பிறப்பொக்கும்


பீகிங்கில் எடுத்தது! உத்திரவின்றி உள்ளே நுழையாதே நகர் வாசல்!



பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அடிப்படை உயிரியல் உண்மை. நீரின்றி அமையாது உலகு என்பது போன்றதொரு உண்மை. இது வள்ளுவர் காலத்தில் மிக உயர்ந்த விழுமியமாக இருந்திருக்க வேண்டும். புத்தரின் வேறுபாடுகளற்ற சமுதாயத்தின் விழுமியமாக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே டாக்டர் அம்பேத்கார் பௌத்த வழிமுறைகளை சிபாரிசு செய்தார்.
இந்தியாவிற்கு என்றில்லை எல்லா சமூகங்களிலும் இதை நடைமுறைப் படுத்துவதில் பிரச்சனைகள் உள்ளன. வருகின்ற வருடத்தில் உலகின் முதல் ஆறு பணக்காரர்கள் அமெரிக்காவில் இருப்பார்கள் என்பது கணக்கு. இவர்களிடம் உலகின் 59% செல்வம் இருக்கும். இவர்களிடம் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்ல முடியாது. இவர்கள் வேறு படிநிலை (ஜாதி எனும் பதத்தைத் தவிர்கிறேன்).

இன்று 2006ம் வருடத்திற்கு விடை கொடுக்கும் நாள் இங்கு நடந்தது. எனது சக விஞ்ஞானி (பெண்) ஒருவருக்கு ஆண்டின் சிறந்த ஆய்வாளர் என்ற பரிசு கிடைத்தது. கூடவே, ஆய்வகத்தின் மிகச் சிறந்த தொழிலாளி என்று குப்பை கூட்டுபவருக்கு பரிசு கிடைத்தது. எல்லோரும் ஒரே மேடையில். எல்லோருக்கும் ஒரே பரிசு. வித்தியாசமான அநுபவம். இந்திய வம்சாவளியில் வந்த எனக்கு இது புதுமையாக இருந்தது (கசடுகள் இன்னும் நீங்க வேண்டும்!). இன்னும் இங்கு ஆச்சர்யப்படுத்தும் விஷயம், கக்கூஸ் கழுவும் பெண்கள் மதியம் ரெஸ்டாரெண்டில் சமையல் வேலையில் ஈடுபட்டு இருப்பர். நமக்கு ஒருமாதிரி இருக்கும். ஆனால், ஒரு கொரியனுக்கு அது பொருட்டாக இருப்பதில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை ஒரு உயர்ந்த நிலைக்கு இந்தியா எடுத்துச் சென்றுள்ளது. அதாவது, பிற ஜீவன்களுக்கும் வாழும் உரிமையுண்டு எனும் புரிதல். இதனாலேயே, அங்கு மட்டும் உலகின் மிக அதிக சாகபட்சிணிகள் வாழ்கின்றனர் (ஏறக்குறைய 600 மில்லியன் வெஜிடேரியன்). ஆனால், கொரியா பௌத்த நாடாக இருந்தாலும் உயிர்க்கொலைக்கு தயங்குவதே இல்லை. ஒரு நல்ல நாள், விசேஷம் என்றால் ஊதுவத்தி ஏற்றுகிறார்கள். கூடவே அறுத்த பன்றியின் தலையையும் வைக்கிறார்கள். இது நமக்குப் புரிவதில்லை.


தைவானில் எடுத்தது. ஒரு கோயிலில்!! பார்ப்பவர்களின் முக பாவத்தைக் கவனியுங்கள்!


இவர்களிடமிருந்து நாம் சமூகவியல் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் நம்மிடமிருந்து ஜீவ காருண்யம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ஒரு புதிர்!

0 பின்னூட்டங்கள்: