கல்யாண சமையல் சாதம்!

இன்று காலை ஆய்வகத்திலுள்ள ஒரு சிறு மீன் தொட்டியின் அருகில் செல்லும் போது அவை என்னைக் கண்டு துள்ளுவது கண்டேன். பக்கத்திலுள்ள காபி மெஷினில் காபி எடுத்துக் கொண்டு மீண்டும் அருகில் வந்து பார்த்தால் எல்லா மீனும் என்னையே பார்த்துகொண்டு வாலை ஆட்டிக் கொண்டு. உண்மை! நாய் ஆட்டுமே அது போலவே! புரிந்துவிட்டது. அவைகளுக்கு சரியான பசி. சாப்பாடு போடும் ஆள் வரவில்லை. என்னை 'அன்னபூரணி' என்று கருதிவிட்டன. ரொம்பப் பாவமாகப் போய்விட்டது. குழந்தைகள் பசித்து வாடினால் வாடும் தாய் போல.

பெரிய மீனகங்களில் சாப்பாடு போடும் நேரம் வந்துவிட்டால் ஒரே கலக்கல்தான். கலிபோர்னியாவில் பார்த்திருக்கிறேன். பிற மிருகக் காட்சியகங்களிலும் பார்த்திருக்கிறேன். சாப்பாடு என்று வந்துவிட்டால் மீனிலிருந்து மனிதன் வரை ஒன்றுதான். அப்போது ஒரு பரபரப்பு வரும் பாருங்கள்! கல்யாண வீடுகளில் இந்த சாப்பாட்டு அறையில் போய் படம் எடுத்துவிடக்கூடாது! ஏனென்றால் காணச் சகிக்காது. அப்படி ஒரு அவசரம். அப்படி ஒரு பதட்டம் அங்கு தென்படும். சிறுவனாக இருக்கும் போது கல்யாண விடுதிகளில் சாப்பிட்டு மிஞ்சும் இலைகளை வெளியே போடும் போது நரிக்குரவர்கள் அந்த உணவிற்கு அடித்துக் கொள்வார்கள். பார்க்க பரிதாபமாகவும், பயமாகவுமிருக்கும்.

விலங்குகள் பற்றிய விவரணப்படங்கள் பார்க்கும் போது சிங்கம், புலிகள் அடித்த இரை பக்கம் யாரையும் அண்டவிடாது. அப்படியும் அங்கு சிலதுகள் வந்து சேரும். ஒரே சண்டைதான். அந்த உணர்வு மனிதனாக பரிணாமித்த பின்னும் நமக்குப் போகவில்லை என்று தோன்றும். சமையல் செய்யும் போதே எச்சி ஊறும். நல்ல சமையல் வாசனை அடித்துவிட்டால், வயிறு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பிக்கும். இது என்ன அவஸ்தை?

குழந்தையாய் பிறந்தவுடனே முதலில் தேடுவது தாயின் முலைக்காம்புதான். தவழ ஆரம்பிக்கும் போது கண்டதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டுவிடும் குழந்தைகள். மண்ணைத் திங்கும் சில குழந்தைகள்.

பிறப்பின் தன்மையே உண்டு களிப்பதுதான் என்று தோன்றுகிறது. தற்போதுதான் இந்திய நேபாள எல்லைக்காடுகளில் வாழும் சிகப்பு பாண்டாக் கரடி பற்றிய படம் பார்த்தேன். 14 மணி நேரம் சாப்பிட்டுக் கொண்டு இருக்குமாம். இப்போது டயட்டிலிருக்கும் எனக்கு இது அலுப்பைத் தருகிறது. 'வாய் மூடாப் பட்டினி' என்று சிலரைக் கேலி செய்வதுண்டு.

இதையெல்லாம் அநுசரித்துத்தான் கண்ணன் என்னும் தெய்வக் குழந்தை உலகையே உண்டு சிரிக்கிறது. 'உலகமுண்ட பெருவாயா!!' என்று நம்மை வியக்க வைக்கிறது. நம்மாழ்வார் ஒரு பாடலில் வேடிக்கையாகச் சொல்வார், நாம் பட்சணம் சாப்பிடுவதுபோல் கண்ணன் அண்ட சராசரங்களை அள்ளி விழுங்குகிறான் என்று. அது சரி, அவன் சர்வ சக்தன். அவரவர் தகுதிக்கு ஏற்றவாறுதானே நடவடிக்கைகள் அமையும்.

எது எப்படியாகினும், இனிமேல் அடுத்த பிடி வாயில் போடும் போது 'என்ன சாப்பிடுகிறோம்? இதன் கலோரி வால்யு என்ன? இது நமக்கு நன்மை அளிக்குமா? என்றெல்லாம் யோசித்துவிட்டுத் தான் விழுங்கப் போகிறேன்.
[சீனாவில் எல்லோரும் கராவுக்கேயில் என்னென்னமோ பாடிக் கொண்டு இருந்தார்கள். என் சுற்று வந்தவுடன், மாயாபஜார் ஞாபகம் வந்துவிட்டது. 'கல்யாண சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம்' என்று எடுத்துவிட்டேன். எல்லோரும் அசந்துவிட்டனர். யோசித்துப் பார்த்தால் கடோத்கஜனுக்கு பாட்டு எழுதியவர் சுத்த சைவக் கொக்கு போலருக்கு! ஆடு, மாடு அல்லவோ அவன் போஜனம். காய்கறிகளும் பிரமாதம் என்று எப்படிப் பாடுவான் :-) இந்தப் பாட்டு கேட்கணும் போல இருக்கு. வலையில் எங்கு கிடைக்கும்?)

4 பின்னூட்டங்கள்:

சுந்தர் ராம்ஸ் 12/17/2006 04:10:00 AM

முதலுணர்வே உணவுதாங்க! :)

இங்கே இருக்குங்க நீங்க கேட்ட(எனக்கும் பிடித்த) பாடல்!

-சுந்தர் ராம்ஸ்

நா.கண்ணன் 12/17/2006 11:07:00 AM

அடடா!

You made my day!! :-)

இந்தப் பாட்டு உண்மையில் ஜெர்மன் மிலிடெரி டியூன். இதை நான் எப்போது தமிழ் பாட்டு என்று பாடினாலும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை :-) இது எனக்கு ஒத்துப் போகிறது. ஜெர்மன் இதியக் குடியுரிமையுள்ள எனக்குப் பொருத்தமான பாட்டு இது. நன்றி! நன்றி!!

வடுவூர் குமார் 12/21/2006 10:37:00 AM

எனக்கும், இந்த கல்யாண வீட்டில் சாப்பிடுவதை வீடியோ எடுப்பதை முடிந்தவரை தவிர்த்துவிடுவேன்,காண சகிக்காது.

குமரன் (Kumaran) 12/23/2006 01:36:00 AM

எனக்கும் மிகப் பிடித்த பாடல் கண்ணன் ஐயா இது.