பகுப்பதும் ஒரு பண்பு, தொகுப்பது போல்!

Bringing Yesterday’s Masters to Today’s Minds

இருப்பது ஒன்றுதான். அதை எப்படியும் பகுக்கலாம். 100 இருக்கிறது என்று கொள்வோம். அதை ஒரே நூறு என்று நூறால் பகுக்கலாம். இரண்டு 50 என்று பிரிக்கலாம். நான்கு 25 எனலாம், 10 பத்து எனலாம், நூறு 1 எனலாம்.

இப்படித்தான் இப்பிரபஞ்ச சிருஷ்டி அமைந்துள்ளது. ஒன்று இருக்கிறது. அதற்குள் வெளி இருக்கிறது. அதைப் பேரண்டமாகப் பார்க்கலாம், அண்டங்களாகப் பகுத்துக் காணலாம், மண்டலங்களாகப் பிரித்துப் பார்க்கலாம், கிரகங்களாக எண்ணிப் பார்க்கலாம், கண்டங்களாகப் பார்க்கலாம், பின் தேசங்களாகப் பார்க்கலாம், மாநிலங்கள், மாவட்டங்கள், வட்டங்கள், பஞ்சாயத்து, கிராமம், தெரு, வீடு. அட! நான்.

என்னுள் புகுந்தால் அங்கங்கள், அங்கங்களுக்குள் திசுக்கள், திசுக்களுக்குள் செல்கள், செல்லுக்குள் சின்னக் குளம், குளத்திற்குள் கருவறை, கருவறைக்குள் மரபுத்திரி, திரிக்குள் டி.என்.ஏ, மூலக்கூறுக்குள் அணுக்கள், அணு ஒரு மண்டலமெனில் அம்மண்டலத்தில் கிரகங்கள் (புரோட்டான்), அக்கிரகங்களுக்கு செய்மதிகள் (எலெக்டிரான்), அவைகளுக்குள் குட்டித் துகள்கள், துகள்களுக்குள் வியாபித்து இருக்கும் வெளி.பத்துப்பத்தாக படம் பார்க்க சுட்டுக இங்கே!

பத்துக்குப் பத்து (To the power of ten)

"Eventually, everything connects."—Charles Eames
எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய் திரும்பி கிளம்பின இடத்துக்கே வந்துட்டோம் பாத்தீங்களா? என்ன அழகு! என்ன அமைப்பு! என்ன ஒழுங்கு! இவையெல்லாம் விதிக்குக் கட்டுப்பட்டு இயங்குகின்றன. சில விதிகள் காணக்கூடியவையாக உள்ளன. சில காணமுடியாதவையாக உள்ளன. பழம் ஏன் கீழே விழுகிறது? காணமுடியாத புவியீர்ப்பு இழுக்கிறது! இந்த மைக்ரோ வேவ் இருக்கு பாருங்க. அதைப் பாத்தா சாதுவா இருக்கு. அடுப்பு போல ஜெகஞ்சோதியா எரிவதில்லை. ஆனா, சில விநாடிகள் கூட வச்சுட்டீங்கண்ணா எல்லா உணவும் கருகிச் சாம்பலாப் போயிடும். அச்சிறு அலைகளைக் காணமுடிவதில்லை. ஆனால், அபார சக்தி கொண்டவையாக இருக்கின்றன. செர்னோபிள் அணுவுலை வெடித்த போது பெரிய நெருப்புக் கோளமெல்லாம் வரவில்லை. அணுக்கதிர் வீச்சு கண்ணிற்குத் தெரியாமல் பரவி பட்டவைகளை சுட்டுப் பொசிக்கிவிட்டது!

நாம் அறிவியல் நூற்றாண்டில் வாழ்கிறோம். இதையெல்லாம் சோதித்து அறிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றையும் தொலைக்காட்சி விளக்குகிறது. எண்ணிலா ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்ச சிருஷ்டியை ஞானிகள் இறையருளால் கண்டு சொல்லியுள்ளனர்.

முதலில் ஒன்று இருந்தது. அதற்குப் பெயர், உருவம் கிடையாது. அது தன்னியல்பால் தன்னைப் பகுத்துக் கொண்டது. முதற்பகுப்பில் வந்தவையெல்லாம் இதைப் போலவே தெய்வாம்சம் கொண்டவையாய் இருந்தன. அவை தத்துவமாய் இருந்தன. கண்களுக்கு புலப்படாதவையாக இருந்தன. அப்போது காலம் என்பது உருவாகவில்லை. எனவே இவைகள் அடிப்படையில் காலத்தை வென்றவையாய் இருந்தன. பின் இவற்றுள் ஒன்று படைப்புத் தொழிலை ஏற்றுக் கொண்டு கண்ணிற்குப் புலப்படும் பருப்பொருள் உலகைப் படைக்கத் தொடங்கியது. மற்றது, படைத்ததை ஒரு கால அளவில் அழித்தது. இடைப்பட்ட காலத்தில் தேவையான காத்தலை மற்றது செய்தது.

இவை எவையென்று உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். பிரபஞ்சம் காண்கின்ற சக்திகளாலும், காணப்படாத சக்திகளாலும் ஆளப்படுவதை நாம் எல்லோரும் உணர்கிறோம். காண்கின்ற உலகை எளிதாக ஆராய முடிகிறது. எளிது என்றாலும் அவ்வளவு எளிதல்ல. பௌதீகமாக ஆய்கிறோம். அதையே வேதியிலாக ஆய்கிறோம். உயிருள்ளவைகளை உயிரியலாக ஆய்கிறோம். அவற்றிற்குள் இன்னோரன்ன பிரிவுகள். காண்கின்ற உலகைப் புரிந்து கொள்ள இப்போதுள்ள துறைகள் காணவில்லையென்று புதிய புதிய துறைகள் வந்த வண்ணமுள்ளன. அப்போதும் புரிந்து கொள்ள வேண்டிய ஞானமும் (அறிவும்) வளர்ந்து கொண்டே போகிறது.

பிரபஞ்சம் ஒன்றிலிருந்து தோன்றியிருக்க வேண்டுமென்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அவர்களது ஆய்வுகள் படைப்பின் முதலிரண்டு நொடிகள் வரை போகிறது. அதற்கு மேல் போகமுடியவில்லை. ஒன்றுமே இல்லாத வெளியிலிருந்து பருப்பொருள் தீக்ஷ்ணய்யம் பெருகிறது. பின் பகுத்துக் கொண்டே போனால் பகுக்க முடியாது என்னும் போது மீண்டும் வெளியாகிப் போகிறது. இதை இப்படித்தான் அறிவியல் காண்கிறது.

வேதம் என்ன சொல்கிறது? முதலில் பரப்பிரம்மம் இருந்தது. சிலந்திப் பூச்சி தன்னுள்ளிருந்து எப்படி வலையை உருவாக்குகிறதோ, அது போல் இப்பரப்பிரம்மம் தன்னுள்ளிருந்து கண்காணாத் தெய்வங்களை உருவாக்கி, அவ்விறைச் சக்திகளின் மூலம் காணுகின்ற உலகைப் படைப்பிக்கிறது என்கிறது (சிலந்தி தான் உருவாக்கிய வலையுள் உறையும் தன்மை கொண்டது!). முதலில் தோன்றியது பிரம்மா. பிரம்மாவிடமிருந்து 11 ருத்ரமூர்த்திகள் தோன்றுகின்றனர். அவைகளுள் சங்கரன் சம்ஹாரத்தை மேற்கொள்கிறான். பிரம்மா பிற இறைச் சக்திகளை உருவாக்கி உலகைப் படைக்கிறான் (ருத்ரர்களில் நான் சங்கரன் என்பது கீதை வாக்கியம்).

எப்படிப் படைக்கிறான். இறைச் சக்தியை தன்மாத்திரைகளாக்கி, அவற்றிலிருந்து வெளியை உருவாக்குகிறான், வெளியிலிருந்து வாயு உருவாகிறது, வாயுவிலிருந்து அக்னி உருவாகிறது, அக்னியிலிருந்து நீர் உருவாகிறது, நீரிலிருந்து நிலம் உருவாகிறது. இந்த ஐம்பூதச் செயற்பாடு தன்னை உள்ளடக்கிய உடலை உருவாக்குகின்றன. (இதை விவரமாக விளக்க இயலும், அழகாக, விரிந்து கொண்டே போகும். பின்னூட்டத்தில் பார்த்துக் கொள்வோம்)

வானவியல் என்ன சொல்கிறது? பிரபஞ்ச வெளி, வெளியில் வாயுக்கள் நிரம்பியிருக்கின்றன, இந்த வாயுக்கள் அடர்த்தியுறும் போது நெருப்பு உருவாகிறது. அபரிதமான நெருப்பு உருவாகும் போது எழும் உஷ்ணத்தில் அணுக்கள் ஒன்று சேர்ந்து நீர், மற்றும் பல திட கனிமங்கள் உருவாகின்றன என்று. அப்படியே 100க்கு நூறு ஒத்துப் போகிறது.

அது எப்படி, எந்த பரிசோதனைக் குழாயும் இல்லாமல், ஆய்வு நிலையங்கள் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்து ஞானிகளால் புட்டு, புட்டு வைக்க முடிகிறது?

ஏனெனில் எந்த இறைச் சக்தி இவைகளை உருவாக்கியதோ, அது நம்முள்ளும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு பேசும் திறன் பெறும் போது இவை வெளிப்படுகின்றன. இத்தகைய இறை வெளிப்பாடுகளைச் சொல்ல அழகிய தமிழ்ச் சொல்லொன்று உண்டு. அது அருளிச் செயல் என்பது. அவன் அருளுகின்றான். அப்போது வெளிப்படுபவை சுத்த ஞானமாக இருக்கிறது. எனவேதான் இன்றளவும் வேதத்திற்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது.

வியாசர் தன் காலத்தில் கிடைத்த ஞான மாணிக்கங்களைத் தொகுத்து நான்கு வேதமாக்கித் தருகிறார். வேதத்தில் பஞ்ச பூதங்களின் செயற்பாடு பற்றி நிரம்பப் பேசப்படுகிறது. அப்போது தோன்றிய சக்திகளான அக்னி, வாயு, இந்திரன், வருணன் போன்றோர் ஸ்லாகித்துப் பேசப்படுகின்றனர். இச்சக்திகளுக்கு ஊற்றாக இருக்கின்ற ஆதி சக்திகள் பற்றி ஓரிரு சூக்தங்களே உள்ளன. இது தவறுதனால் அல்ல. எப்போதும் தொகுக்கும் போது எல்லாவற்றையும் தொகுத்துவிட முடிவதில்லை. நிறைய விட்டுப் போகத்தான் செய்யும்.

இதைப் புரிந்து கொண்டுதான், வியாசர் தொகுப்பில் கிடைத்த ஞானத்தால் பரப்பிரம்மம் யார் என்று அடையாளம் காட்டுகிறார். விஷ்ணு என்ற பதத்திற்கு எங்கும் வியாபித்து இருப்பவன் என்று பொருள். அந்தர்யாமிப் பிராமணம் என்றொன்றுண்டு அது எப்படிப் படைத்தவைகளுள் 'உள் உறைகிறான்' என்று விவரித்துச் சொல்கிறது. நாராயணன் என்றால் அழியாத பொருள்களின் இருப்பிடமாக இருக்கிறான் என்று பொருள். அழியாத பொருட்களுள் உறைகிறான் என்றும் பொருள். இப்படி விளக்கம் சொல்லி ஆதிப்பிரானுக்கு நாரணன் என்ற பெயர்ச் சூட்டல் நடைபெறுகிறது.

வேதத்தை அடிப்படையாகக் கொண்ட அத்வைதம், விஷிட்டாத்வைதம், துவைதம் இவைகள் இந்த நாமகரணத்தை ஏற்றுக் கொள்கின்றன. நாமகரணம் என்பது அடிப்படை definition என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆதித்தமிழ் உலகமும் வேதத்தை ஏற்றுக் கொண்ட சமூகமே. எனவேதான் தொல்காப்பியம் வேதச்சாயலில் இருக்கிறது. ஐந்திணைக் கடவுளர் யார்? மாயோன், இந்திரன், வருணன், சேயோன். பாலை என்பது ஒரு திணை அல்ல. முல்லையும், மருதமும் திரியும் போது பாலை உருவாகிறது. அதற்குக் கருப்பொருள் 'மாயோள்' என்கிறார் நச்சினார்கினியனார். [இப்படிச் சொல்வதில் ஒரு உடலியல் உண்மையுள்ளது! கண்டுபிடியுங்கள் பார்ப்போம்] பரிபாடல் எனும் சங்க நூல் நாரணனின் அந்தர்யாமித்துவம் பற்றியும், பல்வேறு ஊழிகள் பற்றியும், படைப்பு எப்படி நடக்கிறது என்றும் வேதத்தின் வழியொட்டிச் சொல்கிறது.

சங்கத்தின் நீட்சியாகத் தங்களைக் காணும் ஆழ்வார்கள் (சங்கத்தமிழ் மாலை முப்பது - ஆண்டாள்) பரிபாடலை ஒட்டி, வேத உபநிஷதங்களை ஒட்டி பிரபந்தங்களை உருவாக்குகின்றனர். பின்னால் வரும் முப்பெரும் ஞானவான்கள் இந்த ஞானத்தை மூன்று சித்தாந்தங்களாகப் பிரித்து நமக்குத் தருகின்றனர். காரணப் பொருளை நிமித்தமாகக் கொண்டு அத்வைதம் எழுகிறது. அந்தர்யாமித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு விஷிட்டாத்வைதம் எழுகிறது. காரியத்தை (படைப்பை) நிமித்தமாகக் கொண்டு துவைதம் எழுகிறது. அடிப்படைக் கருதுகோள் ஒன்றாக இருப்பினும் இவை பார்க்கின்ற பார்வையில் வேறுபடுகின்றன.

இந்த வைதீக மார்க்கம் இல்லாத பிற ஞான மார்க்கங்களுமுண்டு. அவை சமணம், பௌத்தம். சைவம் வைதீக மார்க்கத்தில் வருகிறது. சங்கரர் ஸ்தாபித்த ஷண்மதத்தில் வரும் சைவம் அடிப்படை definition படி நாராண தத்துவத்தை ஒத்துக் கொள்கிறது. ஆனால், தமிழகத்தில் தோன்றிய சில மார்க்கங்கள் சிவனைப் பரம்பொருளாகக் கொண்டு புதிய definition தர முற்பட்டன. அதைத் தென்னிந்திய சைவ சித்தாந்தம் என்பர். அதிலும் ஆழமாக ஊன்றிக் கவனித்தால் முப்பெரும் சித்தாந்தங்களின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். ஆயின் சொல்லும் வகையில் வேறு பட்டிருக்கும்.

21ம் நூற்றாண்டுத் தமிழனுக்கு முன்னால் ஒரு பெரிய ஆன்மீக விருந்தே சுவைக்கக் காத்துக் கிடக்கிறது. அவனுக்கு இதில் ருசி வரவேண்டும். ருசி வந்துவிட்டால் ஒன்றைச் சுவைக்க, ஒன்று என்று பலப்பல வந்து நிற்கும். தெளிவான ஞானம் ஒரு நிலையில் புலப்படும். ஏனெனில் அதைச் சிந்தாந்தம் என்றாலும், வேதாந்தம் என்றாலும், விஞ்ஞானம் என்றாலும் ஒன்றுதான். நாம் நம் சுவைக்கு ஏற்றவாறு எப்படிப் பகுத்துக் காண்கிறோம் என்பதைப் பொருத்து நம் துறை அமைகிறது. இதைத்தான் பின்வரும் திருவாய்மொழி செப்புகிறது:

வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே.

0 பின்னூட்டங்கள்: