ஆழ்வார்க்கடியான்!

ஒருமுறை மதுரைத் திட்டம் பூகழ் கு.கல்யாணசுந்தரம் என்னைப் பார்த்து, 'பார்த்தசாரதிக்கு ஆயிரம் பேர் இருப்பது போல் உமக்கு ஆயிரம் பூக்கள் (வலைப்பூ) உண்டு போலும்!' என்றார். என்ன செய்வது? சும்மா இருக்க முடியவில்லை! பெரியாழ்வார் போல் பாமலை தொடுத்து இறைவனுக்கு திருத்தொண்டு செய்வோம் :-)

ஆழ்வார்க்கடியான் என்றொரு வலைத்தளம்!

கல்கி இந்தப் பெயரை பிரபலப்படுத்தியது என்னைக் கவர்ந்தது. பொன்னியின் செல்வனின் எனக்கு அந்தப் பாத்திரம் பிடிக்கும். அந்தக் காலத்தில் நிலவிய சிவ-விஷ்ணு பேதத்தைச் சுட்டும் பாத்திரம்.

ஆனால், கல்கிக்கு குசும்பு உண்டு. பாரதியை 'மகாகவி என்று சொல்லலாமா?' என்று தலையங்கம் எழுதினார்! ராஜாஜியின் சிஷ்யராக இருந்தும் 'ஆழ்வார்க்கடியானை' ஒரு கேலிச் சித்திரமாக உருவாக்கி தமிழ் உலகில் உலவ விட்டார். 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு' என்று விளையாட்டாகச் சொல்லும் போதும் கூட ஒற்றுமை உணர்வை விட சட்டென மனதில் படிவது, 'ஆகா! இவை வேறு போலும்!' என்ற எண்ணமே.

எனவே இப்படியான ஒரு நெகடிவ் இமேஜ் உள்ளதை மாற்ற வேண்டும். எனவே அந்தப் பாத்திரத்தின் பெயரை அப்படியே பயன் படுத்தி கேலிச் சித்திர உணர்வை மாற்றி, ஒரு சீரிய தெளிவான உணர்வைக் கொண்டு வரவேண்டும். அதற்கு இவ்வலைப் பதிவு ஒரு முயற்சி.

ஆழ்வார்க்கு அடிமையாதல் அவ்வளவு சின்ன விஷ்யமல்ல. ஆனானப் பட்ட வேத வித்தர்களான ஸ்ரீராமானுஜர், ஸ்வாமி தேசிகன் போன்றோர் தலை மேல் வைத்துப் போற்றும் பெருந்தகைகள் ஆழ்வார்கள். இவர்களைப் பற்றிய புரிதல் சமகாலத் தமிழனுக்கு அவசியம். இந்த நோக்கில்தான் 90-களின் இறுதியில் தமிழின் முதல் மடலாடற் குழுவான தமிழ்.வலை யில் பாசுர மடல்கள் என்றொரு தொடர் எழுத ஆரம்பித்தேன். சும்மா விளையாட்டாக ஆரம்பிக்க அது வினையாக முடிந்து விட்டது. ஆயிரம் பேர்களில் ஸ்ரீமன் நாராயணனுக்கு 'குழி' என்ற பேருமுண்டு. இந்தக் குழியில் விழுந்தவர் எழுதவே இல்லை! என்பதைச் சுட்டுமுகத்தான் வந்தது போலும்! '

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோக மாளும்
அச்சுவை பெரினும் வேண்டேன்!

என்று அநுபவத்தில் விழுந்த இச்சுவையான வரிகள் பொய்க்குமோ? ஏதோ விளையாட்டாக எழுதப் போய் அதுவே சுவையாகப் போய்விட அன்றையிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுத, எழுத ஆர்வம் கூடுகிறது, சுவை கூடுகிறது, தெளியாத மறை நிலங்கள் புதிது, புதிதாய் புலப்பட ஆரம்பிக்கின்றன!

எனவே முதலில் பாசுர மடல்களை ஒருங்குறிக்குக் கொண்டு வரும் முயற்சி. பின் அம்மடல்கள் வந்த காலத்தில் அதற்கு வந்த எதிர்வினைகள் (பின்னூட்டங்கள்) இவைகளையும் பதிவு செய்ய எண்ணம். அது ஒரு காலத்தின் பதிவாகவும் இருக்கும். அதன் பின்னும் நான் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகளை அப்பதிவில் தொகுக்க இஷ்டம்.

ஆளவந்தார், இராமானுஜனின் குரு. அவர் பெயரில் சினிமாப் படம் வந்தாச்சு!
ஆழ்வார், இவர்கள் எல்லோருக்கும் குரு! ஆழ்வார் பெயரிலும் படம் வந்தாச்சு!
பாக்கி இருப்பது, ஆழ்வார்க்கடியான்தான் :-) இப்பெயரிலும் படம் வரும். வைகைப் புயல் வடிவேலுவை வைத்து வரும்! கோண, கோணக் கோவிந்தா! என்று கேலியாக நாமகீர்த்தனம் செய்தாலும் அதை மலரிட்டு செய்யும் அர்ச்சனையாகவே நாரணன் ஏற்றுக் கொள்கிறான். அவன் அருளாளன். பேரரருளாளன் (க்ருபாளு). அப்படி இருக்கும் போது சமகாலத் தமிழில், அரையும் குறையுமான அறிவுடன் நாம் எழுதும் கட்டுரையும் அவன் உவப்புடன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனெனில் அவன் தந்தை, நாம் அவன் பிள்ளைகள். வள்ளுவன் என்ன சொல்கிறான்:

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதார்

என்று. நாம் பேசும் அபத்தம் அவனுக்கு மழலைச் சொல்தானே! தாய் குழந்தையின் உளறல்களைக் கண்டிப்பதில்லை. மாற்றாக ரசிக்கிறாள்! நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு என்ன சாமன்யமான உறவா?

உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

என்றல்லலோ ஆண்டாள் சொல்கிறாள்.

மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம். அக்காலத்தில் பரப்பிரம்ம விசாரணை தொடங்குவது சாலச் சிறந்ததே!


கொசுறு: பிளாக்கர் பதிவுகள் தமிழ்மணத்துடன் மீண்டும் நல்லுறவிற்கு வந்துவிட்டன.

12 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) 12/24/2006 04:50:00 AM

ஆழ்வார்க்கடியானாக இருக்க மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கண்ணன் ஐயா. நண்பரிரவிசங்கர் கண்ணபிரான் திஸ்கியில் இருந்த உங்கள் பாசுரமடல்களின் சுட்டிகளைக் கொடுத்திருந்தார். ஒவ்வொன்றாக முதலில் இருந்து படித்துக் கொண்டு வந்தேன். அதில் தோன்றிய எண்ணங்களைச் சொல்ல முடியாமல் இருந்தது. இனி அவற்றைப் பின்னூட்டங்களாக இடலாம். ஒருங்குறியில் தனி வலைப்பூவாக இடுவதற்கு மிக்க நன்றி ஐயா.

பார்த்தசாரதியின் ஆயிர நாமங்களைப் பற்றிச் சொல்லியிருந்தீர்களே. அடியேனின் ப்ரொபைலைப் பார்த்தீர்களா? :-)

வள்ளுவரின் குழலை வைத்து அடியேனைப் போன்ற அரைகுறைகளுக்கு இருந்த சிறு தயக்கத்தையும் நீக்கி விட்டீர்கள் ஐயா. ஒழிக்கவும் ஒழியாத உறவு உண்டு பெருமானுடன் நமக்கு.

முடிந்தால் அடியேனின் 'கோதை தமிழ்' பதிவுகளையும் கொஞ்சம் பாருங்கள் ஐயா.

http://godhaitamil.blogspot.com/

Jeeva Venkataraman 12/25/2006 11:21:00 AM

//ராஜாஜியின் சிஷ்யராக இருந்தும் 'ஆழ்வார்க்கடியானை' ஒரு கேலிச் சித்திரமாக உருவாக்கி தமிழ் உலகில் உலவ விட்டார். 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு' என்று விளையாட்டாகச் சொல்லும் போதும் கூட ஒற்றுமை உணர்வை விட சட்டென மனதில் படிவது, 'ஆகா! இவை வேறு போலும்!' என்ற எண்ணமே.
//
பொன்னியின் செல்வனை எத்தனையோ முறை படித்திருந்தாலும், நீங்கள் சொல்வது போல் ஒருபோதும் எண்ணம் தோன்றியதில்லை.
ஆழ்வார்க்கடியான் பாத்திரம் மேல் பெரும் மதிப்புதான் ஏற்பட்டிருந்தது.

குசும்பு உங்கள் பக்கம் தான் தெரிகிறது!
;-)

குமரன் (Kumaran) 12/25/2006 09:51:00 PM

கண்ணன் ஐயா. அடியேன் இந்தப் பதிவிற்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேனே. வரவில்லையா?

நா.கண்ணன் 12/25/2006 10:00:00 PM

//குசும்பு உங்கள் பக்கம் தான் தெரிகிறது!;-) //

சரி! அட்சதை போட்டாச்சு, பின்ன சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியதுதான் :-)

ஆழ்க்கார்டியான் பார்க்கும் போது காக்கை சிவன் கோயில் கோபுரத்திலுள்ள ஒரு சுதையில் உட்கார, சுதை உடைந்து விடுகிறது.

'அடடா! இதுவொரு வைஷ்ணவக் காக்காய்' என்பான் ஆழ்வார்க்கடியான் (சரியான வசனம் மறந்துவிட்டது)

இது குசும்பு இல்லையா? ;-)

நா.கண்ணன் 12/25/2006 10:03:00 PM

//கண்ணன் ஐயா. அடியேன் இந்தப் பதிவிற்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேனே. வரவில்லையா? //

குமரன் ஊருக்குக் கிளம்பற அவசரத்தில் போட்டாச்சு என்று எண்ணியிருந்தேன். திருமடலில் (Gmail) இருந்து பின்னூட்ட அநுமதி சில நேரங்களில் பிழைத்துவிடுகிறது!

உங்கள் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்ட ஞாபகம்!

குமரன் (Kumaran) 12/25/2006 10:24:00 PM

ஆமாம் கண்ணன் ஐயா. கோதை தமிழ் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டீர்கள். நன்றி.

ஜடாயு 12/27/2006 03:16:00 PM

கண்ணன், தங்கள் பாசுர மடல்களைப் பதிவில் ஏற்றுவதற்கு வாழ்த்துக்கள். இவை நம் மதியிலும் ஏற மாயவன் கருணையை இறைஞ்சுகிறேன்.

// 'அடடா! இதுவொரு வைஷ்ணவக் காக்காய்' என்பான் ஆழ்வார்க்கடியான் (சரியான வசனம் மறந்துவிட்டது) //

அது ஆ.அடியான் சொல்லும் வசனம் அல்ல.

"சீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்கையே, சிவன் கோயில் கோபுரத்தை நன்றாய் இடித்துத் தள்ளு" என்று வீர வைஷ்ணவர்கள் சொல்லுவார்கள் என்பதாகக் கல்கி எழுதுவார்.

FYI, மார்கழி மாதத்தில் அடியேனும் ஒரு பதிவு இட்டுள்ளேன் - "கண்ணன் எந்தக் குலம்?" என்பதாக.
http://jataayu.blogspot.com/2006/12/blog-post_25.html
படித்துக் கருத்தைக் கூறுங்கள்.

நா.கண்ணன் 12/27/2006 03:56:00 PM

//"கண்ணன் எந்தக் குலம்?"//

மிக அழகான பதிவு. இன்று கூடப் போய் வந்தேன். நான் அனுப்பிய பின்னூட்டம் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று நம்புகிறேன். மீண்டுமொன்று அனுப்புகிறேன். நூற்றாண்டுக் கோபங்கள் 'வெங்காயத்தின்' பின்னூட்டத்தில் தெரிந்தது. இந்தியா இப்பிரச்சனையை எப்போது, எப்படி சமாளிக்கப் போகிறது?

ஆ.அடியான்...விளக்கத்திற்கு நன்றி. பள்ளிப் பருவத்தில் படித்தது. ஒரிஜினல் மணியம் படங்களுடன்!

Sridhar Venkat 12/27/2006 05:23:00 PM

ஐயா நா கண்ணன் அவர்களுக்கு,

நல்லதொரு முயற்சி!

//ஆனால், கல்கிக்கு குசும்பு உண்டு. பாரதியை 'மகாகவி என்று சொல்லலாமா?' என்று தலையங்கம் எழுதினார்! ராஜாஜியின் சிஷ்யராக இருந்தும் 'ஆழ்வார்க்கடியானை' ஒரு கேலிச் சித்திரமாக உருவாக்கி தமிழ் உலகில் உலவ விட்டார். 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு' என்று விளையாட்டாகச் சொல்லும் போதும் கூட ஒற்றுமை உணர்வை விட சட்டென மனதில் படிவது, 'ஆகா! இவை வேறு போலும்!' என்ற எண்ணமே.//

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்பல அரிய நுட்பங்கள் அடங்கிய பொக்கிஷம். அதில் மிகச் சிறப்பான பாத்திரம் ஆழ்வார்க்கடியான். ஒரு தெனாலிராமன் போல், ஒரு பீர்பல் போல், அறிவிற் சிறந்த விதூஷகனாக கல்கி வடிவமைத்திருப்பார்.

அந்த பாத்திரம் (வெறும்) கேலிசித்திரமாக உங்களுக்கு தெரிவது வியப்புதான்.

அடுத்தது சைவ, வைணவ பேதங்களைப் பற்றி அவர் சொல்லும் தகவல்களும் அந்த கால கட்டத்தில் நடந்தவையே. ஆழ்வார்க்கடியான் நம்பியின் ஒரு வீர வைஷ்ணவன். அவருடைய அண்ணன் ஈசானிய சிவபட்டர் ஒரு வீர சைவர். இப்படி அந்த பலர் தங்களுக்கு இஷ்டப்பட்ட சமயத்தை தேர்ந்தெடுத்து அந்த மார்க்கத்தில் நல்ல தேர்ச்சி பெற்று அதை தீவிரமாக பின்பற்றி வந்திருந்தனர். இப்பொழுது இணையத்தில் நடக்கும் மதச் சண்டைகளை பார்க்கும்பொழுது இதேதான் அந்த காலத்திலும் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காலங்கள் மாறலாம் ஆனால் மனிதன் மனம் மாறாது அல்லவா?

நா.கண்ணன் 12/27/2006 05:57:00 PM

ஸ்ரீதர் வெங்கட்:

பொன்னியின் செல்வனைப் பிடிக்காதோர் யாரேனுமுண்டோ?

ஆயினும் பாரதி விவகாரத்தில் கல்கியின் நிலைப்பாடு குறித்து தமிழக இலக்கிய வட்டத்தில் விமர்சனமுண்டு.

ஆழ்வார்க்கடியான் எனும் சொல் மிகப் பொருள் வாய்ந்தது. அது ஒரு புரட்சியின் ஊடு பொருள். தமிழக வைணவ பாரம்பரியம் அறிந்தவருக்கு நான் சொல்வது புரியும். அதை வெறும் விதூஷக, தெனாலிராமன் போன்றவை தரும் இமேஜிலிருந்து மாற்றுவதே என் முயற்சி.

முடிந்தால் பாசுர மடல்களை வாசியுங்கள். நான் சொல்வது புரியும்.

ஆழ்வாருக்கு அடிமையாதல் வேடிக்கை அல்ல.

Sridhar Venkat 12/27/2006 06:35:00 PM

உங்களின் பதில்களுக்கு மிக்க நன்றி.

தங்களின் பாசுர மடல்களை வாசித்தேன். மிகவு அரிய முயற்சி! உங்களின் பல கருத்துக்களுடன் என்னையும் நான் அடையாளப் படுத்திக் கொள்ள முடிந்தது.

//அதை வெறும் விதூஷக, தெனாலிராமன் போன்றவை தரும் இமேஜிலிருந்து மாற்றுவதே என் முயற்சி.//

உங்கள் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்.

பொ.செ.னில் ஒரு wit and wisdom உள்ள வீர வைஷ்ணவ பாத்திரத்திற்கு ஆழ்வார்க்கடியான் என்ற பெயர். அந்த பாத்திரத்தையும் பதத்தையும் நாம் குழப்பிக் கொள்வதில்லை என்பது எனது எண்ணம். நாளை ஆழ்வார் என்று ஒரு திரைப்படம் வரப்போகின்றது. இந்த புது ஆழ்வார் ச்சும்மா பறந்து பறந்து எதிரிகளை பந்தாடினாலும் ஆச்சர்யமில்லை. :-))))

நா.கண்ணன் 12/28/2006 07:45:00 AM

//பொ.செ.னில் ஒரு wit and wisdom உள்ள வீர வைஷ்ணவ பாத்திரத்திற்கு ஆழ்வார்க்கடியான் என்ற பெயர். அந்த பாத்திரத்தையும் பதத்தையும் நாம் குழப்பிக் கொள்வதில்லை என்பது எனது எண்ணம். நாளை ஆழ்வார் என்று ஒரு திரைப்படம் வரப்போகின்றது. இந்த புது ஆழ்வார் ச்சும்மா பறந்து பறந்து எதிரிகளை பந்தாடினாலும் ஆச்சர்யமில்லை. :-))))//

முதலில் இப்படியொரு பதப்பிரயோகம் செய்த கல்கிக்கு நன்றி சொல்லத்தானே வேண்டும் :-) அந்தப் பாத்திரம் பிடித்ததால்தான் அதைத் தேர்வு செய்தேன்.

இப்போது 'ஆழ்வார்' என்றொரு படம் வருவானேன்? 'ஆழ்வார்' என்ற பேர் தமிழகத்தில் பாப்புலராகியிருக்கு. எனவே பேரைப் பார்த்து வருவார்கள். இப்போது 'ஆழ்வார்க்கடியான்' என்ற பேரைப் பார்த்து நீங்கள் வரவில்லையா? அது போல்.

சினிமாவில் டிஷ்யும் குத்து. பேர் பார்த்து என் பதிவிற்கு வந்தால் ஆன்மீக, இலக்கிய, சமூகவியல் அலசல். எப்படியும் 'ஆழ்வார்' என்ற பேருக்குப் பலனுண்டு :-)