இந்திய முகம் எது?

இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டால் இதுவொரு பிரச்சனை. நம்மைச் சரியாக அடையாளம் காட்டிக்கொள்வது!

நீங்க ஸ்ரீலங்கன்தானே? க்ஹூம்!
பங்களாதேஷ்? க்ஹூம்!
சரி, பாகிஸ்தான்? க்ஹூம்!
ஓ! இந்தோனிசியா? க்ஹூம்!
பிலிபைன்ஸ்? No!
ம்ம்ம்..அரபு? நோ!
துனிசியா? எதியோபியா? இல்லை!

இவைகளுக்கு நடுவே ஒரு பெரிய கண்டம் இருக்கிறது!

ஓ! இந்தியா. ஆனா இந்தியர்கள் கருப்பா..இருப்பாங்களே. அப்ப வடநாடா?... இல்லை.

எங்கேர்ந்து வரேங்கன்னு நீங்களே சொல்லிடுங்க.

தமிழ்நாடு!

அடச்சே! அப்படியா?....இதில் ஒரு நம்பமுடியாத் தன்மை இருக்கும்.

இவர் இப்படி ஊர் சுற்றி வந்தது தப்பில்லை. ஏனெனில் இந்திய முகவெட்டு அப்படி. அது எதுவாகவேண்டுமானாலும் இருக்கும்! உண்மைதான், என்னை மெக்சிகனா? என்று கேட்கிறார்கள். என் பெண்ணை ஸ்பானிஷ்? ஈரான்? என்று கேட்கிறார்கள்!

இது உயிரியல் சார்ந்த விஷயம். ஒரு ஸ்ரீலங்கன் சிங்களவரவைக் காட்டி இவர் ஆப்பிரிக்கரைவிடக் கருப்பு என்று ஒருவர் சொல்ல, உண்மை அப்படியே இருந்தது. கிழக்காசியா முழுவதும் இந்தியச் சீனக் கலப்பினமே. நாம் யாராவாகவும் இருக்கலாம். அதே போல் யாரும் இந்தியராக இருக்கலாம். இதை உணர்ந்துதான் கணியன் பூங்குன்றன் 'யாவரும் கேளிர்' என்று சொன்னாரா? என்று தெரியவில்லை.

இப்போது பிரச்சனை என்னவெனில், எழுச்சியுறும் இந்தியா! என்று எல்லோரும் பேசுகிறார்கள். இந்த இந்தியா அரசியல் வரைபட இந்தியாவா? இல்லை இந்திய வம்சாவளியினரைச் சுட்டுமா?

சிங்கப்பூரில், மலேசியாவில், பிஜி தீவில் இருக்கும் 'இந்தியர்கள்' உண்மையில் இந்தியர்களா? பர்மாவில் இருந்து வந்த ஒரு தமிழரைக் கண்டேன். அரசியல் காரணங்களுக்குக்காக கட்டிய பர்மா மனைவியின் குடும்பப்பெயரை வைத்துக் கொண்டுவிட்டார். ஆனால், நான் தமிழன் என்றவுடன் ஆசையாய் தமிழில் பேசினார்?

அது சரி, இலங்கைத் தமிழர்களை எங்கு போடுவது? இவர்கள் இந்தியர்களா? (பெருத்த குரலில் இல்லை என்பார்கள் என்று தெரியும். இருப்பினும் கேள்வி நிற்கிறது!)

காலம் இதற்கு விடை சொல்கிறது. கொரியர்கள் ஒரு வகையில் இந்திய வம்சாவளியினர் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் அது உண்மை. கெமிர் எனப்படும் இந்தோ-சைனர்கள் இந்தியர்களே! இந்தோனிசிய, மலேசியயர்கள் இந்தியர்களே! ஆனால் இப்படியெல்லாம் எதை வைத்துச் சொல்வது? உயிரியல் உண்மையை வைத்தா?

கலாச்சார ஒற்றுமையை வைத்தா? ஸ்ரீராமா எனப் பெயர் வைத்துக் கொண்டு தாய்லாந்தை ஆளும் மன்னர் இந்தியரா?

அரசியல் எல்லைக் கோடு வைத்தா? என்ன சார்! ஜெர்மனியில் நடத்தப்படும் இலக்கியக் கூட்டங்களில் ஸ்ரீலங்கன் தமிழர்கள் இருந்தாலும் என் உறவைத்தானே அங்கே நான் காண்கிறேன்! சரி, சரியாக ஒரு பாகிஸ்தான் பஞ்சாபிக்கும், இந்திய பஞ்சாபிக்கும் வேற்றுமை காட்டிவிடுங்கள்? ஒரு பங்களாதேசிக்கும், கொல்கொத்தாவாசிக்கும்? ம்ஹூம் முடியவே முடியாது. ஏன் தெலுங்கர்களுக்கும் தமிழர்களுக்கும்? மலையாளிக்கும் தமிழர்களுக்கும்?

எல்லைகள் அழிந்துவரும் உலகில் எது இந்திய முகம்?

அமெரிக்காவில் நானொரு இந்தியன் என்றால் சிரிப்பான். ஏனெனில், அங்கு இந்தியன் என்றால் செவ்விந்தியன்! கிழக்கிந்தியன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்!

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, எனக்குப் பொருந்துகிறது. அது சரி, நான் ஜெர்மனா? இந்தியனா?

2 பின்னூட்டங்கள்:

செந்தழல் ரவி 11/18/2006 03:24:00 PM

Its a Good Informative post.

NONO 11/18/2006 05:29:00 PM

//அது சரி, இலங்கைத் தமிழர்களை எங்கு போடுவது? இவர்கள் இந்தியர்களா? (பெருத்த குரலில் இல்லை என்பார்கள் என்று தெரியும். இருப்பினும் கேள்வி நிற்கிறது!)//

இது எல்லாம் எனக்கு பெரும் பிரைச்சனையே இல்ல....போகின்ற/நிக்கின்ற/எனது மனநிலையை பொறுத்து நான் சொல்ல நாடும் மாறிக்கொண்டு இருக்கும்..;-)