பின்னூட்டம், முன்னூட்டம், என்னூட்டம்!

சமீபத்தில் சீனா சென்று வந்தது நல்ல மாற்றம். கொரியாவிலிருந்து மஞ்சற்கடலைத் தாண்டினால் சீனா. இரண்டு மணிப் பிரயாணம் மட்டுமே. இன்று காலை கிளம்பும் முன் என் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பற்றி சிந்தித்தவாறே, கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 12வது மாடியிலிருந்து. மஞ்சு போர்த்திய வானிலிருந்து வெளிப்பட்ட கிரணங்கள் மஞ்சற்கடலை மஞ்சளாகவே காட்டியது! (மஞ்சள் நதி கொண்டுவரும் மஞ்சள் வண்டல் மண் இந்நிறத்தை முகத்துவாரத்தில் தருவதால் இப்பெயர் இக்கடலுக்கு வந்தது). நீரில் பட்டு மிளிர்ந்த பொன்னிறம் கண்ணுக்கு எட்டும் வரை தெறிந்தது. சுமாராக 30-40 கிலோமீட்டர்வரை இருக்கலாம். யோசித்துப் பார்த்தேன். மாடி அரையிலிருந்து பார்க்கும் போது முப்பது கிலோ மீட்டரில் ஒளிபரப்பு முடிந்துவிடுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் கடலில் பயணப்பட்டால், இந்த ஒளிப்பரவல் முப்பது கிலோமீட்டரில் நின்று விடப்போவதில்லை. அது பயணப்பட, பயணப்பட முன்னால் போய்க் கொண்டே இருக்கும். அது போல்தான் இந்தப் பின்னூட்டங்களும். வெட்டி, ஒட்டி, பதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம்! வாழ்வு முடியும் வரை!!

காரணம்? சூரியன் கடற்பரப்பை விட்டு எங்கோ விலகி நிற்கிறான். பூமியோ கோளமாக உள்ளது! இப்படித்தான், ஆன்மீகமும் என்று விளங்கியது. பேசப்படும் பொருள் விலகி தனித்து நிற்கிறது. ஆனால் அதன் ஒளி பூரணமாக எங்கும் தெரிகிறது. நமக்குத் தெரிகின்ற பரப்பை வைத்துக் கொண்டு அளக்க முயற்சிக்கிறோம். அளக்க, அளக்க வியாபித்துக் கொண்டே போகிறது. இதை நான் விஸ்வரூப தரிசணம் மூலம் விளங்கிக் கொள்ள முயல்கிறேன். வேரொருவர் அடி.முடி தேடி அலுத்த கதையின் மூலம் விளங்கிக் கொள்ள முயல்கிறார். அதுதான் வித்தியாசம் ;-)

இந்தத் தொடரின் பின்புலத்தில் ஒரு அரிய கதை இருக்கிறது. மகாமந்திரம் என்றும், திருமந்திரம் என்றும் வைணவர்கள் கருதும், 'ஓம் நமோ நாராயணாய:' எனும் மந்திரப் பொருளை அரிய இராமானுஜர் 18 முறை முயன்றிருக்கிறார். ஏன் இவரின் ஆசிரியர் இப்படி இவருக்கு 'தண்ணி காட்டியிருக்கிறார்?'. சொல்லக் கூடாது என்ற அர்த்தத்தில் இல்லை. ஆனால், அறியும் பக்குவம் இவனுக்கு இருக்கிறதா? அறிந்து கொள்ளும் ஆர்வம் இவனுக்கு இருக்கிறதா? அறிந்து கொள்ளும்வரை ஊன், உறக்கமின்றி இருக்கமுடிகிறதா? என்று கவனித்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அர்த்தத்துடன் சொல்லப்படும் ஒரு சொல் 'மந்திரமாகி'ப் போகிறது!

ஓம்! என்பது பிரணவம். தொடக்கம், முடிவு இரண்டும் சேருமிடம்.

ந + மம என்பது நமோ என்றாகிறது. அதாவது, 'நான் இல்லை' என்று பொருள். சரி, நான் இல்லை என்று ஆகிவிட்டால், பின் எது நிற்கிறது?

நாராயணாய! எது இப்படைப்பிற்கு காரண வஸ்துவோ, எது காரண, காரியமாக இப்பிரபஞ்சத்தை இயக்குகிறதோ அது மட்டுமே நிற்கிறது.

சட்டென ஸ்தாபனப்பட்ட மதங்களுக்கு சிம்ம சொப்பனமான ஜேகேயின் போதனை உடனே நினைவிற்கு வந்தது. ஜேகேயிடம் ஒருவர் கேட்டார். உங்கள் வாழ்நாள் பூரா போதித்த ஞானத்தின் சாரம் என்ன? என்று. கிருஷ்ணமூர்த்தி சொன்னார், "If you are the other is not" என்று. அதாவது, "நீ இருக்கும்வரை மற்றது இல்லை". இது உண்மையில் நாரண மந்திரம்தான் என்பது அப்போது புரியவில்லை! இப்போது புரிகிறது!

மந்திரம் எப்போது வேலை செய்யத் தொடங்கும்?

அதன் பொருள் உணர்வில் கலக்க வேண்டும். அச்சொல் நெஞ்சில் நீங்காமல் நிற்கவேண்டும். கனவில் வரும் போதும் அச்சொல் உணர்வைத் தூண்ட வேண்டும். அப்படி நிகழ்வதை நீங்கள் உணர்ந்துவிட்டால், அதுவே உங்கள் ஆத்ம மந்திரம். ஆத்மாவின் அலை வரிசையும், பரம்பொருளின் அலைவரிசையும் சேர்ந்து தொணிக்கிறது என்று பொருள்! அதுதான், அப்போதுதான் அம்மந்திரம் 'உணர்வெனும் பெரும் பதமாகிறது!' உணர்வில் லயிக்கும் பெரும் பதம் மந்திரம். உணர்வைத் தூண்டும் பெரும் பதம் மந்திரம். உணர்வாய் நிற்கும் பெரும் பதம் அம்மந்திரம். உணர்வு சுட்டும் பெரும் பதமும் மந்திரம். தீயில் படும் பொன் மாசு நீங்கி ஜொலிப்பது போல் இம்மந்திரத்தால் நம் ஆத்மா ஜொலிப்பதை நாம் உணர்வு பூர்வமாக உணரமுடியும்.

உங்கள் பெரும் பதம் என்னவென்று நீங்கள் சோதித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம். நிச்சயம் உங்களுக்கென்று ஒரு மந்திரம் இருக்கும். அதை அடையும்வரை உங்கள் ஆன்மா அலைந்து கொண்டே இருக்கும். இப்பிறவில் அப்பதம் கிடைக்கலாம். இன்னும் நூறு கோடி ஜென்மங்கள் கழித்து கிடைக்கலாம். அதுவரை ஜீவன் சம்சாரத்தில் உழன்று கொண்டே இருக்கும்.

எப்போது உங்கள் உள்ளம் இப்பதத்தால் மட்டிலா உவகை கொள்கிறதோ? என்று உங்கள் உள்ளம் இப்பதம் கேட்டவுடன் 'அந்தமில் பேரின்பம்' கொள்கிறதோ அப்போது புரியும் நீங்கள் அதைக் கண்டுவிட்டீர்கள் என்று!

ஓடினேன்! ஓடி உய்வதோர் பொருளால்!
உணர்வெனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன்! நாடி, நான் கண்டு கொண்டேன்
நாராயணா! என்னும் நாமம் (பெரிய திருமொழி)

2 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) 12/13/2006 03:50:00 AM

மிக நன்றாகத் தன் எண்ணத்தொடரை வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள் ஐயா. நீங்கள் சொல்வது உண்மை தான். பின்னூட்டங்கள் பல நேரங்களில் அப்படி தான் போய்விடுகின்றன.

உணர்வெனும் பெரும் பதம் என்ற சொல்லுக்கு பொருள் தெரிந்து கொண்டேன் தங்கள் தயவால். மிக்க நன்றி.

நா.கண்ணன் 12/13/2006 08:17:00 AM

குமரன்:

அஷ்டாக்ஷரம் உங்களுள் வேலை செய்வது எனக்குத் தெரியும். இனிப்பைத் தின்றால் திகட்டும். ஆனால், சொல்லச் சொல்ல இனிப்பது மந்திரம்! ரகஸ்ய த்ரய சாரம் இன்னும் தொடரும்.