ஆன்மாவை reformat செய்!

இந்திய மெஞ்ஞாப் புரிதல்கள் நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போவதேன்?

ஏனெனில் அவை இரண்டும் கேள்விகளின் அடிப்படையில் அமைந்து, அறிவு சார்ந்து வெளிப்படுபவை. இந்திய மெய்யியல் அறிவு சார்ந்தது. அறிவு என்பதே அங்கு ஜீவனுக்கும், இறைவனுக்கும் அடிப்படையாக அமைவது. எனவே அதுவொரு தத்துவத் தேடல். அத்தேடலில் கண்டறிந்த உண்மைகள் வேதத்திலும், உபநிடத்திலும், பின் ஆழ்வாராதிகள், மெய் ஞானப் பெருமகனார்தம் நூல்களிலும் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்திய மெய்ஞானத் தத்துவங்கள் உண்மையான அறிவியலே. இதை நான் சொல்லவில்லை பெரிய, பெரிய உலகறிந்த விஞ்ஞானிகளே ஒத்துக் கொண்டுள்ளனர்.

பிரபஞ்சத்தில் விழிப்பு எதற்கு இருக்கிறது? தூங்குவதற்கு. தூக்கம் எதற்கு இருக்கு? விழிப்பதற்கு. இதுவொரு சுழற்சி. நாம் ஏன் வேலை செய்கிறோம்? சாப்பிடுவதற்கு. நாம் ஏன் சாப்பிடுகிறோம்? வேலை செய்வதற்கு. இதுவொரு எளிய இயற்கை விதி. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஒரு சுழற்சியில் அமைகின்றன. உண்மையில் அழிவதில்லை. மாறுவது விதி. மாற்றம் இயற்கை.

சரி, விதி இப்படி இருக்கும் போது மனிதன் இறந்தால் மட்டும் நாம் ஏன் ஒப்பாரி வைக்கிறோம்? அவன் போயே, போய் விட்டான் என்றா? யோசித்துப் பார்த்தால் புரியும், இயற்கை விதிக்கு உட்பட்டே மனித ஜீவிதம் நடப்பது. எல்லாம் மாறுகின்றன. வள்ளுவர் காலத்துத் தமிழகமல்ல, இன்று நாம் காண்பது! மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், மடிகிறான். சரி, இறந்தபின் எது அவனை விட்டுப் பிரிந்து இயற்கைச் சுழற்சியில் கலக்கிறது?

உடல் என்ற ஜடம், மீண்டும் ஜடத்துடன் கலக்கிறது. புதைத்தால் மண்ணாகிப் போகிறது. எரித்தால் சாம்பலாகிப் போகிறது. அதே போல் அவன் வாழ்ந்த வரை உள்ளிருந்து 'நான்' இருக்கிறேன் என்ற உணர்வு பின் எங்கே போகிறது? இது இயற்கையான கேள்வி. வலிந்து கேட்பதல்ல. இறக்கும் தருவாயில் என்ன நினைத்துக் கொண்டு சாகிறோமோ, அதுவாக மீண்டும் பிறக்கிறோம் என்கிறது வேதம்.

ஏன் அப்படி?

காலையில் 5 மணிக்குக் கிளம்பினால்தான் வெளிநாட்டு விமானத்தைப் பிடிக்க வேண்டுமெனில் 4 மணிக்கு அதுவாகவே முழிப்பு வந்துவிடுகிறது. எனவே, தூங்கும் முன் எது நம் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளதோ அது நம்மை எழுப்பிவிடுகிறது. சாக்காடு என்பது இப்படியான ஒரு தூக்கம் என்பது இந்தியப் புரிதல்.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

என்கிறார் வள்ளுவர். ஆக, உறக்கத்தின் முன் எது நினைவில் நிற்கிறதோ அதுவே விழிப்பிற்குக் காரணமாகிறது!

இது ஒரு முக்கியமான சூத்திரம்.

ஏனெனில் பிரபஞ்ச சிருஷ்டியில் கருங்குழியில் விழுந்த சேதி எங்கு போய் நிற்கும் என்றொரு கேள்வி வருகிறது. அதற்கு விடை தேடும் விஞ்ஞானி சொல்வது. இன்னொரு பிரபஞ்சத்தில் மீண்டும் எழுந்து நிற்கும் என்பது. அதாவது, பிரபஞ்சத்தில் 'எதுவும்' அழிவதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாறுகிறது அல்லது போக்குவரத்து கொண்டுள்ளது.

ஆன்மாவின் பயணமும் அதுவே. ஆன்மா என்றால் என்னவென்று முன் பதிவில் கண்டோம் (நான் யார்?). நான் என்ற உணர்வுதான் ஆன்மா. இந்த உணர்வு உடலை இயக்கும் சைத்தன்யத்திடமிருந்து வருகிறது. அதற்கு போக்கு, வரத்து உண்டு. சரி, மறுபிறப்பு உண்டெனில் ஏன் நாம் ஞாபகம் வைத்திருப்பதில்லை?

கண்முன் நாம் வாங்கிய வாழைப்பழம் செரிந்தபின் 'நானாகிப் போகிறது'. அப்போது வாழைப்பழம் முன்பிருந்த நிலை மாறிப்பொகிறது. அதுபோல் புதுப்பிறவி எடுக்கும் போது சில அடிப்படை விஷயங்கள் தங்குகின்றன, சில மாறிவிடுகின்றன. பழத்தின் சத்து அப்படியே உள்வாங்கப்படுகிறது, புற வடிவங்கள் மாறி அழிந்து விடுகின்றன. அது போல் 'வாசனை' என்று சொல்லக்கூடிய விஷயங்கள் ஆன்மாவில் தங்கி அடுத்த பிறவிக்கு உறுதுணையாக வருகின்றன. இந்த வாசனை என்பதை அறிவியல் instinct என்கிறது. ஆமை, தரையில் முட்டை இடுகிறது. முட்டை பொறித்தவுடன் ஆமைக் குஞ்சுகள் அப்படியே கரை ஏறிப் போகாமல் கடலுக்குள் ஏன் போகின்றன? அது instinct. நாம் கருவில் இருக்கும் போது தாயின் நீர்குடத்தில் நீந்திக் கொண்டிருக்கிறோம். அதுவும் முன்பிறவி வாசனையே. முன் மீனாய், ஆமையாய் நீந்திய வாசனைகள். பிறக்கும் குழந்தை இயற்கையாகவே நீந்தும் திறனுள்ளது. யானைகள் தரைவாசிகள். ஆனால் தேவையெனில் ஆழமான ஆற்றைக் கடக்கவியலும். எங்கிருந்து அவை நீந்தக் கற்றுக் கொண்டன? முன் ஜென்ம வாசனை! இப்படி மனித வாழ்வை கவனித்துப் பார்த்தால் பிற விலங்கினங்குள்ள பல குணாம்சங்கள் மனிதனுக்கு வாசனையாக வந்திருப்பது புரியும். இதை, இப்படிச் சொல்லாமல் வேறுவகையில் உயிரியலார் சொல்வர். ஆனால், அடிப்படையாக, விந்தையாகப்படும் சில விஷயங்களை ஒரு சுழற்சி முறையில், வைத்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ளமுடியும்.

இப்பிரபஞ்ச சிருஷ்டி முந்தைய சிருஷ்டியின் வாசனையினாலேயே உருவாகிறது. அப்படியே, இப்போது என்னவெல்லாம் இருந்தனவோ அவையெல்லாம் மீண்டும் உருவாகும். [இந்த இடத்தில் ஒருமுகப் பார்வையாக மேற்குலகு விஞ்ஞானம் காண்கிறது. உலகமே ஒரு நேர்கோட்டில் நடப்பது போலவும், எதற்கும் எந்தப் பொருளும் இல்லை போலவும், ஒருமுறை நிகழ்ந்தது மீண்டும் நிகழ வாய்ப்பே இல்லை எனவும் சொல்கிறது. இந்த மாடலில் குறைகளுண்டு. அதற்குள் இப்போது போகவேண்டாம்).

எனவேதான், சாகும் தருவாயில் நாம் ஆழமாக நினைக்கின்ற நினைவு எந்த வடிவில், எப்படி ஆன்மாவில் பதிவாகிறது என்ற கேள்வி எனக்கு சுவாரசியமாகப் படுகிறது. ஆன்மாவை நெஞ்சில் தங்கும் சுடரொளி என்கிறது வேதம். அந்தச் சுடரொளியில், முந்தையப் பதிவில் கண்ட மாதிரி சில சேதிகள் பதிவு பெறுகின்றன. நாம் வாழும் போது ஆசைப்படுவை பதிவாகின்றன. அவையே மீண்டுமொரு ஜென்மம் எடுப்பதற்குக் காரணமாகிறது. எனவேதான் வள்ளுவன்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

என்கிறார். வேண்டுவன என இனி ஒன்றுமில்லை. வேண்டாமை என்பதும் இல்லை. அப்படியெனில் ஆன்மா என்ற மைக்ரோ சிப்பில் எழுதியதெல்லாம் அழிவுற்று காலியாக நிற்கிறது என்று பொருள். மைக்ரோ சிப்பில் ஒன்றுமில்லை எனும் போது எந்த இயக்கமும் இல்லை. அதாவது மறுபிறவி இல்லை. அப்போது இடும்பை (துன்பம்) இல்லை.

அற்றது பற்றெனில் உற்றது வீடு!

என்று இதையே சொல்கிறார் நம்மாழ்வாரும். ஆக, சாகும் தருவாயில் இறைவன் நினைவாக இருந்துவிட்டால் பின் பிறவி இல்லை. ஏன்?

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

அதாவது வேண்டுதல், வேண்டாமை என்ற இருள்சேர் இருவினையும் சேராதவன் இறைவன். அவன் இருக்குமிடம் வைகுந்தம். அங்கு சென்றுவிட்டால் மறுபிறப்பு இல்லை. ஆன்மா என்ற hard disc முழுவதும் reformat ஆகி ஒன்றுமில்லாமல் இருக்கிறது. அப்போது பிறப்பிற்கான காரணம் ஏதுமில்லாமல் இருக்கிறது.

எனவேதான், முன்பு சொன்னேன் விஞ்ஞானிகளும், மெய்ஞானிகளும் ஏதோவொரு புதிரான மைக்ரோ சயின்ஸ், நானோ டெக்னாலஜி பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறார்களென்று. அதுவே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது!

12 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 11/22/2006 11:02:00 PM

திரு கண்ணன்
"புரிந்தும் புரியாமலும்" & "அறிந்தும் அறியாமலும்" இப்படி இருப்பதும் மெய்ஞானத்தை அறிய கூடிய வழிகளில் ஒன்று என்று தோன்றுகிறது.
இது பற்றி பல முறை பேசி படித்து ஒரு முடிவுக்கு வரமுடியாததால் "நான் யார்" என்ற குழப்பம் எனது Profile இல் போட்டிருந்தேன்.மதன் ஒரு கேள்விக்கு பதிலில் "நாம் எல்லாம் கெமிகல் ரியாக்ஷ்னோ?" என்று சந்தேகம் வருவதாக பதிலலித்திருந்தார்.
உங்கள் இந்த பதிவை படித்த போது "ஒரளவு புரிந்தாலும்",தூங்கும் நேரம் என்பதால் காலை மறுபடியும் படிக்கவேண்டும்.
நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இது தான் மாஸ்டர் பீஸ்.
மிக்க நன்றி

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/23/2006 12:33:00 AM

சிந்தனைக்கு விருந்து, கண்ணன் சார்!

/நாம் ஏன் வேலை செய்கிறோம்? சாப்பிடுவதற்கு. நாம் ஏன் சாப்பிடுகிறோம்? வேலை செய்வதற்கு//
//ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாறுகிறது அல்லது போக்குவரத்து கொண்டுள்ளது//

செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்
செய்வான்இன் றனகளும் யானே என்னும்,
செய்துமுன் இறந்தனவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்,
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?

நா.கண்ணன் 11/23/2006 07:37:00 AM

குமார்:

மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஞாயிற்றுக் கிழமை நண்பர் டாக்டர் ஹரியிடம் இதே பாயிண்டை நானும் சோன்னேன். அவர் சிரித்துக் கொண்டே, தெளிவாகப் புரியும் போது நாம் சொர்க்கத்தில் இருக்கின்றோம், தெளிவற்ற போதுகளில் நான் நரகத்தில் இருக்கிறோமென்று. எல்லாவற்றையும் உருவகம் (metaphor) என்பதுபோலும் விளக்கவியலும்.

நான் - நானைக் காண்பது என்பது எளிதல்ல. ஆன்மீகக் கண்ணாடியாக இறைவன் வந்தால் ஒழிய!

நா.கண்ணன் 11/23/2006 07:39:00 AM

கண்ணபிரான்:

என்ன அழகான பாசுரம்! இதில்தான் திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே! என்று வரும். அதைப் பரிமேல் அழகர் மேற்கோள் காட்டி, 'பெரியோரும்' சொன்னார்களே என்பார்!

ஜெயஸ்ரீ 11/23/2006 09:10:00 AM

ஐயா,

சிந்திக்க வைக்கும் பதிவு.

// அவன் இருக்குமிடம் வைகுந்தம். அங்கு சென்றுவிட்டால் மறுபிறப்பு இல்லை. ஆன்மா என்ற harddisk முழுவதும் format ஆகி ஒன்றுமில்லாமல் இருக்கிறது. அப்போது பிறப்பிற்கான காரணம் ஏதுமில்லாமல் இருக்கிறது.//

ஒரு ஐயம்....

ஆன்மா வினைப்பயனால் கட்டுண்டு இருக்கும்வரையில் பிறப்பும் இறப்பும் இருந்துகொண்டே இருக்குமல்லவா? வைகுந்தம் சென்றுவிட்டால் மறுபிறப்பு இல்லை. ஆனால் வைகுந்தம் செல்வதற்கான (pre requisite) criteria வே hard disk format ஆக வேண்டும் என்பதல்லவா?

அல்லது வைகுந்தம் சென்றால் hard disk format ஆகுமா ?

நா.கண்ணன் 11/23/2006 09:23:00 AM

அன்பின் ஜெயஸ்ரீ

நீங்கள் புரிந்து கொண்டதுதான் சரி. அதை நான் சொன்னது தெளிவற்று இருக்கிறது போலும்.

இங்கு, இப்போதே இருள் சேர் இருவினைகளையும் தீர்க்கவியலும். அப்போது வீடு பேறு இங்கே, இப்போதே என்று நம்மாழ்வார் அடித்துச் சொல்கிறார்.

ஆனால், வினையற்று இருத்தல், அதாவது ஏதாவதொன்றில் ஆசை வைக்காது வாழ்தல் என்பது சிரமம்தானே! அதனால்தான் 'விஷ்ணு மாயை'யை வெல்வது கடினம் என்பார்கள்.

ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. சரி, அடுத்த பதிவிற்கு வழி கோலிவிட்டீர்கள் :-)

துளசி கோபால் 11/23/2006 09:27:00 AM

உலகை விட்டுப்போகும்போது ஒரே ஒருதடவை 'ராமா'ன்னு சொன்னாப் போதுமாம். திரும்ப பூமிக்கு வரவே வேணாம்.

ஆனா, அது அந்த வினாடி ஞாபகம் இருக்குமா?

நா.கண்ணன் 11/23/2006 09:32:00 AM

அன்பின் துளசி

மிகச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். மரணம் சம்பவிக்கும் நேரத்தில் நம் மனது இறைவனுடன் இருக்க வேண்டும். அதை பழக்கத்தால் கொண்டு வரலாம். அப்படியும் மறந்துவிட்டால்...? சரி ஆழ்வார் பாசுரத்தில்தான் வழி காண வேண்டும். மாலை மீண்டும் வருகிறேன்!!

நேச குமார் 11/23/2006 11:45:00 PM

கண்ணன்,


நெடு நாட்களுக்குப் பிறகு நல்லதொரு பதிவைப் படித்த திருப்தி. நன்றி. சில இடங்களில் வேறுபட்ட சிந்தனைகள் மற்றும் சில சந்தேகங்கள் உள்ளன. இருப்பினும் நல்ல சிந்திக்கவைக்கும் பதிவு.

நா.கண்ணன் 11/24/2006 08:03:00 AM

நேசகுமார்:

உங்கள் சந்தேகங்கள் என்ன? மாற்று சிந்தனைகள் என்ன? தனிமடலில் கூட அனுப்பலாம். இதை நான் அறிவிற்கு விருந்தாகவே பார்க்கிறேன், எழுதுகிறேன்.

கால்கரி சிவா 11/24/2006 08:16:00 AM

சார்,

//ஏனெனில் பிரபஞ்ச சிருஷ்டியில் கருங்குழியில் விழுந்த சேதி எங்கு போய் நிற்கும் என்றொரு கேள்வி வருகிறது. அதற்கு விடை தேடும் விஞ்ஞானி சொல்வது. இன்னொரு பிரபஞ்சத்தில் மீண்டும் எழுந்து நிற்கும் என்பது. அதாவது, பிரபஞ்சத்தில் 'எதுவும்' அழிவதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாறுகிறது அல்லது போக்குவரத்து கொண்டுள்ளது.
//

அருமையான கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.

நேச குமார் 11/24/2006 12:28:00 PM

கண்ணன்,ஓ தாராளமாக. இதை மட்டும் ஒட்டியில்லாமல், பொதுவான சந்தேகங்களைக் கூட முன்வைக்கிறேன். பொதுவில் விவாதிக்கலாம், பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் (ஏற்கெனவே உஷா போன்றவர்கள் கேட்டுள்ள கேள்விகள் மீண்டும் வந்தால், பழைய எழுத்துக்களைச் சுட்டுங்கள் மீண்டும் படித்துத் தெளிகிறோம்).


எனக்கும் வழக்கமான விவாதங்கள்/சண்டைகளிலிருந்து மாறுதலாக இருக்கும்.


முடிந்தால் இன்றே ஆரம்பிக்கிறேன்.