கேள்வி பிறந்தது எங்கே?

பிரபஞ்சத்தில் ஒன்றைப் போல ஒன்று இருப்பதில்லை. மனிதன் அறிந்தவரை பூலோகத்தில் மட்டுமே ஜீவிதம் நடைபெறுகிறது. அப்படியென்ன இந்த பூமிக்கு சிறப்பு (uniqueness)? என்ற கேள்வி விஞ்ஞானிகளை அரித்துக் கொண்டுள்ளது. எனவே வேற்று கிரகத்தில் ஜீவிதம் உண்டா? என்று ஆராய முற்பட்டுள்ளனர். பூமி போல கோடான கோடி கிரகங்கள் உள்ளன. அவைகளில் இது போன்ற ஜீவிதம் நடைபெறலாம் என்று நம்புகிறார்கள். இதை எழுதும்வரை அதுவொரு நம்பிக்கைதான். ஊர்ஜிதமாக ஏதும் கிடைத்தபாடில்லை. எப்படி, இப்படியானதொரு சிருஷ்டி? ஒவ்வொன்றும் வெவ்வேறாக? இரட்டைக் குழந்தைகள் கூட ஒன்றல்ல. கைரேகையில் மாற்றமிருக்கும்!

இப்படி வேறுபட்டுள்ள உலகை நோக்குற்றால் வேற்றுமையில் ஒற்றுமை தெரியும். முன்பெல்லாம் வன விலங்குகள் எப்படி வாழ்கின்றன? என நாம் அறிந்து கொள்ள வாய்பில்லாமல் இருந்தது. இப்போது டிஸ்கவரி சானல், அனிமல் பிளானட், நேஷனல் ஜியாகிரபிக் என்று எத்தனையோ! இவைகளைப் பார்த்து வந்தால் புரியும், அறிவு, ஞானம் என்பது மனிதனுக்கு என்று மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்திற்கும் அறிவு பொது என்று. வாழும் சூழலுக்கு ஏற்ற அறிவு அமைகிறது. எப்படித் தச்சருக்கு மேசை செய்யும் அறிவு ஒளிருகிறதோ! பத்தருக்கு தங்கத்தை உருக்கி, நுண்ணிய கலை வேலைப்பாடுள்ள நகை செய்யும் அறிவு மிளிருகிறதோ, அது போலவே கடலில் வாழும் பிராணிகளுக்கு கடலில் என்ன சூட்சுமங்கள் உண்டென்று தெளிவாகத் தெரியும்.

கடல் ஒரு திறந்த வெளி என்றாலும் ஒவ்வொரு ஜீவராசியும் அந்தத் திறந்த வெளியில் தங்களுக்கென்று சூழல் (niche) அமைத்துக் கொண்டு வாழும் அறிவைப் பெற்றிருக்கின்றன. அது மட்டுமல்ல, 'திறந்த வீட்டில் நாய் புகுந்தார் போல' கடல் வெளியில் carnage நடப்பதில்லை. அங்கு ஒரு ஒழுங்கமைதி இருக்கிறது. பெரிய மீனுக்கு சின்ன மீன் உணவு என்பது பொது விதி என்றாலும் எல்லா மீன்களையும் எல்லா மீன்களும் சாப்பிட முடிவதில்லை. இனமறியா நிர்வாகமொன்று பின்புலத்தில் இருக்கிறது.

நெருப்பு பூமியெங்கும் இருக்கிறது. ஏன் பூமிக் கோளமே ஒரு கனல்கண்டுதான்! ஆனால், அதன் மேல் ஜீவிதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காற்று மிஞ்சினால் கடும் சேதம், நீர் பொங்கினால் கடும் சேதம், மலை உடைந்தால் கடும் சேதம். இப்படிப் பஞ்ச பூதங்களில் ஏதாவதொன்று மிஞ்சினால் யாக்கை நடைபெற முடியாது. ஆனால் அவை மிஞ்சாதவாறு ஒரு நிர்வாகம் பின்புலத்தில் நடைபெறுகிறது.

உயிரியல் சொல்கிறது DNA make-upல் ஒரு செல் உயிருக்கும், மாமனிதனுக்கும் வெத்தியாசமென்பது 0.1% கும் குறைவென்று. உயிரினங்களுக்கு ஒரு template (வார்ப்பு) இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு கண்ணில் தெரியும் அத்தனை ஜீவராசிகளும் உருவாகியுள்ளன. மனித குலத்தின் ஆதித்தாய் என்று ஒருவள் உண்டு என்று, ஆன்மீகம் சொல்லவில்லை!, அறிவியல் சொல்கிறது.

இப்படி ஆதித்தொடர்பு ஊர்ஜிதமாகத் தெரிந்தாலும், வேற்றுமை இருந்தால்தான் ஜீவிதத்தைத் தொடர முடிகிறது. அடிப்படை அறிவியல் உண்மைப்படி நாம் எல்லோருமே சகோதர, சகோதரிகள்! கல்யாணமே செய்துக் கொள்ளக் கூடாது! ஆனால், நாம் குலம், கோத்திரம் என்று பிரித்து வேற்றுமைகளை உருவாக்கி கல்யாணம் செய்து கொள்ளக் காரணங்களை உருவாக்கி ஜீவிதத்தை நடத்துகிறோம்.

அத்வைதம் தவறு என்று யாரால் சொல்ல முடியும்? அதுதான் அடிப்படை உண்மை. ஆன்மீகமாகட்டும், அறிவியலாகட்டும். அதற்காக, தாய்-தாரம் என்ற பேதம் பார்க்காமல் வாழ்கிறோமா? எவ்வளவு நுணுக்கமாக நம் விழுமியங்களை உருவாக்கியிருக்கிறோம். நம் பண்பாடு என்பது வேற்றுமைகளை நிரந்தரப்படுத்ததானே! பலதார மணம் ஏற்புடையது என்றாலும் ஸ்ரீராமனை ஏன் அவ்வளவு உயர்வாகப் பேசுகிறோம்? ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடைமுறை சிறப்புடையது. அப்போது நம் காதலை, நம் அன்பைக் காட்ட ஒரு வழி கிடைக்கிறது. பொங்கி வரும் காதல் உணர்வில் போவோர் வருவோரைப் புணர்தல் முடியாது. அது நெறியான வாழ்வாகாது. திருமணம் எனும் ஒரு பாதையில் நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, அனுபவித்து வாழ்ந்து முடித்துவிடுகிறோம்.

எனவே கற்பு என்பது ஒரு ஒழுங்கு என்றாகிறது. ஒரு focal point தருகிறது. தாவும் சிந்தனைக்கு தியானம் ஒரு focus தருவது போல், தரிகெட்டுப் போகத் துடிக்கும் பாலியல் இச்சைக்கு, கற்பு ஒரு focus தருகிறது. இந்தியாவிலிருந்து கொண்டு தாறுமாறான நீலப்படங்களைப் பார்த்துவிட்டு வெளிநாட்டில் எல்லாம் தறிகெட்டுக் கிடக்கிறது என்று அசட்டுத்தனமாக எண்ணுவோர் உண்டு. உலகில் அது எந்தச் சமூகமாக இருந்தாலும் கற்பு உண்டு. கிறிஸ்தவ சமூகத்தில் கற்பு உண்டு. முஸ்லிம் சமூகத்தில் கற்பு உண்டு. பௌத்த சமூகத்தில் கற்பு உண்டு. ஆக, எல்லோரும் ஒரு ஒழுங்கமையில் வாழவே ஆசைப்படுகின்றனர். வாழ்வதோ குறைந்த நாட்களே அது பொழுது சீராக வாழ்வை அனுபவித்துவிட அமைக்கப்பட்டவையே இவ்விழுமியங்கள் (human values). அதனால்தான் இன்றளவும் வள்ளுவம் போணியாகிறது :-)

தமிழ்ச் சமூகம் இந்த கற்பை ஒரு படி நிலை மேலே எடுத்துச் செல்கிறது. உலகில் உள்ள ஆண்களெல்லாம் potential கணவன் என்றாலும், வாக்குப்பட்டவனே கணவன். அவனுடன் இயைந்து வாழ்வதே பெண் தர்மம். 'கற்பு என்று சொல்ல வந்தால் அதை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்' என்பான் பாரதி. அந்த சூத்திரத்தின் படி இது ஸ்ரீதர்மம் என்பதை விட மனுஷ தர்மம் என்று கொள்வோம். இப்படிச் செய்வதால் ஒரு நடைமுறை வசதி உண்டாகிறது. மிக நெருக்கமாக, ஒன்றுக்கு ஒன்று என்று செயல்படுவது எளிது. உறவுகள் கூடக்கூட சிக்கல்களும் கூடுகின்றன.

இந்த பார்முலாவை அப்படியே தூக்கி நம் இறை அனுபவத்தில் வைக்கின்றனர் தமிழர். After all, பக்தி என்பது காதல்தான். எனவே காதலுக்குள்ள சூத்திரம் பக்திக்கும் செல்லுபடியாகும்! எப்படிக் காதலில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடைமுறைக்கு எளிதோ அது போலவே பரந்தாமன் எண்ணி மாளாத வடிவில் பரிமளித்தாலும், நமக்கு உகந்த வடிவில் அவனுடன் உறவு கொள்வதே சிறப்பு என்று கண்டனர் பெரியோர். இந்தச் சிந்தனை தான் சிவ-விஷ்ணு பேதத்திற்கு மூலகாரணம்.

அந்த ஒன்று. பரப்பிரம்மம் undifferentiated-ஆக இருந்தபோது வம்பே இல்லை. ஏனெனில் பேதமில்லை. இரண்டு என்று வந்தால்தானே பேதமே! ஆனால் அந்த வம்பு பிடித்த பரப்பிரம்மம் (அலகிலா விளையாட்டுடையான்), சும்மா இல்லாமல் ஒன்றிலிருந்து மூன்றாகியது, பின் நான்காகி, நானாவித சொரூபமாகி பல்கிப் பெருகிறது. வேத கலாச்சாரத்தில் வந்த தமிழர்கள் முதல் மூன்றை வலுவாகப் பிடித்துக் கொண்டனர். விஷ்ணுவும், பிரம்மாவும் அப்பா, பிள்ளை உறவாகிப் போய் விட்டதால், மிஞ்சுவது சிவன் ஒருவன்தான். எனவே விஷ்ணுவை ஒரு பார்டியாக்கி, சிவனை இன்னொரு பார்டியாக்கி வழிபடத் தொடங்கினர். சிலர், அன்னை வழிபாடு, கணபதி வழிபாடு, முருகன் வழிபாடு, சூர்ய வழிபாடு என்று ஆரம்பித்தனர்.

காணபத்யம், கௌமாரம், சாக்யம் இவைகள் ஒரு குடையின் கீழ் வந்தன. சூரியனை நாரண அம்சம் என்று கருதுவதால், அது திருமால் வழிபாட்டுடன் போய் விட்டது. ஆக, மீண்டும் மிஞ்சுவது சிவனும், விஷ்ணுவும்!

விஷ்ணு தனியொரு ஆளாக இருந்து கொண்டு எல்லா லீலைகளையும் செய்கிறார். அவரால் அவதாரம் எடுக்க முடிகிறது. பெரியசாமியாக, விஸ்வரூபமெடுக்கும் அதே வேளையில் பிள்ளைக் கனி அமுதாக, பால கிருஷ்ணனாக இருக்க முடிகிறது. ஏகமாக, வேங்கடவன் போல், அரங்கன் போல் இருக்கிறார். சில சமயம், ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி சகிதமாய் இருக்கிறார். கிருஷ்ணனாக வந்து 16,000 மனைவியரைக் கொள்கிறார், ஏகமாக, யோகியாக பத்மநாபனாக இருக்கிறார். இப்படி அவரே ஸ்ரீபார்ட், ராஜாபார்ட் என்று வெளுத்துக் கட்டும் ஒரிஜினல் 'பாய்ஸ் கம்பெனி' யாக இருக்கிறார். இதையெல்லாம் விளக்குவது போல் 1000 பேர்கள் வைத்துக் கொண்டுள்ளார். ஏறக்குறைய நம் மைக்ரோ சாப்ட் மாதிரி எல்லா மார்கெட்டையும் அவர் கைக்குள்ளே வைத்திருக்கிறார். ஒருவகையில் அவர் அத்வைதா கம்பெனியின் மூலபுருஷர் என்று தெரிகிறது.

ஆனால், வேத கால சிவனோ, சிவனே என்று தியானத்தில் இருப்பவர். அவர் மகாதேவன். பெரியவர். சிறுபிள்ளைத்தனமெல்லாம் அவருக்குக் கிடையாது. ரொம்ப சீரியசான ஆளு. கோபக்காரர் கூட. நெற்றிக் கண்ணெல்லாம் வைத்திருக்கிறார். இப்போது சிக்கல் என்னவெனில், இந்த icon-க்குள் நாரணவித்தைகளைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்! பார்ட்டி என்று பிரிச்சாச்சு, பிறகு கொள்கை விளக்கம் தந்துதானே ஆகவேண்டும்! கிருஷ்ணர் சின்னப் பிள்ளையாக இருக்கிறாரா? சரி, ஒரு பிள்ளையாரை உருவாக்கு! கிருஷ்ணன் ருக்மணி, பாமா என்று இரண்டு மனைவியர் கொண்டுள்ளாரா? சரி, முருகனை உருவாக்கு! அவனுக்கு வள்ளி, தெய்வயானி என்று இரண்டு பெண்டாட்டிகளை உருவாக்கு. சிவனோ பிச்சாண்டி. சுடலை மாடன். விஷ்ணுவோ ஆபரணதாரி, சொகுசானவர். அந்த image-ஐ அப்படியே சிவபாலனான முருகனுக்கு வை! அங்கு ஸ்ரீதேவி, லக்ஷ்மி. இங்கு அம்பாள், அன்னபூரணி. சரி, எல்லாம் சமப்படுத்தியாகிவிட்டது, ஆனால் ஒன்றில் சிக்கல் வருகிறது. நாரணர் அவதாரம் எடுக்கிறார். சிவனோ பிறப்பிலி. ஆனால் அவதாரம் எனும் கோட்பாடு கன்னாபின்னாவென்று பாப்புலர் ஆகிவிட்டது. இதை எப்படி சரிக்கட்டுவது? திருவிளையாடல் எனும் புதிய கோட்பாடு தென்னகத்தில் உருவாகியது. இது மதுரை மற்றும் தென்னக சம்பிரதாயம் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. திருவிளையாடல் என்பது உடனே அவதாரத்தை விட பாப்புலர் ஆகிவிட்டது (திருவிளையாடல் படம், திருமால் பெருமைக்கு முன்னதாக எடுக்கப்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும்). நாரண பரத்துவத்திற்கு பத்மநாபன் என்ற ஆழமான குறியீடு உருவாகிவிட்டது. இதற்கு ஈடான குறியீட்டை சிவனுக்கு உருவாக்க முற்படும் போது தென்னிந்திய சைவ சித்தாந்திகள், 'நடராஜன்' என்ற உன்னத குறியீட்டை உருவாக்கி உலகிற்கு அளித்தனர். மீண்டும், கவனிக்க வேண்டியது என்னவெனில், 'ஆடல் அரசன்', நடராஜன், பாண்டியனுக்காக கால் மாறி ஆடியது போன்ற இவையெல்லாம் தமிழகத்தில் உருவானவையே! வைணவத்தில் ஆழ்வார்கள் சாதீய அமைப்பிற்கு எதிரான போக்கை ஆன்மீக வழியில் உருவாக்கி அது முறையாக உள்வாங்கப்பட்டும் விட்டது. இதற்குச் சமமான போக்கு தென்னிந்திய சித்தர் மரபு. அது பிராமணீயத்திற்கு, சாதியத்திற்கு எதிரான மரபு. அது ஓரளவு தென்னிந்திய சைவ மரபில் உள்வாங்கப்பட்டுள்ளது. அடுத்து செய்ய வேண்டியது, புதிய புராணங்களை உருவாக்க வேண்டியது. ஏற்கனவே காலம், காலமாக இருந்து வருகின்ற விஷ்ணு புராணம், வராக புராணம், கருட புராணம் போன்ற 18 புராணங்களுக்கு ஈடான புதிய புராணங்கள் தென்னகத்தில் உருவாக்கப்படுகின்றன. சிவதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் சிவன் யட்சனாக வளர்ந்து திருமாலையும், பிரம்மாவையும் அடிமுடி காண வைத்தது, திருமாலுக்கு சக்கரம் சிவன் தந்ததான கதை, நரசிம்மருக்குப் போட்டியாக சரபரை உருவாக்கியது போன்றவை உருவாகின.

இப்படி, அச்சாக, ஒன்றுக்கு, ஒன்று என்றளவில் தென்னிந்திய சைவ சித்தாந்த ஆகம கோயில் ஒழுங்கு உருவாக்கப்பட்டது. இது எவ்வளவு ஆன்மீகமோ அவ்வளவு அரசியல், சமூகவியல் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்படித் தமிழகம் ஆன்மீகத்தில் கூறுபட்டுப் போனபோது அத்வைத சம்பிரதாயம், தனக்கென ஒரு வழியைக் காட்டியது. அது புறத்தில் சைவன், மனத்தில் சாக்தன், நினைவில் நாரணன் என்பது. இதைக் காஞ்சி மடம் போன்ற சில சம்பிரதாயங்களில் காணலாம். சங்கரர் உருவாக்கிய பிற பீடங்களிலும் இதே சம்பிரதாயம் உள்ளதா என்று தெரியவில்லை. ஏனெனில், சிவ-விஷ்ணு பேதம் முழுக்க முழுக்க தென்னிந்திய உருவாக்கம் என்று தோன்றுகிறது.

ஆழ்வார்கள் தோன்றிய காலத்திலேயே இது உணரப்பட்டுள்ளது. எனவேதான் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கோட்பாட்டை (integrated concept) வலியுறுத்தினர். அதில் அன்னைக்கு, ஈசனுக்கு, பிரமனுக்கு சமமான பங்கீடு உண்டு. விஸ்வரூப வடிவில் பிற தெய்வங்களுக்கும் சமமான பங்கீடு உண்டு. வைணவத்தின் போக்கு சாத்வீக போக்கு. எனவே இவர்கள் செயற்பாடு மிக வித்தியாசமான சரித்திர போக்கைக் கொண்டுள்ளதாக அமைகிறது. சாதீயத்தை எதிர்த்த ஆழ்வார்கள், அதை ஆன்மீகத்தில் நடைமுறைப்படுத்தியது கவனிக்கத்தக்கது. திருப்பாணாழ்வார், பாகவதர். ஆனால், சாதியால் கீழ்நிலையில் உள்ளவர். இவரை மேல் நிலைக்குக் கொண்டு வர வேண்டுமெனில், ஒரு அந்தணரை வைத்து, தோளில் சுமக்க வைக்க வேண்டும். இது ஸ்ரீரங்கத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. மேலாண்மை கொண்டுள்ள ஆணாதிக்க சமூகமான தமிழ் மண்ணில் ஒரு பெண்ணிற்கு சம உரிமை தர வேண்டும். இதை எப்படி சாத்தியப்படுத்துவது? ஆண்டாள் ஒரு முன்னுதாரணம். ஆக, ஸ்ரீரங்க விலாசத்தில் இரண்டு பேருக்குத்தான் நேரடி உள்வாங்கல் நடந்திருக்கிறது. ஒன்று கீழ்மகன். மற்றொன்று பெண். இதனாலேயே, திருப்பாணாழ்வர் ரங்கனை, 'நீதி வானவன்' என்கிறார். இந்த வைணவ நீதி, சமத்துவம் பேசும் நவீன உலகிற்கு ஒரு முன்னோடி! (உடுப்பி கிருஷ்ணன் கதையும் தொடர்புடையதே)

ஆனால் 'சற்றே விலகும் பிள்ளாய்!' என்று சொன்ன நந்தனை எரித்து சாம்பலாக்கிவிட்டனர் சிதம்பரத்து அந்தணர். இன்றளவும் அந்தக் கோயில் பிரச்சனைக்குரியதாகவே உள்ளது!

இத்தகைய சரித்திர, சமூக அமைப்பின் பின்புலத்தில்தான் தமிழனின் ஆன்மீகம் நடைபயில வேண்டியுள்ளது.

வேற்றுமையைக் காணாதே. வேற்றுமையில் ஒற்றுமை காண் என்று சொல்கின்றனர் அத்வைதிகள். ஆனால், ஒற்றுமையில் அல்ல, வேற்றுமையால்தான் யாக்கை நடக்க வேண்டியுள்ளது. 'சிவனாம் நினையே தொழுவேன் கண்ணா!' என்றான் பாரதி. அந்தப் பார்வை வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. அது ஆழ்வார்களின் குரல். தமிழ் மரபின் உரத்த நவீன குரலான பாரதி அதை மீட்டெடுக்கிறான். ஆனால், சம்பிரதாயங்களை அவ்வளவு எளிதாக விட்டு விட முடிவதில்லை. அதுவொரு பளு. கிரீடம் சூடிக் கொள்வது எடுப்பானது, கௌரவமானது, மிடுக்கானது. ஆனால், பாரமானதும் கூட.

இப்படி சரித்திரம், சமூகவியல், பக்தி, பிரபத்தி என்றும் ஏதும் அறியாமல் வாழ்ந்து விடுவதும் ஒரு வகை. Ignorance is bliss என்பார்கள். ஆனால், தத்துவம் தெரியாமல் பக்தி செய்ய முடியாது, பிரபத்தி செய்ய முடியாது!

வீர சைவனாகவோ, வீர வைஷ்ணவனாகவோ இருக்க முடியாத அளவு நமது நிஷ்டை, அனுஷ்டானங்கள் எல்லாம் நீர்த்துப்போன காலக் கட்டத்தில் வாழ்கிறோம். அதுவொரு anachronism மாகப் போய்விட்டது உண்மை. இப்போதுள்ள அரசியல் அமைப்பில் காஞ்சி மடதாதிபதியை உள்ளே தூக்கிப் போட்டுவிட முடிகிறது. நாத்திகம் பேசிக் கொண்டே மஞ்சள் துண்டும் போட்டுக் கொள்ளமுடிகிறது! இதுதான் கலி போலும்!

அவதாரங்கள் கலியில் ஏன் வருவதில்லை? காரணம், கலியில் தீவிரமான நாத்திகனும் கிடையாது, தீவிரமான பக்தனும் கிடையாது. எல்லாம் 'அசத்துக்கள்'. இவர்களைக் கடையேற்றுவது என்றால் நாம சங்கீர்த்தனம் செய்வது. அதன் மூலம் கொஞ்சம் இறை ருசியை உருவாக்குவது. ருசி வந்தவுடன் தத்துவங்களை விளக்குவது. தத்துவங்கள் புரிந்தவுடன் கொஞ்சம் நிஷ்டையில் ஈடுபடுத்துவது. நிஷ்டை வந்தவுடன் பக்தி சுவை காட்டுவது. பக்தி புரிந்தவுடன் பிரபத்தி வழி காட்டுவது. இதுதான் இப்போதைக்கு சாத்தியம்.

ஆன்மீக விசாரங்களில் முதலில் ஈடுபாடு, ருசி உருவாக வேண்டும். அவசர கதியில் கோயிலுக்குப் போவதே பெரிய பாடாக உள்ளது. எனவேதான் இது போன்ற விசாரிப்புகளில் ஈடுபடுவதற்கே இறையருள் தேவைப் படுகிறது. அதைப் பற்றுக் கோலாகக் கொண்டு மெல்ல, மெல்லப் படியேற முடியும். எத்தனை விசாரித்தாலும், மனது அடங்கும் போதுதான் ஆனந்த அனுபவம் வாய்க்கிறது. எனவே இந்த விசாரிப்புகள் அங்கு இட்டுச் செல்ல வேண்டும். வேற்றுமையில் யாக்கை நடக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அந்த வேற்றுமையே இறை அருள்தான் என்று உணர்வது. நாரணனுக்கு 'புவன சுந்தரன்' என்றொரு பெயர் உண்டு. பார்க்கின்ற அழகெல்லாம் அவனே! கேட்கின்ற சுரமெல்லாம் அவனே! சுவைக்கின்ற பொருளெல்லாம் அவனே! உணர்கின்ற உணர்வெல்லாம் அவனே! முகர்கின்ற கந்தமும் அவனே!

இதைத்தான் ஆழ்வார்களும் சொல்கிறார்கள். நாயன்மார்களும் சொல்கிறார்கள். அவர்களுக்குள் இப்படியொரு iconic பேதத்தைக் காட்டி அவர்களையும், நம்மையும் திக்குமுக்காட வைப்பதில் 'பெரியோனுக்கு' ஒரு அல்ப சந்தோஷம் போலும்! எல்லாமே திருவிளையாடல்தான். லீலா விபூதிதான். விளையாட்டிற்கு பெரிய பொருள் என்று ஏதும் கிடையாது. விளையாடுவதுதான் அதன் பொருள்.

நீயும் நானும் ஒன்றென்றாலும், நீயும் நானும் ஒன்றல்ல. தாயும் மகளும் ஒன்றென்றாலும், தாயும் மகளும் ஒன்றல்ல. அரியும், சிவனும் ஒன்றென்றாலும், அரியும் சிவனும் ஒன்றல்ல. அங்கும் இங்கும் நிற்கும் வரைதான் ஆட்டத்தின் ஓட்டம் தொடரும். நீ அங்கே! நான் இங்கே! அதனால் கேள்வி இங்கே!! கேள்வி இங்கே என்பதால் நான் இங்கே! என் கேள்வியே என் இருப்பிற்கு சாட்சியம். கேள்விகள் ஆழமாகும் போது கேள்விக்குள் விடையும் இருப்பது புரியும். எனவே கேள்விகள் கேட்டுப் பழகுவோம் வாரீர் :-)

9 பின்னூட்டங்கள்:

Anonymous 12/18/2006 01:34:00 AM

தத்துவ விளக்கமெல்லாம் சரி. ஆனால் உங்கள் சில கமெண்ட்கள் வெறுப்பின் உச்சம். நந்தனைக் கொளுத்து விட்டார்கள் என்பது இபா என்ற மட மார்க்ஸீய வைணவர் கண்டுபிடித்த கதை. அப்படித்தான் நீங்கள் கண்டுபிடித்திருக்கும் கதைகளும். பேசாமல் நீங்கள் ஹரேக்ருஷ்ணா மதரஸாக்களில் சொற்பொழிவாற்றப் போகலாம்.

நா.கண்ணன் 12/18/2006 10:38:00 AM

//பேசாமல் நீங்கள் ஹரேக்ருஷ்ணா மதரஸாக்களில் சொற்பொழிவாற்றப் போகலாம்//

ஹ,ஹா!! I've some issues to settle with them as well! அவர்கள் என்னிடம் கேட்பார்கள், 'ஏன் தமிழகத்தில் மட்டும் ISKCON வேர் ஊன்றவில்லையென்று'. என் பதில்: We are no more innocent!!

//உங்கள் சில கமெண்ட்கள் வெறுப்பின் உச்சம்//

மன்னிக்கவும். இது எனக்கும் வருத்தமளிக்கிறது. எனது ஆதங்கத்தை யாராலும் புரிந்து கொள்ளமுடியாது.

மிக அழகாக ஒன்றே தேவன் என்றொரு தத்துவம் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் நிலைபெற்றிருக்க 'தமிழகம் மட்டும்' வழி தவறிப் போவானேன்? இந்த மருட்சி எப்படி ஏற்பட்டது? இதற்கு வரலாற்று, அரசியல் காரணங்கள் உண்டா? சிவன் என்ற icon தொன்று தொட்டு இருப்பதால் அப்படித் தனிப்பாதை வளர்தெடுக்கப்பட்டதா? பழுத்த ஞானிகளான நாயன்மார்களும், சித்தர்களும் இப்படித் தனிப்பாதை உருவாக்க வேண்டிய அவசியமென்ன?இதில் ஏன், எப்படி பிரம்மா விடுபட்டுப் போனார்? தென்னிந்திய சைவ சித்தாந்தத்தின் தோற்றமென்ன? அது ஏன் வேத மரபை மறுக்கிறது? இவையே என் கேள்விகள்.

வைதீக மார்க்கிகளுடன் எனக்குத் தகராறு இல்லை (தத்துவ அளவில்தான் பேசுகிறேன். எனக்கு யாரிடமும் தகராறு கிடையாது)

நந்தன் கதையை எனக்கு இப்படிச் சொன்னவர் ஒரு சைவ சித்தாந்தி. இபா இப்படிச் சொன்னாரா என்று எனக்குத் தெரியாது.

Anonymous 12/18/2006 01:14:00 PM

உங்கள் பதிவு இப்போது தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ திரட்டப் படவில்லையே, ஏன்?

நா.கண்ணன் 12/18/2006 01:29:00 PM

//உங்கள் பதிவு இப்போது தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ திரட்டப் படவில்லையே, ஏன்? //

Blogger-Betaவை அறிமுகப்படுத்துகிறது. தமிழ்மணம் கருவிப்பட்டை அதில் சரியாக வேலை செய்வதில்லை. மீண்டும் பதிவு செய்து இருக்கிறேன். சரியாகிவிட வேண்டுமென்று வேண்டுகிறேன்.

தேன்கூடில் மீண்டும் பதிவு செய்துள்ளேன். இன்று சோதித்துப் பார்க்கிறேன்.

ஜடாயு 12/19/2006 06:45:00 PM

// இப்போது சிக்கல் என்னவெனில், இந்த icon-க்குள் நாரணவித்தைகளைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்! பார்ட்டி என்று பிரிச்சாச்சு, பிறகு கொள்கை விளக்கம் தந்துதானே ஆகவேண்டும்! //

சைவமும், வைஷ்ணவமும் தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறும் கூட்டணிகள் நிலையில் உள்ளது போலப் பேசுகிறீர்கள்.

// கிருஷ்ணர் சின்னப் பிள்ளையாக இருக்கிறாரா? சரி, ஒரு பிள்ளையாரை உருவாக்கு! கிருஷ்ணன் ருக்மணி, பாமா என்று இரண்டு மனைவியர் கொண்டுள்ளாரா? சரி, முருகனை உருவாக்கு! அவனுக்கு வள்ளி, தெய்வயானி என்று இரண்டு பெண்டாட்டிகளை உருவாக்கு. //

என்ன பிதற்றல் இது? எவ்வளவு கேவலமான வாக்கியங்கள்! உங்கள் வைணவ வெறி இவ்வளவு தூரத்திற்குப் போகும் என்று எண்ணியும் பார்க்கவில்லை. சைவம் என்பது ஏதோ ஒரு காப்பியடிப்பு ஒட்டு வேலை என்பது போலப் பேசுகிறீரே சுவாமி?

எல்லா சமய மரபுகளும் உருவானதற்கு ஒரு நெடிய, வரலாற்று பூர்வமான evolution உள்ளது. சிவகுமாரனான தேவசேனாபதியைப் பற்றி மகாபாரதத்தில் உள்ளது. சித்ரகூடத்தில் ராமன், சீதைக்கு லட்சுமணன் பணிபுரிந்தது சிவனுக்கும், உமைக்கும் நந்தி பணிவிடை செய்தது போல் இருந்தது என்று வால்மீகி முனிவரே சொல்லுகிறார் (சுலோகத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளவும்).

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை மற்றெல்லா சைவ, வைணவ இலக்கியங்களுக்கும் முந்தையது. தமிழின் முதல் பக்தி நூல் அதுவே. ஆனைமுகன் வழிபாடு ஹரப்பா நாகரிகத்திலேயே உள்ளது!

நெகிழ்ச்சித் தன்மையுடைய நம் ஆறு சமயங்களில், ஒரு சமயத்தின் முக்கிய அம்சம் வேறோரு சமயத் தளத்தில் ஆன்மிக நோக்கில் அனுபவிக்கப் பட்டிருக்கிறது. இது ரசித்து இன்புற வேண்டிய விஷயம். முன்பெ பல தடவை சொன்னது போல், சண்டை போடும் விஷயம் அல்ல.

// சிவனோ பிறப்பிலி. ஆனால் அவதாரம் எனும் கோட்பாடு கன்னாபின்னாவென்று பாப்புலர் ஆகிவிட்டது. இதை எப்படி சரிக்கட்டுவது? திருவிளையாடல் எனும் புதிய கோட்பாடு தென்னகத்தில் உருவாகியது. இது மதுரை மற்றும் தென்னக சம்பிரதாயம் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. //

நரிகளைப் பரிகளாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது எல்லாம் மணிவாசகரது ஆன்மீக அனுபவம் ஐயா, அது பற்றித் திருவாசகத்திலேயே பரவசமூட்டும் பாடல்கள் உள்ளன. அதோடு, வேறு சில லீலைகளும் சேர்த்து பின்னர் திருவிளையாடற்புராணம் உருவாயிற்று. இதெல்லாம் வைணவத்திற்குப் போட்டியாக உருவாக்கிய "சரிக்கட்டா”? பயங்கர crackpot theory இது.

ஆழ்வார்கள் வரலாற்றில் வரும் இதே போன்ற சம்பவங்களையும் எளிதாகக் கேலி செய்ய முடியும். அது போன்ற செயல்களை ஏதோ கொஞ்ச நஞ்சம் ஆன்மீகக் காற்றை சுவாசித்த நான் ஒருக்காலும் செய்ய மாட்டேன்.

// இதற்கு ஈடான குறியீட்டை சிவனுக்கு உருவாக்க முற்படும் போது தென்னிந்திய சைவ சித்தாந்திகள், 'நடராஜன்' என்ற உன்னத குறியீட்டை உருவாக்கி உலகிற்கு அளித்தனர். //

அகண்டாகாரமான சிவ நடனம் போட்டிக்கு உருவாக்கிய குறியீடா? ஆனாலும் இது ரொம்ப ஓவர் ! நடராஜன் ஆடிய கொடுகொட்டி முதலான 64 வகை நாட்டியங்களைப் பற்றி சிலப்பதிகாரத்திலேயே மிக விரிவாக வருகிறது. காலத்தால் தொன்மையான பரத முனிவரின் "நாட்டிய சாஸ்திரம்" இந்தியாவில் எல்லா பாரம்பரிய நடனங்களுக்கும் மூலநூல். சிவனது திருநடனம் கண்ட பரத முனிவர் அதை உலகிற்கு விரித்துரைத்ததாகப் போற்றப் படும் நூல் இது. இன்றைக்கும் நடனக் கலை பயிலும் வைணவர்களும் தொழும் தெய்வம் அந்த ஆடலரசன் தான், “எல்லா மார்கெட்டையும் அவர் கைக்குள்ளே வைத்திருக்கிறார்” என்பவருக்கு இங்கே எப்படி மார்க்கெட் போயிற்று என்று உங்கள் ஆராய்ச்சிக்கு இப்போதே ஒரு விஷயம் ரெடி :)))

சோழர் கால வெண்கலச் சிலைகளில் நடராஜ வடிவம் மகோன்னதம் அடைந்தது, அவ்வளவு தான். 5-ஆம் நூற்றாண்டு எல்லோரா குகைச் சிற்பங்கள், எலிபெண்டா குகைக் கோயில்கள், வட இந்தியாவின் தொல் சிற்பங்கள் இவை எல்லாவற்றிலும் பல நடராஜ வடிவங்கள் உள்ளன.

// ஆனால் 'சற்றே விலகும் பிள்ளாய்!' என்று சொன்ன நந்தனை எரித்து சாம்பலாக்கிவிட்டனர் சிதம்பரத்து அந்தணர். இன்றளவும் அந்தக் கோயில் பிரச்சனைக்குரியதாகவே உள்ளது! //

முந்தைய "இஸ்கான் மதரஸா" பட்டம் தந்த அனானி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். உங்களுக்கு வேண்டும்போது இந்து தர்மத்தின் எதிரிகளது பொய்களை வாதம் போல எடுத்து வைப்பீர்களோ? இதைச் சொன்ன அதே கூட்டங்கள் ராமாயணம் பற்றியும், கிருஷ்ணன் பற்றியும் சொன்னதெல்லாம் தெரிந்தது தானே - அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்கிறீர்களா?

கண்ணன், ஏதோ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் popularity contest நடப்பது போன்ற மனோபாவத்திலேயே நீங்கள் சஞ்சரிப்பது போன்று தெரிகிறது. பல பிறவிகள் முன்பு ராஜராஜன், வந்தியத்தேவன் காலத்தில் ஆழ்வார்க்கடியானாக இருந்தீர்களோ ?:)))

கிறிஸ்தவர்கள் தேவ ஊழியம் செய்வது போல, ஒவ்வொரு பதிவிலும் சைவ நிந்தனை செய்வதைக் கடமையாகவே வைத்திருக்கிறீர்களே! இது உங்கள் சமய, ஆன்மீக சிந்தனைப் பரப்பில் விழுந்துவிட்ட ஓட்டை என்பது போலவே தோன்றுகிறது.

முந்தைய பதிவுகளாவது பரவாயில்லை. இந்தப் பதிவில் எழுதியது சகிக்க முடியாமல் இருக்கிறது.

நா.கண்ணன் 12/19/2006 09:53:00 PM

அன்பின் ஜடாயு:

எங்கே ரொம்ப பிசியா இந்தப் பக்கம் பார்க்கவில்லையோ..கொஞ்சம் தப்பித்தோம் என்று நினைத்தேன். இடுக்குப் பிடி பிடித்துவிட்டீர்கள். கழுகுக் கண்கள்தான் உமக்கு :-))

உண்மையில் நீங்களும், அனானி சாரும் இன்னும் கூட கடிந்து கொண்டிருக்கலாம். ஆயினும் அன்பின் பாற்பட்டு மென்மையாக கடிந்துள்ளீர்கள். தன்யனானேன்.

அதுசரி, நீங்களும் அவரும் கல்கி பாணியில் நம்மை முன்குடுமி ஆழ்வார்க்கடியான் ஆக்கிவிடுவீர்கள் போலருக்கே! :-) அப்புறம், எதற்கெடுத்தாலும் 'ஹரே கிருஷ்ணா!வை வேறு வம்புக்கு இழுக்கிறீர்கள். அது சரி, விக்கிபீடியாவில் 'நாரணத்துவத்தையே' மாயாவாதம் என்று ஒரு சைவ சித்தாந்தி எழுதுகிறார். அதை மேற்கோள் காட்டுகிறீர்கள். ரொம்ப bias சார் நீங்க ரெண்டு பேரும்.

உங்களுக்குத் தெரியாது எனது சைவ சித்தாந்தப் பின்புலம் :-) ஒருமுறை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு சைவ சித்தாந்தி நம்ம ஊர் கோயிலுக்கு போய்விட்டு வந்து என்னிடம் புலம்பிவிட்டார். அவருக்கு சிவனுக்குப் பக்கத்தில் அம்பாள் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. நவக்கிரகத்தை என்ன சாடு சாடியிருப்பார் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

'மறந்தும் புறம் தொழா மாந்தர்' என்றொரு வசனத்தை திருமழிசை போடுகிறார். அப்படி சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் நான் பேசுவது போலவும் உலகம் படும் என்று புரிந்து கொள்ளுங்கள்.:-)

மேலும், வெட்டி ஒட்டும் போது முழுக் கட்டுரையின் ஓட்டம் மறைக்கப்பட்டுவிடும் அபாயமுண்டு! நான் அதை கொஞ்சம் light hearted-ஆக எழுதினேன். இந்தியாவிற்கு வந்து இந்திய சமயத்தைக் காண்பவன் மிரண்டு விடுவான். அவ்வளவு முரண்பாடுகள் அங்கே இருக்கு. இதற்கிடையில் சுகமாக நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம், சிவனே! என்று :-)

இன்னும் என் சிக்கல் புரிந்த பாடில்லை. ஆனால் விடைக்கு அருகில் நிற்பது புரிகிறது. ஒரு பதிவாக அதுவும் வரும் (என் எழுத்து என் உரத்த சிந்தனையே. முடிவான முடிவு என்றில்லை).

நான் வேதாந்த தேசிகர் பாணியில் சொல்லப் புகுந்தால் ஒரு போர் மேகமே சூழ்ந்துவிடும். அவர் தத்துவத் த்ரய சாரத்தில் ஆணித்தரமாக நாரணத்துவம் நிறுவுகிறார். அதில் எல்லாம் நாரணனுக்குக் கீழேதான். அது ரொம்ப காட்டமாகப்படலாம். அப்புறம் பிரபுபாதா ரேஞ்சுக்கு என்னைக் கொண்டு போய்விடுவீர்கள். அதனால் இத்தோடு விடுகிறேன் :-)

இன்னும் புரியாத புதிர்! இந்த ரெண்டு பார்ட்டியும் ஒன்றைத்தான் பேசுகிறார்கள் என்பது மிகத்தெளிவாகப் புரிகிறது. ஆனால், ஏன் அப்படி பேசுகிறார்கள் என்பதுதான் புரிபடவில்லை.

என்ன இருந்தாலும் இப்போது syndication இல்லாத நேரத்திலும் நீங்களும், அனானிசாரும் வந்து போனது மனதுக்கு இதமாக உள்ளது. அனானி சார் மேற்கோள்களுக்கு என் புரிதலை சாத்வீகமாக :-) ஒரு பதிவில் சொல்கிறேன்.

குமரன் (Kumaran) 12/23/2006 01:31:00 AM

கண்ணன் ஐயா. இந்த நீண்ட கட்டுரையை இன்று தான் படிக்க முடிந்தது. எங்கோ தொடங்கி எங்கேயோ சென்று எதை எதையோ தொட்டு மிக நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எண்ணங்களை நன்கு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நா.கண்ணன் 12/23/2006 09:46:00 AM

குமரன்:

எழுதாத இன்னுமொரு எண்ணம். மனிதன் பிறக்கும் போதே இறைத் தேடலுடன் பிறப்பதாக அறிவியல் சொல்கிறது. அதாவது நிருவனப்படுத்தப்பட்ட சமய ஒழுங்குகள் இல்லாத இடத்திலும் மனுதனாகப் பிறந்தவனுக்கு ஏதாவதொரு வகையில் சமயச் சிந்தனை இருக்குமாம். என்னைக் கேட்டால், இந்தியா தனது சமயச் சிந்தனைகளை நிருவனப்படுத்தாமல் இத்தகைய இயற்கை நிலையிலே இன்றளவும் வைத்திருக்கிறது என்று சொல்லுவேன். அதனால்தான் 'இந்து மதம்' என்று ஒரு மதம் இல்லாமல் இருக்கிறது. வேத, உபநிஷத்துகளில் 'இந்து' என்ற வார்த்தை கிடையாது என்று சொல்லக் கேள்வி. இதை 'சநாதன தர்மம்' என்றே பெரியோர் அழைப்பர். தர்மம்/அறம் என்பது ஒரு ஒழுக்கம். நம் சமயம் என்பதொரு இயற்கை ஒழுக்கம் அவ்வளவே! எனவேதான், சைவத்தைப் பற்றிப் பேசினால் பாசுரங்களிலிருந்து மேற்கோள் காட்டமுடிகிறது, வைணைவம் பேசினால் வள்ளலாருக்குள் போகமுடிகிறது, ஏன் பௌத்தம் பேசினால் கூட கீதைக்குள் போகமுடியும். எல்லாம் ஒன்றுள், ஒன்று பின்னிப் பிணைந்த ஒரு அழகான, complicated fabric! ஒரு கழுகுப் பார்வையில் (இதை ஜடாயுப் பார்வை என்று கூடச் சொல்லலாம் :-) இந்த pattern தூரத்திலிருந்து ரம்மியமாகத் தெரிகிறது. இயற்கையில் காணும் எப்பொருளிலும் உள்ளது போல் உள்ளே நுழையும் போது பல்வேறு மார்க்கங்கள் தெரிகின்றன. ஒன்றையே சொன்னாலும், வெவ்வேறு குறியீடுகளில் சொல்கிறார்கள். ஒன்றையே சொன்னாலும் வெவ்வேறு பெயர்களில் சொல்கிறார்கள். ஒன்றையே செய்தாலும் அதை வெவ்வேறு அநுஷ்டானங்களில் செய்கிறார்கள். இது அழகிற்கு வளம் சேர்க்கிறது. உண்மைதான். ஆனால், அது அபிப்பிராய பேதத்திற்கும், சில சரித்திரப் பிழைகளுக்கும் காரணமாகிப் போகிறது. அதைப் பற்றி கொஞ்சம் சிலாகித்துப் பேசும் கட்டுரை அது.

குமரன் (Kumaran) 12/25/2006 09:53:00 PM

நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லும் கருத்தை ஒத்துக் கொள்கிறேன் ஐயா.