மாறும் வண்ணங்கள்!

இந்திய மெய்ஞான வெளியில் அதிக சுதந்திரமுண்டு. எழுச்சியுறும் எந்தப் புதிய தத்துவமும், நிலைபெற்றிருக்கும் தத்துவத்தை ஞானத்தாலும், வாதத்தாலும் வெல்ல வேண்டும். அப்படி ஞானத்தில் வென்று விட்டால் வருகின்ற தத்துவங்களுக்கு இந்திய மெய்ஞானப் பரப்பில் இடமுண்டு. இங்கு கத்தி, கப்படா என்பதை விட ஞானமே பிரதானமாக இருக்கிறது. அதுதான் அதன் சிறப்பு. மெய்ஞானத்தைத் தேடும் எவறும் வீடு பேற்றை நோக்கி நடைபயில்கின்றனர் என்றே இந்தியா கண்டிருக்கிறது. காலத்திற்குக் காலம், தேவைகளுக்கு எற்ப புதிய எழுச்சி என்பது தேவையாகவும் இருக்கிறது. இதை உணர்ந்துதான் கீதையில் கண்ணன் சம்பவாகி யுகே, யுகே! என்று யுகங்கள் தோறும் நான் தோன்றுவேன் என்கிறான். இடைப்பட்ட காலத்தில் ஸ்தாபிதப்பட்ட நெறிகள் (மதங்கள் எனச் சொல்லவில்லை, கவனிக்கவும்) மக்களின் சுதந்திர வெளியில் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன. அதாவது இந்திய நெறிகளை ஒழுங்கு படுத்தி ஒரு பிரதான மடம் (சர்ச்) என்று நிறுவிவிட்டால் தனிப்பட்ட மனிதனின் இறைத்தேடல் என்பது தடை பட்டுப் போகிறது. ஞான ஒளி குன்றிப் போகிறது. எனவே இடைப்பட்ட காலத்தில் ஆச்சார்யர்களும், சாதுக்களும் நெறி விளக்கம் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர், இவர்கள் மடத்தின் உத்தரவு பெற்றுத்தான் செயல்பட வேண்டுமென்றில்லை. இந்த சுதந்திரம்தான் இன்று நூற்றுக்கணக்கான தமிழர்களை மின்வெளியில் ஆன்மீகம் பேச வைக்கிறது. இதுவொரு சுதந்திர இறைத்தேடல். இது இந்தியா உலகிற்கு வழங்கும் பொக்கிஷம்.

நாரண பரத்துவம் என்பது இந்தியாவில் வலிந்து கட்டிய ஒன்றல்ல. வேத, உபநிஷத்துக்களின் தேடல் நீட்சியாக இந்த concept இந்தியர்களுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் பின் தோன்றிய 18 புராணங்களில் முக்கால் வாசம் நாராண பரத்துவத்தை விளக்க எழுந்தவையே. இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் நாரண பரத்துவத்தைச் சொல்ல வந்தவையே. இக்காலக் கட்டத்தில் இந்தியாவை விட்டு கிழக்கே போன இந்திய மெய்ஞானத் தாக்கம் அங்கும் இயல்பாக வைணவத்தை நிருவுகிறது (அங்கோர்வாட்).


அங்கோர்வாட் ஆலயத்திலுள்ள விஷ்ணு
Photo by N.Kannan


இப்படி வேர் ஊன்றிய ஒரு ஞான மார்க்கத்தை மகாவீரரும், புத்தரும் அசைத்துப் பார்க்கின்றனர். காலப்போக்கில் வென்றும் விடுகின்றனர். ஆனால் தவத்தை, தனி மனிதத்தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பௌத்தம், கடவுள் வழிபாடுகள், உற்சவங்கள், கோயில்கள் இவை இல்லாததனால் நிலைபெறத் தடுமாறியது. அதுபோது பௌத்த புராணங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இறைமையை மறுத்த சித்தார்த்தனை இந்தியா உள்வாங்கிக் கொள்ள விஷ்ணு தேவைப்பட்டார். பரம்பொருளான விஷ்ணு மீண்டும் மண்ணுலகில் அவரித்துள்ளார் என்று சொல்லத் தலைப்பிட்டனர். இந்தியாவின் கரை தாண்டிய பௌத்தம் ஸ்ரீலங்காவிற்குப் போகிறது. சூனிய வாதத்திற்கு புகழ்பெற்ற திரவாத பௌத்தம் அங்கு நிலைபெற விஷ்ணு கதைகளைப் பயன்படுத்தின. லோகநாதன் என்றும், புவன சுந்தரன் என்றும், பூமித்தாயின் காந்தன் என்றும் புகழ்பெற்ற விஷ்ணு அங்கு 'லோகேஷ்வர்' ஆகிறார். விஷ்ணுவின் அவதாரமாக புத்தர் தோன்றுகிறார்.


புத்த பிறப்பு பற்றிய ஜாதகக் கதைகள். இப்படம் வியட்நாம் தலைநகரான ஹனோய் புத்த ஆலயத்தில் எடுத்தது.
Photo by N.Kannan


கிருஷ்ணன் விஸ்வரூபம் காட்டினால், நேபாளத்தில் புத்தர் விஸ்வரூப தரிசனம் தருகிறார். அரங்கனாதன் பள்ளி கொள்கிறான் என்றால், கிழக்கே போன புத்த வடிவுகளில் சயன புத்தர் மிகப்பிரபலம். இதை பர்மா, தாய்லாந்து, வியட்நாம் வரை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. பௌத்த ஜாதகக் கதைகள் அங்கு போகும் போது இந்திய தெய்வங்களும் கூடவே போகின்றன. தாய்லாந்தில் டாக்சி ஓட்டி கூட ஒரு நான்முகன் சிலையை வைத்திருப்பான்.
அங்கோர்வாட் கோயிலொன்று நான்முக வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.


அங்கோர்வாட் நான்முகன் கோயில்
Photo by N.Kannan


இந்திரன், ஐராவதம் (வெள்ளை யானை) அங்கும் போய்விடுகிறது. கொரியாவில் பல புத்த வடிவங்களிலொன்று ஹயக்கீரிவர்!!

எனவேதான் இந்திய உபகண்டத்திலும் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகக் காணும் வழக்கம் வந்திருக்கிறது.


வியட்நாம் புத்தர் கோயில் படங்கள்
Photo by N.Kannan


இப்பழக்கம் ஒரிசாவில் தோன்றியிருக்கலாம். அங்கு வேர் ஊன்றிய கிருஷ்ணபக்தி நெறியில் 'கிருஷ்ணனே' பரம்பொருள் எனவும், புத்தன் ஒரு அவதாரம் எனவும், 'தச அவதாரங்கள்' காட்டப்படுகின்றன.

ஒரு பெருநெறியிலிருந்து மற்றொரு நெறிக்கு மாறும் போது அழிவுறும் நெறியின் நல்ல கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, தன் வயப்பட்ட பின்னரே அவை வழக்கொழிகின்றன. எனவே இந்து தர்மம் மலிவுற்ற போது பௌத்தம் இந்திய புராணங்களை உள்வாங்கிக் கொண்டது. பௌத்தம் என்பது இந்திய மெய்ஞானத் தேடலில் கிடைத்த நல்முத்து. எனவே பௌத்தம் பிற்காலத்தில் அழிவுற்ற போது அது கண்ட ஞானம் இந்து தர்மத்தில் உள்வாங்கப்பட்டது. உதாரணமாக சங்கர பகவத் பாதாளின் குருபரம்பரையில் ஒரு பௌத்தருண்டு. சங்கரரை பிரசன்ன புத்தர் என்று கேலியாகச் சொல்வதுமுண்டு. பௌத்தத்தின் 'சங்கம்' எனும் வழிமுறையே பின்னால் பாகவத பரம்பரைக்கு வித்திடுவதாக 'ஏ.கே.இராமானுஜன்' கருதுகிறார். தென்னிந்தியாவில் 'சைவ உணவு' என்றும், வடநாட்டில் 'வைஷ்ணவ உணவு' என்றும் கருதப்படும் மரக்கறி உணவு 'பௌத்த உணவு'தான். புலால் மறுத்தல், கொல்லாமை என்பவை சமண, பௌத்த மதங்களின் சீரிய கொள்கைகள். இன்றும் கொரிய, ஜப்பான் பௌத்த மடங்களில் வாழ்வோர் புலால், உள்ளி, வெங்காயம் போன்றவற்றை உண்பதில்லை. ஆனால் காலப்போக்கில், பௌத்தம் பரவிய எல்லா நாடுகளிலும் புலால் உண்ணும் பழக்கம் நிலைபெற்றது. உயிர்கொலை என்பது தினப்படி வாழ்வியலானது. ஆனால், இந்தியாவைவிட்டு போய் விட்டாலும், பௌத்த உணவு முறை இந்தியாவில் நிலைபெற்றுவிட்டது. இன்று இந்தியாவில் 70% மக்கள் புலாலற்ற உணவே உட்கொள்கின்றனர். இது உலக சூழலுக்கு எவ்வளவு நன்மை என்பது சொல்லாமல் புரியும். மேலைநாட்டில் இதன் அறிவியல் உண்மையறிந்து லட்சக்கணக்கான மக்கள் 'வெஜிடேரியன்' உணவு முறைக்கு மாறிக்கொண்டு வருகின்றனர்.

3 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 12/14/2006 10:21:00 AM

இங்கு பல சக ஊழியர்கள் கேட்கும் கேள்வி இது தான் "எவ்வளவு நாளாக வெஜிடேரியனாக இருக்கிறாய்?"
இங்கு சீனர்கள் 1 மாதம் 2 மாதமாக வெஜிடேரியனாக இருப்பதாக கூறுவார்கள்.புலால் சாப்பிடாவிட்டால் தெம்பே இல்லாத மாதிரி இருப்பதாக சொல்வார்கள்.

குமரன் (Kumaran) 12/28/2006 03:44:00 AM

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கண்ணன் ஐயா. படங்களுக்கும் நன்றி. நீங்கள் அவை கிழக்காசிய நாடுகளில் உள்ள படங்கள் என்று சொல்லியிருக்காவிட்டால் சென்னையிலோ தமிழகத்திலோ ஏதோ ஒரு கோயிலில் இருக்கும் படங்கள் என்று எண்ணியிருப்பேன்.

நா.கண்ணன் 12/28/2006 07:49:00 AM

//நீங்கள் அவை கிழக்காசிய நாடுகளில் உள்ள படங்கள் என்று சொல்லியிருக்காவிட்டால் சென்னையிலோ தமிழகத்திலோ ஏதோ ஒரு கோயிலில் இருக்கும் படங்கள் என்று எண்ணியிருப்பேன்.//

அவை ஹனோய் நகரில் பிரதான கோயிலொன்றில் இருக்கின்றன. ஆனால், நீங்கள் சொல்வது சரி. ஏனெனில், மற்ற எல்லாம் போல் இப்படங்களும் இந்தியாவிலிருந்துதான் கிழக்கே போயிருக்கின்றன. இவைச் சமீப காலப் படங்கள்.