடாவிடில்? நல்ல புத்தகம் இருக்கிறது என்று தெரிகிறது, வாசிக்காவிடில் அது இருந்து என்ன பயன்? அதுபோல் இறைவன் இருக்கிறான் என்று தெரிந்தாலும், அவனை அனுபவிக்கவில்லையெனில் அவனை ஆரிந்துதான் என்ன பயன்?

அங்குதான் பக்தி எனும் அரிய பொருள் நம் கைக்கு வந்து சேர்கிறது. இறைவனை போகிக்க வேண்டுமெனில் நாம் நாயகியாக வேண்டும்! அப்போதுதான் ஈர்பிற்கு உண்மையான பொருள் புரியும். அப்படி பக்தி பண்ணியவர்கள்தான் கோபிகைகள். அப்படி பக்தி பண்ணியவள்தான் ஆண்டாள், மீரா; ஆழ்வாராதிகள், மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றோர். பக்தி எனும் ஓடம் சம்சாரக் கடலைக் கடக்க உதவுகிறது. இறைவனின் கை வண்ணம் அவன் படைப்பு முழுவதும் பரிமளிக்கிறது என்பதைப் புரிய வைக்கிறது. எப்போதும் அவன் நினைவை நம்மிடம் தக்க வைக்கிறது.

சரி, எவ்வளவுதான் இருந்தாலும், சாகும் தருவாயில் இறைவன் நினைவு வரவில்லையெனில்? என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி சொல்கிறார் ஸ்ரீவில்லிப்புத்தூர் பட்டர் ஒருவர்!

9 பின்னூட்டங்கள்:

பத்மா அர்விந்த் 11/24/2006 10:25:00 PM

கண்ணன்
நானும் உயிர்வேதியியல் படிக்கும் போது ஆச்சரியத்திம் ஆழ்ந்திருக்கிறேன். பிரம்மாணடமான நீர்வீழ்ச்சிகள், மலைகள் அதையும் தாண்டி சின்ன உய்ரிகள் கூட தங்களை பாதுகாக்க ஒரு செயல்திட்டம் என்று எத்தனை அருமைகள் படைப்பவனிடம். இந்த திறமை வியந்து போற்றதக்கது. இயற்கையின் முன் நாம் எம்மாத்திரம். அதே என்னைப்போன்றவர்களுக்கு அம்மாவின் அன்பைப்போல இறைவனின் கருணையும் மறாந்தாலல்லவோ நினைவில் வருமா என்ற கேள்விக்கு. என் பிரச்சினையே அதுதான் எப்படி இந்த நினைவை கட்டுப்படுத்துவது என்று?அடிக்கடி ஆலயங்களுக்கோ அல்லது வீட்டிலோ படத்தின் முன் செலுத்தும் பக்தி என்னுடையது இல்லை என்றாலும் அவன் நினைவின்றி மனித்துளிகள் கூட சென்றதில்லை. முக்கியமாய் திட்டங்கள் பற்றி விவாதித்திருக்கும் போது கூட இப்படி எல்லாம் திட்டம் தீட்டித்தான் மனிதனை ஜீவராசிகளை இயற்கை பாதுகாக்கிறதா, இல்லை அதனதன் பாதுகாப்பு திட்டம் படைத்தவன் செய்திருக்கிறான் எத்தனை இயல்பானது அது என்று தோன்றும்.நாம் ஏன் இத்தனை தடுமாறுகிறோம்? சரியாக என் கருத்தை சொல்லவில்லை என்ற் நினைக்கிறேன். இன்னொரு நாள்

நா.கண்ணன் 11/24/2006 10:34:00 PM

நன்றி பத்மா:

உங்களைப் போன்ற சக விஞ்ஞானியுடமிருந்து இப்படிக் கேட்பது சந்தோஷமாக இருக்கிறது. எப்படி ஆச்சர்யப்பட முடியாமல் இருக்கமுடியும். Human genome என்று ஆரம்பித்தார்கள் எங்கு கொண்டு போய் நிற்கிறது பாருங்கள். என்ன complexity! எப்படி? இப்படியானதொரு விந்தையை உருவாக்க முடிகிறது. இது genome என்பதற்கு மட்டுமல்ல. எதைத் தொடுங்கள்...அப்படியே விரிந்து கொண்டு போகும் complexity. என்ன ஒரு ஞானம், என்னவொரு அறிவு இருந்தால் இத்தனை complex design உருவாக்க முடியும். Yet..living as such as is made simple. All the complex things are kept behind, hidden!

அவனை நினைத்திருத்தலே வழிபாடு. கோயிலுக்குப் போவது ஒரு சடங்கு, கிரிகை.

வாழ்க!

ramachandranusha 11/24/2006 10:46:00 PM

உள்ளே வரலாமா :-)

நா.கண்ணன் 11/24/2006 10:50:00 PM

உஷா!

பீடிகை போடும் போதே பயமா இருக்கு ;-)

அடுத்த பதிவில் பிரபத்தி சொல்லிவிட்டு இத்தொடரை ஒரு நிறைவிற்குக் கொண்டு வருகிறேன். அதன் பின் ஆய்விற்குப் புகுவோம்.

எல்லாமே ஒரு சத்ய சோதனைதானே!

enRenRum-anbudan.BALA 11/25/2006 02:51:00 AM

கண்ணன் சார்,

நான் வாசித்த, கடந்த 100 (atleast, could be more!) பதிவுகளில், சிறப்பான பதிவு என்று இதைக் கூறுவேன் ! வாய் வார்த்தையாக சொல்லவில்லை ! நல்ல நடையில் எளிமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.
//
Yes! இதை அவன் எதிர்பார்க்கிறான். இந்த வியத்தலை! இப்பிரபஞ்ச சிருஷ்டிக்குப் பின்னாலுள்ள பெருமாளை (super Being)! இது கூட சுய தம்பட்டத்திற்காக அல்ல. ஒரு அன்பால்தான். ஏன்? தாயின் பிள்ளைகள் அம்மா மடியில் இருக்கும் போது தன் அன்னையை ஒத்த அழகு யாருக்கும் இல்லை என்று நினைக்கும். அப்படிச் சொல்லும் போது தாயார் முகத்தைக் கவனித்து இருக்கிறீர்களா? ஒரு மந்தகாசம் வரும்! இந்த வாஞ்சை நம்மிடம் இருக்கிறதா? என வேடிக்கை பார்க்கிறான் இறைவன்!
//
இனி மேல் இன்னும் அதிகமாக "வியக்க" முயற்சி செய்வேன் !!!

பத்மாவின் பின்னூட்டக் கருத்தும் நன்றாக உள்ளது.

எ.அ.பாலா என்கிற பாலாஜி :)

துளசி கோபால் 11/25/2006 05:15:00 AM

//ஏன் படித்த பலர் அரை முட்டாளாக காலத்தைக் கழிக்கின்றனர்?//

இதுவா..? ரொம்ப சிம்பிள்.

படிப்பு வேறு அறிவு வேறு.

இன்னிக்கும் ஒரு பழங்கால கிராமத்துலே போய்ப் பாருங்க. குறைஞ்சபட்சம்
ஒருத்தராவது அறிவில் சிறந்தவரா இருப்பார். ஆனால் அவர் 'படிப்பு' படிச்சிருக்க
மாட்டார்:-)))

ஏட்டுப்படிப்பு ....? என்னத்தைச் சொல்ல?

நா.கண்ணன் 11/25/2006 08:38:00 AM

நன்றி பாலாஜி:

பத்மாவின் கருத்து மிக ஆழமானது. அவனை மறந்தால் அல்லவோ நினைப்பதற்கு என்பது அடிக்கோடு! ஆச்சர்யம் என்னவெனில் இதை அவர்கள் கவித்துவமாகச் சொல்லவில்லை. அறிவியல் செய்யும் எங்கள் ஆய்வக வேலைகளில் அவனின் கைவண்ணம் காண்கிறோம். அதை ரசிக்கப் பழகியிருக்கிறோம். 'விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்' என வியக்கும் தலைமுறை போய்விட்டது இப்போது. அறிவியல் தலைமுறையில் அறிவியலின் வழியாகவே அவனைக் காண வேண்டும்!! என் கட்டுரைகளின் பின்னணியும் இதுவே!

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/25/2006 10:29:00 AM

//இது கூட சுய தம்பட்டத்திற்காக அல்ல. ஒரு அன்பால்தான்.
....அப்படிச் சொல்லும் போது தாயார் முகத்தைக் கவனித்து இருக்கிறீர்களா? ஒரு மந்தகாசம் வரும்! இந்த வாஞ்சை நம்மிடம் இருக்கிறதா? என வேடிக்கை பார்க்கிறான் இறைவன்!//

சத்தியமான வார்த்தை கண்ணன் சார்!
தாயைப் பற்றிய அடுத்த சுப்ரபாதப் பதிவு போட்டு விட்டு இங்க வந்தா, தாயாகித் தாங்குகிறவனைப் பற்றிச் சொல்லி இருக்கீங்க!

"வியத்தலை"ப் பற்றி நீங்க சொன்னதை இன்னும் வியந்து கொண்டு இருக்கிறேன்! பத்மா அவர்களும் அருமையாத் தூண்டி இருக்காங்க!
"நாம் ஏன் இத்தனை தடுமாறுகிறோம்? சரியாக என் கருத்தை சொல்லவில்லை என்ற் நினைக்கிறேன்" என்று அவர்கள் நன்றாகவே சொல்லி விட்டு, தடுமாறுவதாகச் சொல்கிறார்கள்!

இதுவும் "வியத்தலினால்" வரும் தடுமாற்றம் தானோ? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/25/2006 10:52:00 AM

//வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே//

படிப்பும்(knowledge), அறிவும்(Wisdom,ஞானம்) இவையுடன் சேர்ந்து பக்தியும் ஜொலிக்க வருவது தானே ஆத்ம தீபம்!

ஞானம் = சூரியன்; படிப்பு = தாமரை;
பக்தி = குளத்து நீர்
சூரியனும் தாமரையும் இருந்து காதல் கொண்டாலும், குளத்தில் நீர் இன்றி என்ன பயன்?

வியத்தலே பக்தி என்று அருமையாச் சொன்னீங்க சார்!
நம் ஆழ்வாரும் பாருங்கள், இந்த தத்துவ விசாரத்தை, ஞானக் குறவஞ்சி என்று வைக்காது நாயகி பாவத்தில் தான் வைக்கிறார்! அதில் தான் பூரணமாக வியக்க முடிகிறது போலும்!

"கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும்கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும்கல்வி நாதன் வந்து ஏறக் கொலோ?" என்பது காதல் பாட்டு என்றால் யாராச்சும் நம்புவார்களா?

ஆழ்வார் வைகுந்தம் புகும் கட்டத்தை, அழகாக் காட்டி, கருத்தாய்ச் சொன்ன உங்களுக்கு எப்படி "நன்றி" என்று சொல்வது? அது தான் thanks giving அன்றே சொல்லி விட்டோமே!
பேசாமல் "வியக்க வேண்டியது" தான்!

பத்மா அவர்கள் சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது இது:
திருமங்கை போகாத கோவில்களே கிடையாது! நம்மாழ்வார் இருந்த இடத்தில் இருந்து எல்லா திவ்யதேச பெருமான்களையும், வரவழைத்துப் பார்த்தார்! இருவரும் ஆழ்ந்த ஆழ்வார்கள் தானே!