வாழி, மனமே! கைவிடேல்!!

புத்தாண்டு (2007) கிழக்கில் பிறந்து விட்டது. இன்னும் சில நாடுகளில் கருவில் இருக்கிறது. எண்ணிலா அதிசயங்களில் இதுவும் ஒன்று. வாழ்வின் சிறப்பு அறிந்து, நம்பிக்கையுடன் தொடர புத்தாண்டில் வாழ்த்துவது ஒரு நற்பழக்கம்.

புத்தாண்டு என்றில்லை, எப்போதும் மனதில் இருக்க வேண்டியது புதுமை, எளிமை, தேடல், நம்பிக்கை. இதையெல்லாம் வாக்கில் வடித்திருக்கும் இருவரின் பாடல்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எத்தனையோ துயர் நடுவிலும் நமக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறான் பாரதி. அவனது அசைக்க முடியாத நம்பிக்கை நல்ல உள்ளங்களில் தீயாய் பற்றிக் கொள்ளக் கூடியது. அவன் வேண்டுவனவே நாம் வேண்டுவனவும்.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

(நன்றி: மதுரைத் திட்டம்)
பாடல்: பாம்பே ஜெயஸ்ரீ

பாரதியைத் தெரிந்த அளவிற்கு சமகாலத் தமிழனுக்கு சடகோபனைத் தெரியுமா? என்றறியேன். இவரும் அதே திருநெல்வேலிக்காரர்தான். இவரும் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர். மானுடத்தின் மீதுள்ள இவரது நம்பிக்கை ஒரு தமிழ்ச் சமய நெறியையே உருவாக்கித்தந்துள்ளது. மிக்க அடக்கம், தீராத காதல், உலகின் மீதான அன்பு, நம்பிக்கை இவற்றின் மொத்த உருவம் நம்மாழ்வார். அவர் சொல்கிறார் "வாழி, மனமே! கைவிடேல்!!" என்று. உலகு இன்று இருக்கும் இருப்பில் மானுடத்தின் மீதான நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாகத் தளர்ந்து வருகிறது. ஆயினும், மானுடம் ஓர் நாள் வெல்லும்! அதைப் பறை சாற்றுவனவே இக்கவிதைகள்.

ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன், உலகுஎல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துஉழலும்
ஆழி வண்ணன், என்அம்மான்,
அம்தண் திருமாலிருஞ்சோலை
வாழி, மனமே! கைவிடேல்;
உடலும் உயிரும் மங்கஒட்டே. (திருவாய்மொழி)10.7.9
(நன்றி: மதுரைத் திட்டம்)

உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

பொறுப்பு: ஜேகேஇப்பதிவு வாசகர்களுக்கு என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நாம் நடக்கும் வாழ்வுப் பாதையில் புத்தாண்டும் ஓர் நாள். நேற்றுப் போல் இன்று என்றில்லாமல் இன்று புதிதாய் இருக்க வேண்டும். இவ்வாண்டில் மனத்திற்கினியன செய்ய வேண்டும், ஆக வேண்டிய காரியங்களை முடிக்க வேண்டும், ஒத்தி போடும் மனதை கொஞ்சம் ஒத்தி போட்டு நினைத்ததை முடிக்க வேண்டும் என்றெல்லாம் நாம் இந்த தினத்தில் எண்ணுவதுண்டு. பலர் இதை எழுதி வைப்பதுமுண்டு.

வாழ்வு என்பது தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கிய பயணம். புதிய, புதிய சவால்கள் வாழ்வில் நித்தம் தோன்றிய வண்ணமுள்ளன. இச்சாவல்களை சந்திக்கும் திறன், சக்தி, தெம்பு நம்முள் நிறைய இருக்குமாறு நம்மை நாம் எப்போதும் 'நெருப்பணைக்கும் குழு' இருப்பது போல் 'தயார் நிலையில்' வைத்திருக்க வேண்டும். அதுவொரு கலை.

ஜே.கே இன்றைய பதிவில் இது பற்றிப் பேசுகிறார். உலகில் இன்று நம் கண்முன் காணும் பிரச்சனைகள் அடிப்படையில் நாம் உருவாக்கியவையே. எனவே அப்பிரச்சனைகள் என்னிலிருந்து வேறுபட்டவை என்பது போல் பார்க்காமல் அவை, நான் இயங்கும் விதத்திலிருந்து பிறப்பவை என்பதைப் புரிந்து கொண்டால், நம் நடத்தை மாறும். மாறும் அந்நந்நடத்தை புதிய, தேவையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார்.

வீட்டில் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம். பிரச்சனைக்கு ஒரு காரணம் இருக்கும். ஆயினும் இக்காரணம் நேற்று நாம் கண்டுணர்ந்த காரணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இப்போது வேறு காரணம் இருக்கலாம். ஆனால், நேற்றைய நம் முடிவுகள் இன்றைய பிரச்ச்னைக்கு முன் வந்து பிரச்சனையை முழுவதுமாய் காண விடாமல் செய்து விடுகிறது! [நேற்றுதான் 'வெயில்' படம் பார்த்தேன். அதில் அண்ணன்காரன் கோபத்தில் வீட்டிலிருந்த காசு, நகையை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். 20 வருடங்களுக்குப் பின் வீட்டில் மீண்டுமொரு சம்பவம் நடக்கிறது. அதற்கு இவனே காரணமென்று அப்பா திட்டுகிறார். ஆனால் அவன் திருந்தி நல்லவனாக வந்திருப்பதை, அவனைப் பற்றி அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ள அபிப்பிராயம் முன் வந்து தடுக்கிறது]

வலைப்பதிவு உலகம், மடலாடற் குழுக்கள் செயல்படுவது இந்த 'அபிப்பிராயம்' என்னும் சமாச்சாரத்தால். அபிப்பிராய பரிமாறல் இல்லையெனில் மடலாடற்குழுக்கள் இழுத்து மூட வேண்டியதுதான். ஜேகே அடிக்கடி இந்த 'அபிப்பிராயம்' பற்றிப் பேசுகிறார். ஒரு பிரச்சனை நம் முன் நிற்கும் போது அப்பிரச்சனை என்னவென்று காணவிடாதவாறு நம் அபிப்பிராயங்கள் முன் வந்து நிற்கின்றன. எந்தவித அபிப்பிராய, சித்தாந்தப் பின்புலன்களும் இல்லாமல் ஒரு நிகழ்வை நம்மால் காண முடியுமா? என்று கேட்கிறார் ஜேகே. அப்படிச் செய்யவில்லையெனில் எப்போதும் நீ உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே தவிர நிகழ்வைக் காணவில்லை என்றாகிறது. இது யாருக்குப் பொருந்துமோ, விஞ்ஞானிகளுக்கு இந்த நோக்கு மிக அவசியமானது. சத்திய தரிசனம் காண விரும்புவோர் அது நிகழும் போது, நிகழ்கின்ற விதத்தில் கண்டு ரசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நமக்கு தரிசனம் வந்தும் காணத்தெரியாமல் போய்விடுவோம். 'கலியுகக் கண்ணன்' படத்தில் இப்படித்தான் கண்ணன் தேங்காய் சீனிவாசன் முன் தோன்றுவார். அவரை இவன் கண்டுகொள்ள மாட்டான். ஏனெனில் அவர் என்.டி.ராமாராவ் போல் இல்லாமல் இருப்பதாலே! :-)

பிணக்குறும் பேதமை! ஜே.கே

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தனது வாழ்நாள் முழுவதையும் மனித மேம்பாட்டிற்கு செலவிட்டவர். துயரற்ற, பிளவற்ற அடிப்படை மனித (மனது) மாற்றத்தையே அவர் குறிவைத்தார். இந்த நீண்ட, நெடிய அவரது பயணத்தில் அவர் உலகின் தீர்க்க மதியுள்ள பலருடன் தொடர் உரை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஆலன் ஆண்டர்சன்னுடன் அவர் நிகழ்த்திய கலந்துரையாடல் இப்போது கூகுள் புழக்கடை சினிமாவில் கிடைக்கிறது. அவற்றை முறைப்படுத்தி இங்கு போடலாமென்று ஒரு ஆசை.கண்டெடுத்த முத்துக்கள்:

மானுடம் என்பது முழுமையானது, பிரபஞ்சம் என்பது எப்படி முழுமையாக இருக்கிறதோ அது போல். எனவே நான் வேறு, உலகு வேறு அன்று. நான்தான் உலகம், உலகம்தான் நான். பிளவுற்று அவதியுற்று நிற்கும் இவ்வுலகம் மனிதர்கள் உருவாக்கியதே! இங்கு காணும் பிளவுகள் காலம், காலமாக, தொன்று தொட்டு இருந்தவையன்று. அவை மனிதர்களால், தங்கள் மதி நலக் குறைவால் உருவானவையே.

எனவே உலகில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென துடிப்பவர்கள், முதலில் தங்களை மாற்றிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். தங்களுள் ஒரு சிறு மாறுதலைக் கூட அநுமதிக்காதவர்கள் புற உலகில் வன்முறையால், சட்ட ஒழுங்குகளால் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் அது தற்காலிகமானதே.

நான் இந்துவா? நான் பௌத்தனா? நான் கிறிஸ்தவனா? நான் கம்யூனிஸ்டா? நான் பிராமணனா? நான் தலித்தா? இந்த நாமகரணம் யார் தந்தது? ஏன் தந்தது? இதன் தோற்றம் என்ன? என்னுள் நிகழ வேண்டிய மாற்றமென்ன?

மனிதன் என்ற சொல் 'மனது' எனும் வேர்ச் சொல்லிலிருந்து வருகிறது. ஆக, மனது கொண்டவன் மனிதன். இந்த 'மனதில்' மாற்றம் நிகழும் போது மனிதன் மாறிவிடுகிறான்.

ஜே.கேயின் மொழி துல்லியமான, தெளிவான மொழி. வெட்டிப் பேச்சு இல்லாத மொழி. எனவே 5 நிமிடம் என்றாலும் கவனமாகக் கேட்கவேண்டும். அது ஒரு யுகப்புரட்சியின் வித்தைக் கொண்டிருக்கலாம். வாழ்க.

கலவி இன்பம் - ஜே.கே

ஆந்திர மாநிலத்தின் மதனபல்லியில் பிறந்தாலும், ஆங்கில மாதுவான அன்னிபெசண்ட் அம்மையார் அவர்களால் இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டதால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் 99% ஆங்கிலத்திலேயே அமைந்துவிட்டன. அவருக்கு பிரெஞ்ச் நன்கு தெரியும். ஆனால், தெலுங்கோ, தமிழோ தெரியாது (அன்னிபெசண்ட் அம்மையாரை 'அம்மா' என்று அழைப்பதைத் தவிர).

20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவ, சமய ஞானி என்று போராட்டப்படுபவர். இவரைக் கேட்பவருக்குத் தெரியும், இவர் ஒளிவு மறைவு இல்லாமல் எதையும் பேசுபவரென்று. சமயம் என்பது வேடிக்கைப் பொருளாக, கேளிக்கை சாதனமாக (குறிப்பாக இந்தியாவில்!) போய் விட்டது என்பதை உறைக்கும் படி சுட்டுவதுடன், எப்படி நமது மனது எப்போதும் தீர்க்கமுடன் இருக்க வேண்டுமென்றும், பண்டைய தத்துவ மரபான 'கேள்வியில் இருக்குது ஞானம்' என்பது மீண்டும் கண்டெடுக்க வேண்டிய ஒன்று என்றும் சொன்னவர் கிருஷ்ணமூர்த்தி.

கூகுள் தயவால் இவரது எண்ணிலா பேச்சுக்களில் சில இப்போது புழக்கடை சினிமாவாகக் கிடைக்கின்றன. இவற்றை இங்கு இட்டு சிந்திக்கலாம் என்பது என் எண்ணம்.
இந்த வீடியோவில் கிடைத்த முத்துக்கள்:

1. சிலுவை என்பது இந்தியர்கள் சொல்லும் 'நமோ' (நான் இல்லை) என்பதின் குறியீடு.

2. செக்ஸ் என்பதில் மட்டுமே சமகால மனிதன் தான் மனிதன், மனுஷி என்னும் சுய உணர்வு கொள்கிறான். மற்றை நேரங்களில் சமூகத்தின் அடிமையாக இருக்கிறான்.

3. பிரம்மச்சர்யம் என்பது மனது சார்ந்த ஒழுக்கம். அதை உடல் சார்ந்த ஒழுக்கமாக புரிந்து கொண்டது நம் தவறு.

மற்றைய முத்துக்களை நீங்கள் எடுத்துத் தாருங்கள். ஜே.கேயின் போதனைகள் 'காப்பிரைட்' பெற்றவை. இந்த வீடியோ புழக்கத்தில் உள்ளதால் தைர்யமாக இங்கு மறுபதிப்பு செய்கிறேன்!

பிறப்பொக்கும்


பீகிங்கில் எடுத்தது! உத்திரவின்றி உள்ளே நுழையாதே நகர் வாசல்!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அடிப்படை உயிரியல் உண்மை. நீரின்றி அமையாது உலகு என்பது போன்றதொரு உண்மை. இது வள்ளுவர் காலத்தில் மிக உயர்ந்த விழுமியமாக இருந்திருக்க வேண்டும். புத்தரின் வேறுபாடுகளற்ற சமுதாயத்தின் விழுமியமாக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே டாக்டர் அம்பேத்கார் பௌத்த வழிமுறைகளை சிபாரிசு செய்தார்.
இந்தியாவிற்கு என்றில்லை எல்லா சமூகங்களிலும் இதை நடைமுறைப் படுத்துவதில் பிரச்சனைகள் உள்ளன. வருகின்ற வருடத்தில் உலகின் முதல் ஆறு பணக்காரர்கள் அமெரிக்காவில் இருப்பார்கள் என்பது கணக்கு. இவர்களிடம் உலகின் 59% செல்வம் இருக்கும். இவர்களிடம் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்ல முடியாது. இவர்கள் வேறு படிநிலை (ஜாதி எனும் பதத்தைத் தவிர்கிறேன்).

இன்று 2006ம் வருடத்திற்கு விடை கொடுக்கும் நாள் இங்கு நடந்தது. எனது சக விஞ்ஞானி (பெண்) ஒருவருக்கு ஆண்டின் சிறந்த ஆய்வாளர் என்ற பரிசு கிடைத்தது. கூடவே, ஆய்வகத்தின் மிகச் சிறந்த தொழிலாளி என்று குப்பை கூட்டுபவருக்கு பரிசு கிடைத்தது. எல்லோரும் ஒரே மேடையில். எல்லோருக்கும் ஒரே பரிசு. வித்தியாசமான அநுபவம். இந்திய வம்சாவளியில் வந்த எனக்கு இது புதுமையாக இருந்தது (கசடுகள் இன்னும் நீங்க வேண்டும்!). இன்னும் இங்கு ஆச்சர்யப்படுத்தும் விஷயம், கக்கூஸ் கழுவும் பெண்கள் மதியம் ரெஸ்டாரெண்டில் சமையல் வேலையில் ஈடுபட்டு இருப்பர். நமக்கு ஒருமாதிரி இருக்கும். ஆனால், ஒரு கொரியனுக்கு அது பொருட்டாக இருப்பதில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை ஒரு உயர்ந்த நிலைக்கு இந்தியா எடுத்துச் சென்றுள்ளது. அதாவது, பிற ஜீவன்களுக்கும் வாழும் உரிமையுண்டு எனும் புரிதல். இதனாலேயே, அங்கு மட்டும் உலகின் மிக அதிக சாகபட்சிணிகள் வாழ்கின்றனர் (ஏறக்குறைய 600 மில்லியன் வெஜிடேரியன்). ஆனால், கொரியா பௌத்த நாடாக இருந்தாலும் உயிர்க்கொலைக்கு தயங்குவதே இல்லை. ஒரு நல்ல நாள், விசேஷம் என்றால் ஊதுவத்தி ஏற்றுகிறார்கள். கூடவே அறுத்த பன்றியின் தலையையும் வைக்கிறார்கள். இது நமக்குப் புரிவதில்லை.


தைவானில் எடுத்தது. ஒரு கோயிலில்!! பார்ப்பவர்களின் முக பாவத்தைக் கவனியுங்கள்!


இவர்களிடமிருந்து நாம் சமூகவியல் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் நம்மிடமிருந்து ஜீவ காருண்யம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ஒரு புதிர்!

சிப்ஸ் - கவனம்!Crisps are bad

Eating a packet of crisps each day is equivalent to drinking almost five litres of cooking oil every year. This particular figure was released by the British Heart Foundation as part of their Food4Thought campaign. The campaign also suggested that the number of crisps eaten in the UK would be enough to fill a telephone box every 43 seconds.

நாவிற்கு சுவையாக இருக்கும் நொறுக்குத் தீனியெல்லாம் உடலுக்கு நல்லதல்ல என்று தெரிகிறது! இம்மாதிரி junk food உண்டு வாழும் பள்ளிப் பிள்ளைகளெல்லாம் இப்போது குண்டு, குண்டாக இருப்பதின் காரணம் புரிகிறது! ஒரு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டால் 5 லி எண்ணை குடிப்பதற்குச் சமமாம்! குண்டாக இருப்பதை போஷாக்கு என்று கருதும் எண்ணம் மாறவேண்டும். கொழுப்பை உடலில் ஏற்றுவது எளிது, வெளியே எடுப்பது சிரமம். மனிதன் அடிப்படையில் 'பட்டினிப்பிள்ளை'. பட்டினிதான் இவனுக்கு நல்லது.

ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி
இருவேளை சாப்பிடுபவன் போகி
மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி

நாம எந்த வகை என்று நமக்கே தெரியும். புது வருடத்தில் படி நிலை மாற்றம் கொண்டு வரலாம்!

திருபிதிகா கொரியானா

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ 'திமி, திமி' நடனம் பற்றிச் சொல்லப் போகிறேன் என்று எண்ன வேண்டாம். நேற்று, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு வித்தியாசமான அநுபவம் கிடைக்குமென்று நான் எண்ணவில்லை. 3 நாட்கள் விடுமுறை. என்ன செய்யலாமென ஆலோசித்து ஒரு வெந்நீர் ஊற்று உள்ள இடத்திற்கு செல்லலாமென இங்குள்ள இந்தியர்கள் (80% தெலுங்கு) தீர்மானித்தோம். 24 தேதி அங்கு நேரத்தைச் செலவு செய்துவிட்டு (வாத்சாயனர் போன்ற ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும் இடம் கொரிய, ஜப்பானிய வெந்நீர் ஊற்றுகள். ஏனெனில் இங்கு ஆடை ஏதுமில்லாமல்தான் உலவ வேண்டும் (ஆண்/பெண் தனித்தனி !!) அடுத்த நாள் முற்பகல் பொழுதைக் கழிக்க ஹே-இன்-சா (ஹே-இன்-கோயில்)விற்குச் சென்றோம்.அன்று ஏதோ விசேஷ பூஜை நடந்து கொண்டு இருந்தது. புத்தர் நம்மாளு என்பதால் நாங்கள் சகஜமாக உள்ளே சென்றோம். உண்மையில் பௌத்தம் இந்திய தந்திர சம்பிரதாயத்தை வளர்த்தெடுத்த மதம். கோயிலுக்குள் போகுமுன் ஸ்வஸ்திகா வடிவிலிருந்த ஒரு மண்டலத்தில் சுற்றி வந்து (பிரகாரத்தைச் சுற்றுவது போல்) கோயிலுக்குள் சென்றால் பூஜை நடந்து கொண்டு இருந்தது. அன்றைய விசேஷபூஜை 'திருபிதிகா கொரியானா' என்றழைக்கப்படும் பௌத்த போதனைகளுக்கு! இவை மொத்தம் 80,000 மரவார்ப்புகள்.


படம்: செந்தில் விஸ்வநாதன்


77 வருடங்கள் எடுத்துக் கொண்டு 1087-ல் இதைக் கொரியர்கள் செய்வித்து இருக்கின்றனர். இடையில் இவை ஒருமுறை அழிவுற்று, மீண்டும் 1236-ல் செய்விக்கப்பட்டிருக்கிறது! இது குறித்த ஆங்கில ஆவணப் பக்கம் காண சொடுக்குக! இது பற்றி நான் அறிந்திருந்தாலும் இவை பாதுகாக்கபடும் கோயிலுக்கு, அதுவும் கிறிஸ்துமஸ் தினத்தன்று செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்தப் பழம் வேதங்களுக்கு நான் என் கையால் பூஜை செய்வேன் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எப்படி, 'குரு கிரந்த்' என்று சிக்கியர்கள், அவர்களது குருவின் திருவாய்மொழிக்கு பூஜை செய்கிறார்களோ அதுபோல் இவர்கள் இந்த நூற்களுக்கு பூஜை செய்கின்றனர். அழகிய செம்புச் சொம்பு போன்ற ஒன்றில் நீர் ஊற்றி, இப்புத்தகங்களுக்கு ஆராத்தி செய்தோம். சரஸ்வதி பூஜை அன்று செய்திருக்க வேண்டியது கிறிஸ்துமஸ் அன்று நடந்திருக்கிறது!!

இந்த பூஜையில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட எங்களுக்கு புத்த பிட்சுக்கள் தங்கள் கையால் செய்த சைவ உணவை இட்டனர். மௌனமான சூழலில் இவ்வுணவை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு உண்டது என்னைச் சங்க காலத்திற்கு இட்டுச் சென்றது. திருபிதிகா கொரியானா போல் இவை அக்காலத்தில் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு நடைமுறையில் இருந்திருக்கும். ஒரு சுவடு கூட இல்லாமல் பௌத்தத்தை தமிழர்கள் அழித்துவிட்டனர். ஆனால் 1000 வருடங்களுக்கும் மேலாக மிக அழகான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு இந்திய பொக்கிஷத்திற்கு என் நன்றிகளை, என் வந்தனங்களை அன்று சமர்பிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்திய மரபு ஆவணத்தில் ஈடுபட்டுள்ள எனக்கு இது ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் அநுபவம்!


படம்: செந்தில் விஸ்வநாதன்

அன்பென்ற மழையிலே!

அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!

வைக்கோலின் மேலொரு
வைரமாய், வைரமாய்
வந்தவன் மின்னினானே!

வின்மீன்கள் கண்பார்க்க
சூரியன் தோன்றுமா போல்
புகழ் மைந்தன் தோன்றினானே!

கண்ணீரின் காயத்தை
செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

கல்வாரி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!

நூற்றாண்டு இரவினை
நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!

இரும்பான நெஞ்சிலும்
ஈரங்கள் கசியவே
இறை பாலன் தோன்றினானே!

முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

மின்சாரக் கனவு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

பாடல் கேட்க சுட்டுக!

ஆழ்வார்க்கடியான்!

ஒருமுறை மதுரைத் திட்டம் பூகழ் கு.கல்யாணசுந்தரம் என்னைப் பார்த்து, 'பார்த்தசாரதிக்கு ஆயிரம் பேர் இருப்பது போல் உமக்கு ஆயிரம் பூக்கள் (வலைப்பூ) உண்டு போலும்!' என்றார். என்ன செய்வது? சும்மா இருக்க முடியவில்லை! பெரியாழ்வார் போல் பாமலை தொடுத்து இறைவனுக்கு திருத்தொண்டு செய்வோம் :-)

ஆழ்வார்க்கடியான் என்றொரு வலைத்தளம்!

கல்கி இந்தப் பெயரை பிரபலப்படுத்தியது என்னைக் கவர்ந்தது. பொன்னியின் செல்வனின் எனக்கு அந்தப் பாத்திரம் பிடிக்கும். அந்தக் காலத்தில் நிலவிய சிவ-விஷ்ணு பேதத்தைச் சுட்டும் பாத்திரம்.

ஆனால், கல்கிக்கு குசும்பு உண்டு. பாரதியை 'மகாகவி என்று சொல்லலாமா?' என்று தலையங்கம் எழுதினார்! ராஜாஜியின் சிஷ்யராக இருந்தும் 'ஆழ்வார்க்கடியானை' ஒரு கேலிச் சித்திரமாக உருவாக்கி தமிழ் உலகில் உலவ விட்டார். 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு' என்று விளையாட்டாகச் சொல்லும் போதும் கூட ஒற்றுமை உணர்வை விட சட்டென மனதில் படிவது, 'ஆகா! இவை வேறு போலும்!' என்ற எண்ணமே.

எனவே இப்படியான ஒரு நெகடிவ் இமேஜ் உள்ளதை மாற்ற வேண்டும். எனவே அந்தப் பாத்திரத்தின் பெயரை அப்படியே பயன் படுத்தி கேலிச் சித்திர உணர்வை மாற்றி, ஒரு சீரிய தெளிவான உணர்வைக் கொண்டு வரவேண்டும். அதற்கு இவ்வலைப் பதிவு ஒரு முயற்சி.

ஆழ்வார்க்கு அடிமையாதல் அவ்வளவு சின்ன விஷ்யமல்ல. ஆனானப் பட்ட வேத வித்தர்களான ஸ்ரீராமானுஜர், ஸ்வாமி தேசிகன் போன்றோர் தலை மேல் வைத்துப் போற்றும் பெருந்தகைகள் ஆழ்வார்கள். இவர்களைப் பற்றிய புரிதல் சமகாலத் தமிழனுக்கு அவசியம். இந்த நோக்கில்தான் 90-களின் இறுதியில் தமிழின் முதல் மடலாடற் குழுவான தமிழ்.வலை யில் பாசுர மடல்கள் என்றொரு தொடர் எழுத ஆரம்பித்தேன். சும்மா விளையாட்டாக ஆரம்பிக்க அது வினையாக முடிந்து விட்டது. ஆயிரம் பேர்களில் ஸ்ரீமன் நாராயணனுக்கு 'குழி' என்ற பேருமுண்டு. இந்தக் குழியில் விழுந்தவர் எழுதவே இல்லை! என்பதைச் சுட்டுமுகத்தான் வந்தது போலும்! '

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோக மாளும்
அச்சுவை பெரினும் வேண்டேன்!

என்று அநுபவத்தில் விழுந்த இச்சுவையான வரிகள் பொய்க்குமோ? ஏதோ விளையாட்டாக எழுதப் போய் அதுவே சுவையாகப் போய்விட அன்றையிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுத, எழுத ஆர்வம் கூடுகிறது, சுவை கூடுகிறது, தெளியாத மறை நிலங்கள் புதிது, புதிதாய் புலப்பட ஆரம்பிக்கின்றன!

எனவே முதலில் பாசுர மடல்களை ஒருங்குறிக்குக் கொண்டு வரும் முயற்சி. பின் அம்மடல்கள் வந்த காலத்தில் அதற்கு வந்த எதிர்வினைகள் (பின்னூட்டங்கள்) இவைகளையும் பதிவு செய்ய எண்ணம். அது ஒரு காலத்தின் பதிவாகவும் இருக்கும். அதன் பின்னும் நான் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகளை அப்பதிவில் தொகுக்க இஷ்டம்.

ஆளவந்தார், இராமானுஜனின் குரு. அவர் பெயரில் சினிமாப் படம் வந்தாச்சு!
ஆழ்வார், இவர்கள் எல்லோருக்கும் குரு! ஆழ்வார் பெயரிலும் படம் வந்தாச்சு!
பாக்கி இருப்பது, ஆழ்வார்க்கடியான்தான் :-) இப்பெயரிலும் படம் வரும். வைகைப் புயல் வடிவேலுவை வைத்து வரும்! கோண, கோணக் கோவிந்தா! என்று கேலியாக நாமகீர்த்தனம் செய்தாலும் அதை மலரிட்டு செய்யும் அர்ச்சனையாகவே நாரணன் ஏற்றுக் கொள்கிறான். அவன் அருளாளன். பேரரருளாளன் (க்ருபாளு). அப்படி இருக்கும் போது சமகாலத் தமிழில், அரையும் குறையுமான அறிவுடன் நாம் எழுதும் கட்டுரையும் அவன் உவப்புடன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனெனில் அவன் தந்தை, நாம் அவன் பிள்ளைகள். வள்ளுவன் என்ன சொல்கிறான்:

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதார்

என்று. நாம் பேசும் அபத்தம் அவனுக்கு மழலைச் சொல்தானே! தாய் குழந்தையின் உளறல்களைக் கண்டிப்பதில்லை. மாற்றாக ரசிக்கிறாள்! நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு என்ன சாமன்யமான உறவா?

உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

என்றல்லலோ ஆண்டாள் சொல்கிறாள்.

மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம். அக்காலத்தில் பரப்பிரம்ம விசாரணை தொடங்குவது சாலச் சிறந்ததே!


கொசுறு: பிளாக்கர் பதிவுகள் தமிழ்மணத்துடன் மீண்டும் நல்லுறவிற்கு வந்துவிட்டன.

Blogger (beta) வும் தமிழ் மணமும்

புளோக்கர் பீட்டா (பீடா அல்ல :-) கதை முடிந்து இனிமேல் இதுதான் புத்தம் புதிய புளோக்கர் என்ற அறிவிப்பு வந்தாகிவிட்டது. இடையில் மாறிய எனது வலைப்பதிவு என்ன செய்தும் தமிழ் மணத்தில் ஒட்டவில்லை (syndicate). அவர்கள் இதற்கொரு தீர்வு காணும் வரை நான் எழுதும் பதிவுகளைப் பற்றிய அறிவிப்பு வேண்டுமெனில் உங்கள் முகவரியை அறியத்தாருங்கள். உள்ளே போட்டுவிடுகிறேன். புளோக்கர் புதிய பதிவு ஏற்றியவுடன் உங்களுக்கு அறிவிக்கும் (நம்புவோம்). புதிதாக உருவாக்கிய வலைப்பதிவு என்ன செய்தும் தேன்கூட்டில் ஏறமறுக்கிறது! ஒரு புளோக்கர் முகவரியை ஏற்றுக் கொள்ளும் தேன்கூடு இன்னொரு புளோக்கர் முகவரியை ஏற்க மறுக்கிறது (Ping செய்ய). எனவே கொஞ்ச காலம் 'திக்குத் தெரியாமல் அலைய வேண்டியதுதான்' போலும்!

பாவம், பரத்தையர்

மனித வரலாற்றிலேயே மிக தொன்மையான தொழில் என்றால் அது பரத்தையர் (=விலைமகள்?)தொழிலாகத்தான் இருக்கும். இது ஆண் மக்களால் தங்கள் சுகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட தொழில். ஆனால் இதில் இவர்களது நிலைப்பாடு பாசாங்குத்தனம் நிரம்பியதாக உள்ளது. தனி மனித அளவில் பெரும்பாலோர் உள்ளுக்குள் சப்புக் கொட்டினாலும், சமூக அளவில் இதை, யார் மீதோ பழி போட்டு, தடை செய்ய முயல்கின்றனர். இந்தப் பாசாங்குத்தனம் குறித்து பாரதி தலையங்கம் எழுதியுள்ளான்.

தென், கிழக்காசிய நாடுகளில் இது நிருவனப்படுத்தப்பட்ட தொழில். நெதர்லாந்தில் கூட இது நிருவனப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இது தேசிய அளவில் வருமானம் தருகின்ற தொழிலாக காணப்படுகிறது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இதுவொரு கலையாக (இந்தியாவில் தாசி குலம் இருந்தது போல்) வளர்தெடுக்கப் பட்டுள்ளது. எனவே இங்கெ இது மலிவான உடல் வியாபாரமல்ல. எனவேதான் அரசாங்கம் இதைத் தடை செய்ய முயன்ற போது பரத்தையர் தலைநகரில் கூடி பாராளுமன்றத்தின் முன் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சீனாவின் நிலைப்பாடு இரண்டும் கெட்டானாக உள்ளது. சமீபத்தில் படித்த சேதியில் பரத்தையர் தெருவில் இழுத்து வைத்து அவமானப் படுத்தியதாக ஒரு சேதி படித்தேன்.இதற்கு பெரும்பாலான இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. போலீஸ் அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளதாக.பரத்தையர், குற்ற உணர்வு, அழுக்குணர்வு இவைகள் சில சமயம் பயங்கரத்தன்மை அடைந்துவிடுகின்றன. சமீபத்தில் இங்கிலாந்தில் பரத்தையர்களைக் குறி வைத்து கொலைகள் நடந்துள்ளன. தமிழ் சினிமாவில் குணா என்ற படம் இத்தகைய மனோ நிலையுள்ள ஒருவன் பற்றியதே. ஆனால் அது இந்தியத் தன்மை கொண்டு, ஆன்மீகக் கலவை பெற்று ஒரு மாதிரி எடுக்கப்பட்டு தோல்வி அடைந்துவிட்டது.

ஆண்களின் இச்சைக்குப் பலியாகும் இப்பெண்டிர் எந்த நோக்கிலும் அநுதாபத்திற்கு உரியவர்களே. மனிதனுக்கு ஆசை உள்ளளவும் இது இருக்கப் போகின்ற தொழில். எனக்கென்னமோ கொரிய-ஜப்பானிய-நெதர்லாந்து நோக்கே நாகரீகமானது என்று தோன்றுகிறது.

படிப்பின் பாரம்விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது படித்த நாளிதழின் இச்சித்திரம் என்னைப் பாதித்தது. படிப்பின் பாரம் என்பது கிழக்காசிய மாணவர்களை சிதைக்கும் ஒரு கருவியாகப் போகும் அவலத்தை இப்படம் சுட்டுகிறது. காலை 7:30 மணிக்குப் பயணப்பட்டால் சீருடை தாங்கிய மாணவர்கள் கூட்டம். இரவு 10:30 மணிக்குப் பயணப்பட்டாலும் மாணவ, மாணவிகள் கூட்டம். இப்படிப் படித்துக் கொண்டிருந்தால் தூங்க வேண்டாமா? மனித பரிணாம வளர்ச்சியில் தூக்கத்திற்கு மிக முக்கிய உளவியல், உடலியல் பங்கு உள்ளது. படிக்க வேண்டிய பாடங்கள் கூடிக்கொண்டே போகின்றன. இருக்கின்ற பொழுது என்னமோ கூடுவதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்! பளு தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் தொகை ஜப்பானிலும், கொரியாவிலும் கூடி வருகிறது! அதையும் இச்சித்திரம் காட்டுகிறது. Data Mining என்பது ஒரு துறையே ஆகிப்போகுமளவு தகவல் வளர்ச்சி பிரம்மிப்பு அளிக்கிறது. Matrix படத்தில் வருகின்ற மாதிரி பல்வேறு துறை ஞானங்கள் அடங்கிய memory chip வந்து அதைத் தலையில் செருகிக்கொண்டு செயல் பட்டால் ஒழிய இந்த அசுர வேகத்திற்கு மனித மூளை இடம் கொடுக்காது. ஏதாவது செய்து ஆகவேண்டும். பள்ளிப் பருவம் என்பது இனிமையாக இருக்க வேண்டும். அது பளுவாகி விடக்கூடாது. மனிதன் ஒரு உணர்வுப் பிராணி. தகவல் பிராணி அல்ல. தகவலை தக்க வைத்துக் கொள்வது கணினியின் பணி. வாழ்வை வாழ வேண்டியது மனிதனின் பணி. ஜெர்மனியில் குழந்தைகள் 6 மணி நேர அசுரப் பரிட்சைகள் எழுதுகின்றன! அவர்களது பிரச்சனைகளை சமூகம் சரியாகப் புரிந்து கொள்கிறதா என்று தெரியவில்லை. Back to Basics என்று பிருந்தாவன ஸ்டைலில் பள்ளிப்பாடம் மாறும் காலம் வரும். அப்போது குழந்தைகள் கிருஷ்ணன் போல், கோபியர் போல் குதுகூலமாக இருப்பார்கள்.

பரியங்கம் பயின்றால் பல காலம் வாழலாம்

That's part of the issue with sex. Why the hell do you have sex besides having to procreate? First of all, sex is a survival tool. Sure, we're all busy, but there are compelling health reasons to do it, and do it often: Men who have sex 116 times a year live 1.6 years longer than those who hit the national average of 58 times a year. (Guys who do it 350 times per annum -- admittedly a heroic accomplishment -- should live an average of eight years longer.) But there's also the fact that, for most of us, orgasm is the closest we get to God. It's our Zen experience. Everything disappears, and it's all bliss. That's why meaningful sexual relationships are so critical.

How the World Shaves Years Off Your Life

அறிவிப்பு: தளர்வைத் தவிற்கும் தகவலான இது, தவறான பார்ட்டி கைக்குப் போனால் நான் பொறுப்பல்ல :-)

காமசூத்திரம் எழுதிய வாத்சாயனர் காலத்தில் இந்தியா நிச்சயமாக வித்தியாசமான சமூகமாக இருந்திருக்கும்! சங்க காலத்திலும் இயற்கை தழுவிய காதல் இருந்திருக்கிறது.

சைவ மரபில் பாலியல் குறித்து இரண்டு பேர் தைர்யமாகப் பேசுகின்றனர். ஒருவர் திருமூலர். மற்றது சுந்தரர். இவர்கள் தனியான ஒரு மரபைச் சார்ந்தவர்கள். அதற்கு பரியங்க யோகம் என்று பேர். வட மரபில் இதைத் தந்திரம் என்கின்றனர். இப்போதுள்ள பாசாண்டித்தனமான தமிழ் வாழ்வில் இந்த மரபை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். சினிமாவில் மட்டுமே கட்டுக்கடங்கா காதல் தெரிகிறது. பெரும்பாலான வீடுகளில் தம்பதியருக்கு தனி அறை கூடக் கிடையாது. தாம்பத்ய உறவு வாழ்நாளைக் கூட்டுகிறது என்ற இச்சேதி திருமூலருக்கு அதிசயமாக இல்லாதிருக்கலாம். ஆனால், 21 நூற்றாண்டுத் தமிழனுக்கு இது சேதியே!

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே

திருமந்திரம்

துடிப்பான முதுமை


சீன விமானத்தில் பறந்த போது கிடைத்த செய்தித்தாளில் 106 வயதுடைய சீன முதியவர் மக்கள் வியக்க குங்பூ செய்து காட்டியிருக்கிறார். பெய்ஜிங் சென்ற போதும் 80 வயதிற்கும் மேலான முதியவர்கள் பூங்காவில் 'தாய்ச்சி' பயிற்சி அல்லது எளிய நடனங்கள் ஆடிக்கொண்டிருந்ததைக் கண்ணுற்றேன். இவர்கள் விவசாயிகளோ, கிராமத்து சனங்களோ அல்ல. நகரத்துவாசிகள். ஆனால் இந்திய/தமிழக மத்திமர் குடும்பங்களில் 50 வயது தாண்டிவிட்டாலே குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனில்லை என்பது போன்றதொரு மனோநிலை! இது மாற வேண்டும். வயதானோர் ஆரோக்கியமாக சாகும்வரை இருக்க வேண்டும். தங்களால் இயன்ற குடும்ப, சமூக சேவைகள் செய்து கொண்டு வாழ வேண்டும். இல்லையெனில் "நூறாண்டு காலம் வாழ்க!" என்று வாழ்த்துவதில் அர்த்தமில்லை!

கேள்வி பிறந்தது எங்கே?

பிரபஞ்சத்தில் ஒன்றைப் போல ஒன்று இருப்பதில்லை. மனிதன் அறிந்தவரை பூலோகத்தில் மட்டுமே ஜீவிதம் நடைபெறுகிறது. அப்படியென்ன இந்த பூமிக்கு சிறப்பு (uniqueness)? என்ற கேள்வி விஞ்ஞானிகளை அரித்துக் கொண்டுள்ளது. எனவே வேற்று கிரகத்தில் ஜீவிதம் உண்டா? என்று ஆராய முற்பட்டுள்ளனர். பூமி போல கோடான கோடி கிரகங்கள் உள்ளன. அவைகளில் இது போன்ற ஜீவிதம் நடைபெறலாம் என்று நம்புகிறார்கள். இதை எழுதும்வரை அதுவொரு நம்பிக்கைதான். ஊர்ஜிதமாக ஏதும் கிடைத்தபாடில்லை. எப்படி, இப்படியானதொரு சிருஷ்டி? ஒவ்வொன்றும் வெவ்வேறாக? இரட்டைக் குழந்தைகள் கூட ஒன்றல்ல. கைரேகையில் மாற்றமிருக்கும்!

இப்படி வேறுபட்டுள்ள உலகை நோக்குற்றால் வேற்றுமையில் ஒற்றுமை தெரியும். முன்பெல்லாம் வன விலங்குகள் எப்படி வாழ்கின்றன? என நாம் அறிந்து கொள்ள வாய்பில்லாமல் இருந்தது. இப்போது டிஸ்கவரி சானல், அனிமல் பிளானட், நேஷனல் ஜியாகிரபிக் என்று எத்தனையோ! இவைகளைப் பார்த்து வந்தால் புரியும், அறிவு, ஞானம் என்பது மனிதனுக்கு என்று மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்திற்கும் அறிவு பொது என்று. வாழும் சூழலுக்கு ஏற்ற அறிவு அமைகிறது. எப்படித் தச்சருக்கு மேசை செய்யும் அறிவு ஒளிருகிறதோ! பத்தருக்கு தங்கத்தை உருக்கி, நுண்ணிய கலை வேலைப்பாடுள்ள நகை செய்யும் அறிவு மிளிருகிறதோ, அது போலவே கடலில் வாழும் பிராணிகளுக்கு கடலில் என்ன சூட்சுமங்கள் உண்டென்று தெளிவாகத் தெரியும்.

கடல் ஒரு திறந்த வெளி என்றாலும் ஒவ்வொரு ஜீவராசியும் அந்தத் திறந்த வெளியில் தங்களுக்கென்று சூழல் (niche) அமைத்துக் கொண்டு வாழும் அறிவைப் பெற்றிருக்கின்றன. அது மட்டுமல்ல, 'திறந்த வீட்டில் நாய் புகுந்தார் போல' கடல் வெளியில் carnage நடப்பதில்லை. அங்கு ஒரு ஒழுங்கமைதி இருக்கிறது. பெரிய மீனுக்கு சின்ன மீன் உணவு என்பது பொது விதி என்றாலும் எல்லா மீன்களையும் எல்லா மீன்களும் சாப்பிட முடிவதில்லை. இனமறியா நிர்வாகமொன்று பின்புலத்தில் இருக்கிறது.

நெருப்பு பூமியெங்கும் இருக்கிறது. ஏன் பூமிக் கோளமே ஒரு கனல்கண்டுதான்! ஆனால், அதன் மேல் ஜீவிதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காற்று மிஞ்சினால் கடும் சேதம், நீர் பொங்கினால் கடும் சேதம், மலை உடைந்தால் கடும் சேதம். இப்படிப் பஞ்ச பூதங்களில் ஏதாவதொன்று மிஞ்சினால் யாக்கை நடைபெற முடியாது. ஆனால் அவை மிஞ்சாதவாறு ஒரு நிர்வாகம் பின்புலத்தில் நடைபெறுகிறது.

உயிரியல் சொல்கிறது DNA make-upல் ஒரு செல் உயிருக்கும், மாமனிதனுக்கும் வெத்தியாசமென்பது 0.1% கும் குறைவென்று. உயிரினங்களுக்கு ஒரு template (வார்ப்பு) இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு கண்ணில் தெரியும் அத்தனை ஜீவராசிகளும் உருவாகியுள்ளன. மனித குலத்தின் ஆதித்தாய் என்று ஒருவள் உண்டு என்று, ஆன்மீகம் சொல்லவில்லை!, அறிவியல் சொல்கிறது.

இப்படி ஆதித்தொடர்பு ஊர்ஜிதமாகத் தெரிந்தாலும், வேற்றுமை இருந்தால்தான் ஜீவிதத்தைத் தொடர முடிகிறது. அடிப்படை அறிவியல் உண்மைப்படி நாம் எல்லோருமே சகோதர, சகோதரிகள்! கல்யாணமே செய்துக் கொள்ளக் கூடாது! ஆனால், நாம் குலம், கோத்திரம் என்று பிரித்து வேற்றுமைகளை உருவாக்கி கல்யாணம் செய்து கொள்ளக் காரணங்களை உருவாக்கி ஜீவிதத்தை நடத்துகிறோம்.

அத்வைதம் தவறு என்று யாரால் சொல்ல முடியும்? அதுதான் அடிப்படை உண்மை. ஆன்மீகமாகட்டும், அறிவியலாகட்டும். அதற்காக, தாய்-தாரம் என்ற பேதம் பார்க்காமல் வாழ்கிறோமா? எவ்வளவு நுணுக்கமாக நம் விழுமியங்களை உருவாக்கியிருக்கிறோம். நம் பண்பாடு என்பது வேற்றுமைகளை நிரந்தரப்படுத்ததானே! பலதார மணம் ஏற்புடையது என்றாலும் ஸ்ரீராமனை ஏன் அவ்வளவு உயர்வாகப் பேசுகிறோம்? ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடைமுறை சிறப்புடையது. அப்போது நம் காதலை, நம் அன்பைக் காட்ட ஒரு வழி கிடைக்கிறது. பொங்கி வரும் காதல் உணர்வில் போவோர் வருவோரைப் புணர்தல் முடியாது. அது நெறியான வாழ்வாகாது. திருமணம் எனும் ஒரு பாதையில் நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, அனுபவித்து வாழ்ந்து முடித்துவிடுகிறோம்.

எனவே கற்பு என்பது ஒரு ஒழுங்கு என்றாகிறது. ஒரு focal point தருகிறது. தாவும் சிந்தனைக்கு தியானம் ஒரு focus தருவது போல், தரிகெட்டுப் போகத் துடிக்கும் பாலியல் இச்சைக்கு, கற்பு ஒரு focus தருகிறது. இந்தியாவிலிருந்து கொண்டு தாறுமாறான நீலப்படங்களைப் பார்த்துவிட்டு வெளிநாட்டில் எல்லாம் தறிகெட்டுக் கிடக்கிறது என்று அசட்டுத்தனமாக எண்ணுவோர் உண்டு. உலகில் அது எந்தச் சமூகமாக இருந்தாலும் கற்பு உண்டு. கிறிஸ்தவ சமூகத்தில் கற்பு உண்டு. முஸ்லிம் சமூகத்தில் கற்பு உண்டு. பௌத்த சமூகத்தில் கற்பு உண்டு. ஆக, எல்லோரும் ஒரு ஒழுங்கமையில் வாழவே ஆசைப்படுகின்றனர். வாழ்வதோ குறைந்த நாட்களே அது பொழுது சீராக வாழ்வை அனுபவித்துவிட அமைக்கப்பட்டவையே இவ்விழுமியங்கள் (human values). அதனால்தான் இன்றளவும் வள்ளுவம் போணியாகிறது :-)

தமிழ்ச் சமூகம் இந்த கற்பை ஒரு படி நிலை மேலே எடுத்துச் செல்கிறது. உலகில் உள்ள ஆண்களெல்லாம் potential கணவன் என்றாலும், வாக்குப்பட்டவனே கணவன். அவனுடன் இயைந்து வாழ்வதே பெண் தர்மம். 'கற்பு என்று சொல்ல வந்தால் அதை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்' என்பான் பாரதி. அந்த சூத்திரத்தின் படி இது ஸ்ரீதர்மம் என்பதை விட மனுஷ தர்மம் என்று கொள்வோம். இப்படிச் செய்வதால் ஒரு நடைமுறை வசதி உண்டாகிறது. மிக நெருக்கமாக, ஒன்றுக்கு ஒன்று என்று செயல்படுவது எளிது. உறவுகள் கூடக்கூட சிக்கல்களும் கூடுகின்றன.

இந்த பார்முலாவை அப்படியே தூக்கி நம் இறை அனுபவத்தில் வைக்கின்றனர் தமிழர். After all, பக்தி என்பது காதல்தான். எனவே காதலுக்குள்ள சூத்திரம் பக்திக்கும் செல்லுபடியாகும்! எப்படிக் காதலில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடைமுறைக்கு எளிதோ அது போலவே பரந்தாமன் எண்ணி மாளாத வடிவில் பரிமளித்தாலும், நமக்கு உகந்த வடிவில் அவனுடன் உறவு கொள்வதே சிறப்பு என்று கண்டனர் பெரியோர். இந்தச் சிந்தனை தான் சிவ-விஷ்ணு பேதத்திற்கு மூலகாரணம்.

அந்த ஒன்று. பரப்பிரம்மம் undifferentiated-ஆக இருந்தபோது வம்பே இல்லை. ஏனெனில் பேதமில்லை. இரண்டு என்று வந்தால்தானே பேதமே! ஆனால் அந்த வம்பு பிடித்த பரப்பிரம்மம் (அலகிலா விளையாட்டுடையான்), சும்மா இல்லாமல் ஒன்றிலிருந்து மூன்றாகியது, பின் நான்காகி, நானாவித சொரூபமாகி பல்கிப் பெருகிறது. வேத கலாச்சாரத்தில் வந்த தமிழர்கள் முதல் மூன்றை வலுவாகப் பிடித்துக் கொண்டனர். விஷ்ணுவும், பிரம்மாவும் அப்பா, பிள்ளை உறவாகிப் போய் விட்டதால், மிஞ்சுவது சிவன் ஒருவன்தான். எனவே விஷ்ணுவை ஒரு பார்டியாக்கி, சிவனை இன்னொரு பார்டியாக்கி வழிபடத் தொடங்கினர். சிலர், அன்னை வழிபாடு, கணபதி வழிபாடு, முருகன் வழிபாடு, சூர்ய வழிபாடு என்று ஆரம்பித்தனர்.

காணபத்யம், கௌமாரம், சாக்யம் இவைகள் ஒரு குடையின் கீழ் வந்தன. சூரியனை நாரண அம்சம் என்று கருதுவதால், அது திருமால் வழிபாட்டுடன் போய் விட்டது. ஆக, மீண்டும் மிஞ்சுவது சிவனும், விஷ்ணுவும்!

விஷ்ணு தனியொரு ஆளாக இருந்து கொண்டு எல்லா லீலைகளையும் செய்கிறார். அவரால் அவதாரம் எடுக்க முடிகிறது. பெரியசாமியாக, விஸ்வரூபமெடுக்கும் அதே வேளையில் பிள்ளைக் கனி அமுதாக, பால கிருஷ்ணனாக இருக்க முடிகிறது. ஏகமாக, வேங்கடவன் போல், அரங்கன் போல் இருக்கிறார். சில சமயம், ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி சகிதமாய் இருக்கிறார். கிருஷ்ணனாக வந்து 16,000 மனைவியரைக் கொள்கிறார், ஏகமாக, யோகியாக பத்மநாபனாக இருக்கிறார். இப்படி அவரே ஸ்ரீபார்ட், ராஜாபார்ட் என்று வெளுத்துக் கட்டும் ஒரிஜினல் 'பாய்ஸ் கம்பெனி' யாக இருக்கிறார். இதையெல்லாம் விளக்குவது போல் 1000 பேர்கள் வைத்துக் கொண்டுள்ளார். ஏறக்குறைய நம் மைக்ரோ சாப்ட் மாதிரி எல்லா மார்கெட்டையும் அவர் கைக்குள்ளே வைத்திருக்கிறார். ஒருவகையில் அவர் அத்வைதா கம்பெனியின் மூலபுருஷர் என்று தெரிகிறது.

ஆனால், வேத கால சிவனோ, சிவனே என்று தியானத்தில் இருப்பவர். அவர் மகாதேவன். பெரியவர். சிறுபிள்ளைத்தனமெல்லாம் அவருக்குக் கிடையாது. ரொம்ப சீரியசான ஆளு. கோபக்காரர் கூட. நெற்றிக் கண்ணெல்லாம் வைத்திருக்கிறார். இப்போது சிக்கல் என்னவெனில், இந்த icon-க்குள் நாரணவித்தைகளைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்! பார்ட்டி என்று பிரிச்சாச்சு, பிறகு கொள்கை விளக்கம் தந்துதானே ஆகவேண்டும்! கிருஷ்ணர் சின்னப் பிள்ளையாக இருக்கிறாரா? சரி, ஒரு பிள்ளையாரை உருவாக்கு! கிருஷ்ணன் ருக்மணி, பாமா என்று இரண்டு மனைவியர் கொண்டுள்ளாரா? சரி, முருகனை உருவாக்கு! அவனுக்கு வள்ளி, தெய்வயானி என்று இரண்டு பெண்டாட்டிகளை உருவாக்கு. சிவனோ பிச்சாண்டி. சுடலை மாடன். விஷ்ணுவோ ஆபரணதாரி, சொகுசானவர். அந்த image-ஐ அப்படியே சிவபாலனான முருகனுக்கு வை! அங்கு ஸ்ரீதேவி, லக்ஷ்மி. இங்கு அம்பாள், அன்னபூரணி. சரி, எல்லாம் சமப்படுத்தியாகிவிட்டது, ஆனால் ஒன்றில் சிக்கல் வருகிறது. நாரணர் அவதாரம் எடுக்கிறார். சிவனோ பிறப்பிலி. ஆனால் அவதாரம் எனும் கோட்பாடு கன்னாபின்னாவென்று பாப்புலர் ஆகிவிட்டது. இதை எப்படி சரிக்கட்டுவது? திருவிளையாடல் எனும் புதிய கோட்பாடு தென்னகத்தில் உருவாகியது. இது மதுரை மற்றும் தென்னக சம்பிரதாயம் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. திருவிளையாடல் என்பது உடனே அவதாரத்தை விட பாப்புலர் ஆகிவிட்டது (திருவிளையாடல் படம், திருமால் பெருமைக்கு முன்னதாக எடுக்கப்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும்). நாரண பரத்துவத்திற்கு பத்மநாபன் என்ற ஆழமான குறியீடு உருவாகிவிட்டது. இதற்கு ஈடான குறியீட்டை சிவனுக்கு உருவாக்க முற்படும் போது தென்னிந்திய சைவ சித்தாந்திகள், 'நடராஜன்' என்ற உன்னத குறியீட்டை உருவாக்கி உலகிற்கு அளித்தனர். மீண்டும், கவனிக்க வேண்டியது என்னவெனில், 'ஆடல் அரசன்', நடராஜன், பாண்டியனுக்காக கால் மாறி ஆடியது போன்ற இவையெல்லாம் தமிழகத்தில் உருவானவையே! வைணவத்தில் ஆழ்வார்கள் சாதீய அமைப்பிற்கு எதிரான போக்கை ஆன்மீக வழியில் உருவாக்கி அது முறையாக உள்வாங்கப்பட்டும் விட்டது. இதற்குச் சமமான போக்கு தென்னிந்திய சித்தர் மரபு. அது பிராமணீயத்திற்கு, சாதியத்திற்கு எதிரான மரபு. அது ஓரளவு தென்னிந்திய சைவ மரபில் உள்வாங்கப்பட்டுள்ளது. அடுத்து செய்ய வேண்டியது, புதிய புராணங்களை உருவாக்க வேண்டியது. ஏற்கனவே காலம், காலமாக இருந்து வருகின்ற விஷ்ணு புராணம், வராக புராணம், கருட புராணம் போன்ற 18 புராணங்களுக்கு ஈடான புதிய புராணங்கள் தென்னகத்தில் உருவாக்கப்படுகின்றன. சிவதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் சிவன் யட்சனாக வளர்ந்து திருமாலையும், பிரம்மாவையும் அடிமுடி காண வைத்தது, திருமாலுக்கு சக்கரம் சிவன் தந்ததான கதை, நரசிம்மருக்குப் போட்டியாக சரபரை உருவாக்கியது போன்றவை உருவாகின.

இப்படி, அச்சாக, ஒன்றுக்கு, ஒன்று என்றளவில் தென்னிந்திய சைவ சித்தாந்த ஆகம கோயில் ஒழுங்கு உருவாக்கப்பட்டது. இது எவ்வளவு ஆன்மீகமோ அவ்வளவு அரசியல், சமூகவியல் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்படித் தமிழகம் ஆன்மீகத்தில் கூறுபட்டுப் போனபோது அத்வைத சம்பிரதாயம், தனக்கென ஒரு வழியைக் காட்டியது. அது புறத்தில் சைவன், மனத்தில் சாக்தன், நினைவில் நாரணன் என்பது. இதைக் காஞ்சி மடம் போன்ற சில சம்பிரதாயங்களில் காணலாம். சங்கரர் உருவாக்கிய பிற பீடங்களிலும் இதே சம்பிரதாயம் உள்ளதா என்று தெரியவில்லை. ஏனெனில், சிவ-விஷ்ணு பேதம் முழுக்க முழுக்க தென்னிந்திய உருவாக்கம் என்று தோன்றுகிறது.

ஆழ்வார்கள் தோன்றிய காலத்திலேயே இது உணரப்பட்டுள்ளது. எனவேதான் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கோட்பாட்டை (integrated concept) வலியுறுத்தினர். அதில் அன்னைக்கு, ஈசனுக்கு, பிரமனுக்கு சமமான பங்கீடு உண்டு. விஸ்வரூப வடிவில் பிற தெய்வங்களுக்கும் சமமான பங்கீடு உண்டு. வைணவத்தின் போக்கு சாத்வீக போக்கு. எனவே இவர்கள் செயற்பாடு மிக வித்தியாசமான சரித்திர போக்கைக் கொண்டுள்ளதாக அமைகிறது. சாதீயத்தை எதிர்த்த ஆழ்வார்கள், அதை ஆன்மீகத்தில் நடைமுறைப்படுத்தியது கவனிக்கத்தக்கது. திருப்பாணாழ்வார், பாகவதர். ஆனால், சாதியால் கீழ்நிலையில் உள்ளவர். இவரை மேல் நிலைக்குக் கொண்டு வர வேண்டுமெனில், ஒரு அந்தணரை வைத்து, தோளில் சுமக்க வைக்க வேண்டும். இது ஸ்ரீரங்கத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. மேலாண்மை கொண்டுள்ள ஆணாதிக்க சமூகமான தமிழ் மண்ணில் ஒரு பெண்ணிற்கு சம உரிமை தர வேண்டும். இதை எப்படி சாத்தியப்படுத்துவது? ஆண்டாள் ஒரு முன்னுதாரணம். ஆக, ஸ்ரீரங்க விலாசத்தில் இரண்டு பேருக்குத்தான் நேரடி உள்வாங்கல் நடந்திருக்கிறது. ஒன்று கீழ்மகன். மற்றொன்று பெண். இதனாலேயே, திருப்பாணாழ்வர் ரங்கனை, 'நீதி வானவன்' என்கிறார். இந்த வைணவ நீதி, சமத்துவம் பேசும் நவீன உலகிற்கு ஒரு முன்னோடி! (உடுப்பி கிருஷ்ணன் கதையும் தொடர்புடையதே)

ஆனால் 'சற்றே விலகும் பிள்ளாய்!' என்று சொன்ன நந்தனை எரித்து சாம்பலாக்கிவிட்டனர் சிதம்பரத்து அந்தணர். இன்றளவும் அந்தக் கோயில் பிரச்சனைக்குரியதாகவே உள்ளது!

இத்தகைய சரித்திர, சமூக அமைப்பின் பின்புலத்தில்தான் தமிழனின் ஆன்மீகம் நடைபயில வேண்டியுள்ளது.

வேற்றுமையைக் காணாதே. வேற்றுமையில் ஒற்றுமை காண் என்று சொல்கின்றனர் அத்வைதிகள். ஆனால், ஒற்றுமையில் அல்ல, வேற்றுமையால்தான் யாக்கை நடக்க வேண்டியுள்ளது. 'சிவனாம் நினையே தொழுவேன் கண்ணா!' என்றான் பாரதி. அந்தப் பார்வை வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. அது ஆழ்வார்களின் குரல். தமிழ் மரபின் உரத்த நவீன குரலான பாரதி அதை மீட்டெடுக்கிறான். ஆனால், சம்பிரதாயங்களை அவ்வளவு எளிதாக விட்டு விட முடிவதில்லை. அதுவொரு பளு. கிரீடம் சூடிக் கொள்வது எடுப்பானது, கௌரவமானது, மிடுக்கானது. ஆனால், பாரமானதும் கூட.

இப்படி சரித்திரம், சமூகவியல், பக்தி, பிரபத்தி என்றும் ஏதும் அறியாமல் வாழ்ந்து விடுவதும் ஒரு வகை. Ignorance is bliss என்பார்கள். ஆனால், தத்துவம் தெரியாமல் பக்தி செய்ய முடியாது, பிரபத்தி செய்ய முடியாது!

வீர சைவனாகவோ, வீர வைஷ்ணவனாகவோ இருக்க முடியாத அளவு நமது நிஷ்டை, அனுஷ்டானங்கள் எல்லாம் நீர்த்துப்போன காலக் கட்டத்தில் வாழ்கிறோம். அதுவொரு anachronism மாகப் போய்விட்டது உண்மை. இப்போதுள்ள அரசியல் அமைப்பில் காஞ்சி மடதாதிபதியை உள்ளே தூக்கிப் போட்டுவிட முடிகிறது. நாத்திகம் பேசிக் கொண்டே மஞ்சள் துண்டும் போட்டுக் கொள்ளமுடிகிறது! இதுதான் கலி போலும்!

அவதாரங்கள் கலியில் ஏன் வருவதில்லை? காரணம், கலியில் தீவிரமான நாத்திகனும் கிடையாது, தீவிரமான பக்தனும் கிடையாது. எல்லாம் 'அசத்துக்கள்'. இவர்களைக் கடையேற்றுவது என்றால் நாம சங்கீர்த்தனம் செய்வது. அதன் மூலம் கொஞ்சம் இறை ருசியை உருவாக்குவது. ருசி வந்தவுடன் தத்துவங்களை விளக்குவது. தத்துவங்கள் புரிந்தவுடன் கொஞ்சம் நிஷ்டையில் ஈடுபடுத்துவது. நிஷ்டை வந்தவுடன் பக்தி சுவை காட்டுவது. பக்தி புரிந்தவுடன் பிரபத்தி வழி காட்டுவது. இதுதான் இப்போதைக்கு சாத்தியம்.

ஆன்மீக விசாரங்களில் முதலில் ஈடுபாடு, ருசி உருவாக வேண்டும். அவசர கதியில் கோயிலுக்குப் போவதே பெரிய பாடாக உள்ளது. எனவேதான் இது போன்ற விசாரிப்புகளில் ஈடுபடுவதற்கே இறையருள் தேவைப் படுகிறது. அதைப் பற்றுக் கோலாகக் கொண்டு மெல்ல, மெல்லப் படியேற முடியும். எத்தனை விசாரித்தாலும், மனது அடங்கும் போதுதான் ஆனந்த அனுபவம் வாய்க்கிறது. எனவே இந்த விசாரிப்புகள் அங்கு இட்டுச் செல்ல வேண்டும். வேற்றுமையில் யாக்கை நடக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அந்த வேற்றுமையே இறை அருள்தான் என்று உணர்வது. நாரணனுக்கு 'புவன சுந்தரன்' என்றொரு பெயர் உண்டு. பார்க்கின்ற அழகெல்லாம் அவனே! கேட்கின்ற சுரமெல்லாம் அவனே! சுவைக்கின்ற பொருளெல்லாம் அவனே! உணர்கின்ற உணர்வெல்லாம் அவனே! முகர்கின்ற கந்தமும் அவனே!

இதைத்தான் ஆழ்வார்களும் சொல்கிறார்கள். நாயன்மார்களும் சொல்கிறார்கள். அவர்களுக்குள் இப்படியொரு iconic பேதத்தைக் காட்டி அவர்களையும், நம்மையும் திக்குமுக்காட வைப்பதில் 'பெரியோனுக்கு' ஒரு அல்ப சந்தோஷம் போலும்! எல்லாமே திருவிளையாடல்தான். லீலா விபூதிதான். விளையாட்டிற்கு பெரிய பொருள் என்று ஏதும் கிடையாது. விளையாடுவதுதான் அதன் பொருள்.

நீயும் நானும் ஒன்றென்றாலும், நீயும் நானும் ஒன்றல்ல. தாயும் மகளும் ஒன்றென்றாலும், தாயும் மகளும் ஒன்றல்ல. அரியும், சிவனும் ஒன்றென்றாலும், அரியும் சிவனும் ஒன்றல்ல. அங்கும் இங்கும் நிற்கும் வரைதான் ஆட்டத்தின் ஓட்டம் தொடரும். நீ அங்கே! நான் இங்கே! அதனால் கேள்வி இங்கே!! கேள்வி இங்கே என்பதால் நான் இங்கே! என் கேள்வியே என் இருப்பிற்கு சாட்சியம். கேள்விகள் ஆழமாகும் போது கேள்விக்குள் விடையும் இருப்பது புரியும். எனவே கேள்விகள் கேட்டுப் பழகுவோம் வாரீர் :-)

கல்யாண சமையல் சாதம்!

இன்று காலை ஆய்வகத்திலுள்ள ஒரு சிறு மீன் தொட்டியின் அருகில் செல்லும் போது அவை என்னைக் கண்டு துள்ளுவது கண்டேன். பக்கத்திலுள்ள காபி மெஷினில் காபி எடுத்துக் கொண்டு மீண்டும் அருகில் வந்து பார்த்தால் எல்லா மீனும் என்னையே பார்த்துகொண்டு வாலை ஆட்டிக் கொண்டு. உண்மை! நாய் ஆட்டுமே அது போலவே! புரிந்துவிட்டது. அவைகளுக்கு சரியான பசி. சாப்பாடு போடும் ஆள் வரவில்லை. என்னை 'அன்னபூரணி' என்று கருதிவிட்டன. ரொம்பப் பாவமாகப் போய்விட்டது. குழந்தைகள் பசித்து வாடினால் வாடும் தாய் போல.

பெரிய மீனகங்களில் சாப்பாடு போடும் நேரம் வந்துவிட்டால் ஒரே கலக்கல்தான். கலிபோர்னியாவில் பார்த்திருக்கிறேன். பிற மிருகக் காட்சியகங்களிலும் பார்த்திருக்கிறேன். சாப்பாடு என்று வந்துவிட்டால் மீனிலிருந்து மனிதன் வரை ஒன்றுதான். அப்போது ஒரு பரபரப்பு வரும் பாருங்கள்! கல்யாண வீடுகளில் இந்த சாப்பாட்டு அறையில் போய் படம் எடுத்துவிடக்கூடாது! ஏனென்றால் காணச் சகிக்காது. அப்படி ஒரு அவசரம். அப்படி ஒரு பதட்டம் அங்கு தென்படும். சிறுவனாக இருக்கும் போது கல்யாண விடுதிகளில் சாப்பிட்டு மிஞ்சும் இலைகளை வெளியே போடும் போது நரிக்குரவர்கள் அந்த உணவிற்கு அடித்துக் கொள்வார்கள். பார்க்க பரிதாபமாகவும், பயமாகவுமிருக்கும்.

விலங்குகள் பற்றிய விவரணப்படங்கள் பார்க்கும் போது சிங்கம், புலிகள் அடித்த இரை பக்கம் யாரையும் அண்டவிடாது. அப்படியும் அங்கு சிலதுகள் வந்து சேரும். ஒரே சண்டைதான். அந்த உணர்வு மனிதனாக பரிணாமித்த பின்னும் நமக்குப் போகவில்லை என்று தோன்றும். சமையல் செய்யும் போதே எச்சி ஊறும். நல்ல சமையல் வாசனை அடித்துவிட்டால், வயிறு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பிக்கும். இது என்ன அவஸ்தை?

குழந்தையாய் பிறந்தவுடனே முதலில் தேடுவது தாயின் முலைக்காம்புதான். தவழ ஆரம்பிக்கும் போது கண்டதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டுவிடும் குழந்தைகள். மண்ணைத் திங்கும் சில குழந்தைகள்.

பிறப்பின் தன்மையே உண்டு களிப்பதுதான் என்று தோன்றுகிறது. தற்போதுதான் இந்திய நேபாள எல்லைக்காடுகளில் வாழும் சிகப்பு பாண்டாக் கரடி பற்றிய படம் பார்த்தேன். 14 மணி நேரம் சாப்பிட்டுக் கொண்டு இருக்குமாம். இப்போது டயட்டிலிருக்கும் எனக்கு இது அலுப்பைத் தருகிறது. 'வாய் மூடாப் பட்டினி' என்று சிலரைக் கேலி செய்வதுண்டு.

இதையெல்லாம் அநுசரித்துத்தான் கண்ணன் என்னும் தெய்வக் குழந்தை உலகையே உண்டு சிரிக்கிறது. 'உலகமுண்ட பெருவாயா!!' என்று நம்மை வியக்க வைக்கிறது. நம்மாழ்வார் ஒரு பாடலில் வேடிக்கையாகச் சொல்வார், நாம் பட்சணம் சாப்பிடுவதுபோல் கண்ணன் அண்ட சராசரங்களை அள்ளி விழுங்குகிறான் என்று. அது சரி, அவன் சர்வ சக்தன். அவரவர் தகுதிக்கு ஏற்றவாறுதானே நடவடிக்கைகள் அமையும்.

எது எப்படியாகினும், இனிமேல் அடுத்த பிடி வாயில் போடும் போது 'என்ன சாப்பிடுகிறோம்? இதன் கலோரி வால்யு என்ன? இது நமக்கு நன்மை அளிக்குமா? என்றெல்லாம் யோசித்துவிட்டுத் தான் விழுங்கப் போகிறேன்.
[சீனாவில் எல்லோரும் கராவுக்கேயில் என்னென்னமோ பாடிக் கொண்டு இருந்தார்கள். என் சுற்று வந்தவுடன், மாயாபஜார் ஞாபகம் வந்துவிட்டது. 'கல்யாண சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம்' என்று எடுத்துவிட்டேன். எல்லோரும் அசந்துவிட்டனர். யோசித்துப் பார்த்தால் கடோத்கஜனுக்கு பாட்டு எழுதியவர் சுத்த சைவக் கொக்கு போலருக்கு! ஆடு, மாடு அல்லவோ அவன் போஜனம். காய்கறிகளும் பிரமாதம் என்று எப்படிப் பாடுவான் :-) இந்தப் பாட்டு கேட்கணும் போல இருக்கு. வலையில் எங்கு கிடைக்கும்?)

மாறும் வண்ணங்கள்!

இந்திய மெய்ஞான வெளியில் அதிக சுதந்திரமுண்டு. எழுச்சியுறும் எந்தப் புதிய தத்துவமும், நிலைபெற்றிருக்கும் தத்துவத்தை ஞானத்தாலும், வாதத்தாலும் வெல்ல வேண்டும். அப்படி ஞானத்தில் வென்று விட்டால் வருகின்ற தத்துவங்களுக்கு இந்திய மெய்ஞானப் பரப்பில் இடமுண்டு. இங்கு கத்தி, கப்படா என்பதை விட ஞானமே பிரதானமாக இருக்கிறது. அதுதான் அதன் சிறப்பு. மெய்ஞானத்தைத் தேடும் எவறும் வீடு பேற்றை நோக்கி நடைபயில்கின்றனர் என்றே இந்தியா கண்டிருக்கிறது. காலத்திற்குக் காலம், தேவைகளுக்கு எற்ப புதிய எழுச்சி என்பது தேவையாகவும் இருக்கிறது. இதை உணர்ந்துதான் கீதையில் கண்ணன் சம்பவாகி யுகே, யுகே! என்று யுகங்கள் தோறும் நான் தோன்றுவேன் என்கிறான். இடைப்பட்ட காலத்தில் ஸ்தாபிதப்பட்ட நெறிகள் (மதங்கள் எனச் சொல்லவில்லை, கவனிக்கவும்) மக்களின் சுதந்திர வெளியில் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன. அதாவது இந்திய நெறிகளை ஒழுங்கு படுத்தி ஒரு பிரதான மடம் (சர்ச்) என்று நிறுவிவிட்டால் தனிப்பட்ட மனிதனின் இறைத்தேடல் என்பது தடை பட்டுப் போகிறது. ஞான ஒளி குன்றிப் போகிறது. எனவே இடைப்பட்ட காலத்தில் ஆச்சார்யர்களும், சாதுக்களும் நெறி விளக்கம் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர், இவர்கள் மடத்தின் உத்தரவு பெற்றுத்தான் செயல்பட வேண்டுமென்றில்லை. இந்த சுதந்திரம்தான் இன்று நூற்றுக்கணக்கான தமிழர்களை மின்வெளியில் ஆன்மீகம் பேச வைக்கிறது. இதுவொரு சுதந்திர இறைத்தேடல். இது இந்தியா உலகிற்கு வழங்கும் பொக்கிஷம்.

நாரண பரத்துவம் என்பது இந்தியாவில் வலிந்து கட்டிய ஒன்றல்ல. வேத, உபநிஷத்துக்களின் தேடல் நீட்சியாக இந்த concept இந்தியர்களுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் பின் தோன்றிய 18 புராணங்களில் முக்கால் வாசம் நாராண பரத்துவத்தை விளக்க எழுந்தவையே. இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் நாரண பரத்துவத்தைச் சொல்ல வந்தவையே. இக்காலக் கட்டத்தில் இந்தியாவை விட்டு கிழக்கே போன இந்திய மெய்ஞானத் தாக்கம் அங்கும் இயல்பாக வைணவத்தை நிருவுகிறது (அங்கோர்வாட்).


அங்கோர்வாட் ஆலயத்திலுள்ள விஷ்ணு
Photo by N.Kannan


இப்படி வேர் ஊன்றிய ஒரு ஞான மார்க்கத்தை மகாவீரரும், புத்தரும் அசைத்துப் பார்க்கின்றனர். காலப்போக்கில் வென்றும் விடுகின்றனர். ஆனால் தவத்தை, தனி மனிதத்தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பௌத்தம், கடவுள் வழிபாடுகள், உற்சவங்கள், கோயில்கள் இவை இல்லாததனால் நிலைபெறத் தடுமாறியது. அதுபோது பௌத்த புராணங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இறைமையை மறுத்த சித்தார்த்தனை இந்தியா உள்வாங்கிக் கொள்ள விஷ்ணு தேவைப்பட்டார். பரம்பொருளான விஷ்ணு மீண்டும் மண்ணுலகில் அவரித்துள்ளார் என்று சொல்லத் தலைப்பிட்டனர். இந்தியாவின் கரை தாண்டிய பௌத்தம் ஸ்ரீலங்காவிற்குப் போகிறது. சூனிய வாதத்திற்கு புகழ்பெற்ற திரவாத பௌத்தம் அங்கு நிலைபெற விஷ்ணு கதைகளைப் பயன்படுத்தின. லோகநாதன் என்றும், புவன சுந்தரன் என்றும், பூமித்தாயின் காந்தன் என்றும் புகழ்பெற்ற விஷ்ணு அங்கு 'லோகேஷ்வர்' ஆகிறார். விஷ்ணுவின் அவதாரமாக புத்தர் தோன்றுகிறார்.


புத்த பிறப்பு பற்றிய ஜாதகக் கதைகள். இப்படம் வியட்நாம் தலைநகரான ஹனோய் புத்த ஆலயத்தில் எடுத்தது.
Photo by N.Kannan


கிருஷ்ணன் விஸ்வரூபம் காட்டினால், நேபாளத்தில் புத்தர் விஸ்வரூப தரிசனம் தருகிறார். அரங்கனாதன் பள்ளி கொள்கிறான் என்றால், கிழக்கே போன புத்த வடிவுகளில் சயன புத்தர் மிகப்பிரபலம். இதை பர்மா, தாய்லாந்து, வியட்நாம் வரை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. பௌத்த ஜாதகக் கதைகள் அங்கு போகும் போது இந்திய தெய்வங்களும் கூடவே போகின்றன. தாய்லாந்தில் டாக்சி ஓட்டி கூட ஒரு நான்முகன் சிலையை வைத்திருப்பான்.
அங்கோர்வாட் கோயிலொன்று நான்முக வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.


அங்கோர்வாட் நான்முகன் கோயில்
Photo by N.Kannan


இந்திரன், ஐராவதம் (வெள்ளை யானை) அங்கும் போய்விடுகிறது. கொரியாவில் பல புத்த வடிவங்களிலொன்று ஹயக்கீரிவர்!!

எனவேதான் இந்திய உபகண்டத்திலும் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகக் காணும் வழக்கம் வந்திருக்கிறது.


வியட்நாம் புத்தர் கோயில் படங்கள்
Photo by N.Kannan


இப்பழக்கம் ஒரிசாவில் தோன்றியிருக்கலாம். அங்கு வேர் ஊன்றிய கிருஷ்ணபக்தி நெறியில் 'கிருஷ்ணனே' பரம்பொருள் எனவும், புத்தன் ஒரு அவதாரம் எனவும், 'தச அவதாரங்கள்' காட்டப்படுகின்றன.

ஒரு பெருநெறியிலிருந்து மற்றொரு நெறிக்கு மாறும் போது அழிவுறும் நெறியின் நல்ல கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, தன் வயப்பட்ட பின்னரே அவை வழக்கொழிகின்றன. எனவே இந்து தர்மம் மலிவுற்ற போது பௌத்தம் இந்திய புராணங்களை உள்வாங்கிக் கொண்டது. பௌத்தம் என்பது இந்திய மெய்ஞானத் தேடலில் கிடைத்த நல்முத்து. எனவே பௌத்தம் பிற்காலத்தில் அழிவுற்ற போது அது கண்ட ஞானம் இந்து தர்மத்தில் உள்வாங்கப்பட்டது. உதாரணமாக சங்கர பகவத் பாதாளின் குருபரம்பரையில் ஒரு பௌத்தருண்டு. சங்கரரை பிரசன்ன புத்தர் என்று கேலியாகச் சொல்வதுமுண்டு. பௌத்தத்தின் 'சங்கம்' எனும் வழிமுறையே பின்னால் பாகவத பரம்பரைக்கு வித்திடுவதாக 'ஏ.கே.இராமானுஜன்' கருதுகிறார். தென்னிந்தியாவில் 'சைவ உணவு' என்றும், வடநாட்டில் 'வைஷ்ணவ உணவு' என்றும் கருதப்படும் மரக்கறி உணவு 'பௌத்த உணவு'தான். புலால் மறுத்தல், கொல்லாமை என்பவை சமண, பௌத்த மதங்களின் சீரிய கொள்கைகள். இன்றும் கொரிய, ஜப்பான் பௌத்த மடங்களில் வாழ்வோர் புலால், உள்ளி, வெங்காயம் போன்றவற்றை உண்பதில்லை. ஆனால் காலப்போக்கில், பௌத்தம் பரவிய எல்லா நாடுகளிலும் புலால் உண்ணும் பழக்கம் நிலைபெற்றது. உயிர்கொலை என்பது தினப்படி வாழ்வியலானது. ஆனால், இந்தியாவைவிட்டு போய் விட்டாலும், பௌத்த உணவு முறை இந்தியாவில் நிலைபெற்றுவிட்டது. இன்று இந்தியாவில் 70% மக்கள் புலாலற்ற உணவே உட்கொள்கின்றனர். இது உலக சூழலுக்கு எவ்வளவு நன்மை என்பது சொல்லாமல் புரியும். மேலைநாட்டில் இதன் அறிவியல் உண்மையறிந்து லட்சக்கணக்கான மக்கள் 'வெஜிடேரியன்' உணவு முறைக்கு மாறிக்கொண்டு வருகின்றனர்.

பின்னூட்டம், முன்னூட்டம், என்னூட்டம்!

சமீபத்தில் சீனா சென்று வந்தது நல்ல மாற்றம். கொரியாவிலிருந்து மஞ்சற்கடலைத் தாண்டினால் சீனா. இரண்டு மணிப் பிரயாணம் மட்டுமே. இன்று காலை கிளம்பும் முன் என் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பற்றி சிந்தித்தவாறே, கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 12வது மாடியிலிருந்து. மஞ்சு போர்த்திய வானிலிருந்து வெளிப்பட்ட கிரணங்கள் மஞ்சற்கடலை மஞ்சளாகவே காட்டியது! (மஞ்சள் நதி கொண்டுவரும் மஞ்சள் வண்டல் மண் இந்நிறத்தை முகத்துவாரத்தில் தருவதால் இப்பெயர் இக்கடலுக்கு வந்தது). நீரில் பட்டு மிளிர்ந்த பொன்னிறம் கண்ணுக்கு எட்டும் வரை தெறிந்தது. சுமாராக 30-40 கிலோமீட்டர்வரை இருக்கலாம். யோசித்துப் பார்த்தேன். மாடி அரையிலிருந்து பார்க்கும் போது முப்பது கிலோ மீட்டரில் ஒளிபரப்பு முடிந்துவிடுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் கடலில் பயணப்பட்டால், இந்த ஒளிப்பரவல் முப்பது கிலோமீட்டரில் நின்று விடப்போவதில்லை. அது பயணப்பட, பயணப்பட முன்னால் போய்க் கொண்டே இருக்கும். அது போல்தான் இந்தப் பின்னூட்டங்களும். வெட்டி, ஒட்டி, பதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம்! வாழ்வு முடியும் வரை!!

காரணம்? சூரியன் கடற்பரப்பை விட்டு எங்கோ விலகி நிற்கிறான். பூமியோ கோளமாக உள்ளது! இப்படித்தான், ஆன்மீகமும் என்று விளங்கியது. பேசப்படும் பொருள் விலகி தனித்து நிற்கிறது. ஆனால் அதன் ஒளி பூரணமாக எங்கும் தெரிகிறது. நமக்குத் தெரிகின்ற பரப்பை வைத்துக் கொண்டு அளக்க முயற்சிக்கிறோம். அளக்க, அளக்க வியாபித்துக் கொண்டே போகிறது. இதை நான் விஸ்வரூப தரிசணம் மூலம் விளங்கிக் கொள்ள முயல்கிறேன். வேரொருவர் அடி.முடி தேடி அலுத்த கதையின் மூலம் விளங்கிக் கொள்ள முயல்கிறார். அதுதான் வித்தியாசம் ;-)

இந்தத் தொடரின் பின்புலத்தில் ஒரு அரிய கதை இருக்கிறது. மகாமந்திரம் என்றும், திருமந்திரம் என்றும் வைணவர்கள் கருதும், 'ஓம் நமோ நாராயணாய:' எனும் மந்திரப் பொருளை அரிய இராமானுஜர் 18 முறை முயன்றிருக்கிறார். ஏன் இவரின் ஆசிரியர் இப்படி இவருக்கு 'தண்ணி காட்டியிருக்கிறார்?'. சொல்லக் கூடாது என்ற அர்த்தத்தில் இல்லை. ஆனால், அறியும் பக்குவம் இவனுக்கு இருக்கிறதா? அறிந்து கொள்ளும் ஆர்வம் இவனுக்கு இருக்கிறதா? அறிந்து கொள்ளும்வரை ஊன், உறக்கமின்றி இருக்கமுடிகிறதா? என்று கவனித்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அர்த்தத்துடன் சொல்லப்படும் ஒரு சொல் 'மந்திரமாகி'ப் போகிறது!

ஓம்! என்பது பிரணவம். தொடக்கம், முடிவு இரண்டும் சேருமிடம்.

ந + மம என்பது நமோ என்றாகிறது. அதாவது, 'நான் இல்லை' என்று பொருள். சரி, நான் இல்லை என்று ஆகிவிட்டால், பின் எது நிற்கிறது?

நாராயணாய! எது இப்படைப்பிற்கு காரண வஸ்துவோ, எது காரண, காரியமாக இப்பிரபஞ்சத்தை இயக்குகிறதோ அது மட்டுமே நிற்கிறது.

சட்டென ஸ்தாபனப்பட்ட மதங்களுக்கு சிம்ம சொப்பனமான ஜேகேயின் போதனை உடனே நினைவிற்கு வந்தது. ஜேகேயிடம் ஒருவர் கேட்டார். உங்கள் வாழ்நாள் பூரா போதித்த ஞானத்தின் சாரம் என்ன? என்று. கிருஷ்ணமூர்த்தி சொன்னார், "If you are the other is not" என்று. அதாவது, "நீ இருக்கும்வரை மற்றது இல்லை". இது உண்மையில் நாரண மந்திரம்தான் என்பது அப்போது புரியவில்லை! இப்போது புரிகிறது!

மந்திரம் எப்போது வேலை செய்யத் தொடங்கும்?

அதன் பொருள் உணர்வில் கலக்க வேண்டும். அச்சொல் நெஞ்சில் நீங்காமல் நிற்கவேண்டும். கனவில் வரும் போதும் அச்சொல் உணர்வைத் தூண்ட வேண்டும். அப்படி நிகழ்வதை நீங்கள் உணர்ந்துவிட்டால், அதுவே உங்கள் ஆத்ம மந்திரம். ஆத்மாவின் அலை வரிசையும், பரம்பொருளின் அலைவரிசையும் சேர்ந்து தொணிக்கிறது என்று பொருள்! அதுதான், அப்போதுதான் அம்மந்திரம் 'உணர்வெனும் பெரும் பதமாகிறது!' உணர்வில் லயிக்கும் பெரும் பதம் மந்திரம். உணர்வைத் தூண்டும் பெரும் பதம் மந்திரம். உணர்வாய் நிற்கும் பெரும் பதம் அம்மந்திரம். உணர்வு சுட்டும் பெரும் பதமும் மந்திரம். தீயில் படும் பொன் மாசு நீங்கி ஜொலிப்பது போல் இம்மந்திரத்தால் நம் ஆத்மா ஜொலிப்பதை நாம் உணர்வு பூர்வமாக உணரமுடியும்.

உங்கள் பெரும் பதம் என்னவென்று நீங்கள் சோதித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம். நிச்சயம் உங்களுக்கென்று ஒரு மந்திரம் இருக்கும். அதை அடையும்வரை உங்கள் ஆன்மா அலைந்து கொண்டே இருக்கும். இப்பிறவில் அப்பதம் கிடைக்கலாம். இன்னும் நூறு கோடி ஜென்மங்கள் கழித்து கிடைக்கலாம். அதுவரை ஜீவன் சம்சாரத்தில் உழன்று கொண்டே இருக்கும்.

எப்போது உங்கள் உள்ளம் இப்பதத்தால் மட்டிலா உவகை கொள்கிறதோ? என்று உங்கள் உள்ளம் இப்பதம் கேட்டவுடன் 'அந்தமில் பேரின்பம்' கொள்கிறதோ அப்போது புரியும் நீங்கள் அதைக் கண்டுவிட்டீர்கள் என்று!

ஓடினேன்! ஓடி உய்வதோர் பொருளால்!
உணர்வெனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன்! நாடி, நான் கண்டு கொண்டேன்
நாராயணா! என்னும் நாமம் (பெரிய திருமொழி)

உணர்வெனும் பெரும் பதம்!முன்னூட்டம், பின்னூட்டம் என்று எங்கு ஆன்மீகம் வந்தாலும் 'பரப்பிரம்மம்' யார்? என்ற கேள்வி சுற்றி வளைத்து வந்து விடுகிறது. அப்போது கட்சிகள் தோன்றிவிடுகின்றன. எரிந்த கட்சி, எரியாத கட்சி, எரிந்தும் எரியாத கட்சி இப்படி! பரப்பிரம்மம் என்ன? என்பதை விளக்கும் வேத சூத்திரம் 'பிரம்ம சூத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு விளக்கவுரை (பாஷ்யம்) எழுதியவர்கள் மூவர். சங்கரர், ராமானுஜர், மாத்வர். இவர்கள் மூவரும் 'நாராயணன்' என்ற பதத்தையே பரப்பிரம்மத்தைச் சுட்ட பயன்படுத்துகின்றனர். அந்தச் சொல், அதனாலேயே 'மந்திரமாகி' விடுகிறது. சொல்லே definition. இவர்கள் அதை விளங்கிக் கொள்வதில் வேறுபடுகின்றனரே தவிர definition-ல் வேறுபடவில்லை. வேதம் 'நாராயண பரம்' என்று சொல்கிறது. இச்சொல் வேறு தெய்வத்திற்கு பயன்பட்டிருக்கிறதா? (அதாவது, refinement in definition) என்று வேதம் முழுக்கத் தேடினாலும் கிடைக்கவில்லை. அப்பய தீக்ஷ்தர் இச்சொல் சிவனைக் குறிக்கிறது என்று சொல்ல முயன்று தோற்றார். மேலும் 'ஓம் நமோ நாராயணாய' எனும் எட்டெழுத்து மந்திரத்தில் மட்டுமே 'ஓம்' என்பதும் இணைந்து எட்டெழுத்து ஆகிறது (அஷ்டாக்ஷரம்). வேறு எந்த மந்திரத்திலும் அது சேர்த்துக் கொள்ளப்படுகிறதே (additional suppliment)தவிர சேர்ந்து கணக்கெடுக்கப்படுவதில்லை.

ஓம் என்பதே நாரண தத்துவத்தை விளக்குவதாக உள்ளது என்று தனது உரையில் விளக்குகிறார் பரனூர் அண்ணா. 'அ'கரம் என்பது ஈஸ்வரன் என்று பார்த்தோம் (விஷ்ணு), 'ம'கரம் ஜீவனைக் குறிக்கிறது. இடையில் வரும் 'உ'கரம் பரமனையும், ஜீவனையும் இணைக்கிறது. எனவே, ஓம் நமோ நாராயணாய என்பது 'பரப்பிரம்ம' விளக்கமாக அமைகிறது. இது அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒன்றும் புரியாமல், 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு' அப்படின்னு ஒரு compromise செய்தல் கூடாது.

'சர்வ தந்த்ர சுதந்திரன்' எனும் பெயர் சர்வேஸ்வரனுக்கே பொருந்தும். ஏனெனில் அவனுக்கு மிஞ்சிய கலைகள் கிடையாது என்பது பொருள். ஆனால், ஹயக்கீரிவர் உபாசனை மூலம் அப்பட்டத்தைப் பெற்றவர் ஸ்வாமி தேசிகன். அவர் 'ரகஸ்ய த்ரய சாரம்' எனும் நூலில் இராமானுஜ சித்தாந்தைத் தெளிவாக விளக்கிச் சொல்கிறார். அதன் சமகால விளக்கமே நீங்கள் கேட்கப்போகும் உரை. இது நான் சென்ற பதிவில் போட்ட 'ஓம்' என்பதற்கு அவர் தரும் விளக்கத்தின் தொடர்ச்சியாக கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். முமூட்சுவாக மாற வேண்டுமென்ற துடிப்பு உடையவர்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்த விஷயம்.

this is an audio post - click to play


திருப்பாற்கடல் என்பது 'காரணோதயம்' எனும் பிரளயநீர் என்பார்கள். அது உண்மையில் நீர் அல்ல. அதை நாம் wave function என்று புரிந்து கொள்ளலாம். அல்லது படைப்பின் சாரு என்றும் புரிந்து கொள்ளலாம். அது பொருளல்ல. உருவகம். திருப்பாற்கடல் is a metaphor.

உருப்படியான சந்ததி உருவாகும் காலம்!

Genetic testing is changing medicine, too. Three years after scientists announced they had sequenced the human genome, new knowledge about how our genes affect our health is transforming the way diseases are understood, diagnosed, treated—and even predicted. Today gene tests are available for more than 1,300 diseases, including cystic fibrosis and hemophilia. And now, as genetic screening gets cheaper and faster, researchers are hunting down the biological underpinnings of more-complex disorders that involve multiple genes—big, rampaging illnesses that strike millions of Americans every year. On the list: type 2 diabetes, Alzheimer's, heart disease and depression. If the scientists are right, genetic tests for some of these diseases could be available by 2010. Testing positive doesn't guarantee that you'll get the illness, but it does help determine your risk. "We are on the leading edge of a genuine revolution," says Dr. Francis Collins, head of the National Human Genome Research Institute.

Newsweek Health for Life20ம் நூற்றாண்டின் பெரிய பங்களிப்பு என்னவெனில், பிறப்பு என்பது தற்செயலாக நிகழ வேண்டியதில்லை, அதைத் திட்டமிடமுடியும் என்பதே. வெட்கமில்லாமல் சொல்லலாம், ஆணுறை என்பது நோபல் பரிசு பெற வேண்டிய கண்டுபிடிப்பு! அது இருக்கட்டும். மேலே உள்ள சேதி சொல்வது போல் மரபு தொடர்பான ஆய்வுகள் அதிசயக்கத்தக்க அளவில் முன்னேறியிருக்கின்றன. நமக்கு மரபு வழியில் நோய்கள் உள்ளனவா எனக் கண்டு கோள்ளுதல், அப்படி உள்ளதெனில் அது நம் குழந்தைகளுக்கு வர என்ன சாத்தியம் போன்றவை இப்போது தெளிவாக அறியமுடிகிறது. எனவே, ஏதோ கல்யாணம் ஆச்சு, அடுத்து குழந்தை பெற்றுக்கொள்வது கடமை என்றில்லாமல், நாம் இவ்வுலகிற்கு ஆரோக்கியமான ஒரு பிரஜையைத் தருகிறோமோ? அப்பிறப்பால் குழந்தைக்கும், நமக்கும் வரப்போகின்ற வாழ்வு இதமாக இருக்குமா? என்று கண்டு பின் பெறுவது நல்லது. மரபு வழியில் ஊனமுற்ற குழந்தைகள் தெருவில் பிச்சை எடுக்கும் போது மனதைப் பிசையும். இதைத் தவிர்த்திருக்கலாமோ? என்று! ஒரு பில்லியனைத் தாண்டி விட்ட இந்தியா இனிமேலும் தனது குடும்பம் பற்றிய விழுமியங்களை மாற்றிக் கொள்ளவில்லையெனில் கஷ்டம் அந்த நாட்டிற்கே!

மரபுச் சோதனைகள் மலிவாகி வருகின்றன. நமது துணையைத் தேடுவதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அது போல் சந்ததியை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவோம்!

உள்ளது உள்ளபடி - பாயிரம் முதல் குறள்

வள்ளுவர் அந்தக் காலத்து ஆசாமி. சிலபேர் கிறிஸ்துவுக்கு முந்திங்கறாங்க. சிலபேர் பிந்திங்கறாங்க. எப்படினாலும் 21ம் நூற்றாண்டுத் தமிழனுக்கு அவர் அந்தக் காலத்து ஆசாமி. அந்தக் காலத்திலே என்ன வழக்கோ, என்ன நீதியோ அதை அழகாகக் கவித்துவத்துடன் எழுதி வைத்தார். எனவே அவரது குறளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அக்கால வழக்குகள் அறிந்த பெரியோர் சொல் கேட்க வேண்டும்.

முதல் குறள் பற்றிய ஒரு ஆச்சர்யமான விளக்கம் கேட்க நேர்ந்தது. பரனூர் அண்ணா என்று அறியப்படும் ஸ்ரீகிருஷ்ணப் பிரேமி அவர்களின் உரை. ஓம்காரம் என்றால் என்னவென்று விளக்கும் போது முதலில் வரும் உயிரெழுத்து பற்றித் தொடங்கி வள்ளுவரை உதாரணம் காட்டுகிறார். பகவத் கீதை, உபநிஷத்து, வேதம் இவைகளை மேற்கோள் காட்டுகிறார். வைணவ உரைகள் எல்லாமே மிக விரிவாக, ஆதாரபூர்வமாக இருக்கும்.ஓம்காரம் என்பதை மாதக் கணக்கில் பேசமுடியும் என்று ஒரு இடத்தில் கூறுகிறார். சரி, குறள், பின் உரை.

1.1 பாயிரவியல்
1.1.1 கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1

this is an audio post - click to play


அ என்றால் விஷ்ணு என்பது தொன்மையான இந்திய வழக்கு. அதை 'அபிதான கோஷம்' எனும் பழைய அகராதி விளக்குகிறது. முன்பு படிக்கப்போகும் குழந்தைக்கு தந்தை அரிசுவடி பரப்பிய நெல்லில் எழுதிக் காட்டுவார். அரி + சுவடி = அரிச்சுவடி. அரியை அறியும் கல்வியே கல்வி (அறிவின் பயனே அரி ஏறே! - நம்மாழ்வார்). வேத பாராயணம் 'ஹரி ஓம்!' என்றுதான் ஆரம்பிக்கிறது. 'மாயோன் மேவ காடுற உலகம்' என்று இதே போல் சிறப்பித்து முதலில் சொல்கிறார் தொல்காப்பியர்.

எல்லாவற்றையும் மீண்டுமொருமுறை கற்க வேண்டிய சூழலில் நாம் ;-)


கொரிய மொழியில் கீதை!


கொரியா-இந்தியா பாய்!பாய்!


இந்தியாவும் கொரியாவும் தங்கள் பண்டைய தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டிய காலமிது! அதைச் சுட்டுவதே இப்படம். சுரோ எனும் கொரிய மன்னனுக்கு வாக்குப்பட அயோத்தியிலிருந்து ஒரு ராணி புறப்பட்டுப் போனாளாம். எப்போது? 4ம் நூற்றாண்டு!!


கொரிய மொழியில் கீதை


பகவத் கீதை - உள்ளது உள்ளபடி! எனும் ஆச்சார்யா பிரபு பாதா அவர்களின் நூல் முதல் முறையாக கொரியமொழியில் மொழிபெயர்பாகியுள்ளது. உலகளவில் கீதை மட்டும் 600க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளில் இப்போது கிடைக்கிறது. அன்று தொட்டு இன்றுவரை கீதை தேடுதல் உள்ள உள்ளங்களை வழிப்படுத்தி, வளப்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்த காலத்தில் மனோதத்துவ நோக்கில் கீதை என்று டாக்டர் வெங்கோபராவ் பேசுவார். அதுபோல் இப்புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு கொரிய மனோதத்வ நிபுணர் கீதையின் சமகாலப் பயன்பாடு பற்றிப் பேசினார்.


மொழிபெயர்ப்பு: பதஞ்சலி முனி தாஸ்


இவருக்கு 6 வருடத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டிருக்கிறது. சமிஸ்கிருதம் இந்தியர்களுக்கே கஷ்டமெனில் கொரியருக்கு சொல்லவே வேண்டாம். இவர் பிரபுபாதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பை கொரியனுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இப்படிச் செய்தால் மூலத்தின் காரம் நீர்த்துப் போகாதா? என்று கேட்டேன். ஒத்துக் கொண்டார். ஆனால், விவிலியம் (பைபிள்) கூட இம்முறையிலே பன்னெடும் காலமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகச் சொன்னார். மேலும் சொன்னார், சமிஸ்கிருத மூலத்தை ஆங்கிலத்தில் பலுப்புவதை விட கொரியனில் பலுப்பது எளிது என்றார். கொரியன் அப்படியே தமிழ் போல் ஒலிப்பது. Coffee என்று அவர்களால் சொல்ல முடியாது. தமிழில் உள்ளதுபோல் அச்சாக 'காப்பி' என்றுதான் சொல்கிறார்கள். சிங்கப்'பூர்' என்று சொல்லவராது சிங்கப்'பூரு! என்றே சொல்ல வருகிறது. எனவே கொஞ்சம், கொஞ்சம் சமிஸ்கிருதம் போல் சொல்லமுடிகிறது. தமிழில் சமிஸ்கிருதத்தைப் பலுப்ப முடியாத காரணத்தினாலேயே கிரந்தம் என்ற ஒலிக்குறியீடு தமிழில் தோன்றியது. இவர் 8 வருடம் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கிருஷ்ணபக்தியில் ஈடுபட்டுள்ளார். தற்போது சோல் நகரிலுள்ள ராதா கிருஷ்ணர் கோயில் பூஜைகளைக் கவனித்து வருகிறார்.

சோல் நகரில் வாழும் கிருஷ்ண பக்தர்களின் பெருமுயற்சியால் இப்புத்தகம் வெளிவந்து இருக்கிறது. வங்காள மொழி பேசும் பங்களாதேசிகளும், இந்தியர்களும் அதிகப் பங்கு அளித்துள்ளனர்.
ஹரி பஜனையுடன் புத்தக வெளியீடு!

இயற்கைப் பாதுகாப்பு

இன்றைய படோடபமான மனித வாழ்வு காடுகளிலிருந்துதான் தோன்றியிருக்கிறது. காடுகளைப் பாதுகாப்பது இயற்கை வளங்களை பாதுகாப்பது என்றாகிறது. இறைவன் 'புவன சுந்தரனாக' பார்க்கப்படும் போது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அவனை பூஜிப்பதற்கு ஒப்பாகும். சமீபத்தில் பிராசில் நாடு ஏறக்குறைய கேரள மாநில அளவுள்ள அமேசான் பகுதியை 'பாதுகாக்கப்பட்ட இடம்' என அறிவித்து இருப்பது என்னைப் போன்ற இயற்கை விரும்பிகளுக்கு தேன் வந்து காதில் பாய்ந்தது போலுள்ளது.மேற்கொண்டு செய்திகள் இங்கே!
படத்தொகுப்பு இங்கே

இந்தியா தன்னளவில் இயற்கையைப் பாதுகாத்து வந்தாலும், அரசின் முயற்சிகள் காணாது. தன்னார்வக் குழுக்கள் இயற்கைப் பாதுகாப்பில் இறங்க வேண்டும். இதுவரை வந்த தேர்தல் அறிக்கைகளில் ஒன்றில் கூட சூழல் பற்றிய அக்கறை இல்லை. நம் அரசியல்வாதிகள் காசைச் சுருட்டி என்ன பயன்? காசை வைத்து இயற்கையை மீண்டும் பெறமுடியாது. அழிந்தது அழிந்ததுதான். காடுகள் உலகின் சுவாசப்பை. அது அழிந்தால் உலகம் மூச்சு முட்டி செத்துப் போகும்!

எனவே எல்லோரும் இயற்கைப் பாதுகாப்பிற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.

டெப்ரா கிம்

பல வருட ஆலோசனைக்குப் பிறகு இந்திய அரசு வெளிநாட்டில் வாழும் இந்தியப் பிரஜைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முன் வந்துள்ளது. இந்தியக் குடிமகனாகப் பிறந்து, ஜெர்மன் குடியுரிமை பெற்ற நான் மீண்டும் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கிறேன். இப்படி இரண்டு குடியுரிமைகள் வைத்துக் கொள்வது சில நாடுகளில் மட்டும் இருக்கிறது. (உம்)இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா. இச்சான்றிதழ் பெறுவதற்கு சோல் போயிருந்தேன்.

காத்திருக்கும் நேரத்தில் படிக்கலாமென்றால் இருக்கின்ற எல்லா துணுக்கு பத்திரிகைகளும் ஏற்கனவே காணாமல் போயிருந்தன. டிவி மானிடரில் சாருகான் பாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கொரியன் மாது ஒரு தமிழ் பத்திரிக்கையை மீண்டும் இருந்த இடத்தில் வைக்கப் போனார். சரி, வேறு யாராவது எடுப்பதற்குள் நாம் வாங்கிக் கொள்ளலாமே என்று நினைத்து கை நீட்டினேன்.

Do you read tamil? என்றார்.

ஆம்! என்றேன். அவருக்கு நம்பச் சிரமமிருந்தது (இந்தியக் குடியுரிமை வைத்து என்ன? யாரும் என்னை இந்தியன் என்று காண்பதில்லை ;-) !!

உடனே, அவர் தமிழில், "அப்ப, உங்களுக்கு தமிழ் நல்லா வருமா?" என்று கொரியன் பலுப்பலில் தமிழ் சுத்தமாகப் பேசினார்.

நான் கேட்க வேண்டிய கேள்வியை அவர் கேட்டுவிட்டு, சிரித்தார்.

நம்புங்கள்! அவர் கொரியாவை விட்டு விட்டு கிருஷ்ணகிரியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாராம். பெயர் டெப்ரா கிம். மேற்கொண்டு பேசலாமென்றால் அடுத்த நாள் இந்தியா கிளம்பும் அவசரத்திலிருந்தார். எப்போது வருவீர்கள் மீண்டும்? என்று கேட்டதற்கு, 'ஆறு மாதம்' ஆகுமென்றார். இந்த டெப்ரா கிம்தான் முன்பு ஆனந்தவிகடன் கட்டுரையில் வந்தாரா? என்று நினைவில் இல்லை (அதை நான் முன்பு பதிவு செய்திருக்கிறேன்). எதற்கும் இருக்கட்டுமென்று என் விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்திருக்கிறேன். வந்து அவர் கூப்பிட்டால் இன்னொரு பதிவு ஆச்சு!

வாழ்வில் இத்தகைய குட்டி, குட்டி ஆச்சர்யங்கள் சுகமானவை!

லோக சரண்யன்இயற்கையின் சீற்றத்தின் முன் மனிதன் தூசு. சமீபத்தில் வந்து கொன்ற சுநாமி பலருக்கு ஞாபகமிருக்கலாம். மனிதன் எந்த வகையிலும் சுதந்திரன் அல்லன். ஆயினும் இது அவனுக்குப் புரிவதே இல்லை. தான் சர்வசக்தன் என்பது போலவே நினைக்கிறான், நடந்து கோள்கிறான்.
கடும் புயல் பிலிப்பைன்ஸ்ஸைத் தாக்கியிருக்கிறது. முன்பென்றால் அது எனக்கொரு வேறும் செய்தி. ஆனால் அங்கு சென்று அந்த மக்களுடன் பழகிய பின் அவர்களின் துயரத்தில் தானாக இதயம் பங்கு கொள்கிறது. "வாடிய பயிரைக் கண்ட போது வாடும் இதயம்' நமக்கு இயல்பாக வாய்க்கப் பெறாவிடில் பயணிக்க வேண்டும். பயணம் இதங்களை அருகில் கொண்டுவருகிறது.


இறைவனை லோகசரண்யன் என்பார்கள். ஆபத்துக் காலத்தில் என்றில்லை, சுதந்திரம் இல்லாத நாம் எப்போதுமே அவன் சரணில் இருப்பது நலம் பயக்கும். இந்தியாவிற்கு அடுத்து மிகவும் இறை பக்தியுள்ள நாடு பிலிப்பைன்ஸ்.

கண்ணன் அல்லால் இல்லை சரண் இங்கு கண்டீர் - நம்மாழ்வார்