பொறுப்பு: ஜேகேஇப்பதிவு வாசகர்களுக்கு என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நாம் நடக்கும் வாழ்வுப் பாதையில் புத்தாண்டும் ஓர் நாள். நேற்றுப் போல் இன்று என்றில்லாமல் இன்று புதிதாய் இருக்க வேண்டும். இவ்வாண்டில் மனத்திற்கினியன செய்ய வேண்டும், ஆக வேண்டிய காரியங்களை முடிக்க வேண்டும், ஒத்தி போடும் மனதை கொஞ்சம் ஒத்தி போட்டு நினைத்ததை முடிக்க வேண்டும் என்றெல்லாம் நாம் இந்த தினத்தில் எண்ணுவதுண்டு. பலர் இதை எழுதி வைப்பதுமுண்டு.

வாழ்வு என்பது தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கிய பயணம். புதிய, புதிய சவால்கள் வாழ்வில் நித்தம் தோன்றிய வண்ணமுள்ளன. இச்சாவல்களை சந்திக்கும் திறன், சக்தி, தெம்பு நம்முள் நிறைய இருக்குமாறு நம்மை நாம் எப்போதும் 'நெருப்பணைக்கும் குழு' இருப்பது போல் 'தயார் நிலையில்' வைத்திருக்க வேண்டும். அதுவொரு கலை.

ஜே.கே இன்றைய பதிவில் இது பற்றிப் பேசுகிறார். உலகில் இன்று நம் கண்முன் காணும் பிரச்சனைகள் அடிப்படையில் நாம் உருவாக்கியவையே. எனவே அப்பிரச்சனைகள் என்னிலிருந்து வேறுபட்டவை என்பது போல் பார்க்காமல் அவை, நான் இயங்கும் விதத்திலிருந்து பிறப்பவை என்பதைப் புரிந்து கொண்டால், நம் நடத்தை மாறும். மாறும் அந்நந்நடத்தை புதிய, தேவையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார்.

வீட்டில் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம். பிரச்சனைக்கு ஒரு காரணம் இருக்கும். ஆயினும் இக்காரணம் நேற்று நாம் கண்டுணர்ந்த காரணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இப்போது வேறு காரணம் இருக்கலாம். ஆனால், நேற்றைய நம் முடிவுகள் இன்றைய பிரச்ச்னைக்கு முன் வந்து பிரச்சனையை முழுவதுமாய் காண விடாமல் செய்து விடுகிறது! [நேற்றுதான் 'வெயில்' படம் பார்த்தேன். அதில் அண்ணன்காரன் கோபத்தில் வீட்டிலிருந்த காசு, நகையை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். 20 வருடங்களுக்குப் பின் வீட்டில் மீண்டுமொரு சம்பவம் நடக்கிறது. அதற்கு இவனே காரணமென்று அப்பா திட்டுகிறார். ஆனால் அவன் திருந்தி நல்லவனாக வந்திருப்பதை, அவனைப் பற்றி அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ள அபிப்பிராயம் முன் வந்து தடுக்கிறது]

வலைப்பதிவு உலகம், மடலாடற் குழுக்கள் செயல்படுவது இந்த 'அபிப்பிராயம்' என்னும் சமாச்சாரத்தால். அபிப்பிராய பரிமாறல் இல்லையெனில் மடலாடற்குழுக்கள் இழுத்து மூட வேண்டியதுதான். ஜேகே அடிக்கடி இந்த 'அபிப்பிராயம்' பற்றிப் பேசுகிறார். ஒரு பிரச்சனை நம் முன் நிற்கும் போது அப்பிரச்சனை என்னவென்று காணவிடாதவாறு நம் அபிப்பிராயங்கள் முன் வந்து நிற்கின்றன. எந்தவித அபிப்பிராய, சித்தாந்தப் பின்புலன்களும் இல்லாமல் ஒரு நிகழ்வை நம்மால் காண முடியுமா? என்று கேட்கிறார் ஜேகே. அப்படிச் செய்யவில்லையெனில் எப்போதும் நீ உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே தவிர நிகழ்வைக் காணவில்லை என்றாகிறது. இது யாருக்குப் பொருந்துமோ, விஞ்ஞானிகளுக்கு இந்த நோக்கு மிக அவசியமானது. சத்திய தரிசனம் காண விரும்புவோர் அது நிகழும் போது, நிகழ்கின்ற விதத்தில் கண்டு ரசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நமக்கு தரிசனம் வந்தும் காணத்தெரியாமல் போய்விடுவோம். 'கலியுகக் கண்ணன்' படத்தில் இப்படித்தான் கண்ணன் தேங்காய் சீனிவாசன் முன் தோன்றுவார். அவரை இவன் கண்டுகொள்ள மாட்டான். ஏனெனில் அவர் என்.டி.ராமாராவ் போல் இல்லாமல் இருப்பதாலே! :-)

2 பின்னூட்டங்கள்:

Johan-Paris 12/31/2006 09:52:00 AM

இன்பமே!சூழ்க!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்

Boston Bala 1/06/2007 03:30:00 PM

புத்தாண்டு வாழ்த்துக்கள்