கொரிய மொழியில் கீதை!


கொரியா-இந்தியா பாய்!பாய்!


இந்தியாவும் கொரியாவும் தங்கள் பண்டைய தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டிய காலமிது! அதைச் சுட்டுவதே இப்படம். சுரோ எனும் கொரிய மன்னனுக்கு வாக்குப்பட அயோத்தியிலிருந்து ஒரு ராணி புறப்பட்டுப் போனாளாம். எப்போது? 4ம் நூற்றாண்டு!!


கொரிய மொழியில் கீதை


பகவத் கீதை - உள்ளது உள்ளபடி! எனும் ஆச்சார்யா பிரபு பாதா அவர்களின் நூல் முதல் முறையாக கொரியமொழியில் மொழிபெயர்பாகியுள்ளது. உலகளவில் கீதை மட்டும் 600க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளில் இப்போது கிடைக்கிறது. அன்று தொட்டு இன்றுவரை கீதை தேடுதல் உள்ள உள்ளங்களை வழிப்படுத்தி, வளப்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்த காலத்தில் மனோதத்துவ நோக்கில் கீதை என்று டாக்டர் வெங்கோபராவ் பேசுவார். அதுபோல் இப்புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு கொரிய மனோதத்வ நிபுணர் கீதையின் சமகாலப் பயன்பாடு பற்றிப் பேசினார்.


மொழிபெயர்ப்பு: பதஞ்சலி முனி தாஸ்


இவருக்கு 6 வருடத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டிருக்கிறது. சமிஸ்கிருதம் இந்தியர்களுக்கே கஷ்டமெனில் கொரியருக்கு சொல்லவே வேண்டாம். இவர் பிரபுபாதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பை கொரியனுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இப்படிச் செய்தால் மூலத்தின் காரம் நீர்த்துப் போகாதா? என்று கேட்டேன். ஒத்துக் கொண்டார். ஆனால், விவிலியம் (பைபிள்) கூட இம்முறையிலே பன்னெடும் காலமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகச் சொன்னார். மேலும் சொன்னார், சமிஸ்கிருத மூலத்தை ஆங்கிலத்தில் பலுப்புவதை விட கொரியனில் பலுப்பது எளிது என்றார். கொரியன் அப்படியே தமிழ் போல் ஒலிப்பது. Coffee என்று அவர்களால் சொல்ல முடியாது. தமிழில் உள்ளதுபோல் அச்சாக 'காப்பி' என்றுதான் சொல்கிறார்கள். சிங்கப்'பூர்' என்று சொல்லவராது சிங்கப்'பூரு! என்றே சொல்ல வருகிறது. எனவே கொஞ்சம், கொஞ்சம் சமிஸ்கிருதம் போல் சொல்லமுடிகிறது. தமிழில் சமிஸ்கிருதத்தைப் பலுப்ப முடியாத காரணத்தினாலேயே கிரந்தம் என்ற ஒலிக்குறியீடு தமிழில் தோன்றியது. இவர் 8 வருடம் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கிருஷ்ணபக்தியில் ஈடுபட்டுள்ளார். தற்போது சோல் நகரிலுள்ள ராதா கிருஷ்ணர் கோயில் பூஜைகளைக் கவனித்து வருகிறார்.

சோல் நகரில் வாழும் கிருஷ்ண பக்தர்களின் பெருமுயற்சியால் இப்புத்தகம் வெளிவந்து இருக்கிறது. வங்காள மொழி பேசும் பங்களாதேசிகளும், இந்தியர்களும் அதிகப் பங்கு அளித்துள்ளனர்.
ஹரி பஜனையுடன் புத்தக வெளியீடு!

0 பின்னூட்டங்கள்: