சுவாரசியமான உலகம்!

தத்துவங்கள் மூன்று என்கின்றனர் வைணவர்கள். சைவர்களும் மூன்று என்றுதான் சொல்கிறார்கள். சித், அசித், ஈஸ்வரன் என்கின்றனர் வைணவர், பசு, பதி, பாசம் என்கின்றனர் சைவர்கள். இதில் சித், ஈஸ்வரன் பற்றி கொஞ்சம் பார்த்தோம். மிஞ்சியது அசித். அசித் என்றால் ஜடம். பஞ்ச பூதங்கள் ஜடப்பொருட்கள். ஆழமாக யோசித்தால் நமது சிந்தனை, மனது, பிராணன் எல்லாமே ஜடம்தான். சித் என்ற ஞானம் உள்ளே இருக்கும் வரை, ஜீவன் இருக்கும் வரை மனது, சிந்தனைகள் உயிர் பெறுகின்றன. சிந்தனை என்பது மூளையின் இயக்கத்தில் வருவது. மூளையோ மண்ணினால் ஆனது. உனக்கென்ன மூளை களிமண்ணா என்று வாத்தியார் திட்டுவார். அவர் மூளையும் களிமண்தான். உயிர்கள் அனைத்தும் சத்துக்களை மண்ணிலிருந்தே பெறுகின்றன. வேடிக்கை என்னவெனில் சிந்தனையின் அழகான வடிவங்கள் எங்கிருந்தோ பெறப்படுகின்றன. அறிவியல் சிந்தனையாகட்டும், ஆன்மீக சிந்தனையாகட்டும்! ஹெக்குல் என்பவர் பென்ஜீன் ரிங் (Benzene ring) வடிவத்தை ஒரு கனவில் பெற்றார் என்பது பிரசித்தம். இப்படி ஜடமான உடலில் ஒரு ஞானரூபத்தை வைத்து விளையாடும் திறன் அந்த ஒருவனுக்கே முடியும். இதனாலேயே பாரதி:

சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்குச்
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்!
...எங்கள் பரமா! பரமா! பரமா!

என்கிறான். இந்தகைய ஈஸ்வரன் பற்றி மீண்டும் பேசுவோம். அதற்குமுன் ஜீவன் பற்றிப் பேசியதில் ஒன்று விட்டுப் போனது. அதுதான் ஜீவன் உடலில் எங்கு உறைகிறான் என்பது பற்றிய இந்தியத் தெளிவு. ஜீவன் அரூபம் போல் தோன்றினாலும் அவனுக்கு ரூபமுண்டு. ரொம்ப இத்துணூண்டு. பிளக்கமுடியாதது அணு என்று சொல்வார்கள். அப்படியான ஒரு அணுதான் ஜீவன். இவன் உறையும் இடம் இதயம் என்று சொல்கின்றனர் இந்தியர்கள். அதனால்தான் யாராவது பொய் சொல்வதாக நினைத்தால் "நெஞ்சிலே கை வைத்து சொல் பார்ப்போம்" என்கிறோம். ஆத்ம சத்தியமாக சொல்ல வேண்டும் என்று பொருள்.

நெஞ்சை நிமிர்த்தி நட என்று சொல்வது! என் இதயத்தின் இதயமே என்பது! இறைவனை ஹிருதய கம்லவாசன் என்பது (ஆத்மாவிற்கும் அந்தர்யாமியாக அவன் இருப்பதால் அவன் உறையும் இடமும் இதயமே), 'நான்' எனச்சுட்டும் போது நெஞ்சில் கை வைப்பது இவையெல்லாம் இந்த உண்மையை வைத்து வருவதே! ஆங்கிலத்தில் கூட அன்பைச் சுட்டும் முகமாக My Sweet Heart என்று சொல்வதுண்டு. கிருஸ்துவத்திலும் Sacred Heart உண்டு.

நெஞ்சில் அது உட்கார்ந்து கொண்டு பின் எப்படி உடல் முழுவதும் வியாபித்து உள்ளது என்று கேட்கலாம்? ஒரு விளக்கை வீட்டின் மாடத்தில் ஏற்றினால் அது வீடு முழுவதும் பரவுவதில்லையா? (இந்த மாடம், விளக்கு போன்றவையெல்லாம் காலாவதியான உதாரணங்கள் ஆகிவருகின்றன!)

இப்படி நெஞ்சில் இருக்கும் ஆத்மா ஒரு நாள் அது பாட்டுக்குக் கிளம்பி விடுகிறது. டாக்டரிடம் கேட்டால் massive cardiac arrest என்கிறார். அசித்தான உடலுக்கு உணவு ஆத்மாவே. அது போய்விட்டால் ஜடம் தன் பழைய நிலையை அடைகிறது. அதுவரை, ஜடம் உயிருள்ள ஒன்று போல் நடமாடிவருவது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

Men in Black என்றொரு படம் (இரண்டு). அதில் இப்படித்தான் Alien beings மனித உடலுக்குள் உட்கார்ந்து கொண்டு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும். ஒரு காட்சியில் தலையைப் பிரித்துப் பார்த்தாக் குட்டியூண்டு Alien உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கும். உண்மையில் இந்த ஜீவன் என்பது இப்படித்தான் உடலில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. உட்கார்ந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை உடலை ஆட்டிப்படைக்கிறது. காலம் முடிந்தவுடன் அம்போ என்று உடலைப் போட்டுவிட்டுப் போய் விடுகிறது. இதை அறியாமல் உடல்தான் 'ஆசாமி' என்று நம்பி நாமும் குய்யோ, முறையோ என்று ஒப்பாரி வைக்கிறோம். இதை ஆயிரம் முறை சொன்னாலும் இறந்த வீட்டில் அழாமல் இருக்கமுடிகிறதோ? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டால் நீ அழுவது உன் நினைவுகளுக்கே அன்றி அந்த ஜீவனுக்கல்ல என்பார். ஒருவர் இறந்துவிட்டால் அழக்கூடாது என்பார். இது என்ன இரக்கமற்ற செயல் என்று சிலர் கேட்டுள்ளனர் அவரிடம். அவர் ஜீவன் முக்தர். அவருக்கு ஜீவனின் உண்மையான சொரூபம் தெரிகிறது. நமக்குத் தெரியவில்லை.

கிளம்பிய ஜீவன் தன் பாவ, புண்னியங்களுக்கு ஏற்ப உடனே இன்னொரு உடலைத் தேர்ந்தெடுத்துவிடுகிறது! நாம் இன்னும் அழுது கொண்டிருப்போம். நம் நெஞ்சின் அலைகள் ஓயும்வரை!!

இந்த சித் விவகாரம் எனக்கு மிகவும் சுவாரசியமாகப் படுகிறது. இதை எப்படி விஞ்ஞானம் இன்னும் விட்டு வைத்திருக்கிறது? இவர்கள் பேசும் சித்து ஒரு Microbiology! இல்லை Nanobiology! அதுவொரு மைக்ரோ சிப் (இல்லை nano chip). பாவ, புண்ணியக் கணக்கு அங்கு பதிவாகிறது. அதை வைத்துதான் நாடி ஜோசியன் வாசிக்கிறான் (அவன் ஒரு nanocard reader!!). எப்படியோ பூர்வ ஜென்ம பலா, பலன்கள் இந்த ஜீவனிடம் பதிவாகிறது. உடலைவிட்டுப் போகும் போது இந்தக் கணக்கை வாசித்து அவனது அடுத்த செயல் தீர்மானமாகிறது. இவர்கள் ஏதோ nanotechnology பற்றிப் பேசுகிறார்கள் என்று புரிகிறது. முன்பு எப்போதோ தமிழ்.நெட்டில் இதுபற்றிப் பேசும் போது ஒருவர் ஒரு பழைய பாடலை எடுத்துக் கொடுத்தார். அதில் ஜீவனின் உண்மையான அளவு சொல்லப்படுகிறது. மண், துகள், தூசு..இந்தத் தூசை நூறாக வகுத்து பின் அதைப்பிரித்தால் ஜீவனின் அளவு வரும் என்பது போல். யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் இடுங்கள். இவர்கள் பேசும் nanotechnology என்ன என்று அறிந்து கொள்வோம்.

இந்திய மெஞ்ஞானிகள் இப்படி ஆராய்ச்சி மேல், ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது மேலைத்திய லோகாதேயர்கள், ஜீவன் என்பதே பருப்பொருளின் நீட்சி என்று சொல்கிறார்கள். பருப்பொருள் ஒரு complex நிலையை அடையும் போது இத்தகைய 'நான்' என்னும் உணர்வு உண்டாகிறது என்கின்றனர். மருத்துவ ஆராய்ச்சியில் இதுவொரு முக்கிய ஆய்வுப் பொருள். அடுத்த நூற்றாண்டுகளின் முக்கிய் ஆய்வு நோக்காக இந்த 'நான்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க ஆய்வு ஏடான 'Science' இயம்புகிறது.

ஜீவன் உள்ளே இருந்து இயக்கும் போது அது தன்னையே ஆராய்ந்து அறிந்து கொள்ளுமா? இல்லை பருப்பொருளின் நீட்சியாக ஜீவன் அமையும்போது பருப்பொருளுக்கு அதை அறிந்து கொள்ளும் ஞானம் இருக்குமா?

இந்த ஞானம் என்பது என்ன? அது உடலில் எங்கு இருக்கிறது (இக்கேள்வி லோகாதேய பாணியில், ஏனெனில் ஞானம் என்பது ஆத்மாதான்)? இதை விஞ்ஞானம் கண்டு சொல்லுமா? இந்த உடல் இயக்கத்தில் அமைந்திருக்கும் ஒழுங்கமைதிக்கும், பிரபஞ்ச ஒழுங்கமைதிக்கும் காரணம் என்ன? ஒழுங்கு என்பதும் அதுபாட்டிற்கு அமைந்து கொள்கிறதா? இயக்கமென்று ஒன்று இருக்கும் போது இயக்குபவன் ஒருவன் அவசியமில்லையா? எல்லாமே அது, அது பாட்டிற்கு இயங்கிக் கொள்ளுமா?

உலகம் சுவாரசியமாக உள்ளது!

8 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 11/12/2006 08:51:00 AM

ஞாயித்துக்கிழமையாச்சே, கொஞ்சம் 'அக்கடா'ன்னு இருக்கலாமுன்னு பார்த்தா......

இப்படி மண்ணை (அதான் மூளையை ) பிசையும்படியா பண்ணிட்டீங்களே:-)))

('பெருமாளே, இந்த அசத்துக்கு 'அசித்'தைப்பத்திச் சொல்லு'ன்னு எனக்குள்ளே(!)ஒரே புலம்பல்)

நா.கண்ணன் 11/12/2006 09:39:00 AM

துளசி!

காலை வணக்கங்கள்! (எனக்கு நீங்க ஒரு மணி நேரம்தான் முந்தி!)

கனவுகள் பற்றிப் பேசலாம்ன்னுதான் முதல்ல நினைச்சேன். ஒரு தொடர்ச்சியா தத்துவத்ரயம் பற்றிப் பேசிவிடலாமே என்றுதான்.

சில நேரங்களிலே ரொம்ப எளிமையா இருக்கு, யோசிச்சா ரொம்பக் குழம்பிப் போயிடுது. என்ன செய்ய?

துளசியை யாராவது 'அசத்துன்னு' சொல்ல முடியுமா? உங்கள் அனுசரணையும், உற்சாகமும் வலைப்பதிவு உலகை போஷாக்காக வைத்திருப்பது கண்கூடு. உங்கள் சிஃபி.காம் தீபாவளி ஸ்பெஷல் சூபர். 11 தீபாவளி கொண்டாட்டம் என்றால் என்னைப் போல் காய்ந்து போன ஜீவன்களுக்கு...ஆகா! பேசாம நியூசி வந்துடலாம் போல இருக்கே!

துளசி கோபால் 11/12/2006 10:48:00 AM

//11 தீபாவளி கொண்டாட்டம் என்றால் ...//

இந்தவருஷம் இதுக்குமேலே. நேத்துதான் நம்ம தமிழ்ச்சங்க தீபாவளி முடிஞ்சது.


அக்டோபர் 7 ஆரம்பிச்சு நவம்பர் 11க்கு முடிஞ்ச (வெகு ) நீண்ட தாபாவளி:-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/12/2006 11:27:00 AM

சார் அப்ப இந்த சத் சித் ஆனந்தம் என்றும் சைவ தத்துவம் உள்ளதே?
ஆனந்தம் = ஈஸ்வரன்?

அட நம்ம கிருத்தவம் கூட பிதா, சுதன், பரிசுத்த ஆவி-ன்னு மூன்றாத் தான் சொல்லுது!

//அக்டோபர் 7 ஆரம்பிச்சு நவம்பர் 11க்கு முடிஞ்ச (வெகு ) நீண்ட தீபாவளி:-))))//

டீச்சர், நியாயமா இது? கார்த்திகை வரப் போகுது! ஆனா எனக்கு ஸ்வீட்டை இப்படித் தள்ளி விடுங்க; கண்டுக்க மாட்டேன்!
ஹூம்...நீங்க பொங்கல் அன்னிக்குக் கூட வேற ஒரு அசோசியேஷன்-ல தீபாவளிப் பட்டாசு வெடிச்சுட்டு வருவீங்க! பாவம் நரகாசுரன் :-))

நா.கண்ணன் 11/12/2006 11:41:00 AM

கண்ணபிரான்:

வாங்க. சத், சித், ஆனந்தம் இரண்டிற்கும் பொது. எல்லாம் அடங்கி ஒடுங்குவது ஓம் தத் சத்! அது மட்டுமே எஞ்சி நிற்பது.

ஸ்ரீவைஷ்ணவமும், சைவ சித்தாந்தமும் தமிழகத்தில் தோன்றியை. நிறைய ஒற்றுமைகளுண்டு. வைணவர்கள் அசித் என்று பருப்பொருளைப் பார்க்கின்றனர். சைவர்கள் அதற்குக் காரணமான சுத்த மாயையைப் பார்க்கின்றனர். ஈஸ்வரனை அந்தர்யாமியாகப் பார்த்து அவனுள் அடங்கும் அனைத்தும் என்கின்றனர் வைணவர். ஆனால் சைவர்கள் பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி என்கின்றனர். மேற்கொண்டு கேள்விகள் கேட்கும் போது அதுவும் அத்வைதத்தில் முடிந்துவிடுகிறது!! ஓம் தத் சத்!!

நீங்கள் சொல்வது போல் இந்த Trinity concept கிருஸ்தவத்தில் உண்டு. Joesph Campbell என்ற அமெரிக்க தத்துவ அறிஞர் கிருஸ்தவம் வைணவத்தின் கூறுகள் கொண்டது என்பதுடன் இந்துமதத் தாக்கம் உள்ளது என்றும் சொல்கிறார் (அது வேற சப்ஜெக்ட்). இஸ்லாம் அப்படியே சைவம்!! ஹஜ் யாத்திரைப் பாகவதர்களைப் பார்த்திருக்கிறீர்களா? சைவ அடிகள் போலவே இருப்பர். ஓம் தத் சத்!!

ramachandranusha 11/12/2006 01:02:00 PM

உள்ளேன் ஐயா :-)

நா.கண்ணன் 11/12/2006 01:05:00 PM

ஹலோ உஷா!

பாலைவனத்தில் தலைமறைவு? அது எப்படி முடிகிறது? :-))

Anonymous 11/18/2006 09:15:00 PM

கடவுளைப் பற்றி கதைப்பவர்களையும்
ஆன்மீகத்தைப் பற்றி அலசுபவர்களையும் காணும் போது
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
புறம் மட்டும் பார்க்கும் உலகில் அகம் பற்றி பேசும் உங்களுக்கு
நன்றி.