கண்ணன் காட்டிய வழி

சிறு பிள்ளையாய் இருக்கும் போது பெருமாள் கோயில் ஆர்வமெல்லாம் அங்கு கிடைக்கும் சக்கரைப் பொங்கல், பிரசாதம் வகையறாக்களுக்குத்தான். அக்கா இரண்டு பேர் எங்கேயாவது பாட்டுப் போட்டி என்று ஊர், ஊராய் போய் நிறையப் பரிசில்கள் வாங்கி வருவர். யாரும் பொற்கிழி வழங்கியதில்லை. நாராயண ஐயங்காருக்கு அது மிகவும் உதவியாய் இருந்திருக்கும். ஆனால் நிறையப் புத்தகம் பரிசாய் கிடைக்கும். அப்படித்தான் பாரதி எனக்கு அறிமுகமானான். பகவத் கீதையும் அப்படியே அறிமுகமாகியது. சுத்தமான தமிழ்க் குடும்பம். பண்டைய பொக்கிஷங்களையெல்லாம் யாராவது இப்படித் தமிழாக்கம் செய்து தந்தால் உண்டு! ராஜாஜிக்கு கடமைப்பட்டிருக்கிறோம். அவரது வியாசர் விருந்து தமிழில் வரவில்லையெனில் எனக்கு மகாபாரதம் அறிமுகமாகியிருக்காது. திருப்புவனம் சைவ ஸ்தலம். வைணவ பிரவச்சனமெல்லாம் கிடையாது. நாலே நாலு வைணவக்குடும்பங்கள். சமிஸ்கிருதம் படிக்கலாமென்றால் இருந்த ஒரு வேத பாடசாலையும் பொதுக் கல்வி முறையால் மூடப்பட்டுவிட்டது. இராஜாஜியின் குலக்கல்வி முறை படு தோல்வி அடைந்து கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது.

இச்சூழலின் இழப்பு என்னவெனில், குலக் கல்வியாக வந்திருக்க வேண்டிய வேத பாடமுறை, நாலாயிர திவ்யப்பிரபந்த சாற்றுமுறைகள் என்னிடம் வராமலே போய்விட்டன. புராண காலம் தொட்டு வழி வழியாய் வந்த பாடமுறை பாரதி வரை வந்து நின்றுவிட்டது. பாரதியே தன் புரட்சிக்கனலில் இம்முறைகளை சுட்டுப்பொசுக்கி இருக்கிறான் (பாரதிதாசன் அவன் படைப்புதானே). கண்ணதாசன் தனது சினிமாப்பாடல்களில் இந்திய தத்துவ ஞானங்களை எளியோரும் புரியும் வண்ணம் அள்ளித் தந்திருக்கின்றான். அத்தோடு போச்சு! பொதுக்கல்வி முறை secular-ஆக இருக்க வேண்டுமென்று நம் மரபு பற்றி உண்மையாக அறிய வேண்டிய சேதிகளைத் தராமல் செய்துவிட்டது! வேர்கள் இழந்த ஒரு தலைமுறையாக வளர வேண்டிய துர்பாக்கியம்!

ஆனாலும் இறை உணர்வு, பக்தி, பெரியோருக்கு மதிப்பளித்தல் போன்ற சில பண்புகள் எச்சமாக அப்போதும் வந்து சேர்ந்தன. அறிவியல் மாணவனுக்கு மெக்கா ஒரு அமெரிக்கா! அங்கு போகத்தான் இந்தியா என்னைத் தயார் படுத்தியது! அப்படியே 1985-ல் வெளியேறிவிட்டேன். வெளிநாடுதான் உண்மையில் இந்தியாவைக் கண்டுணரச் செய்தது. வேர்கள் என்பது எப்போதுமில்லாத அளவு அப்போது அவசியமாக இருந்தது. பின் மெல்ல, மெல்ல என் வேர்களைக் கண்டு கொள்ள ஆரம்பித்தேன். நிறைய வாசித்தேன், கேட்டேன், உரையாடினேன். பின் வரப்பிரசாதம் போல் மின்வெளி வந்தது. என் தேடலை எளிமையாக்கியது.

நம்மாழ்வாரைக் கண்டு கொண்ட போது நான் கண்ட ஆனந்தத்திற்கு ஈடு எதுவுமில்லை. சுஜாதா (எழுத்தாளர்)தான் என்னை சென்னை பல்கலைக்கழக பதிப்பகத்திற்குச் சென்று ஈடு தமிழாக்கம் வாங்கத் தூண்டினார். அதுதான் எவ்வளவு பெரிய புண்ணிய காரியம்!

திருவாய்மொழி ஒரு 'சக்தி பீடம்'. இதை வாசித்து அனுபவித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். இப்படியெல்லாம் எழுதினால் வெறும் கிழவன் பேச்சாகப்படும்! ஆன்மீகம் என்று பேசினாலே ஏதோ உச்சுக்குடுமி வைத்துக் கொண்டு, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, வழித்து திருமண் இட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற அளவு நம் ஆன்மீக உந்துதல் புழக்கடைக்குப் போய்விட்டது!

இச்சூழலில்தான் மின்வெளியில் வைணவம் பற்றிப் பேசுதல் அதி முக்கியத்துவம் பெறுகிறது. பகவத் விஷயம் பற்றிப்பேசுவது மிகக்குறைந்து வருகிறது. பக்தி என்ற பேரில் மூடநம்பிக்கைகளும், கன்னாபின்னாப் பாடல்களும் நிரம்பிவிட்டன. நம் முன்னோர்கள் மூடர்களல்ல. தங்கள் இன்னுயிரை ஈந்தும் இப்பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து நமக்கு அருளிப்போயினர். அதைப் புறம் தள்ளி வேண்டாத விஷய ஞானத்தைப் பெருக்கிக்கொண்டு என்ன ஆகப்போகிறது. நாளைக்கு உண்மையான துக்கம் வரும்போது எது நம்மைக் காக்கப் போகிறது? "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயாணா என்னும் நாமம்" என்பார் எங்க பட்டர்பிரான். ஆனாலும் யாரும் சொல்லுவாரில்லை!

இப்படி இருக்கும் போதுதான் பாசுர மடல்கள் எழுதத் தொடங்கினேன். எல்லோரும் secular-ஆக இருக்க வேண்டுமென்று வாயைக் கட்டினர். ஆயினும் தேடல் வெறி பீறிக்கொண்டு வந்தபோது அக்கட்டுரைகள் வெளிப்பட்டுத் தெறித்தன. எனக்கு அவைகளை இப்போது வாசிக்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். நானா இதை எழுதினேன் என்று. என் வீட்டிலேயே இப்படியொரு உச்சிக்குடுமி ஐயர் இருப்பது என் அக்காமார்களுக்குத் தெரியாது. அவர்களிடம் நீங்கள் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். ஆயினும் இன்று மின்வெளியில் பரந்த ஞானம் சுதந்திரமாய் உலா வருகிறது. எத்தனையோ இளைஞர்கள் வைணவம் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர்.

நாம் பேசித்தான் வைணவத்தை வளர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை. உலகின் செல்வமிக்க கோயில்களில் முதன்மையாக திருப்பதி நிற்கிறது. அங்கு வந்து போகும் பக்தர் கூட்டம் வேடிகன் நினைத்தாலும் கூட்ட முடியாது. இந்தியாவின் மிகப்பெரிய இந்து ஆலயமாக திருவரங்கம் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய இந்து ஆலயமாக அங்கோர்வாட் இருக்கிறது (அதுவொரு விஷ்ணு ஆலயம், இது பற்றிய என் பேச்சுப்பதிவுகளை 'அங்கோர்' என்று தேடினால் கிடைக்கும்). உலகின் மிகப்பெரிய இந்து இயக்கமாக இஸ்கான் இயக்கம் இருக்கிறது. ஸ்வாமி நாராயணா டிரஸ்ட் ஏற்படுத்தியுள்ள அற்புதமான விஷ்ணு ஆலயங்கள் லண்டன், சிகாகோ, தென் ஆப்பிரிக்கா, பிஜி என்று பரவலாக உள்ளன. அவன் பெரியவன். அதனால் 'பெருமாள்'. அவன் 'புருஷ உத்தமன்'. அவன் ஆதிப்பரம்பொருள் (இதை வைதீக மார்க்கங்களான அத்வைதம், துவைதம், விசிட்டாத்துவைதம் மூன்றும் முழு மனதுடன் ஏற்கின்றன). நாம் இன்று இருந்தாலும், செத்தாலும், உலகமே உடையுண்டு போனாலும் அவனுக்கு எந்த ஹானியும் (தீங்கும்) வராது.

ஆனால் அவனைப் பக்தி செய்வதால் நமக்கு வாழும் வரை நலம் கிடைக்கும். 'மயர்வற மதி நலம்' என்பதர்க்கு மதி=ஞானம், நலம்=பக்தி என்று பெரியோர் உரை எழுதி வைத்துள்ளனர். எனவே இப்பனுவல்களை ஓதினால் நமக்கு ஞானமும், ஞானத்தெளிவாம் பக்தியும் கிடைக்கும்.

இவ்வளவு பேச்சும் எதற்கு வந்தது? குழந்தை குமரன், முன்பு ஒரு நாள் ஆழ்வார்கள், வைணவம் பற்றி நான் எழுதிய கட்டுரையை தனது பதிவில் போட்டு என்னை சிறப்பித்து இருக்கிறார்.

http://koodal1.blogspot.com/2006/11/blog-post_14.html

இதை வாசித்தால் புரியும் சிறப்பு யாருக்கு என்று! கண்ணன் அல்லால் இல்லை சரண் (மாமேகம் சரணம் விரஜ) என்பதைச் சொல்ல வந்த பைங்கிளிதான் பாராங்குச நாயகி. எம் சரண் எம் கண்ணன். ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலில் சொல்ல வேண்டுமெனில் 'அனைத்துப் புகழும் ஆண்டவனுக்கே'. அழகான மனிதர்கள் அநுபவித்துப் பின்னூட்டம் செய்துள்ளனர். வைணவத்தின் அடிப்படை நோக்கம் இத்தகைய மென்மை உணர்வை வளர்ப்பதும், சாதுக்களை ஒருங்கிணைப்பதும்தான். மெல்ல அது கூடி வருவது கண்டு உள்ளம் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறது.

தொழுது வலஞ்செய்து சொல்லித் துதித்து
முழுதுணர்ந்தோர் கூறுமுறையே-எழுது!!

9 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 11/17/2006 10:43:00 AM

என்ன ஒரு அருமையான பதிவு.

கண்ணன்களுக்கு 'வழி' காட்டுறதே வேலையாப் போச்சோ" :-))))

நம்ம கண்ணபிரான் கூட எவ்வளோ அருமையா எழுதறார் பாருங்க.
நல்லா இருக்கட்டும் நம் இளைஞர்கள்.

நா.கண்ணன் 11/17/2006 10:51:00 AM

அன்பின் துளசி

மதுமிதாவிலிருந்து பலர் அருமையான பின்னூட்டம் அப்பதிவிற்குத் தந்தது என்னை அப்படி எழுத வைத்தது!

கண்ணபிரான் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். மரபு அறியாமல் புதுமை ஏதும் செய்துவிட முடியாது! அவர் பல விஷயங்களை அழகாக அறிமுகப்படுத்துகிறார்.

வடுவூர் குமார் 11/17/2006 11:28:00 AM

தேட ஆரம்பித்துவிட்டேன்.
தகவல்களுக்கு மிக்க நன்றி

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/18/2006 02:02:00 AM

//ஆன்மீகம் என்று பேசினாலே ஏதோ உச்சுக்குடுமி வைத்துக் கொண்டு, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, வழித்து திருமண் இட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற அளவு நம் ஆன்மீக உந்துதல் புழக்கடைக்குப் போய்விட்டது!
//

ஹா ஹா ஹா...
சரியாச் சொல்லி "நெத்தியடி" அடிச்சீங்க கண்ணன் சார்!
மன்னிக்கவும், இப்பதிவுக்கு வரச் சற்றுக் கால தாமதம் ஆனது!

உங்க இளமைக்கால அனுபவங்களை அழகா இரண்டே பத்தியில் எப்படிச் சார் சொல்ல முடியுது! இன்னொரு சமயம் ஒரு தொடர் போலவும் எழுதுங்களேன்!

நீங்க சொன்னது போல,
ராமானுஜருக்கு ஆழ்வார்கள்,
ராஜாஜிக்கு ஒரு ராமானுஜர்,
காந்திக்கு ஒரு துளசிதாசர்,
வாரியாருக்கு ஒரு அருணகிரி,
இன்றுள்ள நமக்கு ஒரு காந்தி, ராஜாஜி, வாரியார், கிவாஜ!

சரி, நம் சந்ததிக்கு யாரு? - இது பெரும் கேள்வி! யாருன்னா ஒருத்தர் வருவது இறைவன் அருள்!
அதுவரைக்கும் என் போன்ற "அரைவேக்காடுகள்" இப்படி எல்லாம் தமாஷா, ஜாலியா, புதிர்போட்டி அது இதுன்னு, ஏதாவது செய்து தக்க வைத்துக் கொள்கிறோம்.

வீட்டில் மனைவி கூட நாலு முறை சொல்லி, பின்னர் கைப்பேசியிலும் ஞாபகப்படுத்தினால் தான் ஸ்டிரிங் பீன்ஸ் வாங்கச் சொன்னார்களே என்று உறைக்கிறது. இதுக்கே இப்படி இருக்கும் "மிகப் பிஸியான" நாங்கள், இவ்வாறு ஈடுபடுத்திக்கொள்வதே நற்பணியாகக் கருதுகிறோம்; ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டே இருப்பதை விட, ஊதுகிற சங்கே பாஞ்ஜயசன்னிய சங்கைப் பற்றியதாக ஏன் இருக்கக்கூடாது??

நீங்கள் அடிக்கடி சொல்வது போல "குலதனம்" எவ்வளவு டாலர்/பவுண்டு/யூரோ கொடுத்தாலும் கிடைக்காது! அதன் அருமைகளை எங்களுக்கு அறியக் கொடுத்த உங்களைப் போன்ற பல சிறப்பாளர்கள், மதுரைத் திட்டம் இவற்றுக்குத் தான் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்!

இளைஞர்களுக்கு, இளைஞர்களால் சொல்லப்படுவதும், பரிமாறிக் கொள்வதுமே இப்போதெல்லாம் மிகவும் பிடிக்கிறது. அதுவும் அவர்கள் "பாஷை"யிலேயே!
அதை ஒரு முறை என் விடயத்திலேயே கண்கூடாகத் தெரிந்து கொண்டேன்; அப்போது உணர்ந்து கொண்டது தான் சார் இது!

//வைணவத்தின் அடிப்படை நோக்கம் இத்தகைய மென்மை உணர்வை வளர்ப்பதும், சாதுக்களை ஒருங்கிணைப்பதும்தான். மெல்ல அது கூடி வருவது கண்டு உள்ளம் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறது//

மானுடம் தழுவிய ஆன்மிகம் - இதற்கு நீங்கள், துளசி டீச்சர், காழியூரான், ஜடாயு போன்றோர் காட்டும் அன்பும் ஆசியும், எனக்கு மற்றும் குமரன், ராகவன் மற்றும் இன்ன பலருக்கு மிகவும் மகிழ்ச்சியே!!

"வந்து வழி வழி ஆட் செய்கின்றோம்", "ஞானத் தமிழ் தனில்" நாம்!

நன்றி கண்ணன் சார்! நன்றி டீச்சர்!!

enRenRum-anbudan.BALA 11/19/2006 05:54:00 PM

கண்ணன் சார்,
அருமையான பதிவு.

நேரம் இருக்கும்போது உங்களது பழைய பதிவுகளையும், கட்டுரைகளையும் (முக்கியமாக, வைணவம் குறித்த) வாசிக்க வேண்டும். நன்றி.//ஆன்மீகம் என்று பேசினாலே ஏதோ உச்சுக்குடுமி வைத்துக் கொண்டு, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, வழித்து திருமண் இட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற அளவு நம் ஆன்மீக உந்துதல் புழக்கடைக்குப் போய்விட்டது!
//
ஓரளவு உண்மை தான் தாங்கள் சொல்வது :-(

எ.அ.பாலா

நா.கண்ணன் 11/19/2006 05:59:00 PM

எம்.எ.பாலா:

"வைணவத்தின் அடிப்படை நோக்கம் இத்தகைய மென்மை உணர்வை வளர்ப்பதும், சாதுக்களை ஒருங்கிணைப்பதும்தான். மெல்ல அது கூடி வருவது கண்டு உள்ளம் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறது."

இது உங்களையும் மனதில் வைத்து எழுதியதுதான். பாலா என்றால் பால கிருஷ்ணனா? பாலசுப்ரமணியனா ;-)?

enRenRum-anbudan.BALA 11/20/2006 12:32:00 AM

கண்ணன் சார்,

//இது உங்களையும் மனதில் வைத்து எழுதியதுதான். பாலா என்றால் பால கிருஷ்ணனா? பாலசுப்ரமணியனா ;-)?
//
பாலாஜி (திருவேங்கடமுடையான் திருநாமம்) :)))
என் பதிவுகளை வாசித்து பின்னூட்டங்களும் இட்டமைக்கு நன்றி.


எ.அ.பாலா

பத்மா அர்விந்த் 11/20/2006 12:41:00 AM

கண்ணன்
அடையாளங்களே ஆன்மீகமானதால்தான்ன் இத்தனை சண்டைகளும். அவரவர் அடையாளம் முக்கியம் என்று விவாதிப்பதாலும், புரியாமலே அந்த அடையாளத்தை நிரூபிக்க வாதிடுவதாலும்தான். அன்பையும் மனித நேயத்தையும் இழந்து கடவுளையும் ஆன்மீகத்தையும் தேடுவதாலும் அடையாளங்கள் மட்டுமே அவற்றை அடைய செய்துவிடும் என்று நம்புவதும் வீண்.

நா.கண்ணன் 11/20/2006 08:25:00 AM

பத்மா:

ஒத்துக்கொள்கிறேன். இந்தியாவின் ஏழ்மையில் 'அடையாளம்' என்பது ஒரு முக்கிய விஷயம். அது மட்டுமே கஷ்டப்படாமல் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய சொத்து. இந்தியா பொருளாதார வளம் பெற்றுவிடும் போது இச்சண்டைகள் தானாகக் குறைந்துவிடும்.

ஒருமுறை நெதர்லாந்தில் கிருஸ்துமஸ் அன்று வழிபாடு செய்யலாமே என்று தேவாலயம் சென்றேன். சர்ச் திறக்கவே இல்லை. கோயிலுக்கு வர ஆளில்லை! கோயில், வழிபாடு என்பதெல்லாம் வட ஜெர்மனியிலும் பிரபலமில்லாத ஒன்று. இது வளர்ச்சியின் ஒரு அங்கம்.