பிணக்குறும் பேதமை! ஜே.கே

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தனது வாழ்நாள் முழுவதையும் மனித மேம்பாட்டிற்கு செலவிட்டவர். துயரற்ற, பிளவற்ற அடிப்படை மனித (மனது) மாற்றத்தையே அவர் குறிவைத்தார். இந்த நீண்ட, நெடிய அவரது பயணத்தில் அவர் உலகின் தீர்க்க மதியுள்ள பலருடன் தொடர் உரை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஆலன் ஆண்டர்சன்னுடன் அவர் நிகழ்த்திய கலந்துரையாடல் இப்போது கூகுள் புழக்கடை சினிமாவில் கிடைக்கிறது. அவற்றை முறைப்படுத்தி இங்கு போடலாமென்று ஒரு ஆசை.கண்டெடுத்த முத்துக்கள்:

மானுடம் என்பது முழுமையானது, பிரபஞ்சம் என்பது எப்படி முழுமையாக இருக்கிறதோ அது போல். எனவே நான் வேறு, உலகு வேறு அன்று. நான்தான் உலகம், உலகம்தான் நான். பிளவுற்று அவதியுற்று நிற்கும் இவ்வுலகம் மனிதர்கள் உருவாக்கியதே! இங்கு காணும் பிளவுகள் காலம், காலமாக, தொன்று தொட்டு இருந்தவையன்று. அவை மனிதர்களால், தங்கள் மதி நலக் குறைவால் உருவானவையே.

எனவே உலகில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென துடிப்பவர்கள், முதலில் தங்களை மாற்றிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். தங்களுள் ஒரு சிறு மாறுதலைக் கூட அநுமதிக்காதவர்கள் புற உலகில் வன்முறையால், சட்ட ஒழுங்குகளால் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் அது தற்காலிகமானதே.

நான் இந்துவா? நான் பௌத்தனா? நான் கிறிஸ்தவனா? நான் கம்யூனிஸ்டா? நான் பிராமணனா? நான் தலித்தா? இந்த நாமகரணம் யார் தந்தது? ஏன் தந்தது? இதன் தோற்றம் என்ன? என்னுள் நிகழ வேண்டிய மாற்றமென்ன?

மனிதன் என்ற சொல் 'மனது' எனும் வேர்ச் சொல்லிலிருந்து வருகிறது. ஆக, மனது கொண்டவன் மனிதன். இந்த 'மனதில்' மாற்றம் நிகழும் போது மனிதன் மாறிவிடுகிறான்.

ஜே.கேயின் மொழி துல்லியமான, தெளிவான மொழி. வெட்டிப் பேச்சு இல்லாத மொழி. எனவே 5 நிமிடம் என்றாலும் கவனமாகக் கேட்கவேண்டும். அது ஒரு யுகப்புரட்சியின் வித்தைக் கொண்டிருக்கலாம். வாழ்க.

0 பின்னூட்டங்கள்: