நாம் ஏன் 'நன்றி' சொல்வதில்லை?

அமெரிக்காவில் நேற்று (அவர்களுக்கு இன்று) தாங்க்ஸ் கிவிங்க் டே! அதாவது நன்றி நவில் நாள்! கனடாவில் அக்டோபரில் வருகிறது. கொரியாவில் வந்து போய்விட்டது. இது குறித்து நான் சிந்திக்கவே இல்லை. ஏனெனில் நான் தமிழன் (ஹா!ஹா! விளக்கம் வருகிறது). ஆனால் கண்ணபிரான் மிக அழகான ஒரு பதிவை தனது 'மாதவிப் பந்தலில்' (என்ன அழகான பெயர்!) போட்டிருக்கிறார். மேலே பிரஸ்தாபிக்கும் முன் அவர் சொல்வதை அப்படியே வழி மொழிகிறேன். அதற்கு மேல் அழகாகச் சொல்லமுடியாது!

சரி, நம்ம கதைக்கு வருவோம். அது ஏன் தமிழர்கள் நன்றி சொல்வதில்லை. நாங்க தாங்ஸ் சொல்லுவோம் சார்! என்று அவசரப்பட்டு பதில் சொல்ல வேண்டாம். தாங்க்ஸ் சொல்வதும் தமிழ் பழக்கமில்லை :-))

நன்றி நவிலல் என்ற அழகான பதம் தமிழில் உண்டு. ஆனால், வீட்டில் நாம் தாயிடம் நன்றி சொல்வதில்லை. அக்காவிற்கு நன்றி சொல்வதில்லை. நான் முதல் முறையாக இந்தப் பழக்கதை அக்கா செல்லம்மாவிடமிருந்து கேள்விப்பட்டேன். அவள் பாத்திமா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள் அப்போது. எங்களுக்கெல்லாம் ஒருவருக்கொருவர் வீட்டில் நன்றி சொல்லக் கூச்சமாக இருந்தது. தமிழனுக்கு பழக்கமே இல்லை அது. கல்யாணமான பின்னும் இதனால் பிரச்சனை கூட வந்தது. நாம் வித்தியாசமான ஆட்கள்.

யாரும், யாருக்கும் காலை வணக்கம் சொல்வதில்லை. காலை வணக்கம் என்பது ஒரு மேலைப் பழக்கத்தின் மொழிபெயர்ப்பு. அவ்வளவே!

தமிழன் நன்றி கெட்டவன் என்று இதற்குப் பொருளில்லை. கணவன் நன்றி சொல்வதாயிருந்தால் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கி வருவான். மனைவிக்குப் புரியும். அம்மாவிற்கு ஒரு குடம் நீர் இறைத்துத் தருவான். தாய்க்குப் புரியும். ஆனால், முழுவதுமாக தன்னைத் தாய் தந்தையர் முன் சரண் செய்விப்பது மேலை நாட்டில் இல்லாத பழக்கம். சர்வாங்க நமஸ்காரம் நாம் மட்டுமே செய்கிறோம். என்னையே உனக்குத்தந்துவிடும் போது வெறும் மூன்று ஒலி 'நன்றி' என்ன மாத்திரம்? என்பது போல் இதுவுள்ளது!!

கிராமத்து ஆசாமியான நான் இப்போது 'நன்றி' சொல்லப் பழகிவிட்டேன். பிறர் சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறேன். காலம் மனிதர்களை எப்படி மாற்றிவிடுகிறது!

26 பின்னூட்டங்கள்:

Anonymous 11/24/2006 01:06:00 PM

தைப்பொங்கல் ஒரு நன்றி சொல்லும் பண்டிகை தானே?

நா.கண்ணன் 11/24/2006 01:13:00 PM

பெரும்பாலான கிழக்காசிய, தென்னாசிய நாடுகளில் Thanks Giving என்பது Harvest Festivalஆகவே அமைகிறது. நமக்கு உணவளிக்கும் பூமித்தாய்க்கு நன்றி சொல்வது போல். அமெரிக்க இந்தியர்கள் வேட்டை முடிந்தவுடன் கடா மாடுகளுக்கு நன்றி சொல்லிவிட்ட பின்னரே உண்பர். அதுவும் நன்றி நவில்தான்.

இப்படி உருவகமாக ஆசியர்கள் செய்வார்களே தவிர நேரடியாக நன்றி என்று சொல்வதில்லை! காரணங்களை யோசிக்கலாம் ;-)

துளசி கோபால் 11/24/2006 01:17:00 PM

//பிறர் சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறேன்//

நன்றி.

நா.கண்ணன் 11/24/2006 01:19:00 PM

Ha..ha!!

துளசி நீங்க எப்பவுமே சமத்து :-)

நன்றி.

Anonymous 11/24/2006 01:48:00 PM

என்ன சொல்லவரீங்க....சென்னைபட்டணத்துக்காரங்களுக்கு?....

நா.கண்ணன் 11/24/2006 01:53:00 PM

நான் ஒண்ணும் சொல்ல வரலை ;-) நான் இராமநாதபுரத்து ஆளூ. எங்க ஊருப்பக்கம் நன்றி சொல்லற பழக்கமில்ல. பொதுவாகவே நாம் (தமிழர்கள்) நன்றி சொல்லி தமிழ் வாழ்வை நடத்துவது இல்லை. பிற கலாச்சார தாக்கத்தினால்தான் நன்றி சொல்லும் பழக்கம் நமக்கு வந்திருக்கிறது. அது சுவாரசியமாக இருக்கிறது!

வடுவூர் குமார் 11/24/2006 02:06:00 PM

ஒரு வேளை நாம் எல்லாவற்றையும் "கடமை" யாக செய்ய பழகிவிட்டோமோ என்னவோ? அதனால் இந்த நன்றிக்கு அந்த நாளில் வேலையில்லாமல் போய்விட்டது?

Anonymous 11/24/2006 02:09:00 PM

பதிலுக்கு நன்றி கண்ணன்,

தமிழனின் தற்போதைய எதிர்பார்ப்பு என்னவென்றால் எல்லாவற்றிற்க்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதுதான்....அதனால் தான் தங்களிடம் அந்த கேள்வியை கேட்டேன்...

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/24/2006 02:11:00 PM

டீச்சர் ரொம்ப டபாய்க்கிறாங்க! :-)
இருந்தாலும் பிடிச்சிருக்கு! நன்றி டீச்சர்!

சார், நீங்க சொன்ன மாதிரி,
நாம் நன்றி வாயால் சொல்லக் கூச்சப்படுகிறோம்; நன்றி சொன்னா ஃபார்மாலிட்டி; உறவு கெட்டிப்படாது என்று ஒரு சிந்தனை வேறு! ஆனா செய்கையால் நிறையவே செஞ்சிடுவோம்! வாயால் சொல்ல மாட்டோம்; பொங்கல், மாட்டுப் பொங்கல், ஆயுத பூஜை என்று எல்லாமே தாங்கஸ் கிவிங் தானே!

இந்த ஊரில் டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார்; Opeartion theaterஇல் நர்ஸ் ஒவ்வொரு முறை உபகரணம் எடுத்துக் கொடுக்கும் போதும் தாங்கஸ் சொல்லணுமாம்! அடப்பாவிங்களா, ஆப்பரேசனைப் பண்ணச் சொன்னா நன்றி சொல்லியே ஆளைக் கொன்னுடுவீங்களா என்று கேட்டே விட்டேன்! நண்பர் கோபித்துக் கொள்ள வில்லை! கூடவே சொன்னார் பாருங்க ஒரு "தாங்கஸ்"! :-)

நாமக்கல் சிபி 11/24/2006 02:49:00 PM

நன்றி

நா.கண்ணன் 11/24/2006 02:51:00 PM

என்னங்க எல்லோரும் இப்படிக் கிளம்பிட்டீங்க ;-) நான் ரொம்ப கூச்ச சுபாவி! நன்றியே சொல்லறதில்லே :-))

ஆமா! இப்ப எதுக்கு நன்றி ? :-)

நா.கண்ணன் 11/24/2006 02:54:00 PM

அனானிக்கு:

தமிழ நிலமை பரிதாபமாக உள்ளது. ஜேஜே காலத்தில் 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்' என்று காலைப் பிடித்துக் கும்பிடும் பழக்கம்.
மேலைப் பழக்கமும் இல்லாமல், தமிழ் பழக்கமும் இல்லாமல், ரெண்டும் கெட்டுப்போச்சு இப்ப!

நா.கண்ணன் 11/24/2006 02:56:00 PM

கண்ணபிரானுக்கு:

கூச்சம்! ம்ம்ம்..

தமிழகப் பெண்கள் நன்றியைக் கண்ணாலேயே சொல்வது அழகு! நம்மவர்கள் நிறையக் கண்ணால் பேசும் பழக்கம் உள்ளவர்கள். இப்போது அது குறைந்து வருகிறது!

நா.கண்ணன் 11/24/2006 02:59:00 PM

குமாருக்கு:

மேலைப் பழக்கத்தில், நன்றி சொல்வது ஒரு நல்ல பழக்கம் என்று சொல்லித்தருகிறார்கள். ஜெர்மன் பள்ளியில் படிக்கும் என் பெண் சிறுமியாக இருக்கும் போது, நான் நன்றி சொல்ல மறந்துவிட்டால், 'எங்கே அந்த நல்ல வார்த்தை?' என்று கேட்டு வாங்கிக்கொண்டு போவாள்!

நமது பழக்கம் நன்றியைச் செய்கையில் செய்து காட்டுவது. ஆசியர்கள் சுபாவத்தில் கூச்சமுள்ளவர்கள்.

meena 11/24/2006 05:52:00 PM

நல்ல பதிவு! நன்றி :)

Anonymous 11/24/2006 06:46:00 PM

நான் கூட பதிவுக்கு நன்றி சொல்லப் போறதில்லை. நன்றி கெட்ட நாயேன்னு யாரும் சொல்லிடப் போறாங்க. அதுக்கு பதிலாத் தான் நட்சத்திரக் குத்து +. :)

-- மறத்தமிழன்.

பத்மா அர்விந்த் 11/24/2006 09:24:00 PM

கண்ணன், நாம் நன்றி மட்டும் சொல்வது இல்லை, அன்பையும் சரியாய் வெளிப்படுத்துவது இல்லை. இதனாலேயே பலருக்கும் taken for granted மனோநிலை அவ்ந்து எப்போதாவது ஒருநாள் கொட்டித்தீர்த்து சமாதானமாகி, திரும்பவும் பழய பாட்டு. இப்பொதெல்லாம் இது சற்று பரவாயில்லை.
oops. நன்றி இந்த பதிவிற்கு:))

நா.கண்ணன் 11/24/2006 10:12:00 PM

ஆண்களுக்கு பெண்களிடம் எப்படி அன்பு செய்வது என்று தெரிவதில்லை. அதிகாரம் பண்ணினால் அன்பு இருக்கிறது என்று ஒரு தமிழன் எண்ணுகிறான். பெண்களோ அதற்கு ஒரு படி மேல் போய் இவனை முழுவதும் கொத்தகைக்கு வாங்கிய மாதிரி நடந்து கொள்கிறாள். Possesiveness is not love! அடிப்படையில் அன்பு என்றால் என்ன விலை என்பதுதான் நிலமை. ஒரு மனைவியை எப்படி ஆதரவாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு அமெரிக்க ஆண்மகனிடம் தெரிந்து கொள்ளலாம். அதே போல் ஒரு ஆண் மகனுக்கு என்ன சுகம் கொடுத்தால் அவன் குடும்பத்துடன் இருந்து செயல்படுவான் என்று ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் கற்றுக்கொள்ளலாம். நம்ம ஊரில் ஒரு குழந்தை பெற்றுவிட்டால் அவள் அரைக்கிழவி, இரண்டு பெற்றவுடன் அவள் முழுக்கிழவி ஆகிவிடுகிறாள். ஸ்லிம்மாக இருந்த நடிகைகள் கூட பூசணிக்காயாய் மாறிவிடுவது ஆச்சர்யம்!! கொரியாவில் பெண்கள் ஆண்களின் பார்வையில் அழகாகப் பட வேண்டுமென உடம்பை டிரிம்மாக வைத்திருக்கின்றனர். ஆண் மகனும் நிறைய உடற் பயிற்சி செய்து பெண்ணுக்கு ஏற்ற உடல் வாகைப் பேணுகிறான். காமசூத்திராவை உலகிற்குத் தந்த இந்தியாவில் இன்று காமக் கல்வி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். இது காலத்தின் தேவை!

ரவிசங்கர் 11/24/2006 10:27:00 PM

இது மாதிரி நானும் பல நாட்கள் சிந்தித்து இருக்கிறேன். நீங்கள் முந்திக் கொண்டு பதிவு போட்டுள்ளீர்கள். நம் பெரும்பாலான உணர்வுகளை சாடைகள், முகப் பாவங்கள் ஆகியவற்றால் தெரிவித்து விடுகிறோம். ஆசியப் பண்பாடு, மொழி எல்லாமே context based என்பார்கள். நேரடியாக எதையும் சொல்ல மாட்டார்கள். குறிப்பாகத் தான் சொல்வார்கள். இறந்தார் என்று சொல்லாமல் தவறி விட்டார் என்று சொல்வது மாதிரி. நம் பண்பாட்டில் நன்றி என்பது சொல்லப்படுவது இல்லை. செய்யப்படுவது. வாழ்ந்து காட்டப்படுவது. மேலை நாடுகளில் சிறு சிறு விதயங்களுக்கும் நன்றி கூறி அலுக்க வைக்கிறார்கள். 8 மாதம் ஆகியும் என் டச்சு நாட்டு அறைத் தோழன் ஒரு நாளைக்கு பல முறை hi, bye, good morning சொல்லும்போது ''போடா..நீங்களும் உங்க பண்பாடும்''என்று அலுத்து விடுகிறது. அதுவும் செர்மன். டச்சு மொழியில் danke, dank என்று நன்றி சொல்வது donkeyஐ தான் நினைவு படுத்தும். சென்னை போன்ற நகரங்களில் உணவகங்களில் உணவு பரிமாறுபவருக்கு நன்றி சொல்வது நல்ல பண்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், கிராமத்தானான எனக்கு வந்த புதிதில் இது புரிபடவில்லை. அவர் கடமையை தானே செய்கிறார். இதில் நன்றி சொல்ல என்ன இருக்கிறது என்ற சிந்தனை. கிராம்ப்புறங்களில் கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் சுற்றி வளைத்து பங்காளி அல்லது மாமன் முறையில் வந்து விடுவார்கள். அவர்களுக்கு நன்றி சொன்னால் வேடிக்கையாகப் போய்விடும். பல நன்றிகள் சொல்வதை விட ஒரு எளிய இனிய புன்னகையில் நம் நன்றியை தெரிவிக்கலாம். ஒரு முக மலர்ச்சி தெரிவிக்காத உணர்வை வார்த்தைகள் சொல்லி விட முடியுமா? தெரியாத மொழி பேசும் ஊரிலும் புன்னகை புரியும். நன்றி சொல்வது நற்பழக்கம் என்னும் சிந்தனை மேலை நாட்டு ஆட்சியால், பண்பாட்டுத் தாக்கத்தால் வந்தது. சின்னச் சின்ன விதயத்துக்கு எல்லாம் நன்றி சொன்னால் அப்புறம் உதவும் குணமே ஒரு அரிய குணம் போல் பார்க்கப்படும். அது மனிதனின் அடிப்படை குணமாக இருக்க வேண்டிய ஒன்று. இன்னும் தமிழ்நாட்டில் நெருக்கமான நண்பர்களிடன் நன்றி என்று சொன்னால் நம்மை வேறுபடுத்திப் பார்ப்பதாக மனத்தாங்கல் வந்து விடும். நல்ல விதயம் தான். பத்மா அரவிந்த் சொன்னது ஒன்று வேண்டுமானால் உண்மை. நாம் அன்பையும் வெளிப்படையாக காட்ட மறந்து விடுகிறோம்..அதை வேண்டுமானால் மாற்றலாம்.

ரவிசங்கர் 11/24/2006 10:31:00 PM

//ஆண்களுக்கு பெண்களிடம் எப்படி அன்பு செய்வது என்று தெரிவதில்லை. அதிகாரம் பண்ணினால் அன்பு இருக்கிறது என்று ஒரு தமிழன் எண்ணுகிறான். பெண்களோ அதற்கு ஒரு படி மேல் போய் இவனை முழுவதும் கொத்தகைக்கு வாங்கிய மாதிரி நடந்து கொள்கிறாள். Possesiveness is not love! அடிப்படையில் அன்பு என்றால் என்ன விலை என்பதுதான் நிலமை.//

முகத்தில் அறையும் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள். முழுக்க உடன்படுகிறேன். அன்பு செய்கிறேன் என்று பேர்வழி என்று posesssivenessஆல் படுத்தும் கணவன், மனைவிகள் நிறைய உண்டு. நாம் விரும்புபவர்கள் அவர்கள் விரும்பும் மாதிரி வாழ உதவுவது என்னைப் பொறுத்த வரை நல்ல அன்பு. alchemist புதினத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரி ஒன்று உண்டு - if you love someone for a reason, then u are not loving that person but that reason. - தொடக்கத்தில் அன்பு மயமாய் காணப்படும் காதலர்கள், தம்பதிகள் பின்னர் அடித்துக் கொள்ள ஆரம்பிப்பது மிகை எதிர்ப்பார்ப்புகள் பொய்க்கும் காரணத்தால் தான்

Boston Bala 11/24/2006 11:14:00 PM

நன்றி இந்த பதிவிற்கு ; ))

Anonymous 11/25/2006 02:30:00 AM

இந்த பண்பாடு நம் இரண்டு தலைமுறைகளில்
தான் விட்டுப்போய் உள்ளது. அதுவும் வெள்ளையரின் பாதிப்புக்குள்ளான
பட்டணவாசிகளிடையேதான்.
குக்கிராமவாசிகள் கும்பிரே சாமியோ, வணக்கமுங்கோ, நன்றி சாமியோ,
நன்னாஇருக்கனும். என்கிற வார்த்தைகள் எல்லாம் அடிக்கடி பாவிக்கிறார்கள்.
எப்படியோ நம் பழைமையை நாம் மீண்டும் பழகிவிட்டோம் மகிழ்ச்சி. நன்றி.

enRenRum-anbudan.BALA 11/25/2006 02:47:00 AM

கண்ணன் சார்,
சிந்திக்கத் தூண்டும் ஒரு பதிவு ! நன்றி :)

என்னளவில் பொதுவாக நான் 'நன்றி' எதிர்பார்த்து ஒன்றைச் செய்வதில்லை. நானும் பொதுவாக நன்றியை வெளிப்படையாக சொல்வதில்லை என்பதும் உண்மை தான் ;-)

என் மனதுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் தரும் செயல்களை ஈடுபாடுடன் செய்வது உற்சாகமாக உள்ளது. அதே நேரத்தில், பாராட்டுக்கள் நிச்சயம் ஊக்கம் தருகின்றன என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

எ.அ.பாலா
**************************

மிதக்கும் வெளி 11/26/2006 10:25:00 PM

பொதுவாகவே இந்திய மனோபாவம் மிகவும் சிக்கலானது. அது ஒதுங்குதலையும் ஒதுக்கலையும் அடிப்படையாக் கொண்டது. அதனால்தான் நாம் கைகுலுக்குவதை விடவும் கையெடுத்துக் கும்பிடுவதை விரும்புகிறோம். ஏனெனில் கைகுலுக்கினால் ஒருவரைத் தீண்ட நேரும் அல்லவா?

நா.கண்ணன் 11/26/2006 11:18:00 PM

சாம் சார்:

படித்தேன். தொடர்புள்ளதுதான். நிறைய விஷயங்கள் அலசியிருக்கீங்க. நான் கேள்வியோடு நிருத்திக் கொண்டேன். பின்னூடங்கள் தேவையான பதிலை அளித்துவிட்டன.

அமெரிக்கன் கல்லூரியில் பியூசி சேர கிராமத்திலிருந்து வந்து சேர்ந்த நான் இன்னும் அரை டிராயர் போட்டிருந்தேன். பட்டணத்துப் பசங்களின் உதட்டோர ஆங்கிலம் இன்னும் ஒட்டாத காலம்! (அமெரிக்கன் கல்லூரி என்னைக் கொஞ்சம் பாலிஷ் படுத்தியது) உங்கள் பதிவு அவைகளை நினைவிற்குக் கொண்டு வந்தது. நீங்கள் ஒருவர்தான் உயிரியற் துறையில் என்னுடன் புதுக்கவிதை பற்றிப் பேசியவர். நாம் இருவரும் அதற்காக கஷ்டப்பட்டிருக்கிறோம்!