சிற்றஞ்சிறு காலை வந்துன்னைச் சேவித்து...

சுப்ரபாதம் என்றால் என்ன?

இப்படிக் கேள்விவிட்டு இதற்கென ஒரு வலைப்பதிவே ஆரம்பித்துவிட்டார் கண்ணபிரான்

Very Good Morning!

அது சரி;
தூக்கம், விழிப்பு எல்லாம் கடந்த இறைவனை, நாம் ஏன் துயில் எழுப்ப வேண்டும்? பின்னூட்டத்தில் சொல்லுங்க பாக்கலாம்!!

என ஒரு கேள்வியை வேறு எழுப்பியிருக்கிறார்.


அங்கோர் திருமால் கோயிலில் அதிகாலைப் பிரதிபிம்பம்
Photo by N.Kannan


அதிகாலையில் நல்ல சிந்தனையைத் தூண்டும் கேள்வி! யோகநித்திரை கொள்ளும் இறைவனை நாம் ஏன் எழுப்ப வேண்டும்?

ஈஸ்வர தத்வத்தை விளக்கவரும் சங்கரர் ஜீவனின் நிலையை வைத்தே அதை விளக்குகிறார் (ஜீவனையும் உடலின் ஈஸ்வரன் என்றுதான் கீதை குறிக்கிறது). ஜீவன் உறங்குகிறான். அதுவும் உண்மையான உறக்கமில்லை. சொப்னா அவஸ்தை போன்ற அவஸ்தைகள் அதிலுண்டு. 'கனாக் கண்டேன் தோழி!' என்று பகவத் தரிசனம் முழுவதையும் கனா என்று சொல்லிவிடுகிறாள் கோதை. ஆக, உறக்கம், கனா என்பவையும் ஒரு யோகமென்று புரிகிறது. ஆயினும் மனிதன் விழிக்கிறான் (ஏனெனில் சூரியன் விழித்து விடுகிறது! diurnal rhythm). மனிதன் விழித்தால்தான் பொதுக்காரியங்கள் நடக்கும். அதாவது கைங்கர்யங்கள். ஆக உலக இயக்கம் நடக்க இறைவனை எழுப்பியாக வேண்டியுள்ளது!

பத்மநாபன் கண் துயிலும் போது உலகம் அழிந்து விடுகிறது. அவன் கண் விழிக்கும் போது உலகம் (பிரபஞ்சம்) உருவாகிறது. நல்ல வேளை cosmic scale-ல் இது எத்தனையோ கோடி யுகங்களுகளுக்கு ஒருமுறை நடக்கிறது (ஊழி தோரும் தன்னுள்ளே காத்து கெடுத்துழலும்-தி.மொ). அதற்குள் நமக்கு கோடி விடியல்கள் நடந்து முடிந்துவிடுகின்றன. எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கட்டும் என்று மனிதர்கள் தினம், தினம் அவனை எழுப்புகின்றனர். அவரது உறக்கம் எந்த நொடி என்பது பூலோகத்திலிருக்கும் நமக்கெப்படித் தெரியும்? மேலும், உறங்கும் நிலையில் பத்மநாபன் சங்கல்பத்தால் பிரபஞ்ச சிருஷ்டி செய்கிறார். சங்கல்பம் மனத்தில் எழுவது. மனிதர்களை உடலாகக் கொண்டிருக்கும் இறைவனுக்கு மனிதன் தினம் எழுப்பும் சுப்ரபாதம் உள்ளே ரீங்காரிக்கும். எனவே அவரது சங்கல்பம் எழும். உலகம் விழித்துக் கொள்ளும்.

இருந்தாலும் இறைவனை உறங்கவிடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு மனிதன் செயல்படுவது தெரிகிறது. ஆயர்பாடி மாளிகையில் ஆநிரையின் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகிறான், தாலேலோ! என்ற பாடலில் 'யார் இவனைத் தூங்கவிட்டார்? தாலேலோ!' என்பான் கண்ணதாசன். ரொம்பச் சமத்துதான் போ!

3 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 11/17/2006 11:53:00 AM

என் ஆரம்பகாலங்களில் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" படித்தபோது தான் விழிப்பு வந்தது.நாத்திகத்தில் இருந்து ஆத்திகம் மொட்டு அவிழ்வது போல் அவிழ்து மலராக மலர்ந்திருக்கும்.

நா.கண்ணன் 11/17/2006 12:00:00 PM

விஞ்ஞானியான என்னை இந்திய ஆன்மீகம் கட்டி இழுத்து வைத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் அது ஞானபூர்வமானது. இறைவனை நம்பு என்று சொல்வதில்லை நம் ஞான மார்க்கம். எப்படிப் பார்ப்பது என்று காட்டிக் கொடுக்கிறது! பிறந்த நாய்குட்டிகள் கண் திறவாமல் சுற்றி வருவதுபோல் உலகைச் சுற்றும் நமக்கு கண்ணைத் திறந்துவிடுபவன் ஆச்சார்யன். வைணவத்தின் ஆச்சார்ய பரம்பரை...என்ன சொல்ல? 'எந்தரோ மகானுபாவ..அந்த்ரிக்கி வந்தனம்' (வந்தோ குருபரம்பராம்)

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/17/2006 07:12:00 PM

//பகவத் தரிசனம் முழுவதையும் கனா என்று சொல்லிவிடுகிறாள் கோதை//

சூப்பர் சார்! அருமையாச் சொன்னீங்க!
இதுவே சாரம்!

// மனிதன் விழித்தால்தான் பொதுக்காரியங்கள் நடக்கும்
எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கட்டும் என்று மனிதர்கள் தினம், தினம் அவனை எழுப்புகின்றனர்//

பிம்பா-பிரதிபிம்பா பாவம்:
கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் ஒரு அழகான பெண், தனக்குப் பொட்டு வைத்துக் கொள்கிறாள்; அது கண்ணாடியிலும் தெரிகிறது. அழகு கூடுகிறது!
தன்னை எப்படி பாவிக்க நினைக்கிறாளோ, அதே போல் கண்ணாடியிலும் பாவிப்பது!

தான் உறங்க, இறைவன் உறங்கி,
தான் எழ, இறைவனும் எழுகிறான், என்று மனிதன் உண்மையில் தனக்குத் தானே பாடிக்கொள்கிறான் சுப்ரபாதம்!

சிற்றஞ்சிறு காலை வந்து, சிறப்பான விளக்கம் தந்து, சிறப்பித்த கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி!