டெப்ரா கிம்

பல வருட ஆலோசனைக்குப் பிறகு இந்திய அரசு வெளிநாட்டில் வாழும் இந்தியப் பிரஜைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முன் வந்துள்ளது. இந்தியக் குடிமகனாகப் பிறந்து, ஜெர்மன் குடியுரிமை பெற்ற நான் மீண்டும் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கிறேன். இப்படி இரண்டு குடியுரிமைகள் வைத்துக் கொள்வது சில நாடுகளில் மட்டும் இருக்கிறது. (உம்)இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா. இச்சான்றிதழ் பெறுவதற்கு சோல் போயிருந்தேன்.

காத்திருக்கும் நேரத்தில் படிக்கலாமென்றால் இருக்கின்ற எல்லா துணுக்கு பத்திரிகைகளும் ஏற்கனவே காணாமல் போயிருந்தன. டிவி மானிடரில் சாருகான் பாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கொரியன் மாது ஒரு தமிழ் பத்திரிக்கையை மீண்டும் இருந்த இடத்தில் வைக்கப் போனார். சரி, வேறு யாராவது எடுப்பதற்குள் நாம் வாங்கிக் கொள்ளலாமே என்று நினைத்து கை நீட்டினேன்.

Do you read tamil? என்றார்.

ஆம்! என்றேன். அவருக்கு நம்பச் சிரமமிருந்தது (இந்தியக் குடியுரிமை வைத்து என்ன? யாரும் என்னை இந்தியன் என்று காண்பதில்லை ;-) !!

உடனே, அவர் தமிழில், "அப்ப, உங்களுக்கு தமிழ் நல்லா வருமா?" என்று கொரியன் பலுப்பலில் தமிழ் சுத்தமாகப் பேசினார்.

நான் கேட்க வேண்டிய கேள்வியை அவர் கேட்டுவிட்டு, சிரித்தார்.

நம்புங்கள்! அவர் கொரியாவை விட்டு விட்டு கிருஷ்ணகிரியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாராம். பெயர் டெப்ரா கிம். மேற்கொண்டு பேசலாமென்றால் அடுத்த நாள் இந்தியா கிளம்பும் அவசரத்திலிருந்தார். எப்போது வருவீர்கள் மீண்டும்? என்று கேட்டதற்கு, 'ஆறு மாதம்' ஆகுமென்றார். இந்த டெப்ரா கிம்தான் முன்பு ஆனந்தவிகடன் கட்டுரையில் வந்தாரா? என்று நினைவில் இல்லை (அதை நான் முன்பு பதிவு செய்திருக்கிறேன்). எதற்கும் இருக்கட்டுமென்று என் விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்திருக்கிறேன். வந்து அவர் கூப்பிட்டால் இன்னொரு பதிவு ஆச்சு!

வாழ்வில் இத்தகைய குட்டி, குட்டி ஆச்சர்யங்கள் சுகமானவை!

5 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 12/04/2006 06:35:00 PM

"இரட்டை குடியுரிமை"- சிங்கப்பூர் இன்னும் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

நா.கண்ணன் 12/04/2006 06:58:00 PM

சிங்கப்பூரின் அரசியலை யாருமே புரிந்து கொள்ளமுடியாது!

இக்குடியுரிமை சாத்தியப்பாடு அமெரிக்க-இந்தியர்களின் lobbying-னால் நடந்தது. ஆசிய நாடுகள் குடியுரிமை, சுதந்திரம், immigration policy போன்றவற்றில் கடக்க வேண்டிய தூரங்கள் நிரம்ப உள்ளன. ஆயினும் இந்தியாவின் இந்த நிலைப்பாடு இந்தியாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

kannabiran, RAVI SHANKAR (KRS) 12/05/2006 05:11:00 AM

//அவர் தமிழில், "அப்ப, உங்களுக்கு தமிழ் நல்லா வருமா?" //

"யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டீங்க! நான் மறத் தமிழனாக்கும்" என்று நீங்கள் சொல்லவில்லையே! அதுவே சந்தோஷம்:-))))

நா.கண்ணன் 12/05/2006 08:18:00 AM

"யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டீங்க! நான் மறத் தமிழனாக்கும்" என்று நீங்கள் சொல்லவில்லையே! அதுவே சந்தோஷம்:-))))
-----------------------------
அவர் 'கிருஷ்ணகிரியில் வேலை பார்க்கிறேன்' என்றார்.

'ஓ! ஹோசூர் பக்கம்' என்றேன்.

'உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்றார்.

'அட! நான்தான் சொன்னேனே நான் தமிழ்நாடு என்று'

அப்பவும் அவர் நம்பவில்லை. பெரிய வேடிக்கை என்னவென்றால் 'அட! ஒரு கொரியன் தமிழ் பேசுகிறாரே! என்று நான் ஆச்சர்யப்படுவதை விஞ்சிவிட்டது அவர் நான் தமிழ் பேசுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டது! அவரை நான் கண்டதை விட அவர் என்னைக் கண்டதே அன்றைய ஆச்சர்ய லிஸ்டில் முதலிடம் பெற்றிருக்குமென்று நம்புகிறேன் :-))

குமரன் (Kumaran) 12/09/2006 10:24:00 PM

நல்ல வேடிக்கை ஐயா.

நான் பார்ப்பதற்கு கொஞ்சம் மெக்ஸிகன் போல் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். பல நேரங்களில் மெக்ஸிகர்கள் என்னிடம் வந்து ஸ்பானிஷ் பேசுவார்கள். நான் எனக்கு ஸ்பானிஷ் தெரியாது என்று சொன்னால் 'என்னடா இவன் பொய் சொல்கிறான்' என்பது மாதிரி பார்த்துவிட்டுப் போவார்கள். ஒரு முறை நன்றாகத் திட்டும் வாங்கியிருக்கிறேன் ஸ்பானிஷ் தெரியாது என்று சொன்னதற்காக. :-)