திருபிதிகா கொரியானா

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ 'திமி, திமி' நடனம் பற்றிச் சொல்லப் போகிறேன் என்று எண்ன வேண்டாம். நேற்று, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு வித்தியாசமான அநுபவம் கிடைக்குமென்று நான் எண்ணவில்லை. 3 நாட்கள் விடுமுறை. என்ன செய்யலாமென ஆலோசித்து ஒரு வெந்நீர் ஊற்று உள்ள இடத்திற்கு செல்லலாமென இங்குள்ள இந்தியர்கள் (80% தெலுங்கு) தீர்மானித்தோம். 24 தேதி அங்கு நேரத்தைச் செலவு செய்துவிட்டு (வாத்சாயனர் போன்ற ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும் இடம் கொரிய, ஜப்பானிய வெந்நீர் ஊற்றுகள். ஏனெனில் இங்கு ஆடை ஏதுமில்லாமல்தான் உலவ வேண்டும் (ஆண்/பெண் தனித்தனி !!) அடுத்த நாள் முற்பகல் பொழுதைக் கழிக்க ஹே-இன்-சா (ஹே-இன்-கோயில்)விற்குச் சென்றோம்.அன்று ஏதோ விசேஷ பூஜை நடந்து கொண்டு இருந்தது. புத்தர் நம்மாளு என்பதால் நாங்கள் சகஜமாக உள்ளே சென்றோம். உண்மையில் பௌத்தம் இந்திய தந்திர சம்பிரதாயத்தை வளர்த்தெடுத்த மதம். கோயிலுக்குள் போகுமுன் ஸ்வஸ்திகா வடிவிலிருந்த ஒரு மண்டலத்தில் சுற்றி வந்து (பிரகாரத்தைச் சுற்றுவது போல்) கோயிலுக்குள் சென்றால் பூஜை நடந்து கொண்டு இருந்தது. அன்றைய விசேஷபூஜை 'திருபிதிகா கொரியானா' என்றழைக்கப்படும் பௌத்த போதனைகளுக்கு! இவை மொத்தம் 80,000 மரவார்ப்புகள்.


படம்: செந்தில் விஸ்வநாதன்


77 வருடங்கள் எடுத்துக் கொண்டு 1087-ல் இதைக் கொரியர்கள் செய்வித்து இருக்கின்றனர். இடையில் இவை ஒருமுறை அழிவுற்று, மீண்டும் 1236-ல் செய்விக்கப்பட்டிருக்கிறது! இது குறித்த ஆங்கில ஆவணப் பக்கம் காண சொடுக்குக! இது பற்றி நான் அறிந்திருந்தாலும் இவை பாதுகாக்கபடும் கோயிலுக்கு, அதுவும் கிறிஸ்துமஸ் தினத்தன்று செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்தப் பழம் வேதங்களுக்கு நான் என் கையால் பூஜை செய்வேன் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எப்படி, 'குரு கிரந்த்' என்று சிக்கியர்கள், அவர்களது குருவின் திருவாய்மொழிக்கு பூஜை செய்கிறார்களோ அதுபோல் இவர்கள் இந்த நூற்களுக்கு பூஜை செய்கின்றனர். அழகிய செம்புச் சொம்பு போன்ற ஒன்றில் நீர் ஊற்றி, இப்புத்தகங்களுக்கு ஆராத்தி செய்தோம். சரஸ்வதி பூஜை அன்று செய்திருக்க வேண்டியது கிறிஸ்துமஸ் அன்று நடந்திருக்கிறது!!

இந்த பூஜையில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட எங்களுக்கு புத்த பிட்சுக்கள் தங்கள் கையால் செய்த சைவ உணவை இட்டனர். மௌனமான சூழலில் இவ்வுணவை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு உண்டது என்னைச் சங்க காலத்திற்கு இட்டுச் சென்றது. திருபிதிகா கொரியானா போல் இவை அக்காலத்தில் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு நடைமுறையில் இருந்திருக்கும். ஒரு சுவடு கூட இல்லாமல் பௌத்தத்தை தமிழர்கள் அழித்துவிட்டனர். ஆனால் 1000 வருடங்களுக்கும் மேலாக மிக அழகான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு இந்திய பொக்கிஷத்திற்கு என் நன்றிகளை, என் வந்தனங்களை அன்று சமர்பிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்திய மரபு ஆவணத்தில் ஈடுபட்டுள்ள எனக்கு இது ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் அநுபவம்!


படம்: செந்தில் விஸ்வநாதன்

2 பின்னூட்டங்கள்:

ஜடாயு 12/27/2006 03:33:00 PM

|| ஓம் நமோ பகவதே புத்தாய ||

கண்ணன், கற்பனை செய்து பார்க்கிறேன். உண்மையிலேயே அது மிகவும் சிலிர்ப்பூட்டும் அனுபவமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

// திருபிதிகா கொரியானா போல் இவை அக்காலத்தில் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு நடைமுறையில் இருந்திருக்கும். ஒரு சுவடு கூட இல்லாமல் பௌத்தத்தை தமிழர்கள் அழித்துவிட்டனர். //

இது சரியான கருத்து அல்ல.

பண்டைக் காலத்தில் வேதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை, அவற்றில் உள்ள கருத்துக்களே தமிழ் உணர்ச்சியில் ஊடுருவின. மதம் என்பது நூலறிவாக அல்ல, அனுபவமாக இருக்க வேண்டும் என்ற இந்து ஆன்மிக சிந்தனையே இதற்குக் காரணம். சைவ,வைணவ சமய தத்துவங்கள் எல்லாமே மூல நூல்களின் மொழிபெயர்ப்பாக அல்ல, அவற்றைப் பின்பற்றிய தமிழ்ச் சான்றோர்களின் வாய்மொழியாகவே நமக்குக் கிடைத்தது. இது ஒரு அற்புதமான விஷயம்!

இதே போலத் தான் திரிபிடகம், ஜைன நூல்கள் இவற்றில் உள்ள கருத்துக்களும் பிட்சுக்களாலும்,சிரமணர்களாலும் பரப்பப் பட்டன. மணிமேகலை, நீலகேசி போன்ற நூல்கள் முழுதும் அவை உள்ளன. திரிபிடகம் பழந்தமிழில் இருந்தது என்பதற்கு ஏதாவது வரலாற்று, இலக்கியச் சான்று உள்ளதா??

மத நூல்களை நேரடியாக மொழிபெயர்க்கும் பழக்கத்தை முதலில் கொண்டு வந்தது பைபிள் தான் - கிறிஸ்தவ மிஷநரி மார் தான் அதைச் செய்தது. தமிழில் கீதை, ராமாயணம், பாரதம் போன்ற வடமொழி நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புக்கள் கூட 16,17-ம் நூற்றாண்டு வாக்கிலே தான் வந்தன.

மேலும், பௌத்தம் இந்தியாவில் அழிந்ததன் மூல காரணம் இஸ்லாமிய படையெடுப்பு தான். டாக்டர் அம்பேத்கரும் இதையே கூறியுள்ளார். எனது பழைய பதிவு ஒன்றைப் பாருங்கள்:
http://jataayu.blogspot.com/2006/10/blog-post_116196775122737411.html

நா.கண்ணன் 12/27/2006 04:08:00 PM

அன்பின் ஜடாயு:

நமது வேத, உபநிஷத்துக்கள் 'ஸ்மிருதி' எனும் வாய்மொழிப் பரவல். பௌத்த ஜாதகக் கதைகள், திரிபிடகம் போன்றவை தென், கிழக்காசியாவிற்கு எழுத்து வடிவில் பரவியிருப்பதைப் பார்த்தால் இந்தியாவிலும் இம்முறை இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

பெர்லின் அரசு நூலகத்தில் உலகின் மிகத்தொன்மையான ஓலைச் சுவடி ஒன்று உள்ளது. அது கி.மு. 1-3ம் நூற்றாண்டு என்று கருதுகிறார்கள். கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப் பட்டது. அது பௌத்த போதனைச் சுவடி. இந்திய வரிவடிவில். எனவே அவர்கள் பாணி 'ஸ்மிருதி' என்றில்லாமல் எழுத்தில் பரவியது என்று தெரிகிறது.

தமிழகத்தில் ஏன் விகாரம், பௌத்த நூல்கள் போன்றவை காட்சிக்குக் கூட இல்லை. காஞ்சிவரத்தைச் சேர்ந்த புத்த பிட்சுக்கள் ஜப்பானில் ஜென், கொரியாவில் ஹங்குல் என்று மிக ஆழமான கலாச்சார விழுமியங்களை அளித்திருக்கும் போது, தமிழகத்தில்? ஒன்று கூட இல்லையே! இதை முஸ்லிம் படையெடுப்பு செய்தது என்று நம்புவது கடினமாக உள்ளது. எனக்கென்னவோ சீனி.வேங்கிடசாமியின் கருத்து சரி என்று படுகிறது!