அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்!

பையரவினணைப் பாற்கடலுள்
பள்ளிகொள்கின்ற பரம மூர்த்தி.
உய்ய வுலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக்
காலனையும் உடனே படைத்தாய்
ஐய! இனியென்னைக் காக்க வேண்டும்;
அரங்கத்தரவணைப்பள்ளியானே!

என்பது பெரியார் திருமொழி. சாவு என்பதுதான் ஆன்மீகத்தின் inspiration, அடிப்படை. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். சாவு என்பதை எதிர்கொள்ள மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை பழகிக் கொள்ளவில்லை. பிறப்பிற்கு முன் நாம் எந்த கதியில் இருந்தோம் என்பது தெரியவில்லையெனினும் இறப்பு என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. "வைய மனிசர் பொய்" என்கிறார் பெரியாழ்வார். அதாவது, உலக வாழ்வு நிலையற்றது. இரண்டாவது, அப்படி நிலையற்றது எனில், நிலையான ஒன்று உண்டா? என்ற கேள்வி வருகிறது. இவையே ஆன்மீகத்தின் அடிப்படை.

காலனை ஏன் படைக்க வேண்டும்? காலன் ஆன்மீக குரு! சாவை சரியான கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொண்டுவிட்டால் அதைப் போன்ற ஒரு குரு கிடைக்கமாட்டார்கள். மதங்களைப் புறம் தள்ளும் ஜே.கிருஷ்ணமூர்த்தி, சாதி, அனுஷ்டானங்களைப் புறம் தள்ளும் ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஆச்சார்ய, குரு பரம்பரைகளைக் கிண்டலடிக்கும் ஜே.கே சாவை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார். அங்கிருந்துதான் அவர் தன் பயணத்தைத் தொடங்குகிறார். சாவும் வாழ்வும் ஒரு காசின் இரு பக்கங்கள். வாழ்வைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் சாவைப் பற்றிய தெளிந்த ஞானம் வேண்டும். ஆனால் நம் நடைமுறை வாழ்வில் அதுவொரு கெட்ட சொல். நாத்திகனாகட்டும், ஆத்திகனாகட்டும் யாரும் அது பற்றிப் பேச விரும்புவதில்லை!

சைவ சித்தாந்திகள் அங்கு கொண்டு போய் கடவுளை வைக்கின்றனர். சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல், வாழ்வு அங்கிருந்து தோன்றுகிறது என்பது போல். ஆன்மாவைப் பற்றிய தெளிந்த ஞானமும் அங்கிருந்துதான் தோன்றுகிறது. "வைய மனிசரைப் பொய்யென்றெண்ணி காலனையும் உடனே படைத்தாய்" என்கிறார் பட்டர். எனவே இரண்டு விஷயங்கள் இறைவன் இருப்பை நமக்குச் சொல்கின்றன. 1. உலகம் இருக்கிறது. மிக்க அழகுடன் இருக்கிறது. வாழ்வில் இன்ப, துன்பங்கள் நிரம்பியுள்ளன. இதைக் காண்கிறோம். இது நம்முள் கேள்வியை எழுப்புகிறது. ஏன் இப்படியொரு படைப்பு. படைப்பு அதுவே தோன்றி இத்தனை complexity-ஐ அடையுமா? படைப்பின் பின்புலமாக ஒரு பேரரறிவுச் செயற்பாடு உண்டா? 2. நேற்று இருந்தவர், இன்று இல்லை. ஏன்? நன்றாக பேசிக்கொண்டு இருந்தவர் திடீரென்று செத்துப் போய்விட்டார். பேசும்வரை இருந்தது என்ன? செத்த பின் போனது என்ன? 80 வயதுவரை குளித்து சுத்தமாக வாழத் தெரிந்த ஒருவருக்கு செத்த இரண்டு நாளில் அழுகும் உடலைக் காக்கத் தெரியவில்லையே? ஏன். இதுவரை உடல் அழுகாமல் காத்து நின்றது எது? உயிரோடு இருந்தவரை டாக்டர் சார், பேரரறிஞர் என்று புகழும் நாம், செத்த பின் 'அந்தப் பிணத்தைத் தூக்கிப் போடு!' என்கிறோமே. ஏன்? இதுவரை பேரரறிஞர் என்று மதித்தது எதை? 'அவர்' யார்? 'நான்' யார்?

இந்திய மெஞ்ஞானத்தின் அடிப்படை அலகு இந்த ஆத்மஞானம். ஆக்கை நிலையாமை-ஆத்மஞானம் இவை இரண்டும் அஸ்திவாரம். நாம் ஆத்மா என்று உணர்ந்துவிட்டால். ஆத்மாவின் சொரூப லட்சணங்கள் என்ன? என்ற கேள்வி வருகிறது. பின் அப்படியே படிப்படியாய் மெய்ஞானம் விரிகிறது. நிற்க.

உடலை விட்டு உயிர் பிரிகிறது என்பது சந்தேகமின்றித் தெரிகிறது. இந்த ஆன்மா சமாச்சாரத்திற்குள் அறிவியல் புகவில்லை. ஒரு பிடியும் கிடைக்கவில்லை அவர்களுக்கு. Consciousness is an epi-phenomenon of matter அதாவது பருப்பொருள் நீட்சியே ஆத்மா (பிரக்ஞை) என்னும் அவர்கள் வாதம் இங்கு தோற்றுப் போய்விடுகிறது. பருப்பொருளான உடல் அப்படியே இருக்கிறது, ஆனால் உயிர் 'டாபாய்த்துக்கொண்டு' போய் விடுகிறது. ஏதோ போய் விட்டது என்பது மட்டும் அவர்களுக்கும் புரிகிறது. என்ன போய்விட்டது என்று தெரியவில்லை. ஆனால், இதை ஆராயும் மெய்ஞானிகள் உடல் என்ற gross body-யிலிருந்து ஆத்மா பிரிந்து ஒரு சூட்சும உடலுடன் (subtle body/ethereal body) தன் அடுத்த பயணத்தை மேற்கொள்கிறது என்கின்றனர். பிரியும் நிலையில் ஆழமாக பதிந்த நினைவுகள், ஆசைகள் அடுத்த பயணத்தின் கருப்பொருளாகிறது. அந்த ஆசையை நிறைவேற்ற சூட்சும சரீரம் முயல்கிறது. அந்த ஆசை வாழ்வின் மீதிருந்தால் மீண்டும் பிறக்கிறோம். இறைவன் மீதிருந்தால் அவன் அடிகளை அடைகிறோம். எனவே உயிர் பிரியும் தருவாயில் பகவத் தியானம் வேண்டும். மலேசிய சைவக் கழகங்கள் அச்சமயங்களில் தேவாரத் திருவாசகங்கள் ஓதும் பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளனர். புத்தத் துறவிகள் அச்சமயங்களில் பௌத்த ஞான நூல்களை வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. கிருஸ்தவத்திலும் அப்படியொரு பழக்கமுண்டு. சாதாரண நடைமுறையில் பாடை கட்டி எடுத்துச் செல்லும் போது , 'கோவிந்தா! கோவிந்தா' என்று சொல்லும் பழக்கமுண்டு.

சரி, இதையெல்லாம் சொல்லும் அவகாசமில்லை அல்லது சந்தர்ப்பமில்லை எனில் என்ன செய்வது? சாகும் தருவாயில் வரும் அவஸ்தையில் மறந்து போய்விட்டால்? (அதாவது நினைவழிந்துவிட்டால்?)

எண்ணலாம் போதேயுன்நாம மெல்லாம்
எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்
அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே!!

என்று மாற்று வழி சொல்கிறார் பட்டர்பிரான். இன்னுமொரு இடத்தில்,

எய்ப்பு என்னைவந்து நலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே!

என்கிறார். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்க முடியுமா? இறைவன் தன் பேரேட்டில் இந்த வேண்டுகோளைக் குறித்துக் கொள்வானா?

பட்டர்பிரானுக்கு முன்னமே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இதே வேண்டுகோளை முன் வைக்கிறது உபநிஷத்து:

க்ரதோ க்ரதக்கத்ஸ்மர!

என்பது அவ்வாக்கியம். அதாவது இறைவா! என்னை நினைவில் கொள்!

இன்னொரு இடத்தில், 'அக்நே நய' என்று சொல்கிறது. 'எனக்கு உன் பாதையைக் காட்டு'. இந்த இரண்டிற்கும் பதில் தருவது போல் வராக புராணத்தில் ஒரு ஸ்லோகம், வராக மூர்த்தி சொல்வதாக வருகிறது. 'அகம் ஸ்மராமி மத் பக்தம்! நயாமி பரமாஞ்கதிம்' என்கிறார் வராக ஸ்வாமி. அதாவது, "என் பக்தனை நான் என்றும் மறவேன் (அல்லது நினைவில் கொள்வேன்); அவனுக்கு பரமகதியடையும் பாதையைக் காட்டுவேன்" என்பது பொருள். எனவே அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தால் அவன் குறித்துக் கொள்வான். நமது பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்க்கின்றானா இல்லையா என்பது அவரவர் அனுபவித்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இதை அதிகம் ஸ்லாகிக்க முடியாது.

உளவியல் நோக்கில் பார்த்தால் இது ஒரு பெரும் மனபாரத்தை நம்மிடமிருந்து பெயர்த்து எடுத்துவிடுகிறது. அப்பயம், அச்சந்தேகம் நீங்கிவிடுகிறது. யாமிருக்க பயமேன்? என்று ஒருவர் நமக்கு அப்போதும் இருப்பார் என்பது பெரிய நிம்மதி. வாழும் போதே இறைச் சரணம் செய்துவிட வேண்டும் என்பதை பாரதி இப்படிச் சொல்கிறான்:

நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

1.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

2.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

3.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

4.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

5
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)


இப்பாடலை கூர்ந்து கவனித்தால் சரண் புகுந்த பின் வாழ்வில் எவை நீங்கி விடுகின்றன என்பதும் தெரிகிறது. ப்ரபத்தி நிலை என்னவென்றும் சுட்டப்படுகிறது (நல்லது தீயது நாமறியோம்!) ப்ரபத்தியின் பலனாக வாழ்வில், துன்பமில்லை, சோர்வில்லை, தோற்பில்லை! இக வாழ்வும் சிறக்கிறது, பர வாழ்வும் உறுதிப்படுகிறது.

சரி, இங்கு நிறுத்திக் கொள்வோம். ப்ரபத்தி செய்து விட்ட ஒரு பிரபந்நன் எப்படி மீதமிருக்கும் காலங்களைக் கழிக்க வேண்டுமென்றெல்லாம் நிறையப் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ப்ரபந்ந மார்க்கம் என்பதே சுவையான விஷயம். பேசினால் இழுத்துக் கொண்டே போகும்.

பத்மா கேட்டார்கள், 'என்ன திடுதிப்பென்று பரகதி பற்றிப் பேசத் தொடங்கிவிட்டீர்களென்று!'. அவர்களுக்கு நான் சொன்ன பதிலை பகிர்ந்து கொள்கிறேன். ஸ்ரீவைஷ்ணவ க்ரந்தங்கள் நூற்றுக்கணக்காக உள்ளன. வாசித்து அறிய ஒரு வாழ்நாள் போதாது. இப்போதுள்ள அவசர கதி வாழ்வில் அடிப்படையாகவேணும் அவற்றின் சாரத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இதை எதிர்பார்த்தே வேதாந்த தேசிகர் 'ரகஸ்ய த்ரய சாரம்' என்ற ஒரு நூலை உருவாக்கியிருக்கிறார். இதில் பெரிய அனுகூலம் என்னவெனில் வேதாந்த தேசிகர் வேதாந்த மேருமலை. சர்வ தந்த்ர சுதந்திரர் என்று பட்டம் பெற்றவர். அவரறியாத நூல் இல்லை, அவர் கண்டறியாத மார்க்கமில்லை. அப்படிப்பட்ட ஒரு பேரரறிஞர் சொல்லிய பழமொழிகளைக் கேட்டு உய்தல் ஒரு பாகவதன் கடனே. அங்கு நான் பெற்ற இன்பத்தை என் பாணியில் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'. நன்றி.

24 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/25/2006 11:27:00 AM

கண்ணன் சார்!
முதலில் பிடியுங்கள் "நன்றி"! (Thanksgiving day முடிந்த பின்னரும் சொல்ல வேண்டும்) :-)

அருமையான, தத்துவ வியத்தல் தொடர்.
விரித்துப் பேச வேண்டிய ஒன்றைச் சுருக்கிப் புரிய வைத்தீர்கள்! குமரன் முன் பதிவில் சொன்னது போல், சத்சங்கத்தின் சார்பாக, அனைவரும் சொல்கிறோம்,
"இன்னுமொரு நூற்றாண்டு இரும்"!

விஞ்ஞான விளக்கமாய், hologramஇல் தொடங்கி, ஆன்மாவை reformat செய்யச் சொல்லி, முதுசொம் பற்றித் தொட்டுச் சென்று, அப்பன் வீட்டுச் சொத்தை எப்படி "வியந்து" வாங்குவது என்று அழகாக முடித்துள்ளீர்கள்!

இந்தத் தொடரை மீண்டும் இரண்டு, மூன்று முறை வாசிக்க வேண்டும்! வீட்டில் ஒருமுறை, பேருந்துப் பயணத்தில் ஒருமுறை,....இப்படி!
இல்லை என்றால் எக்ஸ்ப்ரெஸ் வாழ்வில் எக்ஸ்ப்ரெஸ் போலவே ஓடி விடும்!

இந்தத் தொடரை மென்நூல் (pdf) ஆக்க வேண்டும்! அடியேனுக்குத் தாங்கள் அனுமதி வழங்கினால், அதைச் செய்து, மாதவிப்பந்தலில் தொடுப்பு கொடுக்க அவா! பலரும் கண்டு பயன் பெற வேண்டும்! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!

"எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!"

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/25/2006 11:37:00 AM

//க்ரதோ க்ரதக்கத் ஸ்மர! என்பது அவ்வாக்கியம். அதாவது இறைவா! என்னை நினைவில் கொள்!//

இது! இது!!
இது தான் பக்தி இயக்கம்; ஆழ்வார் அமுதம்!

"மகா ஜனங்களே, இல்லீன்னா, உயிரினும் மேலான பொதுமக்களே! நல்லா ஞாபகம் வச்சிக்குங்க; இறைவனை எப்போதும் மறக்கவே கூடாது! நினைவில் வச்சிக்கினே இருக்கணும்", என்று அடித்துச் சொல்லவில்லை பாருங்கள்!

நமக்கு எல்லாம் சொல்லி பயிற்றுவித்து விட்டுக், வியக்கும் வழியைக் காட்டி விட்டுக் கடைசியில் பாருங்க!
"நான் உன்னை நினைவில் வச்சுக்க சில சமயம் தப்பினாலும் தப்பிடும்!
அதனால் நீ என்னை நினைவில் வச்சுக்க!"
இது தான் புரட்சி! இது தான் உண்மை!

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!
ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

நா.கண்ணன் 11/25/2006 03:51:00 PM

அன்பின் கண்ணபிரான்:

நம்ம விர்சுவல் சத்சங்கம்தான் இத்தொடருக்கு இன்ஸ்பரேஷன் (ஆதர்சம்). இம்மாதிரி சரக்கு, இந்தக் காலத்திலே கூட போணியாகுன்னு அமெரிக்காவிலிருந்தும், நியூசிலாந்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் சொல்லிய போது, எழுதலாம் என்ற தைர்யம் வந்தது. நான் ஜீவன் முக்தன் அல்லேன். ஆனால் பிரபந்நன். ஆழ்வார்கடியான். ஆர்வமுள்ளவர்களிடம் பகிர்ந்து ஆனந்திக்க வேண்டிய விஷயம் இது!

அதுசரி, "மாதவிப் பந்தல்" மாதிரி நம்ம விர்சுவல் சத் சங்கத்திற்கு ஒரு பெயர் தேர்ந்தெடுங்கள். அப்பெயரில் ஒரு வலைக்குழு வைத்துக் கொள்வோம்.

இது விநியோகத்தக்கது என்று தாங்கள் எண்ணும் பட்சத்தில் எனக்கென்ன ஆட்சேபனை? இது நம் பாட்டன் சொத்து. எல்லோரும் அநுபவிக்க வேண்டியதுதானே!

இத்தொடருக்கு இரண்டு பேருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். PDF-ஆக்கும் போது கட்டாயம் குறிப்பிடுங்கள். 1. 'வேதாந்த கேசரி' வேதாந்த தேசிகன். 2. அவரின் இக்கிரந்தத்தை எடுத்து நவீனப் படுத்திய ஸ்ரீகிருஷ்ணப் பிரேமி மகராஜ்.

நன்றி.

துளசி கோபால் 11/26/2006 05:44:00 AM

நான் பெருமாள்கிட்டே அப்பவே சொல்லி வச்சாச்சு.
'போறப்ப' ஞாபகப் படுத்தவேண்டியது 'அவன் கடமை'
அதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?

சரணாகதின்னு கால்லே விழுந்தபிறகு எனக்கு 'எல்லாம்' செய்ய
வேண்டியது அவன் பொறுப்பு. செய்வானா மாட்டானான்னு எனக்குத்துளியும்
கவலையே இல்லை. நான் ஏன் கவலைப்படணும்?
அதான் 'அப்பவே சொல்லியாச்சு'ல்லெ?

நா.கண்ணன் 11/26/2006 09:34:00 AM

"நான் பெருமாள்கிட்டே அப்பவே சொல்லி வச்சாச்சு.
'போறப்ப' ஞாபகப் படுத்தவேண்டியது 'அவன் கடமை'
அதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை? "

அப்படிப் போடு!!

அவன் காலைச் சிக்கெனப் பிடித்தபின் உதறிவிடுவானா என்ன?

உங்க ஸ்டைலே தனி துளசி! பெரியவாச்சான் பிள்ளை பேசுவது போல் பேசுகிறீர்கள்!

இவரிடம் ஒருவர் போய் ஸ்ரீவைஷ்ணவ லட்சணம் என்னெவென்று கேட்டிருக்கிறார்.

"ஆபத்து வரும்போது கூட ஸ்ரீநாராயணா! என்று சொல்லாதவனே உண்மையான வைஷ்ணவன் என்று சொல்லியிருக்கிறார்!!"

அதுதான், நாம எப்பவோ சரணாகதி பண்ணியாச்சே, அப்புறம் என்ன பயம். அவன் பாத்துக்க மாட்டான்? நாம எதுக்கு பயப்படணும்! சூப்பர் துளசி!

ஜடாயு 11/26/2006 09:35:00 PM

கண்ணன் சார், அருமையான விளக்கங்கள். ஆன்மீக வாழ்வில் மரணம் பற்றிய பிரக்ஞை மிகவும் இன்றியமையாதது. மரணம் பற்றிய கேள்விகளே நசிகேதனுக்கு ஞான வாயிலைத் திறந்தன. சத்தியவான் சாவித்திரி கதையின் ஆன்ம படிவத்தைப் பற்றியும் ஸ்ரீஅரவிந்தர் அற்புதமான விளக்கம் அளித்துள்ளார்.

// இந்திய மெஞ்ஞானத்தின் அடிப்படை அலகு இந்த ஆத்மஞானம். ஆக்கை நிலையாமை-ஆத்மஞானம் இவை இரண்டும் அஸ்திவாரம். நாம் ஆத்மா என்று உணர்ந்துவிட்டால். ஆத்மாவின் சொரூப லட்சணங்கள் என்ன? என்ற கேள்வி வருகிறது. பின் அப்படியே படிப்படியாய் மெய்ஞானம் விரிகிறது. //

ஆன்ம ஞானத்தின் ஊற்றுக் கண் பற்றிய தெளிவான விளக்கம்.

// பட்டர்பிரானுக்கு முன்னமே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இதே வேண்டுகோளை முன் வைக்கிறது உபநிஷத்து:

க்ரதோ க்ரதக்கத்ஸ்மர!

என்பது அவ்வாக்கியம். அதாவது இறைவா! என்னை நினைவில் கொள்! //

இந்த மந்திரம் எங்கே வருகிறது? ஈச உபநிஷத்தின் இறிதியில் "க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர" என்று வரும். அதைத் தான் குறிப்பிடுகிறீர்களா?

நா.கண்ணன் 11/26/2006 09:41:00 PM

ஜடாயு:

//இந்த மந்திரம் எங்கே வருகிறது? ஈச உபநிஷத்தின் இறிதியில் "க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர" என்று வரும். அதைத் தான் குறிப்பிடுகிறீர்களா?//

ஒரு பிரவச்சனத்தில் கேட்டது. எந்த உபநிஷத்து என்று சரியாகத் தெரியவில்லை. கேட்டதை அப்படியே எழுதியுள்ளேன். கேட்டுவிட்டீர்கள்தானே, தேடல் ஆரம்பம் :-)

பத்மா அர்விந்த் 11/26/2006 10:14:00 PM

இங்கேதான் எனக்கு கொஞ்சம் வேறுபாடு. எதையும் சொல்லித்தெரிந்து கொள்ளுகிற நிலையில் உள்ள ஒரு சக்தி என் வாழ்வின் அனைத்தையும் ஆட்டுவிக்கவில்லை. எது எனக்கு சரி என்று தோன்றுவதை கண்ணனே என் அம்மாவைப்போல செய்வான்.பிரச்சினைகள் வரும் போது கூட இந்த பிரச்சினையை என்னால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையின் பேரிலே அவை என்னிடம் வருகின்றன அலுவலகத்தில் நம் திறமை மேல் நம்பிக்கை கொண்டு சிக்கலான திட்டங்கள் வருவதைப்போல. செய்வது ஒன்றே , என் திறமை அனைத்தும் சேர்த்து 110% செய்வதே என் கடமை. அப்படி செய்யும் போது என்னுள்ளில் இருந்து செய்விப்பவன் ஒருவன் உண்டு. எனவே நான் கடைத்தேறனும் என்றாலும் முடிவு செய்பவன் அவனே. நாம் அவனிடம் கோரிக்கை வைத்து ஆண்டவனையும் தர்மசங்கடத்துள் ஆழ்த்துவதென்பது கூடாதல்லவா? இங்கே மட்டுமே உங்க கட்டுரையில் இருந்து வேறுபடுகிறேன். என் கர்மம் எதுவோ அதை செய்யவும் அதை முழுமையாக ஒன்றி செய்வதும் மட்டுமே நான் செய்யக்கூடியது. என் கட்டுப்பாடில் இல்லாத ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றூ எதிர்பார்ப்பது தவறு, அது நம் மீது கருணை உள்ள ஒருவரை தர்மசங்கடத்துள் ஆழ்த்துவதாகும்.

Hariharan # 26491540 11/26/2006 10:14:00 PM

சாவு கண்டு அஞ்சுதல் அறியாமை.

Body is just filth matter எனும் உண்மை புத்திக்குத் தெரிய வந்தாலே அதாவது Body Mind Intellect(BMI) என்கிற Gross Subtle Subtler விஷயங்கள் புரியும் போது மனிதனின்
Perception Feeling Thinking (PFT)
புதிய மெய்ஞான வழியில் கேள்விகள் பல பிறக்க பயணப்படும்.

Pancha Kosha vivekam புரிய ஆரம்பிக்கும் போது ஆன்மா எனும் இறைசக்தி போட்டிருக்கும் சட்டை இந்த உடம்பு என்று அறியும்போது நாம் தினசரி சட்டை/உடை மாற்றும் போது வருத்தப்படுவதில்லை, ஒப்பாரி வைப்பதில்லை. ஆன்மா ப்ராரப்தம் முடிந்த ஒரு உடம்பை விடுத்து செய்த பாவ புண்ணிய பாலன்ஸ் ஷீட் எவால்யூவேஷன் படி அடுத்த உடையை/உடம்பைத் தேர்ந்தெடுத்து இந்தப் ப்ரபஞ்சத்தின் உயிர் சுழற்சி நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்!

சாவு உடம்பின் முடிவு! ஆன்மா தொடர்ந்து பயணிக்கிறது! முழுமையாக ஆசைகள் அனைத்தையும் துறந்து பின்பு இறையிடம் ஒளியாய் சென்று சேர்கிறது!

இந்த மெடீரியல் உலகில் எல்லாமே Objectionabley object oriented ஆகவே enquire செய்யப்படுகிறது.

நமது இந்துமத ஆன்மீகம் subjective enquiry Science in knowing / understanding the creation of the world in an orderly scientific manner!

Objective Material worldல் எப்போதுமே ஸ்திதப்ரக்ஞனாக இருக்கமுடியாது! ஸ்திதப்ரஞனுக்கு சாவு பற்றிய பயம் இல்லை!

அன்புடன்,

ஹரிஹரன்

நா.கண்ணன் 11/26/2006 11:35:00 PM

பத்மா:

உங்கள் கருத்து வழக்கம் போல் management skills பற்றிச் சொல்வதுடன், நடைமுறையில் நாம் செவ்வனே நடக்க என்ன செய்ய வேண்டும், எங்கு கடவுள் வேண்டும், எங்கு வேண்டாம் என்று சொல்லுகிறது.

பாரதி பேசுகிற இறைச்சரணம் (மேற்கோள்) தேச நலன் சார்ந்தது. It had a specific purpose).

ஆனால் ஸ்ரீவைஷ்ணவம் பேசுகிற ப்ரபத்தி கொஞ்சம் வித்தியாசமானது. இறைவனிடம் போய் இது வேண்டும், அது வேண்டுமென்று பிச்சை கேட்காதே. அவனைச் சங்கடப்படுத்தாதே! என்பதே பூர்வாச்சார்யர்கள் சொல்லிவிட்டுப் போனது. கோயிலுக்குப் போவது அவனுக்கு நன்றி சொல்ல, அவனை வாழ்த்த, அவனுடன் சேர்ந்து இருக்க. அவ்வளவுதான். 'என் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்க' என்று சொல்வது கூட கேலியாகப் பார்க்கப்படுகிறது. பெருமாள் பேருக்குத்தான் அர்ச்சனை பண்ணமுடியும், சுப்பன், குப்பன் பேருக்கெல்லாம் அர்ச்சனை செய்ய முடியாது :-) (hope you got the point).

எனவே உங்கள் பாணி, வைஷ்ணவப் புரிதலுடன் ஒத்துப் போகிறது. இது பற்றியெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கலாம். நம்ம நற்சங்கம் உருவாகிறதா என்று பார்ப்போம் ;-)

நா.கண்ணன் 11/26/2006 11:39:00 PM

அன்பின் ஹரிஹரன்:

நல்ல மேல் விளக்கம். முதல் முறை 'க'வினுகலகத்திற்கு வருகிறீர்கள். நன்றி. அடிக்கடி வாருங்கள்.

ஜடாயு 11/27/2006 08:52:00 PM

// ஒரு பிரவச்சனத்தில் கேட்டது. எந்த உபநிஷத்து என்று சரியாகத் தெரியவில்லை. கேட்டதை அப்படியே எழுதியுள்ளேன். கேட்டுவிட்டீர்கள்தானே, தேடல் ஆரம்பம் :-) //

அது ஈச உபநிஷத் (சுலோகம் 17) ஆகத் தான் இருக்க வேண்டும்.

"வாயுரனிலம்ருதேதம் பஸ்மாந்தம் இதம் சரீரம் |
ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர"

वायुरनिलममृतेदम् भस्मान्तम् इदम् शरीरम् ।
ॐ क्रतो स्मर कृतम् स्मर क्रतो स्मर कृतम् स्मर ॥

"உயிர் சக்தியாகிய பிராணன் (வாயு) அழிவில்லாதது, ஆனால் உடல் சாம்பலாவது. ஓம்! செயல்புரியும் ஆன்ம சக்தியே (க்ரதுவே), நினைப்பாய், செய்தவற்றை நினைப்பாய்"

க்ரது என்பதற்கு ஸ்ரீ அரவிந்தர் தரும் விளக்கம்:
The Vedic term kratu means sometimes the action itself, sometimes the effective power behind action represented in mental consciousness by the will. Agni is this power. He is divine force which manifests first in matter as heat and light and material energy and then, taking different forms in the other principles of man's consciousness, leads him by a progressive manifestation upwards to the Truth and the Bliss.

இந்த மந்திரம் அழியும் உடலில் இருக்கும், ஞானத் தேடலைத் தூண்டும் அழியாத ஆத்ம சேதன சக்தியைப் போற்றுகிறது என்ற விளக்கத்தைப் படித்ததாக ஞாபகம்.

இந்த சேதன சக்தி தான் பக்தி மார்க்கத்தில் இறைவனிடம் சரணாகதி அடையத் தூண்டுகிறது என்பதாகவும் நீங்கள் விளக்கம் அளிக்கலாம் என்று நினைக்கிறேன் :))

நா.கண்ணன் 11/27/2006 09:22:00 PM

அன்பின் ஜடாயு:

இணையம் எனக்குப் பாடசாலை. நல்ல நண்பர் பலரைப் பெற்றிருக்கிறேன். ஹிதமாகச் சொல்பவன் மட்டும் நண்பனன்று. உண்மையைச் சொல்பவனே நண்பன். நம் ஆத்ம பந்து இறைவன். அவன் மனித வடிவில் நண்பர்களை அனுப்புகிறான். நல்ல நண்பர்கள் சேருமிடம் நற்சங்கமாகிறது.

அழகான விளக்கம். இந்த ஸ்லோகத்தைத்தான் ஸ்ரீஅண்ணா எடுத்தாண்டு இருக்கிறாரா என்று சொல்லும் அளவு எனக்கு வேதபாடமில்லை. வாழ்வுதான் என் ஆசான் :-)

எப்படியிருந்தாலும் வரவுதான்.

இதில் வேடிக்கை என்னவெனில் கட்டுரை எளிதாகப் போய்விட்டது, ஆனால் பின்னூட்டத்தைக் கிரகித்துக் கொள்ள ஒரு தனிப் பயிற்சி வேண்டும் அளவிற்கு நீங்கள் எல்லோரும் வாரி, வழங்கியுள்ளீர்கள்.

கண்கள் பனிக்கின்றன. நன்றி.

ramachandranusha 11/27/2006 09:26:00 PM

வாத்தியார் ஐயா,
கடைசி பெஞ்சும், காகித ராக்கெட் விடுதலுக்கும் அனுமதி உண்டென்றால் நானும் வருகிறேன் :-)

நா.கண்ணன் 11/27/2006 09:31:00 PM

உஷா!

நீங்க பொண்ணாகவே பொறந்திருக்கக் கூடாது. சரியான ரெட்டை வால். பப்பி லாங் ஸ்டாக்கிங் போல. அம்பு விடுங்க. கிளாஸ்ன்னா எல்லாம் இருக்கத்தானே செய்யும்.

என்ன ஒரு தைர்யம்! எனக்குத் தெரியலைன்னாலும் இப்ப துணைக்கு கொஞ்ச பேரு இருக்காங்க. முன்பு நாம ரெண்டு பேரு மட்டுமே இருந்தோம்.

வாங்க தோழி! உங்களுக்கு எப்போதும் கதவுகள் திறந்திருக்கும்.

Anonymous 11/28/2007 11:58:00 AM

Aathma has no birth or death. Human create religion and confusions. Ithai purinthu kondaal thruvukkuth theru Putharum Jesuvum UG Krishnamurti umthaan.

Don't be afraid of death. Pirapirunthal Irppum undu udampukku.

Anonymous 11/28/2007 05:15:00 PM

Vanakkam sir,
Again had Thiruvengadavan prasadam,thanks.
ARANGAN ARULVANAGA.
anbudan
k.srinivasan.

N.Kannan 11/28/2007 05:22:00 PM

Thiru Srinivasan:

mikka nanRi
"எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!"

Anonymous 11/28/2007 07:57:00 PM

பரண்யாசம் என்கிற அழாமல்,விழாமல் பகவானை அடையும் முறையான சரணாகதி தத்துவம் பற்றிய அருமையான பதிவு கண்ணன்.நீ என்னை ஞாபகம் வச்சுக்கோ என்று பகவானிடம் விட்டு விட்டால்,பாதம் பற்றிய பக்தனை அந்த பரம மூர்த்தி விடுவானா என்ன!
சித்,அசித் பற்றி விசிஷ்டாத்வைதம் கூறுவதையும் பௌதீகமாகவும்,லௌகீகமாகவும் எழுத வேண்டும் நீங்கள்.
நீங்க இன்னுமொரு நூற்றாண்டு இருக்க அவனிடம் பிட் போட்டு விட்டேன்!

"வந்தே பிருந்தாவன சரம்,வல்லபீ ஜெய வல்லபம்"
அன்புடன்
ஸ்ரீனி

N.Kannan 11/28/2007 10:58:00 PM

//சித்,அசித் பற்றி விசிஷ்டாத்வைதம் கூறுவதையும் பௌதீகமாகவும்,லௌகீகமாகவும் எழுத வேண்டும் நீங்கள்.//

அடடா! இப்படியொரு அனுக்கிரஹமா? அவன் திருவுள்ளம் வேண்டி நிற்கிறேன். என் புரிதலுக்காகவும் அது அணுக வேண்டிய ஒன்றே.

//நீங்க இன்னுமொரு நூற்றாண்டு இருக்க அவனிடம் பிட் போட்டு விட்டேன்!//

தன்யன் ஆனேன் ஸ்வாமி.

//வந்தே பிருந்தாவன சரம்,வல்லபீ ஜெய வல்லபம்//

ஒரு பாகவத காலட்சேபம். ஒரு பெரியவர் அநுபவித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார், அவர் மடியில் சாட்க்ஷாத் கிருஷ்ணன். மோவாயைத் தடவித், தடவி, அது என் கதை என்கிறான். பாகவதம் சொல்பவருக்கு நம்பமுடியவில்லை. தான் அவ்வளவு அழகாக பாகவதம் சொல்கிறோமா? கிருஷ்ணனே வந்து கேட்கும் அளவிற்கு என்று! அடுத்த நாளும் இதே கூத்து. அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு பெரியவரிடம் வந்து, உங்களோட ஒரு குழந்தையும் கதைக்கு வருகிறதோ? என்று கேட்டிருக்கிறார். "அட! அவன் உங்கள் கண்ணிலும் பட்டுவிட்டானா? நான் பெரிய ஆச்சர்யன் அல்லேன். பெரிய ஆச்சர்யரான ஸ்ரீவல்லபர் வீட்டு வாயிற்காப்போன். அங்கு வேலை செய்வதால் கிருஷ்ணன் தினம் என்னைக் கதைக்கு கூட்டிப் போ! என்கிறான்" என்றாராம். கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவி பாடும் என்பது போல் பரம பாகவதாரான ஸ்ரீவல்லபாச்சார்யரின் வீட்டு வாயிற்காப்போனுக்குக் கூட பகவத் அனுக்கிரஹம்.

வல்லபீ ஜெய வல்லபம்!!
வல்லபீ ஜெய வல்லபம்!!

Anonymous 11/29/2007 01:29:00 PM

சித்,அசித்-matterரும்,attributeட்டும் பௌதீகத்தில் மட்டுமல்ல,லௌகீகத்திலும் அவைகளுக்குத்தான் பெரும் பங்கு.இன்று நம்மில் பலர் original matterரை விட்டு விட்டு,attributeக்கு அடித்து கொள்ளும் நிலைமை!

வந்தே பிருந்தாவன சரம் என வாழ்த்தும் கோபால விம்ஸதி,அப்புறம் கட கடவென வரும் ரகுவீர கத்யம்,ஸ்ரீ ஸ்துதி,கோ ஸ்துதி என்று இன்னும் பல-அஞ்சு,ஆறு வயதில்,தல்லாகுளம் பெருமாள் கோயிலில் மாலை வேலைகளில் பாட்டியிடம் படித்தது. இன்று மூன்றறை தசமங்கள் கடந்த பின்னும் ஓரளவு ஞாபகம் இருப்பது,பாட்டியினால்தான்.

கண்ணுக்கு இனியனான அந்த வல்லபன் அருளில் நிச்சயம் எழுதுவீர்கள்.
நன்றி,அன்புடன்
ஸ்ரீனி

N.Kannan 11/29/2007 02:09:00 PM

//சித்,அசித்-matterரும்,attributeட்டும் பௌதீகத்தில் மட்டுமல்ல,லௌகீகத்திலும் அவைகளுக்குத்தான் பெரும் பங்கு.இன்று நம்மில் பலர் original matterரை விட்டு விட்டு,attributeக்கு அடித்து கொள்ளும் நிலைமை!//

நீங்களே இதை இன்னும் கொஞ்சம் விளக்குங்கள். ஒரு inspiration-க்குக் கேட்கிறேன்.

//தல்லாகுளம் பெருமாள் கோயிலில் மாலை வேலைகளில் பாட்டியிடம் படித்தது//

அடடா! நீங்களும் மதுரையா? நாங்கள் கோசாகுளம் புதூரில் இருந்தோம். சித்திரைத் திருவிழா புறப்பாடின் போது பெருமாள் சேவிக்க தல்லாகும் உறவினர் மண்டகப்படிக்கு வருவதுண்டு.

Anonymous 11/29/2007 03:26:00 PM

கண்ணன்,
inspiration ஏற்படுத்தும் அளவுக்கு நான் இல்லை.அவையடக்கமில்லை,உண்மை!இருந்தாலும்,ஊர்க்காரரின்(!) அன்புக்கு கட்டுப்பட்டு எழுதுகிறேன்,சீக்கிரம்! "வாசக தோஷம் ஷந்தவ்யக" என்று டிஸ்கிளைமெர் இப்போதே போட்டு விட்டேன்.

நம்ப ஊரைப் பற்றிய அந்த நாள் ஞாபகங்களை திண்ணையில் எழுதினேன்.கடை எழுபதிகளில் கிளம்பியவன்.எந்த
நாட்டில்,ஊரில் இருந்தாலும், வருடமொறு முறை சென்று சேவிக்கும் மீனாட்சியும்,மதுர வல்லித் தாயாரும் கண்ணிலேயே நிற்கிறார்கள்.

மாப்பிள்ளை சுந்தரர்!மச்சான் அழகர்!!என்ன பெயர்
ஒற்றுமை.நாத்தனாரின் ஆட்சியில் மன்னி அழகாக அருள் பாலிக்கிறாள்.ஊரே அழகுதான்!
அன்புடன்
ஸ்ரீனி

தல்லாகுளம் உறவினர் மண்டகப்படி!-பட்டு பாபு மண்டகப்படி?

N.Kannan 11/29/2007 03:53:00 PM

//தல்லாகுளம் உறவினர் மண்டகப்படி!-பட்டு பாபு மண்டகப்படி?/

கோயிலுக்கு இடப்புறம் (முகப்பிலிருந்து), புதூர்-மதுரை சாலைக்கு வலப்புறம். வீட்டின் முகப்பையே இதற்காக மாற்றி அமைத்திருந்தனர். இப்போது அவர்களும் அங்கில்லை. எல்லாம் மாறியிருக்கும்..ம்ம் அவர் பெயர்? மறந்துவிட்டது. தொழில்: ஜோஸ்யம்.