உணர்வெனும் பெரும் பதம்!முன்னூட்டம், பின்னூட்டம் என்று எங்கு ஆன்மீகம் வந்தாலும் 'பரப்பிரம்மம்' யார்? என்ற கேள்வி சுற்றி வளைத்து வந்து விடுகிறது. அப்போது கட்சிகள் தோன்றிவிடுகின்றன. எரிந்த கட்சி, எரியாத கட்சி, எரிந்தும் எரியாத கட்சி இப்படி! பரப்பிரம்மம் என்ன? என்பதை விளக்கும் வேத சூத்திரம் 'பிரம்ம சூத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு விளக்கவுரை (பாஷ்யம்) எழுதியவர்கள் மூவர். சங்கரர், ராமானுஜர், மாத்வர். இவர்கள் மூவரும் 'நாராயணன்' என்ற பதத்தையே பரப்பிரம்மத்தைச் சுட்ட பயன்படுத்துகின்றனர். அந்தச் சொல், அதனாலேயே 'மந்திரமாகி' விடுகிறது. சொல்லே definition. இவர்கள் அதை விளங்கிக் கொள்வதில் வேறுபடுகின்றனரே தவிர definition-ல் வேறுபடவில்லை. வேதம் 'நாராயண பரம்' என்று சொல்கிறது. இச்சொல் வேறு தெய்வத்திற்கு பயன்பட்டிருக்கிறதா? (அதாவது, refinement in definition) என்று வேதம் முழுக்கத் தேடினாலும் கிடைக்கவில்லை. அப்பய தீக்ஷ்தர் இச்சொல் சிவனைக் குறிக்கிறது என்று சொல்ல முயன்று தோற்றார். மேலும் 'ஓம் நமோ நாராயணாய' எனும் எட்டெழுத்து மந்திரத்தில் மட்டுமே 'ஓம்' என்பதும் இணைந்து எட்டெழுத்து ஆகிறது (அஷ்டாக்ஷரம்). வேறு எந்த மந்திரத்திலும் அது சேர்த்துக் கொள்ளப்படுகிறதே (additional suppliment)தவிர சேர்ந்து கணக்கெடுக்கப்படுவதில்லை.

ஓம் என்பதே நாரண தத்துவத்தை விளக்குவதாக உள்ளது என்று தனது உரையில் விளக்குகிறார் பரனூர் அண்ணா. 'அ'கரம் என்பது ஈஸ்வரன் என்று பார்த்தோம் (விஷ்ணு), 'ம'கரம் ஜீவனைக் குறிக்கிறது. இடையில் வரும் 'உ'கரம் பரமனையும், ஜீவனையும் இணைக்கிறது. எனவே, ஓம் நமோ நாராயணாய என்பது 'பரப்பிரம்ம' விளக்கமாக அமைகிறது. இது அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒன்றும் புரியாமல், 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு' அப்படின்னு ஒரு compromise செய்தல் கூடாது.

'சர்வ தந்த்ர சுதந்திரன்' எனும் பெயர் சர்வேஸ்வரனுக்கே பொருந்தும். ஏனெனில் அவனுக்கு மிஞ்சிய கலைகள் கிடையாது என்பது பொருள். ஆனால், ஹயக்கீரிவர் உபாசனை மூலம் அப்பட்டத்தைப் பெற்றவர் ஸ்வாமி தேசிகன். அவர் 'ரகஸ்ய த்ரய சாரம்' எனும் நூலில் இராமானுஜ சித்தாந்தைத் தெளிவாக விளக்கிச் சொல்கிறார். அதன் சமகால விளக்கமே நீங்கள் கேட்கப்போகும் உரை. இது நான் சென்ற பதிவில் போட்ட 'ஓம்' என்பதற்கு அவர் தரும் விளக்கத்தின் தொடர்ச்சியாக கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். முமூட்சுவாக மாற வேண்டுமென்ற துடிப்பு உடையவர்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்த விஷயம்.

this is an audio post - click to play


திருப்பாற்கடல் என்பது 'காரணோதயம்' எனும் பிரளயநீர் என்பார்கள். அது உண்மையில் நீர் அல்ல. அதை நாம் wave function என்று புரிந்து கொள்ளலாம். அல்லது படைப்பின் சாரு என்றும் புரிந்து கொள்ளலாம். அது பொருளல்ல. உருவகம். திருப்பாற்கடல் is a metaphor.

39 பின்னூட்டங்கள்:

ஜடாயு 12/06/2006 11:14:00 PM

// 'பரப்பிரம்மம்' யார்? என்ற கேள்வி சுற்றி வளைத்து வந்து விடுகிறது. அப்போது கட்சிகள் தோன்றிவிடுகின்றன. எரிந்த கட்சி, எரியாத கட்சி, எரிந்தும் எரியாத கட்சி இப்படி! //

பிரம்மத்தைப் பற்றிய விசாரம் கட்சிச் சண்டை போட்டுத் தீர்க்கும் சமாசாரமா? அது அகவயப் பட்ட தேடல் அல்லவா?

// வேதம் 'நாராயண பரம்' என்று சொல்கிறது. இச்சொல் வேறு தெய்வத்திற்கு பயன்பட்டிருக்கிறதா? (அதாவது, refinement in definition) என்று வேதம் முழுக்கத் தேடினாலும் கிடைக்கவில்லை. //

கண்ணன், நாராயணன் பெருமை பதிவது உங்களுக்கு மன நிறைவு தருகிறது என்று புரிகிறது. அதற்காக இப்படி sweeping பொதுப் படுத்துதல்களை அவ்வப்போது அள்ளிவிட்டுக் கொண்டிருப்பது ஏன்? வேதம் என்பது கூகிளில் தேடிக் கண்டுபிடிப்பது போன்று ஒரு data collection அல்ல. அந்தத் தளத்தில் வேதப் பொருளை அறியப் புகுந்தால் அது அனர்த்ததில் தான் முடியும். அது "பரா வித்யா", முழுக்க முழுக்கக் குறியீடுகளால் ஆனது. ஆன்ம சாதனையால் மட்டுமே அறியத் தக்கது.

நிற்க.
பிரம்ம சூத்திரத்திற்கு மூல பூதமாக
"நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:" என்று சொல்லும்
நாராயண சூக்தம் (யஜுர்வேதம்) அதற்கு முந்திய அடியில்
"பதிம் விஷ்வஸ்யாத்மேஷ்வர'ம் சிவம் அவ்யயம்"
என்பதில் ஈஷ்வரம், சிவம் என்ற பதத்தைச் சொல்கிறது.

வேதம் முழுக்கத் தேடவேண்டாம், ஒரு சூக்தம் போதும் :)

இதே சூக்தம் கடைசியில்,
ருத'ம் சத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம் |
ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஷ்வரூபாய வை நமோ நம: ||

இந்த சூக்தம் கடைசி அடியில் முக்கண்ணனாக அவனை ஹரிஹர உருவத்தில் போற்றி அவனே பரப்பிரம்மம் என்றும் சொல்லி முடிக்கிறது!

// அப்பய தீக்ஷ்தர் இச்சொல் சிவனைக் குறிக்கிறது என்று சொல்ல முயன்று தோற்றார். //

இதென்ன கேலிக் கூத்து? ஏதோ ஒரு வாதத்தில் அவர் தோற்றார் என்பதைப் படித்து விட்டு அதை "இறுதி" (செமித்திய வழக்கப்படி) முடிவு போல அறிவிக்கிறீர்களே? இது நியாயமா?

// 'ஓம் நமோ நாராயணாய' எனும் எட்டெழுத்து மந்திரத்தில் மட்டுமே 'ஓம்' என்பதும் இணைந்து எட்டெழுத்து ஆகிறது (அஷ்டாக்ஷரம்). வேறு எந்த மந்திரத்திலும் அது சேர்த்துக் கொள்ளப்படுகிறதே (additional suppliment)தவிர சேர்ந்து கணக்கெடுக்கப்படுவதில்லை. //

எந்த மந்திரம் உயர்வு என்று கணக்கெல்லாம் இப்படித் தான் எடுப்பீர்களோ? கொஞ்சமாவது உண்மையான ஆன்மீகத்தில் திளைத்தவன் இது போன்ற சிறுபிள்ளைத் தனங்களில் இறங்க மாட்டான் என்பது எனது தாழ்மையான கருத்து.

// 'அ'கரம் என்பது ஈஸ்வரன் என்று பார்த்தோம் (விஷ்ணு //

"அகரமுமாகி அதிபனுமாகி" என்ற திருப்புகழைப் படிக்கவும். நீங்கள் இங்கே சொல்லும் குறுகிய கருத்தை விட அற்புதமான விளக்கம் அதில் உள்ளது.

// இது அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒன்றும் புரியாமல், 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு' அப்படின்னு ஒரு compromise செய்தல் கூடாது. //

ஒன்றான பொருள்களிலும் பேதம் பார்ப்பது தாமச புத்தி என்றும், வேறுபடுவது போலத் தோன்றும் பொருட்களிலும் ஒருமையைக் காண்பதே சாத்வீக புத்தி என்றும் கீதை கூறுகிறது.

அது compromise என்று ஏன் நினைக்கிறீர்கள்? பேதபாவம் இன்னும் மனதில் ஒட்டிக் கொண்டிருப்பதால் இப்படியெல்லாம் எண்ணத் தோன்றுகிறது! இந்தப் பழமொழியை எவ்வளவோ முறை கேட்டிருக்கிறேன், ஒருமுறை கூட எனக்கு இப்படித் தோன்றியதில்லை. harmony தான் எனக்குத் தோன்றியது.

கண்ணன், வைணவத்தைத் தூக்கிப் பிடிக்கும் உங்கள் வேகம் சரி. அதை த்வேஷம், பொதுப் படுத்தல் போன்ற தவறுகள் இல்லாமல் செய்தால் மகிழ்வேன். சைவம் மற்றும் மற்ற தத்துவ மரபுகளைத் தாக்கித் தான் தாங்கள் வைணவத்தை வளர்க்க வேண்டும் என்பதில்லை.

பெருமாள் (சிவன், முருகன், சக்தி எந்தத் தெய்வமாயிருந்தாலும்) மீது கொள்ளும் பக்தி பிறவிக் குணம் போன்று இதயத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும் . யார் பெரியவர் என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தியா அதை முடிவெடுப்பது, அது பக்த லட்சணம் அல்ல என்று கேட்டிருக்கிறேன்.

துளசிதாசர் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்று. ஒருமுறை ராமபக்தர் துளசி பிருந்தாவனம் போகிறார். அங்கிருந்த கிருஷ்ண பக்தர்கள் அவரிடம் போய் "12 கலைகள் உள்ள பகவானான ராமனைப் போற்றுகிறீர்களே, நீங்கள் வணங்க வேண்டியது 16 கலைகளும் உள்ள பகவான் கிருஷ்ணனைத் தான்" என்று வாதிட்டனர். துளசி சொன்னார்" ஓ, என் கண்மணி ஸ்ரீராமன் பகவான் கூடவா? இப்போது தான் எனக்குத் தெரிந்தது!" என்றார் (க்யா ஹமாரே ராம்ஜி பகவான் பீ ஹைன்? ஆஜ் ஹீ பதா சலா).

நீங்கள் 7, 8 என்று சொல்லியிருப்பதைப் பார்த்ததும் ஏனோ இந்தக் கதை தான் நினைவுக்கு வந்தது :))

நா.கண்ணன் 12/07/2006 12:10:00 PM

அன்பின் ஜடாயு:

நேற்று இப்பதிவு வந்தவுடன், உடனே பதிலளித்து உள்ளீர்கள். உரையைக் கேட்டீர்களா? என்று தெரியவில்லை. அது 30 நிமிடத்திற்கும் மேல் செல்லும் உரை.

நான் இன்னும் தத்வத்ரய சாரம் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். பிரபத்தி செய்வதற்கு முன் ஈஸ்வரன் யார் என்று நிர்மாணம் செய்ய வேண்டும். இரண்டு பரமன்கள் இருக்கவியலாது. நாரணனும் பரமன், சிவனும் பரமன் என்று சொல்லக் கூடாது. எனவேதான் வேத வியாசர் 'கேசவம் பரம்! என்று சத்யம், சத்யம், சத்யம்' என்று மூன்று முறை பிரகடணம் செய்கிறார். அவரே நாரண பரத்துவம் பற்றி மகாபாரதம் என்ற பெருங்காவியத்தில் தெளிவாக விளக்குகிறார். வால்மீகி இராமாயணம் செய்கிறார். இங்கும் பரத்துவம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் ஆணிவேர்கள். அதன் பின் 18 புராணங்கள். இவற்றில் முக்கால்வாசி நாரண பரத்துவம் பற்றிப் பேசுகிறது. பின் ஆழ்வாராதிகள். பின் முப்பெரும் ஆச்சர்யர்கள் என்று எல்லோரும் இக்குழப்பம் ஒரு ஆஸ்திகன் மனதில் வரக்கூடாது என்று தெளிவாக நிர்ணயம் செய்கின்றார்கள். இப்படி இருக்கும் ஒரு இந்திய மெய்ஞான உண்மையை நான் சொன்னால் எப்படிக் குற்றமாகப் படுகிறது? உங்களுக்கு.

நீங்கள் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டீர்கள் என்று சிலமுறை சொல்லியிருக்கிறீர்கள். அப்பார்வையாலும் இது வித்தியாசமாகப் படக்கூடாது.

பிரபத்தி என்பது ஞானத்தெளிவு. யாரிடம் பிரபத்தி பண்ணுகிறோம் என்ற ஞானம் தெளிவாக இருக்க வேண்டும். அங்கு எந்தக் compromise-க்கும் இடமில்லை. எனவேதான் ஆழ்வார்கள் all accomodative formula ஒன்று தருகிறார்கள்:

தடம்புனல சடைமுடியன்
தனியொருகூ றமர்ந்துறையும்,
உடம்புடையான் கவராத
உயிரினால் குறைவிலமே. 4.8.10

என்று சிவனுக்கு பரபிரம்மத்திடம் கூறு போட்டுக் கொடுத்து விடுகின்றனர். அந்த நிலையில் பார்க்கும் போது கண்ணன், சிவனாகவே தெரிகிறான்.

ஒளிமணி வண்ணன் என்கோ.
ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ.
நான்முகக் கடவுள் என்கோ,
அளிமகிழ்ந் துலகமெல்லாம்
படைத்தவை ஏத்த நின்ற,
களிமலர்த் துளவ னெம்மான்
கண்ணனை மாய னையே. 3.4.8

இந்த approach சரியான நோக்கு.

தமிழகத்தில் என்ன நடந்திருக்கிறது என்றால், சிவனைப் பரம்பொருள் என்று சொல்லும் போக்கு காணக் கிடைக்கிறது. கிறிஸ்தவத்தில் ஈஸ்வரன் ஒன்று என்று ஒத்துக் கொண்டு வேறுபடும் பல்வேறு churches உண்டு. அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் (மட்டும்) அப்படி இல்லை. ஒன்று இன்னொன்றை மாற்ற வருகிறது. அது சில காலங்களில் தீவிரமடைந்து, 'சிவன் பரம்' என்று சொல்லாவிடில் உன் கண்ணைப் புடுங்கிவிடுவேன்' என்று இராமானுஜரிடம் சொல்லும் அளவு போய்விடுகிறது. இதை நடக்கவில்லை என்று கூறமுடியாது. இப்பிளவு இல்லை என்றும் மறுக்க முடியாது.

எனது எழுத்தில் கொஞ்சம் சீண்டும் குணமுண்டு. என் எழுத்து-என் உரத்த சிந்தனை. அது ஆர்வமுள்ளவர்களை உரசும் போது பொது அறிவு வளர்கிறது. அது என் பாணி. எனவே நீங்கள் கண்ட சமன்பாடு எனக்கு சித்திக்கவில்லை என்று உடனடி முடிவிற்கு வரக்கூடாது. நானும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறேன், ஆழ்வார்கள் சொல்வது போல். கீதை சொல்வது போல். உள்ளதை உள்ளபடி சொல்வது எப்படிக் குற்றமாகும்?

என்னைப் பொறுத்தவரை சைவ சிந்தாந்தம் அரிய ஞானத்தெளிவை அளித்திருக்கிறது என்றால், அக்கருத்தையெல்லாம் முன் வையுங்கள். அவர்கள் சொல்லவில்லையெனினும் அது 'திருவாய் மொழி' என நான் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்னிடம் உள்ளது.

Muse (# 5279076) 12/07/2006 04:03:00 PM

கண்ணன் அவர்களே,

அதிக ஞானம் இல்லாதவனும், தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவனுமாகிய என் கருத்துக்கள்:

சொல்லே definition. இவர்கள் அதை விளங்கிக் கொள்வதில் வேறுபடுகின்றனரே தவிர definition-ல் வேறுபடவில்லை.

தங்களது இந்த கருத்து சரிதானா? உருவம், வாக்கு, குணம் தாண்டிய ஒன்றை சொல்லுக்குள் அடக்க முயற்சித்தல் சரியான விஷயமா? அங்கனம் செய்வது ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு ஞானத்தை அடைய ஆரம்ப படிநிலையாக இருப்பது. இந்த வகையில் தாங்கள் செய்வது ஒரு மகத்தான திருப்பணி. பாராட்டுக்கள்.

ப்ரம்ம சூத்திரம் பற்றி சொன்னீர்கள். மகிழ்ச்சி. அந்த ப்ரம்ம சூத்திரம் பரத்தை மிகப் பெரியது, பலமுள்ளது, சொன்ன பேச்சு கேட்காவிட்டால் கண்ணை குத்திவிடும் என்பதற்காக வணங்கவேண்டும் என்று கூறுகின்றதா? அல்லது பரத்தை அறிவது இருப்பதிலேயே ஆகச் சரியான வாழ்க்கைமுறை என்கின்ற காரணத்திற்காக அதை வழிபட (அறிய) சொல்லுகின்றதா?

பெரும்பாலான வைஷ்ணவ பாஷ்யங்கள் பற்றிய விளக்கங்கள் பக்தியை முன்னிறுத்துபவை. பக்தி எளிய உயர்ந்த வழி. அன்பால் வருவது. கண்ணன் என்னுடையவன் என்கின்ற பாவத்தால் வருவது. இந்த பக்திக்குக் காரணம் கண்ணனைவிட மற்ற தெய்வங்கள், அல்லது பெயர்கள், அல்லது வார்த்தைகள் தாழ்ந்தவை என்பதால் கண்டிப்பாக இல்லை. இது போன்ற காரணங்கள் மனத்தையும் அதன் ஆசாபாசங்களான உயர்வு தாழ்வு கருதும் போக்கையும் தாண்ட விரும்பாத மனிதர்களுக்கு ஏற்படுவது. இதுவும் பக்திதான் என்றாலும் உயர்ந்த வகை பக்தி அல்ல. வைஷ்ணவ பெரியோர்கள் பக்தியின் பல வடிவங்களை பற்றி சொல்லும்போது பயத்தாலோ, ஆசையாலோ, வெறுப்பினாலோ, காமத்தாலோ ஏற்படும் பக்திகளும் உண்டு என்றாலும், பரத்தின்மீது காரணம்காண முடியாத பக்தி ஏற்படுமாயின் அதுவே சாலச் சிறந்தது என்று பகர்கிறார்கள். அத்தகைய பக்தி மார்க்கம் இருக்கும்போது அவற்றை முன்னிலைப்படுத்துவது வைஷ்ணவம் பற்றிய சரியான புரிதலுக்கு வழிவகுக்கும். இல்லாவிடில் ஆபிரகாமிய வெறுப்பியல்கள்போல (மதம் என்று சொல்லுகிறார்களே, அவைதான்) சைவ வைஷ்ணவ காணாபத்ய சாக்த கௌமார சௌர (முதலான) மதங்களையும் புரிந்துகொள்ளும் ஆபத்து உள்ளது.

காதலன் காதலி மீது மட்டும் காதல் கொள்ளுவது எதனால்? அனைத்துப் பெண்களையும் காதலிக்க முடியாததும் எதனால்? தன் காதலியைவிட அழகான அறிவுள்ள பெண்கள் இருந்தாலும் ஒரு காதலனுக்கு தன் காதலியிடம் மட்டுமே அன்பு தோன்றுகின்றது எதனால்? காதலிப்பதற்கு காரணம் தேவையில்லை. அல்லது இப்படியும் சொல்லலாம். காதலுக்கான காரணம் விளக்கமுடியாததாக உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் இகத்தை விளங்க ஆராய்ச்சி கொள்ளலாம். அதே விஷயத்தை ஓரளவுக்குமேல் பரத்திற்கு பயன்படுத்துவது புரிதலிலிருந்து மானிடரை விலகவைக்கிறது. ஆராய்வதைவிட அனுபவிப்பது சுகம்.

பக்தியையோ அல்லது வேறு ஏதேனும் கர்மங்களையோ ஆரம்பிப்பதற்கு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த காரணங்களை தாண்டியும் ஒரு காரியம் தொடருமானால் அது ஆத்மீக விஷயங்களில் மிகவும் அருமையான அனுபவங்களை அளிக்கும் (பெரியோர்கள் சொன்னபடி).

ஆன்றோர்கள் விளங்கிக்கொண்டதை விளக்குவதில்தான் மாறுபடுகின்றனர். அவர்கள் விளங்கியது ஒன்றே.

நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே என்பதை புரிந்து கோவிந்தன் புகழ்பாடி பரமனின் பதம் அடைவோமாக !

நா.கண்ணன் 12/07/2006 04:29:00 PM

//ஆராய்வதைவிட அனுபவிப்பது சுகம்//

இது 100க்கு 100 சரி. பக்தி என்பதைக் கூட அனுஷ்டானமாகப் பார்த்து பிரபத்தி இன்னும் சாலச் சிறந்தது என்று மேலே போகிறது வைஷ்ணவம். அது பற்றியும் பின்னால் பேசுவோம்.

நான் துவேஷம் வைத்துக் கொண்டு எழுதுவதாக ஜடாயு தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு அது தவறு என்று புரியும்.

A practical definition of பரப்பிரம்மம் தேவையாக இருக்கிறது. இல்லையெனில் நாராயணனுக்கு ஆயிரம் நாமங்கள் அவசியமில்லை. ஒவ்வொரு சொல்லும் பரத்தின் பல்வேறு கோணங்களைச் சொல்கிறது. நாராணனுக்கு 'படுகுழி' என்ற ஒரு நாமம் கூட உண்டு (பாரதி பேசுவான் உன் அருள் விழும் பள்ளமாக ஆக வேண்டும் என் உள்ளம் என்று). இதைக் கருங்குழி என்றால் black hole ஆகிவிடும்! இத்தனை நாமங்கள் போதாது என்று பல்வேறு தெய்வமாகவும் அவனே உள்ளான். அவை தரும் அருள் இவன் இன்னருளே. சர்வத்திலும் அந்தர்யாமியாக இருப்பதே அவன் சிறப்பு.

பெயர் என்பது நெருடும் விஷயம் என்பதால் அதைத் தொடாமல் போகலாம். ஆனால், தத்வத்ரய ரகஸியத்தில் நாரண தத்வ விளக்கம் முக்கியமானது. சர்வேஸ்வரன் யார். அவனை ஏன் நாம் அப்படி அழைக்கிறோம் என்று புரிந்து கொள்வது ஞான மார்க்கமாகிறது. ஞானம் இல்லாமல் பக்தி இல்லை. தகுதியற்றவர் எல்லாம் வைகுந்தம் போய்விட முடியாது. கடைசி நேரத்திலாவது பக்தனுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தே இறைவன் ஏற்றுக் கொள்கிறான் என்பது சம்பிரதாயம்.

உங்கள் கருத்திற்கு நன்றி.

ஜடாயு 12/07/2006 07:11:00 PM

// இரண்டு பரமன்கள் இருக்கவியலாது. நாரணனும் பரமன், சிவனும் பரமன் என்று சொல்லக் கூடாது.//

நம் குருமார்களில் பெரும்பாலோர் இப்படிச் சொன்னவர்கள் தானே ஐயா?
கணினி தொழில்நுட்பத்தில் polymorphism என்று ஒரு கான்செப்ட் உண்டு. அதையே ஆன்மிக தளத்தில் சொன்னால், "ஒரே பரம்பொருள் சிவனாகவும், திருமாலாகவும் இருக்கிறது" என்று சொல்லலாம்.

ஒன்றே என்னில் ஒன்றேயாம்
பலவென்றுரைக்கில் பலவேயாம்
-கம்பர்

// இப்படி இருக்கும் ஒரு இந்திய மெய்ஞான உண்மையை நான் சொன்னால் எப்படிக் குற்றமாகப் படுகிறது? உங்களுக்கு //

நாராயணன் என்ற பெயரால் சுட்டப் படும் பரதத்வம் என்பது தான் முழுமையானது என்று நீங்கள் சொன்னால், இந்திய மெய்ஞானத்தின் ஒரு சிறு கீற்றைப் பார்த்துவிட்டு அது தான் சூரியன் என்று அடம் பிடிப்பது போல் இருக்கிறது!

நீங்கள் சொன்ன எல்லா புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவனைப் பரம்பொருளாகப் பேசும் இடங்கள், சிவ உபாசனை எல்லாமே வருகிறது.

// எனவேதான் வேத வியாசர் 'கேசவம் பரம்! என்று சத்யம், சத்யம், சத்யம்' என்று மூன்று முறை பிரகடணம் செய்கிறார் //

எண்ணிக்கையில் உங்களுக்கு விருப்பம் அதிகமோ? :))

// தமிழகத்தில் (மட்டும்) அப்படி இல்லை. ஒன்று இன்னொன்றை மாற்ற வருகிறது. அது
அது சில காலங்களில் தீவிரமடைந்து, 'சிவன் பரம்' என்று சொல்லாவிடில் உன் கண்ணைப் புடுங்கிவிடுவேன்' என்று இராமானுஜரிடம் சொல்லும் அளவு போய்விடுகிறது. //

இது சைவ நெறி பரவியதால் நிகழ்ந்ததல்ல. வரலாற்றில் ஒரு மன்னனும் அவன் வழிதவறிய கூட்டாளிகளும் சம்பந்தப் பட்ட ஒரே ஒரு விதிவிலக்கான,தவறான சம்பவம். இது போன்று 5-6 சம்பவங்கள் கூட இல்லை. அதை வைத்து பொதுமைப் படுத்துதலைச் செய்வது பெரும் தவறு.

// நடக்கவில்லை என்று கூறமுடியாது. இப்பிளவு இல்லை என்றும் மறுக்க முடியாது. //

அந்தப் பிளவும் அக்ஞானத்தினால் ஏற்பட்டது என்று தான் கருத வேண்டும். ஏனென்றால், அதை நியாயப் படுத்தும்போது மறுபடியும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கான சாத்தியத்தை அது உருவாக்கும் அபாயம் இருக்கிறதல்லவா?

// எனது எழுத்தில் கொஞ்சம் சீண்டும் குணமுண்டு. என் எழுத்து-என் உரத்த சிந்தனை. அது ஆர்வமுள்ளவர்களை உரசும் போது பொது அறிவு வளர்கிறது. //

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் :))

// அது என் பாணி. எனவே நீங்கள் கண்ட சமன்பாடு எனக்கு சித்திக்கவில்லை என்று உடனடி முடிவிற்கு வரக்கூடாது.
நானும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறேன், ஆழ்வார்கள் சொல்வது போல். கீதை சொல்வது போல்.
//

என்னைப் பொறுத்தவரை "நீங்கள்" என்பது உங்கள் எழுத்துக்கள் தான். அந்த எழுத்துக்களில் தொடர்ச்சியாக இழையோடி வரும் தொனியை வைத்தே அப்படிச் சொன்னேன். கீதை சொல்வது போன்ற சமன்பாடு கண்டவன் சிவ தத்துவத்தை இகழவோ, ஏளனம் செய்யவோ, மல்லுக்கு அழைக்கவோ செய்வான் என்று எனக்குத் தோன்றவில்லை. "ப்ரம்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே" என்று தான் கீதை வழங்கப் படுகிறது. அது எந்த சமயப் பிரிவையும் சுட்டியதல்ல.

மறைந்த சுவாமி சித்பவானந்தர் (ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை) ஆத்ம ஞானி. அவரது திருவாசக உரையில், எத்தனையோ பாடல்களுக்கு கீதை சுலாகங்களையே விளக்கங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். "மாலயன் காணாத சோதி" என்று வரும் பாடல்களை விளக்கும்போதும் மால் என்பது ஒரு படிநிலையை மட்டுமே குறிப்பதாகக் கூறுவார். அற்புதமான சமன்பாட்டு உணர்வுடன் உள்ள இந்த உரையில், சிறிது கூட பிசகு இல்லாமல் 'சிவனும், விஷ்ணுவும் பரம்பொருளின் ஸ்வரூபங்களே' என்ற கருத்தையே வலியுறுத்தி எழுதியிருப்பார்.

அவரது புகழ்பெற்ற, அற்புதமான கீதை உரையையும் நீங்கள் முடிந்தால் படிக்க வேண்டும்.

// உள்ளதை உள்ளபடி சொல்வது எப்படிக் குற்றமாகும்? //

குற்றம் என்று நான் சொல்லவில்லை. அவற்றில் பேதபாவம் வெளிப்படுவதாக சொன்னேன். அவ்வளவே.

நா.கண்ணன் 12/07/2006 08:40:00 PM

அன்பின் ஜடாயு:

Polymorphism என்ற சொல் biology-யும் உண்டு. ஆனால் தர்க்கவாதத்திற்கு இது பொருந்தாது. தொடக்கம் ஏதாவதொன்றில் இருந்துதான் இருக்க வேண்டும். இதை வேதாந்திகளும், சித்தாந்திகளும் ஒத்துக்கொள்கின்றனர். பத்மநாபனிலிருந்து உருவாகும் தொடர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இது போல் உருவாக்கம் பற்றிய கருத்து சைவ சித்தாந்தத்திலும் இருக்கும்.

//நாராயணன் என்ற பெயரால் சுட்டப் படும் பரதத்வம் என்பது தான் முழுமையானது என்று நீங்கள் சொன்னால், இந்திய மெய்ஞானத்தின் ஒரு சிறு கீற்றைப் பார்த்துவிட்டு அது தான் சூரியன் என்று அடம் பிடிப்பது போல் இருக்கிறது! //

இது அடம் இல்லை. அப்படித்தான் இருக்கமுடியும். இல்லையெனில் பல கடவுளர் கொண்டது இந்து மதம் எனும் இஸ்லாமிய வாதம் உண்மை என்றாகிவிடும். ஒன்றுதான் பலவாகத் தெரிகிறது. அந்த ஒன்றை எப்படி அழைக்கலாம் என்பதே பேச்சு.

மாணிக்கவாசகர், வள்ளலார், திருமூலர் பேசுகிற பரம் என்னைப் பொருத்தவரை நாராயணனே. ஆனால் ஏதோ சரித்திர காரணத்திற்காக வேதத்தில் வருகிற சிவன் என்ற சொல்லை இவர்களும் பயன்படுத்தப் போய் பிரச்சனையாகிவிட்டது. திராவிட கலாச்சாரம் பேசும் சிவன், வேத கலாச்சாரம் பேசும் சிவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டையும் போட்டுக் குழப்புவதால்தான் ஹரி, சிவ பேதம் தமிழகத்தில். சிவ புராணங்களில் ஒன்று கூட திருமாலைக் கீழிறக்காவிடில் தூக்கம் வராது என்பது போல் எழுதப்பட்டுள்ளன. இந்த அபகீர்த்தி தத்துவங்களைப் புரிந்து கொள்ளாததாலும், இந்தச் சிவனை வேதச் சிவனுடன் ஒப்புமைப் படுத்துவதாலும் இருக்கலாம். நிச்சயமாக, பிரம்மாவிடமிருந்து தோன்றும் ருத்ரன், திருமூலர் பேசும். 'அன்பே சிவம்' எனும் தெய்வம் இல்லை :-) அது கொஞ்சம் ஜெஹோவா போல!

//அந்தப் பிளவும் அக்ஞானத்தினால் ஏற்பட்டது //

அக்ஞானம் இருக்கிறது என்றுதான் சொல்கிறேன். இல்லையெனில் அரையும் குறையுமான புராணங்கள், பரமாக இருக்க வேண்டிய நாரணனை பிரகார தேவதை ஆக்குவது இவையெல்லாம் எப்படி நடக்கும்?

கிருமி கண்ட சோழன் செய்தது பெரிய வரலாற்றுப் பிழை. சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜப் பெருமாளைக் கடலில் தூக்கிப் போட்டுவிட்டான்! இராமனுஜரின் கண்ணைப் புடுங்க முயன்றது தமிழகத்தில் மீளாப்பிளவை ஏற்படுத்திவிட்டது. இது போல் வடநாட்டில் நடந்த சரிதம் உண்டா என்று தெரியவில்லை.

//'சிவனும், விஷ்ணுவும் பரம்பொருளின் ஸ்வரூபங்களே'//

ஆழ்வார்களும் இதையேதான் சொல்கின்றனர். விஸ்வரூபன் என்று இந்து தர்மம் சொல்வது கண்ணனையே!

ஜடாயு 12/08/2006 04:15:00 PM

// திராவிட கலாச்சாரம் பேசும் சிவன், வேத கலாச்சாரம் பேசும் சிவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டையும் போட்டுக் குழப்புவதால்தான் ஹரி, சிவ பேதம் தமிழகத்தில். //

நீங்கள் கால்ட்வெல் பாதிரியார் மற்றும் கழகங்கள் போல ஆரிய திராவிட இனவாதம் பேசும் கட்சியில்லை என்று நம்புகிறேன். ஒரே சிவன் தான் வேத இலக்கியத்திலும், தமிழ் இலக்கியத்திலும். திரிபுரம் எரித்த விரிசைக் கடவுளான முக்கண்ணன் அவனே.

பரிபாலில் வரும் மாயோன் வேறு, புராணங்களில் வரும் விஷ்ணு வேறு என்று சொல்வதற்கு ஈடான அபத்தம் இது. இதே போல துர்க்கை வேறு மகிடனை வதைத்த கொற்றவை வேறி என்றும் சொல்வீர்களா?

இத்தகைய புரட்டுக்களை நீங்கள் செய்யலாமா கண்ணன்?

// சிவ புராணங்களில் ஒன்று கூட திருமாலைக் கீழிறக்காவிடில் தூக்கம் வராது என்பது போல் எழுதப்பட்டுள்ளன. //

இது எல்லாப் புராணங்களிலும் காணக் கிடைப்பது - விஷ்ணு மற்றும் தேவி புராணங்களில் கூட. நவக்கிர புராணங்களை எழுதிய ஜோதிட வெறியர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் சிவ, விஷ்ணு புராணங்கள் மற்றும் ராம, கிருஷ்ண அவதாரங்களில் நிகழ்ந்தவை எல்லாமே கிரக சஞ்சாரத்தால் ஏற்பட்டது என்று பர தத்துவம், அவதார தத்துவம் இரண்டையுமே கேலிக்குரியதாக்குகிறார்கள்!

புராணங்களை இந்த நோக்கில் தான் நாம் பார்க்க வேண்டுமே அல்லாது "இறுதி உண்மைகள்" என்பதாக அல்ல.

// இந்த அபகீர்த்தி தத்துவங்களைப் புரிந்து கொள்ளாததாலும், இந்தச் சிவனை வேதச் சிவனுடன் ஒப்புமைப் படுத்துவதாலும் இருக்கலாம். //

ஒரே சிவன் தான். ஒரே திருமால் போல :))

// நிச்சயமாக, பிரம்மாவிடமிருந்து தோன்றும் ருத்ரன், திருமூலர் பேசும். 'அன்பே சிவம்' எனும் தெய்வம் இல்லை :-) அது கொஞ்சம் ஜெஹோவா போல! //

ஆம், அதே போல, பன்றியாய்ச் சென்று பரமனின் அடி தேடிய திருமால் பரம்பொருள் நாரணன் அல்ல, அது படி நிலையில் உள்ள குட்டி தெய்வம் போல என்றும் சொல்லலாமே!

புராணம் இரண்டு பக்கமும் (எல்லா பக்கமும்) பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் தான் வேதாந்த தத்துவத்தின் "பிரஸ்தான த்ரயம்" என்பதில் உபநிஷதம், கீதை, பிரம்ம சூத்ரம் இவற்றை மட்டுமே ஆதி சங்கரர் ஆதார சுருதிகளாக ஆக்கினார். புராணங்களில் இருக்கும் இந்த limitations அவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்ததனாலேயே.

பின்னால் வந்த துவைத மற்றும் பக்தி மார்க்கிகள் புராணங்களின் மீது அளவுக்கதிகமான சார்பு மற்றும் வெறி உடையவர்களானார்கள் (குறிப்பாக ஸ்ரீமத் பாகவதம் மீது). இன்று இஸ்கான் மதரசாக்களிலிருந்து வெளிவரும் புத்தகங்களில் இந்தச் சார்பு மிகத் தெளிவாக வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

// இல்லையெனில் அரையும் குறையுமான புராணங்கள், பரமாக இருக்க வேண்டிய நாரணனை பிரகார தேவதை ஆக்குவது இவையெல்லாம் எப்படி நடக்கும்? //

இந்த பிராகார தேவதை விஷயம் உங்களை ரொம்ப உறுத்துவதாகத் தெரிகிறது. அதை hierarchy என்று நீங்களாக எண்ணி மறுகுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சுத்த ஞான சொரூபனான ஆலமர் செல்வன் தட்சிணாமூர்த்தி வடிவில் சிவபெருமானே எல்லா சிவன் கோயில்களிலும் பிராகார தேவதையாகத் தானே இருக்கிறார்!! உள்ளும் வெளியும் எங்கும் பரம்பொருளே என்ற தத்துவம் தான் அங்கே வெளிப்படுகிறது!

மேலும், பல கோயில்களில் திருமால் சுற்றில் நேர் பின்புறமாகவே இருப்பார் (வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் சன்னிதியில்). சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு என்று உணர்த்துவதற்காகவே செய்யப் பட்ட ஆகம ஏற்பாடு இது!

ஆனால், தமிழ்நாட்டு வைணவக் கோயில்கள் தாம் சிவத் திருமேனியை கோயிலில் எந்த இடத்திலும் (பிராகாரத்தில் கூட) வைத்து வழிபடுவதில்லை.

// கிருமி கண்ட சோழன் செய்தது பெரிய வரலாற்றுப் பிழை. சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜப் பெருமாளைக் கடலில் தூக்கிப் போட்டுவிட்டான்! இராமனுஜரின் கண்ணைப் புடுங்க முயன்றது தமிழகத்தில் மீளாப்பிளவை ஏற்படுத்திவிட்டது. //

இது மீளாப் பிளவு எல்லாம் அல்ல. தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள்.

இந்தக் கொலைகாரச் சோழனைப் புகழ்ந்த ஒரே ஆள் ஊழல் கவிஞரான ஒட்டக் கூத்தர் தான். மற்றபடி எந்த சைவ இலக்கியத்திலோ, இல்லை கோவில்களிலோ இவனை யாரும் glorigy செய்வது கிடையாது (கோவிலை இடித்த முஸ்லீம் மன்னர்களை இன்னும் ஜிகாதிகள் புகழ்ந்து கொண்டிருப்பது போன்று). இதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

// இது போல் வடநாட்டில் நடந்த சரிதம் உண்டா என்று தெரியவில்லை //

எனக்குத் தெரிந்து இல்லை. இமயச் சாரலில் இருக்கும் சிவன், விஷ்ணு எல்லா மூர்த்தங்களையுமே சங்கரர் தான் பிரதிஷ்டை செய்தார் என்று தான் அங்கே வழக்கு. சிவ-ராம பக்தர் துளசிதாசர் ராமாயணமும் ஒற்றுமைக்கு ஒரு காரணம்.

// விஸ்வரூபன் என்று இந்து தர்மம் சொல்வது கண்ணனையே! //

ஆம், கண்ணன், முக்கண்ணன், அங்கயற்கண்ணி எல்லாரையும் தான் :))

நா.கண்ணன் 12/09/2006 10:49:00 PM

Dear Jadayu:

Sorry I can't reply you right away, as I am in China attending a conference. There is a string on this topic in MinTamil (Google) where Prof.Re.Ka suggested with reasons that they are two different entities (sociological point of view). It is infact, a big riddle for me why they differ in naming the one in two different names (thus symbolism and associated things) which are diagonally opposite (though one gets to know quickly if one reads Alwars and nayanmars that they are talking about the same).

Probably, you are too much on the 'integration element' that you refuse to see the differences. In fact, you did suggest me to see the differences as that was the charm of India!!

Well..we will talk later. I enjoy your feedback.

Kannan

ஜடாயு 12/11/2006 01:07:00 AM

// In fact, you did suggest me to see the differences as that was the charm of India!! //

Absolutely. What I said in Tamil can be better conveyed thru the word "diversity" than "differences".

// Probably, you are too much on the 'integration element' that you refuse to see the differences. //

There is a difference bet' appereciating the differences and making it a point of conflicts and supremacy arguments. It is the second thing which I am against.

This assumes special relevance in the domain of our interest here. viz. Hindu spirituality. I believe that the core of Hindu spirituality is oneness. Swami Vivekananda and Bhrathi have showed us how to tread this path of oneness, while fully conscious of the diversity. Bharathi, being so immersed in the love of both Shakti and Kannan, and also preaching the oneneess of Shiva, Vaishnava and SHakta religions - He even coins a term "vaisaaktam" in one of the articles.

So, its not "refusal" to see difference, but converging on the idea of "harmony". Hope you appereciate this point of view.

எழிலாளன் 12/11/2006 05:54:00 PM

கண்ணன் அவர்களே,


நல்லாத்தான் எழுதறீங்க. அப்படியே எங்க மரைக்காயர் எழுதீயிருக்கிறதுக்கும் வந்து பதில சொல்லிட்டு போனீங்கனா நல்லாருக்கும். இது எழிலுக்கு மட்டும் கேட்கப்பட்ட கேள்விகல் கிடையாது. எல்லா இந்துக்களையும் நோக்கி கேட்டிருக்கிறார் மரைக்காயர். உண்மையிலேயே இதற்கு பதில் தெரியாமல் ஏராளமான இந்து சகோதரர்கள் தவித்துக்கொண்டு, பிறந்துத் தொலைத்துவிட்ட ஒரே காரணத்திற்காக இந்துவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினக்கேன்.

மரைக்காயர் பதிவு:http://maricair.blogspot.com/


கேள்விகள்:

"இந்தப் பதிவில் எந்த விதமான எள்ளலும் இல்லை. கண்ணியமான எனது இந்து மத சகோதரர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமும் இல்லை. எழில் என்பவர் 'இந்து மதம் வாருங்கள்' என்று இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்ததால் அவரது பாணியிலேயே சிலதை தெளிவு படுத்திக் கொள்ளலாமே என்பதற்காக கேட்கும் சில கேள்விகள்தான் இவை." இந்து மதம் பற்றி நான் அதிகம் அறியாதவன். எனது கேள்விகள் யாரையும் புண்படுத்தி விடக்கூடாதே என்ற அச்சத்தினால்தான் இதை இங்கே வலியுறுத்துகிறேன்.

எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்? இந்தக் கேள்வியில் புராணங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சில கருத்தாடல்கள் மூலமாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் கடவுள் தொடர்பான சில விஷயங்களை சுட்டி விளக்கம் கேட்டிருந்தேன்.

அதற்கு எழிலின் பதில்: "புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை. அவை இறை அல்ல. உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது."

கருத்தை விளக்க கதை கூறும்போது கதையை பிடித்து தொங்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விப்ர புராணம் சொல்லும் இது மாதிரியான உதாரணங்கள் மூலம் வலியுறுத்தப்படும் கருத்து என்ன என்பதை எழில் விளக்க முடியுமா? அதுவல்லாமல் என் கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கவில்லையே! என் கேள்வி 'கடவுள் யார்? அல்லது யாவர்? '. இதற்கு உதாரணங்கள் இல்லாத நேரடியான பதில் என்ன?

எனது இரண்டாவது கேள்வி, புதிதாக இந்து மதத்திற்கு வரும் ஒருவருக்கு ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?

இதற்கு பதில் சொன்ன எழில் நான் சொன்ன சில உதாரணங்களை மறுத்து, "துறவு என்னும் அறத்தை பின்பற்ற வேண்டியது குருவாக இருக்கும் அனைவருக்கும் தேவையில்லை" என்கிறார். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் கேள்வி அதுவல்லவே! துறவறம் எல்லா குருக்களுக்கும் கட்டாயமில்லை. ஆனால் துறவறத்தை மேற்கொண்ட ஒரு குரு அதை முழுதாக கடைப்பிடிக்க வேண்டுமா இல்லையா? இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி துறவு என்ற அறத்தை ஏற்ற, மற்றவர்களால் 'நடமாடும் கடவுள்' என்ற ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்ட ஒருவர், ஒழுக்கம் பிறழ்ந்து கொலை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார் என்றால், அது அந்த தனி நபரின் குற்றம் மட்டுமா? அல்லது அவர் பின்பற்றிய சாஸ்திர சம்பிரதாயங்களில் உள்ள குறைபாடா? அல்லது ஒரு சாதாரண மனிதரை அந்த அளவுக்கு உயர்த்தி போற்றிய அவரது தொண்டர்களின் தவறா?

மேலும் எழில் சொல்கிறார், "துறவு ஒரு முயற்சி. ஞானம் என்பது விளைவு. விளைவை நோக்கி பல முயற்சிகள் இருக்கலாம்.... பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்.ஒருவர் குருவிடமிருந்துதான் ஞானம் பெறவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை.... அறியக்கூடிய மனம் இருந்தால், ஞானம் சித்திக்கும். ஞானம் அற்றவர்கள் நீங்கள் கூறுவது போன்ற வெளிவேடக்காரர்களாக இருக்கலாம். அவர்கள் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டது போலவே மக்களால் உதாசீனம் செய்யப்பட்டு விடுவார்கள்".

ஞானத்தை அடைய பல்வேறு பாதைகள் இருக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக 'ஞானம்' என்றால் என்ன என்பதை தீர்மானிக்க முடியுமா? சென்றடைய வேண்டிய இடம் எது என்பதை தெரிந்து கொண்டால்தானே, நாம் போக வேண்டிய பாதையை தேர்ந்தெடுக்க முடியும்? ஆனால் ஞானம் என்பது அப்படி தீர்மானிக்கப் படும் ஒன்றல்ல. வேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஒருவர் அடைய விரும்பும் ஞானமும் சாமான்யர் ஒருவர் அடைய விரும்பும் ஞானமும் வேறு வேறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அது போல தன் முழு வாழ்க்கையையும் ஆன்மீக வழியில் செலவிடும் ஒருவரின் ஞானமும் குடும்பப் பொறுப்புள்ள ஒருவரின் ஞானமும் வேறு வேறாக இருக்கும்.

பாதைகள் வேறு வேறாக இருக்கலாம். சென்றடைய வேண்டிய இலக்கே வேறு வேறாக இருந்தால்..?

குருவானவர் சரியான வழிதான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு எழில் சொல்கிறார், "எது தர்மத்தை போற்றுகிறதோ, எது தர்மம் தழைத்தோங்க வைக்கிறதோ அது நல்வழி. தர்மம் என்பது எது மக்களை இணக்கத்துடன் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது இந்த மனித குலமும் ஜீவராசிகளும் புல்பூண்டுகளையும் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது மக்களுக்கு இடையே சண்டையையும் பூசலையும் தோற்றுவிக்கிறதோ அது அதர்மம். ஒரே ஒரு குருவின் வார்த்தைகளை இறையின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளும்போது இது பிரச்னை. அந்த குரு சொன்ன வார்த்தைகளைப் பிடித்து தொங்கும்போது அவை பூசலையும் பிரச்னையையும் உருவாக்குகின்றன. "

நல்வழி, தர்மம், அதர்மம் என்பதற்கு சில விளக்கங்களை எழில் சொல்லியிருக்கிறார். ஆனால் எனது கேள்விக்கான பதில் இதில் இல்லை. நான் கேட்டதை ஒரு உதாரணத்துடன் மறுபடியும் சொல்கிறேன். நடமாடும் கடவுள் என்று ஒருவரை மக்கள் மதித்தார்கள். அவரிடம் அருளாசி பெற படித்தவர்களும் படிக்காதவர்களும் முட்டி மோதினார்கள். ஏனென்றால் அவர் மேல் அந்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர் தன் மத சம்பிரதாயங்களை பேணிக் காப்பவர் என்ற நம்பிக்கை. ஆன்மீகத்தில் நமக்கு இவர் சரியான வழி காட்டுவார் என்ற நம்பிக்கை. ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு ஏற்றவரல்ல என்பதை காலம் கடந்துதான் மக்கள் தெரிந்து கொண்டார்கள். அவரது உண்மையான முகம் வெளிப்படாமலேயே போயிருந்தால் என்னவாகியிருக்கும்? அவரை ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டவர்களின் கதி என்ன? அவர் போதனைகள் சரியானவையா தவறானவையா என்பதை எப்படி சரி காண முடியும்? இது போன்ற வெளிவேடக்காரர்களை மக்கள் எப்படி அடையாளம் காண்பது?

எனது மூன்றாவது கேள்வி, 'எந்த வேதங்களை பின்பற்றுவது?' வேதங்கள் என்று சொல்லப்படுபனவற்றில் பெண்களை கேவலப்படுத்துவது போல சில வசனங்கள் இருப்பதாக வலைப்பதிவுகளில் கூட சிலர் எழுதியிருந்தார்கள். அது தவிர வேதங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவர்கள் படிக்க தடை இருப்பதாகவும் பல இடங்களில் எழுதியிருக்கிறார்கள். விப்ர புராணம் போன்றவைகளில் கடவுளர்களை ஒழுக்கம் கெட்டவர்களாக சித்தரிக்கும் கதைகள் இருக்கின்றன. இது போன்ற காரணங்களாலேயே எதுவெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்க, பின்பற்றத்தக்க வேதங்கள் என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு எழில் சொன்ன பதில்: "பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் உள்ளது அல்ல. அதன் உட்பொருள் தெரியாமல் கூறினால், அது உங்களுக்கு கேவலமானதாகவே தோன்றும். இதற்கான விளக்கம் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. படிக்கவும். புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல. வேதங்களை படிக்க தடை ஏதும் இன்று இல்லை. என்றும் இல்லை. காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுவதாக சொல்லப்படும் பிரச்சாரம் பொய். அவை பிரிட்டிஷ் காலத்தில் இந்து மதத்தை கேவலப்படுத்த அவர்களது கைக்கூலிகளால் திணிக்கப்பட்டவை. கிறிஸ்துவ பிரச்சாரகர்களாலும் இஸ்லாமிய பிரச்சாரகர்களாலும் தொடர்ந்து உபயோகிக்கப்பட்டு இன்று உண்மை என்ற நிலையை அடைந்துவிட்டன. வேதம் படித்தால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென்றால், எப்படி மாட்டிடையன் கிருஷ்ணன் அவதாரமாக கருதப்பட்டான்? வால்மீகி என்ற வேடனால் எப்படி ராமாயணம் எழுதப்பட்டிருக்க முடியும்?முருகன் ஏன் குறத்தி வள்ளியை திருமணம் செய்துகொள்ளவேண்டும்?கம்பன் என்ற நெசவாளர் சமஸ்கிருதமும் வேதமும் வால்மீகி ராமாயணமும் படித்து கரைதேர்ந்து கம்பராமாயணம் எழுத முடிந்திருக்குமா?சிந்தித்து பாருங்கள். பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்குதடையின்றி படிக்கக்
கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை. "

- பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் இல்லை என்றால் வேதமல்லாத மற்றவைகளில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறாரா எழில்?

- வேதங்களைப் படிக்க தடை எதுவும் இல்லை என்று மூன்று இடங்களில் சொன்ன எழில், மூன்று முறையும் தடை 'இன்று' இல்லை என்று வலியுறுத்தியிருப்பதை கவனித்தால், 'அன்று' தடை இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

- வேதத்தை படிக்க யாருக்கும் தடையில்லை என்பதை விளக்குவதற்காக மாட்டிடையன் கிருஷ்ணன், குறத்தியை திருமணம் செய்த முருகன் என்று சிலவற்றை ஆதாரங்களாக எழில் காட்டியிருக்கிறார். இதுவெல்லாம் புராணக்கதைகள் இல்லையா? இவற்றிற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு? 'புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல' என்று எழிலே சொல்லியிருக்கிறாரே? அதுவுமல்லாமல் 'புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை.' என்று சொன்ன எழில் மாட்டிடையன், குறத்தி போன்ற கதாபாத்திரங்களை எப்படி ஆதாரமாக காட்ட முடியும்?

மறுபடியும் என் கேள்விக்கே வருகிறேன். எந்த வேதங்களை பின்பற்றுவது? வேதங்கள் அல்லாத மற்றதை (புராணங்கள், மனு சாஸ்திரம் போன்றவை) பின்பற்ற தேவை இல்லை என்று எழில் ஒப்புக் கொள்கிறாரா? அப்படியென்றால் அவற்றை என்ன செய்வது?

எனது நான்காவது கேள்வி இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்? என்பது. இதற்கு எழிலின் பதில் முழுக்க முழுக்க சமாளிப்புதான். "ஏன் இந்து மதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்க வேண்டும்?" என்று கேட்கிறார். எழிலுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜாதி என்பது இந்து மதத்திலிருந்து பிரிக்க முடியாத அடையாளம் என்பதுதான் உண்மை. ஏதாவது ஒரு நாளிதழைப் பிரித்து மேட்ரிமோனியல் பக்கத்தை அவர் பார்த்தாலே இது புரியும்

எழிலின் அடுத்த சமாளிப்பு, "இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது. மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. மனுதர்மம் அன்று ஜாதிக்கு ஒரு நீதி என்று எழுதியது போல இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதத்துக்கு ஒரு நீதி என்று எழுதி வைத்திருக்கிறது. அது எப்படி தவறோ அது போல இதுவும் தவறுதான்"

இந்துமதம் என்ற ஆன்மீகத்தில் கடவுளைத் தொழ எல்லோருக்கும் சம உரிமை இருப்பதுதானே முறையாகும்? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? உயர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தலித் மக்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகளை செய்யவிடாமல் தடுப்பது மனுதர்மம் உருவாக்கிய வர்ணபேதம்தானே?. மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வது மாற்று மதத்தினர் அல்ல. இந்துமதத்தினரேதான். அந்த மனுவையும் கடவுளாக்கி மனாலியில் கோயில் கட்டி கும்பிட்டு வருவதும் அதே இந்துமதத்தினர்தான். மனுதர்மமே தவறு என்றால், அது அறிமுகப்படுத்திய வர்ணாஸ்ரம முறையால் இந்து மதத்திற்கே இழுக்கு என்றால், பாபரி மசூதியை இடிப்பதற்கு பதிலாக இந்த மனு கோவிலை இடித்துத் தள்ளியிருக்க வேண்டாமா?

"இந்துமதத்துக்கு வருபவர்கள் எந்த ஜாதியில் சேரவேண்டும் என்று
கேட்டிருக்கிறீர்கள். ஏன் உங்கள் ஜாதிக்கு என்ன குறை? மரைக்காயர் என்பது ஒரு ஜாதிமாதிரி வைத்துக்கொண்டு சிவபாலன் மரைக்காயர் என்று பெருமையாக இருக்கலாமே?" என்கிறார் எழில். சிவபாலன் மரைக்காயருடன் சம்பந்தம் பேச அய்யர்களோ அல்லது அய்யங்கார்களோ தயாரா என்பதையும் கொஞ்சம் கேட்டுச் சொன்னால் நல்லது.

" இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை. சுதந்திரமே குறை, என்னை சிந்திக்கச்சொல்லாதே, கட்டளைகளை கொடு நான் மிஷின் போல நடக்கிறேன் என்று கூறுபவர்களுக்கு மட்டுமே இந்து மதத்தின் சுதந்திரம் ஒரு குறை." என்ற சொல்லும் எழில்தான் அபூமுகை, சுவனப்பிரியனுடன் நடந்த விவாதத்தில், ஒருவர் இறைத்தூதர்தான் என்பதற்கு கே.ஜி. பிள்ளைகளுக்கு புரியுற மாதிரி ஆதாரம் காட்டினால்தான் ஒப்புக் கொள்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.

"மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல. அதன் இறுதி பகுதியில் அதிலுள்ள சட்டங்களை கற்றறிந்தவர்கள் எப்படி மாற்றுவது என்ற வழிமுறையையும் கொடுத்திருக்கிறது." என்கிறார் எழில். மனுதர்மம் அறிமுகப்படுத்திய சமூகக் கொடுமைகளுள் முதன்மையானது பிறப்பினடிப்படையில் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் வர்ணாஸ்ரமம். இக்கொடுமையை நிவர்த்திக்க இதுவரை மனுதர்மத்தில் எத்தனை மாற்றங்கள் ஏற்படுத்த்ப் பட்டிருக்கின்றன என்பதையும் அந்த மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றனவா என்பதையும் எழில் அறியத்தந்தால் நல்லது.

kannabiran, RAVI SHANKAR (KRS) 12/12/2006 12:41:00 AM

கண்ணன் சார், ஜடாயு ஐயா

மிக ஆர்வமாக இதைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்! நல்ல உரையாடல், மனம் கோணாத வாதங்கள்! சிந்தனைக்கும் விருந்து!
மிக்க நன்றி!

உங்கள் இருவரின் வாதங்கள் (I would prefer to call it, orientational augmentation):-)
அதனால் ஏற்படும் தெளிவு, புரிதல் இதை மட்டுமே வைத்துக் கொண்டு பரத்துவ நிர்ணயம் செய்ய முடியாது என்பது தாங்களும் அறிந்ததே! :-))

இது தான் நம் தர்மத்தின் பலமும் கூட! தொடரட்டும் உங்கள் பணி (இது போன்றே; வேறு எப்படியும் வேண்டாம்!!)

நீங்கள் இருவரும் அறிந்த பாசுரம் தான்; இதை விவாத மேடையில் செண்டர் பீசாக வைக்கிறேன்!

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
உரைக்கின்ற வென் கோமள வொண் கொடிக்கே!!

kannabiran, RAVI SHANKAR (KRS) 12/12/2006 01:27:00 AM

நாராயணன், சிவன்
இந்த இரு சொற்களைச் சேர்த்துப் பேசும் போது மட்டும் சர்வ ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்ற சூழ்நிலை தென்னகத்தில் மட்டும் தானா? :-)

கண்ணன் சார், முழு ஒலிப்பத்தியும் கேட்டேன்; பரனூர் அண்ணாவின் குரலில், மிகத் தெளிவாக உரைக்கிறார் தேசிகனின் ரகசியத்தை.

//எந்த மந்திரம் உயர்வு என்று கணக்கெல்லாம் இப்படித் தான் எடுப்பீர்களோ? கொஞ்சமாவது உண்மையான ஆன்மீகத்தில் திளைத்தவன் இது போன்ற சிறுபிள்ளைத் தனங்களில் இறங்க மாட்டான் என்பது எனது தாழ்மையான கருத்து//

ஜடாயு ஐயா,
மத்த கஜங்களின் விளையாட்டுக்குள் அடியேன் ஆயர்ப்பாடியில் உள்ள ஒரு சிறு குழந்தை "இப்போது" நுழைய எண்ணமில்லை!

ஆனால் தாங்கள் குறிப்பிட்டது போல் உயர்வு தாழ்வு கணக்கு எடுக்க பரனூர் அண்ணா அப்படிக் குறிப்பிடவில்லை! அவர் குறிக்க வந்தது அந்தந்த மந்திரங்களுக்கே உண்டான விசேஷார்த்தங்களைத் தான்! பிரணாவாகாரம் சேர்ந்த மந்திரம் திரு எட்டெழுத்து; அந்த மந்திரத்தால் குறிக்கப்படுபவன் எம்பெருமான்! (நாராயணன் என்ற சொல்லை இங்கே அறிந்தே தவிர்க்கிறேன்! அடியேனை ஈச்வரன் மன்னிப்பாராக).

இதனால் இது, காயத்ரீ மந்திரத்தை விடப் பெரிது, சிறிது என்றெல்லாம் அண்ணா சொல்ல வரவில்லை! அந்த மந்திரத்தின் ஊடுபொருளை மட்டுமே சொல்கிறார்.

சாதி, மதம், மார்க்க பேதமின்றிக் கொண்டாடும் மந்திரம் அது! "நாராயண ஸ்மிருதி" என்று தான் ஆசாரியர்கள் பல பேர் கையொப்பம் இடுகின்றனர்! ஏன்?
பூசுவது நீறோ, மண்ணோ
பேசுவது எதுவாயினும் அனைவருக்கும் பொதுவான மந்திரம் அது!

நல்ல காலம்,
"நாராயணம், மாம் -ஏகம்- சரணம் வ்ரஜ" என்று சொல்லாமல்
வெறுமனே "மாம் -ஏகம்- சரணம் வ்ரஜ" என்று தனித்தனியா சொன்னது நல்லதாய்ப் போயிற்று!

ஏன் அஷ்டாக்ஷரத்துக்கு மட்டும் பிரணவம் சேர்ந்தது என்று யோக மார்க்கமாக நீங்கள் உரையாடினால் நாங்கள் எல்லாம் இன்புறுவோம்! அதை விடுத்து அந்த இடத்தில் நீங்கள் "சிறுபிள்ளைத்தனம்" என்ற சொல்லைக் கையாண்டு இருக்கக் கூடாது. இதை மலரினும் மென்மையாகக் கண்டிக்கிறேன்! :-)

அப்பைய தீட்சிதர் குறித்த கண்ணன் சார் சொற்றொடரிலோ இல்லை வேறு இடங்களிலோ இந்தச்
"சிறுபிள்ளைத்தனம்" என்ற சொல்லை நீங்கள் கையாண்டு இருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த ஆயர்ப்பாடிக் குழந்தை உங்களிடம் ஓடி வந்திருக்கும்! சான்சை மிஸ் பண்ணி விட்டீர்கள் :-)

நா.கண்ணன் 12/12/2006 04:05:00 PM

Friends:

Just returned from China. Let me go through your comments more carefully and share my views either here or as a separate blog. Thank you for your participation.

நா.கண்ணன் 12/12/2006 09:19:00 PM

அன்பின் எழிலாளன்:

உங்கள் இடுகையை இப்போதுதான் படிக்க முடிந்தது. முதலில் சிரமம் எடுத்துக் கொண்டு அதை இங்கு பதிப்பித்ததற்கு நன்றி. எவ்வளவு ஆழமான கேள்விகள்! எளிதில் மறுக்கமுடியாத, மழுப்பமுடியாத கேள்விகள்.

என்னைப் பொறுத்தவரை இந்திய ஆன்மீக வெளியில் பல போக்குகளை, மார்க்கங்களை, நெறிகளைக் காண்கிறேன். ஒட்டு மொத்தமாக ஒரு 'இந்து மதம்' என்பதை என்னால் காண இயலவில்லை. எனவேதான் இப்பரப்பில் இருந்து கொண்டு 'மதமெனும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும்!' என்று வள்ளலாரால் இறைவனிடம் கேட்க முடிந்தது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற ஞானிகளால் ஒட்டு மொத்தமாக ஒழுங்கமைப்பட்ட மத ஸ்பாதனத்தை, இந்திய ஞான மரபில் இருந்து கொண்டு, கேள்விக்குறியாக்க முடிந்தது. இது அதன் பலம். பலவீனங்களை மறுக்கவியலா வண்ணம் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். மனித நேயமுள்ள எவரால் மறுக்கவியலும்? ஊன்றிக் கவனித்தால் ஆழ்வார்களின் பக்தி இயக்கம் ஜாதிக்கு எதிரான இயக்கமே. சுட்டும் திசை விட்டு சுட்டிய விரலைப் போற்றும் மூடர்களுக்கான இயக்கமே. இத்தனை வருடமாக இந்தக் கட்டுடைப்புதான் நடந்து கொண்டு வருகிறது.

எனது 'பாசுரமடல்' சிடி வெளியீடு முஸ்லிம் நாடான துபாயில் முஸ்லிம் நண்பர்கள் ஒருங்கிணைக்க (இந்து நண்பர்களின் ஆதரவுடன்), முஸ்தபா எனும் முஸ்லிம் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. அவர் பேச்சில் குறிப்பிட்ட ஒரு சொல் இதற்கு விளக்கமாகவும் அமைந்தது. இம்மடல்கள் 'வை நவம்' என்று புதிய கருத்தைச் சொல்கின்றன என்றார்.

இது எப்படி சாத்தியமானது? மதம் என்பதையும் மீறி மொழி அங்கு நின்றது, மனிதாபிமானம் அங்கு நின்றது, மானுடத் தோழமை அங்கு நின்றது.

மீண்டும் உங்கள் பங்களிப்பிற்கு நன்றி.

[எனது தற்போதையத் தொடர் பொது இந்து மதம் பற்றியோ, மதப் பிரசாரமாகவோ ஆரம்பிக்கப்படவில்லை. என்னைப் பாதித்த ஆன்மீக உரையாடலை என் மொழியில் பகிர்ந்து கொள்ளவே வந்தது. எனவே 'வெட்டி, ஒட்டி, கருத்திற்குக் கருத்து' என்று என்னால் பதில் சொல்ல இயலவில்லை. அது என் நோக்கமுமல்ல)

நா.கண்ணன் 12/12/2006 09:29:00 PM

அன்பின் ஜடாயு:

உங்கள் இரண்டு (தமிழ்-ஆங்கிலம்) பதில்களையும் இப்போதுதான் முழுதாகப் படித்தேன். மிக அழகான பதில்கள். ரசித்தேன், உணர்ந்தேன். பயணத்தின் சுவை இலக்கைவிட வழியிலேயே இருக்கிறது என்பதைச் சுட்டுவது போலவே இந்தப் பின்னூட்டங்கள் அமைகின்றன. வாழ்வு சுவையானதுதான்.

நா.கண்ணன் 12/12/2006 09:34:00 PM

அன்பின் கண்ணபிரான்:

//இதை மலரினும் மென்மையாகக் கண்டிக்கிறேன்! :-)//

இராமானுஜரை 'இதத்தாய்' என்பார்கள். அது அன்று. இன்று மின்னுலகின் 'இதத்தாய்' நீங்கள்தான் என்று தோன்றுகிறது! சபாஷ்!

Anonymous 12/12/2006 10:34:00 PM

http://www.chennailibrary.com/kambar/kitkintha/naadavittapadalam.html
அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்கு பரகதி சென்று அடைவு அரிய பரிசே!
- கம்பன்

Anonymous 12/12/2006 10:35:00 PM

காலமும் நாள்கள் ஊழி படையாமுன் ஏக
உருவாகி மூவர் உருவில்
சாலவு மாகிமிக்க சமயங்களாறின்
உருவாகி நின்ற தழலோன்
ஞாலமுமேலை விண்ணோடு உலகேழுமுண்டு
குறளராய் ஓர் ஆலின் இலைமேல்
பாலனு மாயவற்கொர் பரமாய மூர்த்தி
அவனாம் நமக்கொர் சரணே.
(திருநாவுக்கரசர் தேவாரம் 4-14-3)

Anonymous 12/12/2006 10:37:00 PM

பாரதி இறுதிவரை நாராயணன் நாமத்தையே சொல்லி வந்ததாக KRS நேற்று எழுதியிருந்தார். பாரதியின் கூற்றிலேயே அதன் விளக்கத்தைப் பாருங்கள்:

நாரண னென்று பழவேதம் - சொல்லும்
நாயகன் சக்தி திருப் பாதம்
சேரத் தவம்புரிந்து பெறுவார் - இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்!
- சக்தி விளக்கம் - பாரதி

Anonymous 12/12/2006 10:42:00 PM

ஆலமரநீழல், ஆல் அமர் கண்டத்து தட்சிணாமூர்த்தி சின்முத்திரையினால் சுட்டும் அத்வைதமே அறம் என்று முதல் திருவந்தாதியிலேயே வருகிறதே:

நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி அறிவானாம்
ஆலமரநீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலமர் கண்டத்து அரன்.

கண்ணன், மேலும் இரண்டு ஆழ்வார் பாடல்கள் உங்களுக்காக:
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரைநூல் மறை உறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று.

பொன்திகழு மேனி புரிசடை அம்புண்ணியனும்
நின்றுலகம தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவன் அங்கத்து உளன்.

Anonymous 12/12/2006 10:48:00 PM

ருத'ம் சத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம் |

ஜடாயு,

இதையே சிவவாக்கியர் பாடுவதைப் பாருங்கள்:
'இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலம் மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காணவல்லரே'

நா.கண்ணன் 12/12/2006 10:54:00 PM

அநானி:

இன்றுதான் உங்கள் பின்னூட்டங்களைக் கண்டேன். 'கண்ணில் ஒற்றிக் கொள்ளும்' பாடல்களாக இருக்கின்றனவே! என்ன தவம் செய்தேன். இத்தகைய மேற்கோள்களே நான் எதிர்பார்த்து நின்றது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் நிறைய காணக் கிடைக்கிறது. தேவார திருவாசகத்தில் இருப்பது எனக்குத் தெரியாது. கற்றது கைமண் என்று தெளிவாக உணர்ந்தவன் நான். மிக்க நன்றி. நேற்று இரவு சில அறிகுறிகள் கண்டேன். இன்று விளக்கம் கண்டேன். நன்றி.

Anonymous 12/12/2006 10:55:00 PM

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே
- நம்மாழ்வார்

Anonymous 12/12/2006 11:13:00 PM

சுந்தர நீறணந் தும்மெழுகித்
தூயபொன்சிந்தி நிதிநிரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தார் கோன்அயன் தன்பெருமான்

ஆழியான் நாதன்

நல் வேலன்தாதை
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197
- திருவாசகம் - திருப்பொற் சுண்ணம்

Anonymous 12/12/2006 11:18:00 PM

ருத'ம் சத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம்

ஜடாயு,
இதையே தமிழில் சிவவாக்கியர் பாடுவதைப் பாருங்கள்:
'இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலம் மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காணவல்லரே!'

kannabiran, RAVI SHANKAR (KRS) 12/13/2006 06:31:00 AM

அனானி ஐயா அவர்களே

பதிகங்களும் பாசுரமும் அருமை! நீங்கள் "அவரோ" என்ற ஒரு guess எனக்குள்; அதனால் நீங்களே உங்கள் பேரைச் சொன்னால், பேர் சொல்லிப் பாராட்டலாமே! :-)

//குறளராய் ஓர் ஆலின் இலைமேல்
பாலனு மாயவற்கொர் பரமாய மூர்த்தி
அவனாம் நமக்கொர் சரணே//

//அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்கு பரகதி சென்று அடைவு அரிய பரிசே//

//அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி//

தாழ் சடையும் நீள் முடியும்
ஒண் மழுவும் சக்கரமும்
விட்டு விட்டீர்களே; அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

அருமையான எடுத்தாளல் அனானி ஐயா!

Anonymous 12/13/2006 12:04:00 PM

KRS,

உங்கள் விருப்பம்:

தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்,
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து.
- பேயாழ்வார்

ஜடாயு 12/13/2006 12:57:00 PM

// சாதி, மதம், மார்க்க பேதமின்றிக் கொண்டாடும் மந்திரம் அது! "நாராயண ஸ்மிருதி" என்று தான் ஆசாரியர்கள் பல பேர் கையொப்பம் இடுகின்றனர்! ஏன்?

பூசுவது நீறோ, மண்ணோ
பேசுவது எதுவாயினும் அனைவருக்கும் பொதுவான மந்திரம் அது!
//

கண்ணபிரான்,
இதன் காரணம் ஆதி சங்கரரின் தசநாமி மரபில் வந்த ஆசாரியர்கள் மரபு தான்!! சங்கர மடங்கள், ராமகிருஷண மடம், சின்மயா மிஷன், மாதா அமிர்தானந்தமயி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் என்று அத்வைத தத்துவத்தைப் பின்பற்றும் எல்லா school களும் இதில் அடங்குவர். (இந்த தச நாமி என்பதில் உள்ளவை புரி, ஆனந்தர், பாதர், கிரி, சரஸ்வதி, தீர்த்தர் எல்லாம்)

இந்த அற்புதமான சமய ஒருமை மரபு சங்கரரே உருவாக்கியது -

"அந்த: சாக்தோ பஹி: சைவ: வாசன் நாராயணஸ்ம்ருதி:"

உள்ளுக்குள் சாக்தன் (குண்டலினி யோகம், தியானம் முதலியவை), வெளி உருவில் சைவன் (விபூதி, ருத்திராட்சம்), வாக்கில் நாராயண நாமத்தை நினைப்பவன், சொல்பவன் - இது தான் சங்கரரைப் பின்பற்றும் அத்வைதியின் சமய ஒழுக்கம்.

ஸ்ரீராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் பாரதியும் பின்பற்றியது இந்த சமய நடைமுறைதான். இந்து மதம் என்ற சமயக் கருதுகோளின் ஆதார சுருதியும் இது தான்.

// ஏன் அஷ்டாக்ஷரத்துக்கு மட்டும் பிரணவம் சேர்ந்தது என்று யோக மார்க்கமாக நீங்கள் உரையாடினால் நாங்கள் எல்லாம் இன்புறுவோம்! அதை விடுத்து அந்த இடத்தில் நீங்கள் "சிறுபிள்ளைத்தனம்" என்ற சொல்லைக் கையாண்டு இருக்கக் கூடாது. இதை மலரினும் மென்மையாகக் கண்டிக்கிறேன்! :-) //

பிரணவம் எல்லா மந்திரங்களின் அடிநாதம். அதைச் சேர்த்து அஷ்டாட்சரம் என்று நாராயண நாமத்தைச் சொன்னது ஒரு வழக்கு என்ற அளவில் தான் அதைப் பார்க்கிறேன். I'm not reading too much into it.

இதே போல் கர்நாடகத்தில், வடநாட்டில் பல சம்பிரதாயங்களில் சிவ மந்திரத்தை ஓம் உடன் சேர்த்துக் கணக்கிட்டு "ஷடாட்சரீ" என்று தான் அழைக்கிறார்கள். shadakshari என்று surname கூட கர்நாடகத்தில் ரொம்ப பிரபலம்! தமிழகத்தில் ஷடாட்சரம் என்றால் "சரவணபவ" தான், அதனால் சிவநாமத்தை பஞ்சாட்சரம் என்றூ மட்டுமே அழைக்கிறோம். So, it is just a matter of context.

முடிபாக, சமய ஒருமை காட்டும் இந்த விஷயத்தை மேன்மை (supremacy) வாதமாகப் பார்ப்பது சிறுபிள்ளைத் தனம் என்ற என் பழைய வாதத்தை "மலரினும் மெல்லிய" தொனியில், தாழ்மையுடன் மறுபடி முன்வைக்கிறேன் :))

காலமும் கணக்கும் நீத்த காரணன்
- கம்பன்

// அப்பைய தீட்சிதர் குறித்த கண்ணன் சார் சொற்றொடரிலோ இல்லை வேறு இடங்களிலோ இந்தச்
"சிறுபிள்ளைத்தனம்" என்ற சொல்லை நீங்கள் கையாண்டு இருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த ஆயர்ப்பாடிக் குழந்தை உங்களிடம் ஓடி வந்திருக்கும்! சான்சை மிஸ் பண்ணி விட்டீர்கள் :-) //

ஆம், அதுவும் சிறுபிள்ளைத் தனம் தான்! இப்போது அந்த சான்ஸ் உண்டா ?:)))

நாராயண ! நாராயண !

ஜடாயு 12/13/2006 01:10:00 PM

// அவர் பேச்சில் குறிப்பிட்ட ஒரு சொல் இதற்கு விளக்கமாகவும் அமைந்தது. இம்மடல்கள் 'வை நவம்' என்று புதிய கருத்தைச் சொல்கின்றன என்றார். //

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

என்ற திருவாசக வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன !

// இது எப்படி சாத்தியமானது? மதம் என்பதையும் மீறி மொழி அங்கு நின்றது, மனிதாபிமானம் அங்கு நின்றது, மானுடத் தோழமை அங்கு நின்றது. //

ஆம். இது தான் தேவை. இதைத் தான் நேசகுமார் முதல் நீலகண்டன் வரை எல்லாரும் சொல்லிவருகிறார்கள். பிரசினை முஸ்லீம் சகோதரர்களிடத்தில் அல்ல. இஸ்லாம் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும் மதக் கருத்தியலில் தான் உள்ளது.

// [எனது தற்போதையத் தொடர் பொது இந்து மதம் பற்றியோ, மதப் பிரசாரமாகவோ ஆரம்பிக்கப்படவில்லை. என்னைப் பாதித்த ஆன்மீக உரையாடலை என் மொழியில் பகிர்ந்து கொள்ளவே வந்தது. //

ஆனால் நீங்கள் வைணவத்தைப் பற்றி எழுதினாலும் "பொது" இந்து மதத் தத்துவங்கள் தானாகவே அங்கே வந்து விழுந்து விட்டன!! இந்து மதத்தின் அழகே அது தானே கண்ணன் ! எல்லா நதிகளும் சமுத்திரத்தில் தான் போய்ச் சேர வேண்டும் !

ஜடாயு 12/13/2006 01:15:00 PM

அருமையான திருமுறை, பிரபந்தப் பாடல்களை இங்கே அளித்த அனானிக்கு வந்தனங்கள், நன்றி!

"அமானி" என்ற திருப்பெயரையும் தன் 1000 நாமங்களுக்குள் கொண்ட மகாவிஷ்ணுவே இப்படி "அனானி" என்பதாக வந்து ஞானோபதேசம் செய்கிறாரோ ? :))))

ஜடாயு 12/13/2006 01:36:00 PM

// பயணத்தின் சுவை இலக்கைவிட வழியிலேயே இருக்கிறது என்பதைச் சுட்டுவது போலவே இந்தப் பின்னூட்டங்கள் அமைகின்றன. வாழ்வு சுவையானதுதான். //

மிகவும் நன்றி கண்ணன்.

ஆம், வாழ்வு சுவையானது தான். அற்புதமாக இத்தகைய விஷயங்களைப் பேசிப் பகிர்ந்து கொள்வதற்கு பதிவுலகில் நல்ல அரங்கம் அமைத்துத் தந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

நா.கண்ணன் 12/13/2006 02:24:00 PM

//ஆம், அதுவும் சிறுபிள்ளைத் தனம் தான்! இப்போது அந்த சான்ஸ் உண்டா ?:))) //

சிறுபிள்ளைத்தனம் என்பது மீண்டும் நம் பார்வையைப் பொறுத்த விஷயம். புரிதல் இல்லாமல் எழுதினால் அது சிறுபிள்ளைத்தனம், ஆனால் புரிதலுடன் எழுதினால்?

அத்வைத நோக்கில் சிறுபிள்ளைத்தனமாகப் படும் ஒரு விஷயம் சைவ நோக்கில் மிகவும் சீரியசான விஷயமாகப் படலாம்!

உதாரணமாக, சைவர்களுக்கு திருமாலைப் பற்றிய புரிதல் இல்லை என்று சொல்லிவிட முடியாது, அதே போல் வைணவர்களுக்கு சிவனைப் பற்றித் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. அனானி எடுத்துக் கொடுத்த பாடல்களே அதற்கு நல்ல சான்று.

சைவர்கள் திருமாலை சிவனுள் வைத்துப் பார்க்கவே விரும்புகின்றனர். அதே போல் வைணவர்கள் சகலத்தையும் நாராயண சொரூபமாகவே பார்க்க விரும்புகின்றனர்.

108 திருப்பதிகளைப் பாடிய திருமங்கை ஆழ்வாருக்கு ஏன் சிவ-சிதம்பரம் பற்றி ஒரு பத்துப் பாடல் பாடத் தோன்றவில்லை? (அங்கு கோவிந்தராஜன் கொலுவிருந்தாலும்?). ஏன் ஊர் ஊராகப் போய், சிறு கிராமத்தையெல்லாம் பாடிய அப்பருக்கு தமிழகத்தின் பெரிய கோவிலான திருவரங்கத்தை பற்றி ஒரு திருப்பதிகமேனும் பாடத்தோன்றவில்லை? புரிதல் இல்லாததாலா?

இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவரை தமிழ் மணத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

பக்தி, பிரபத்தி பற்றி எழுதும் போது இதற்கு மீண்டும் வருகிறேன்.

Anonymous 12/13/2006 03:07:00 PM

கண்ணன்,

வைணவம் இடதுசாரி, அது வலப்பக்கத்தைக் கண்டு கொள்ளாது, சிலரைத்தவிர.

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்

பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்
துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்
தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி,
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
- திருமங்கையாழ்வார்

சைவம் வலதுசாரி, அது இடப்பக்கத்தைக் கண்டு கொள்ளாது, சிலரைத் தவிர.

படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி யேழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்

குடமாடி யிடமாகக் கொண்டான்

கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
-திருநாவுக்கரசர் (திருக்கோடிக்கா - திருத்தாண்டகம்)

அதனால்தான் இடம் வலம் என்று பார்க்காமல் வேதம் நேராய்ப் பார்க்கச் சொல்கிறது. சித்தர்களும். மேலே சிவவாக்கியர் பாடலைப் பாருங்கள். பரப்பிரம்மம் என்பது ஹரிஹர ஐக்கியம். அங்கே பேதமில்லை. இருந்தால் கம்பர் சொல்வது போல் அவர் அறிவிலாரே. அவருக்குப் பரகதி கிடையாது. தமிழ்மணத்தில் வாதம் செய்திருக்கலாம்.

Anonymous 12/13/2006 03:33:00 PM

108 திருப்பதிகளைப் பாடிய திருமங்கை ஆழ்வாருக்கு ஏன் சிவ-சிதம்பரம் பற்றி ஒரு பத்துப் பாடல் பாடத் தோன்றவில்லை?

சிவனைப் பற்றி மட்டுமல்ல, சிவனடியாரான ஒரு பிரபல நாயன்மாரைப் போற்றியே திருமங்கையாழ்வார் பாடி இருக்கிறாரே.

Anonymous 12/13/2006 03:48:00 PM

அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும்
அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு,
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி
அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம்
அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்
வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல்
தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற
படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
-திருமங்கையாழ்வார்

நாயன்மாரில் ஒருவரான இந்த கோச்செங்கட்சோழன் சைவனா, வைணவனா?

சைவர் என்றால் அவர் மேல் ஏன் பத்துப்பாடல்களை திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்? வைணவர் என்றால் நாயன்மாரில் ஒருவரானது எப்படி?

நா.கண்ணன் 12/13/2006 05:05:00 PM

//வைணவம் இடதுசாரி, அது வலப்பக்கத்தைக் கண்டு கொள்ளாது, சிலரைத்தவிர//

ஹா!..ஹா!! வைணவம் இடது சாரியேதான். என் பாசுரமடல்களைப் படித்தால் புரியும் :-)

ஆக! இப்போ இரண்டு அத்வைதிகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டுள்ளேன் என்று தெரிகிறது :-)

அனானி சார், ரொம்ப கலக்குறீங்க:-) மெதுவாத்தான் வருவேன். ஒவ்வொன்றாய் உள்வாங்கிக் கொண்டு. சரி தானே!

நான் பேதம் பேச வரவில்லை. இவர்கள் பார்வையில் ஒரு அழகு இருக்கிறது. அதன் பின்னால் அழகியலும் இருக்கிறது. முக்கிய காரணமும் இருக்கிறது. என் பதிவில் விளக்க முயல்கிறேன். நான்கு துறைகளை இதுவரை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இத்துறைகளின் தன்மை பற்றிப் பேசுவோம், ஒவ்வொன்றாய்.

நா.கண்ணன் 12/13/2006 05:17:00 PM

ஜடாயு:

//ஆனால் நீங்கள் வைணவத்தைப் பற்றி எழுதினாலும் "பொது" இந்து மதத் தத்துவங்கள் தானாகவே அங்கே வந்து விழுந்து விட்டன!! இந்து மதத்தின் அழகே அது தானே கண்ணன் ! எல்லா நதிகளும் சமுத்திரத்தில் தான் போய்ச் சேர வேண்டும் ! //

உங்கள் பார்வை மிக அழகானது. இதமாகவும் இருக்கிறது. அதை என்னால் எப்படி எதிர்க்க முடியும்? அப்படியான சூழலில் வளர்ந்தவன்தான் நான்.

அறிவியல் பார்வையில் துறை சார்ந்த புரிதல் முக்கியம். ஏன் துறைகள் உருவாகின என அறியும் போது சுவாரசியமாகவே இருக்கிறது. துறைகள் நம் மனதை ஒருமுகப்படுத்த வந்தவை. நம்மாழ்வார் சொல்வதுபோல் 'எங்கும் அவன் மூர்த்தியே உள்ளது!' எனினும் முதல் நோக்கில் பிரிவினை பேசுவது போலவே படும். அவசரமில்லாமல் வாசித்து வாருங்கள் என் நிலைப்பாடு எங்குள்ளது என்பது புரியும் :-)

நம் இந்து தர்மத்தைப் புரிந்து கொள்ளவே ஒரு ஜென்மம் போதாது என்று தெரிகிறது, எனவே இப்போதைக்கு என்னால் பிற சமயங்கள் பற்றிப் பேசி அலச நேரமில்லை.

Anonymous 12/16/2006 11:11:00 PM

கண்ணன்,
உங்கள் பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அதே அநாநிநாதன்

நா.கண்ணன் 12/17/2006 02:37:00 PM

அன்புள்ள அநாமிகா:

Blogr Beta-விற்கு மாறிய பின் syndication-ல் பிரச்சனையுள்ளது. எனவே பதிவு செய்யும் ஆர்வம் குறைந்துள்ளது. எனினும், என் சில எண்ணங்களை முன் வைத்துள்ளேன். வழக்கம் போல் வெட்டி, ஒட்டாமல் பொதுவாக பதில் அளித்துள்ளேன். இது நிச்சயம் நிறையக் கேள்விகளை உருவாக்கும். Syndication -இல்லாமல் எப்படிப் பகிர்ந்து கொள்ளப்போகிறோம் என்பதும் ஒரு கேள்வியே :-)