வழிகாட்டிகள்

கண்ணபிரான் பின்னூட்டத்திலிட்ட பதிவிற்கு ஒரு சிறு விளக்கம், இங்கே (கேள்வி சுவாரசியமாக இருப்பதால்!):


நீங்க சொன்னது போல,
ராமானுஜருக்கு ஆழ்வார்கள்,
ராஜாஜிக்கு ஒரு ராமானுஜர்,
காந்திக்கு ஒரு துளசிதாசர்,
வாரியாருக்கு ஒரு அருணகிரி,
இன்றுள்ள நமக்கு ஒரு காந்தி, ராஜாஜி, வாரியார், கிவாஜ!

சரி, நம் சந்ததிக்கு யாரு? - இது பெரும் கேள்வி! யாருன்னா ஒருத்தர் வருவது இறைவன் அருள்!


உலகிலுள்ள ஜீவராசிகளுள் மனிதன் கொஞ்சம் வித்தியாசமானவன். மாடு கன்று போட்டு பார்த்திருக்கிறீர்களா? (கிராமத்து மனுஷர்களுக்கு இது புரியும்). கன்று தரையில் வந்து விழும். ததுக்கு, பிதுக்கென்று தடுமாறும். சில நிமிடங்களில் நின்று விடும். மாடு தன் நாக்கால் சுத்தம் செய்யும். எப்படி முலைக்காம்பு இருக்குமிடம் தெரியுமோ? கன்று நேராக பால் குடிக்கப் போய்விடும். அவ்வளவுதான். இரண்டுநாளில் கன்று தெளிந்த ஒரு உயிரினமாக இருக்கும்.

ஆனால் மனிதன் அப்படியில்லை. பிறந்த குழந்தைக்கு ஒன்றும் தெரியாது. தாதி குளிப்பாட்ட வேண்டும், தாய் முலைக்காம்பை வாயில் வைக்க வேண்டும். பின் அது சப்பும். இப்படி ஆரம்பித்து, கிண்டர் கார்டன், ஆரம்ப, நடுநிலை, உயர் பள்ளியென்று படித்து. கல்லூரி, பல்கலைக்கழகம் என்று 30-40 வயதுவரை இவன் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது! மனிதன் ஒரு சமூக ஜீவி. சமூகம் இல்லாமல் தனித்து ஜீவிப்பது கடினம் (பிரம்ம ஞானிகள் தவிர). எனவேதான் மனிதனுக்கு வழிகாட்டல் தேவையாக இருக்கிறது.

பள்ளிப்பருவதில் யாராவது ஒரு role model தேவை. அது அவன் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும். கல்லூரி நாட்களில் நல்ல கல்லூரி, சகவாசம் (அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது, வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வரமுடியாமல் ஒரு பிகரை பாத்திமா கல்லூரிவரை அனுப்பிவிட்டு வந்து படிப்பைக் கோட்டைவிட்ட நண்பன் ஒருவனைத் தெரியும்). முதுகலை என்று வரும் போது கொஞ்சம் ஞான, வைராக்கியங்கள் வர ஆரம்பிக்கும். ஞானத்தேடல் ஆரம்பிக்கும். குரு யார்? வழிகாட்டி யார்? (எனது கல்லூரி வாத்தியார் பரம நாத்திகர். அவரது தாக்கம் நீண்ட நாள் என்னுள் இருந்தது).

வழிகாட்டிகள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். 'சம்பவாமி யுகே, யுகே!' என்று கிருஷ்ணன் சொன்னாலும், சமூக ஜீவியான மனிதனுக்கு காலம் உண்மையில் ஒரு பிரச்சனை அல்ல. இன்றைக்கு இருக்கும் நமக்கு ஒரு வள்ளலார் குருவாகலாம். பக்த பிரகலாதன் குருவாகலாம். ஏனெனில் சமூக ஜீவிதத்தில் பண்டைய ஞானங்களெல்லாம் வழி, வழியாக சேமித்து, பாதுகாக்கப்பட்டு வந்து சேருகின்றன. இதைச் சுட்டும் அழகான சொல்தான் "முதுசொம்" என்பது.

ஆயினும் சமகால மொழியில், ஸ்டைலில் சொல்ல ஒருவர் தேவைப்படுவதாக நாம் எண்ணிக் கொள்கிறோம். அது ஒருவகையில் அவசியமும் கூட. ஆற்றில் கிடக்கும் ஊற்று நீருக்கு ஊற்று உள்ளே கிடக்கும் நீர். அது போல சமகால வழிகாட்டிகளுக்கும் பண்டை ஞானமே ஊற்றாக உள்ளது. எப்போது தோன்றியது என்று காலம் சுட்ட முடியாத அளவு இந்திய ஞானம் ஆழம் பட்டுக்கிடக்கிறது. எந்த நூற்றாண்டு படைப்புக்களும் நமக்கு வழிகாட்டியாகலாம். சமூகத்தின் எந்தப் பிரிவு ஆசாமிகளும் நமக்கு வழிகாட்டியாகலாம் (ஸ்ரீராமானுஜரை ஆற்றுப்படுத்திய பல வழிகாட்டிகளில் திருக்கச்சி நம்பி என்பாரும் ஒருவர். இவர் வைசிக குலத்தைச் சேர்ந்தவர்).

The bottom line is தேடுதல் அவசியம். பசிக்கும் குழைந்தைக்கே உணவு கிடைக்கும் (பறவைகளைப் பாருங்கள் புரியும்).

சரி, சமகால வழிகாட்டிகள் என்று யாரைத் தேர்ந்தெடுக்கலாம்:

வேதாந்தம்: விவேகாநந்தர்
யோகம்: பரம ஹம்ச யோகாநந்தர்
சைவ சித்தாந்தம்: வள்ளலார்
வைணவம்: ஸ்ரீ கிருஷ்ணப் பிரேமி
அத்வைதம்: காஞ்சி மாமுனி (அருளுரை - தெய்வத்தின் குரல்)
பொது ஞானம்: ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

பௌத்தம், சமணம் இவை வழக்கொழிந்து போய்விட்டன. அக்கருத்துக்கள் இந்து தர்மத்தில் சேர்ந்துவிட்டன. எனினும் தேடினால் கிடைக்கும்.

இவை தவிர இலக்கியம் என்பதும் ஆற்றுப்படுத்தவல்லது. கவிதைகளில் ஞானப்பொறி தெறிக்கும் சில சமயங்களில்.

வழிகாட்டிகள் வழியைக் காட்டுபவையே. இட்டுச் செல்பவை அல்ல. இட்டுச் செல்பவை நம் கால்களே.

ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வார்: Truth is a pathless land என்று. மார்க்கங்கள் ஒரு சுவையே. சுவை மேவியதே ஞானம். சாப்பிடும் போது சுவை நாக்கு மட்டுமே! ஆனால், உணவு வழங்கும் சக்தி என்பது நமது செரித்தலைப் பொறுத்தது. செரித்தபின் நடத்தும் சக்திக்கு சுவை கிடையாது (கலோரி என்பது இனிப்பா? புளிப்பா? கசப்பா?).

எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு

8 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 11/19/2006 12:50:00 PM

//வழிகாட்டிகள் வழியைக் காட்டுபவையே. இட்டுச் செல்பவை அல்ல. இட்டுச் செல்பவை நம் கால்களே.//

அருமை.

அதான் அறிவு இருக்கே, சிந்திக்க.

enRenRum-anbudan.BALA 11/19/2006 04:26:00 PM

கண்ணன் சார்,
அற்புதமான, கருத்துச் செறிவு மிக்க பதிவினை தந்ததற்கு நன்றி !

//வேதாந்தம்: விவேகாநந்தர்
யோகம்: பரம ஹம்ச யோகாநந்தர்
சைவ சித்தாந்தம்: வள்ளலார்
வைணவம்: ஸ்ரீ கிருஷ்ணப் பிரேமி
அத்வைதம்: காஞ்சி மாமுனி (அருளுரை - தெய்வத்தின் குரல்)
பொது ஞானம்: ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
//

//எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு
//

சரியாகச் சொன்னீர்கள் !

enRenRum-anbudan.BALA 11/19/2006 04:34:00 PM

கண்ணன் சார்,
நேரம் கிடைக்கும்போது பாருங்கள், தங்கள் கருத்துக்களை கூறவும்.

http://balaji_ammu.blogspot.com/2006/11/tvm1.html
http://balaji_ammu.blogspot.com/2006/09/4_25.html
http://balaji_ammu.blogspot.com/2006/09/3_21.html
http://balaji_ammu.blogspot.com/2006/09/ii.html
http://balaji_ammu.blogspot.com/2006/09/2.html
http://balaji_ammu.blogspot.com/2006/09/i.html
http://balaji_ammu.blogspot.com/2006/08/1.html

I posted the above links in one of ravishankar's (KRS) earlier postings, but you might have missed seeing the comment.

நா.கண்ணன் 11/19/2006 04:39:00 PM

என்றென்றும் அன்புடன் பாலா!

நன்றி. கட்டாயம், வாசித்து பின்னூட்டமளிக்கிறேன். வலைப்பதிவர் வட்டத்தில் இன்னும் உற்சாகமாக பங்கேற்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், முன்பு போல் நேரம் கிடைப்பதில்லை. ஒரு நண்பனைப் போல் தோள் தட்டி காட்டுங்கள். அதை நான் வரவேற்கிறேன்.

meena 11/19/2006 08:39:00 PM

//எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு\\

இனிவரும் நம் சந்ததியருக்கு பொறுமையுடன் சத் சங்கம் கேட்ப தெல்லாம் இயலாத ஒன்றாகி விடும்போது எப்பொருள் யார் யார் நூல் வழி கேட்பினும் என்று மாற்றிக் கொள்ள வேண்டியது தான் :)

\\வழிகாட்டிகள் வழியைக் காட்டுப வையே. இட்டுச் செல்பவை அல்ல. இட்டுச் செல்பவை நம் கால்களே.\\

எல்லோர் பார்வையிலும் படும் படி எழுதி வைக்க வேண்டும்!

Hariharan # 26491540 11/19/2006 11:00:00 PM

வழிகாட்டிகள் மிக அவசியம்.

முற்போக்கு நாத்திகம் பகுத்தறிவு என்று வழி தவறி சுற்றி அலைந்து மீண்டும் தான் அமைதியாகச் சேருமிடத்திற்கான வழிக்குத்தான் வாழ்க்கை சம்பவங்கள் வாயிலாக இழுத்துச்செல்லும்.

சுயநலக் கொசுக்கள் பெருகிப்போனதில் அடித்த கொசுமருந்துப் புகையில் வழிகாட்டி இருந்தாலே வழிதப்பி விடத்தான் வாய்ப்புகள் அதிகம்.

The call and cry should come from within. அதுவரை It is better to be alone than in a bad company எனும் வழிமுறையே உகந்தது.

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/20/2006 12:05:00 PM

அருமையான பதிவு கண்ணன் சார்!
சிந்தனை தூண்டும் பதிவு!

"மெய்ப்பொருள் காணபது அறிவு" - மிகவும் உண்மை; அந்த அறிவைத் தான் நாம் இறைவனிடம் வேண்டும்!
மதி வேண்டும், கருணை நிதி வேண்டும் என்று வள்ளலார் இந்தத் தெளிந்த நல்லறிவைக் கேட்கிறார்!

"மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்" என்பது தானே இதத்தாய் காட்டிய வழியும் மொழியும்!
முழுதுணர்ந்து நம் கால்கள் தான் நடக்க வேண்டும்!

//கலோரி என்பது இனிப்பா? புளிப்பா? கசப்பா?)//
சரியான சிந்தனை;

அ. சமூகத்தின் எந்தப் பிரிவும் நமக்கு வழிகாட்டியாகலாம். ஆற்றுப்படுத்தலாம்!

ஆ. வழிகாட்டிகள் வழியைக் காட்டுபவையே. இட்டுச் செல்பவை அல்ல. இட்டுச் செல்பவை நம் கால்களே!

நா.கண்ணன் 11/20/2006 01:46:00 PM

கண்ணபிரான்:

வழிகாட்டி என்பதை வைணவ பரிபாஷையில் சொல்ல வேண்டுமெனில், ஆச்சார்யன். மோட்சத்தில் ஆசை வரும் பட்சத்தில் (முமூட்சு) இறைவன் நமக்குந்த ஆச்சார்யனைக் காட்டுவான். என்ன நம் கணக்கும், அவன் கணக்கும் கொஞ்சம் வேறுபடும். பொறுமை வேண்டும் :-)