வாழி, மனமே! கைவிடேல்!!

புத்தாண்டு (2007) கிழக்கில் பிறந்து விட்டது. இன்னும் சில நாடுகளில் கருவில் இருக்கிறது. எண்ணிலா அதிசயங்களில் இதுவும் ஒன்று. வாழ்வின் சிறப்பு அறிந்து, நம்பிக்கையுடன் தொடர புத்தாண்டில் வாழ்த்துவது ஒரு நற்பழக்கம்.

புத்தாண்டு என்றில்லை, எப்போதும் மனதில் இருக்க வேண்டியது புதுமை, எளிமை, தேடல், நம்பிக்கை. இதையெல்லாம் வாக்கில் வடித்திருக்கும் இருவரின் பாடல்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எத்தனையோ துயர் நடுவிலும் நமக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறான் பாரதி. அவனது அசைக்க முடியாத நம்பிக்கை நல்ல உள்ளங்களில் தீயாய் பற்றிக் கொள்ளக் கூடியது. அவன் வேண்டுவனவே நாம் வேண்டுவனவும்.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

(நன்றி: மதுரைத் திட்டம்)
பாடல்: பாம்பே ஜெயஸ்ரீ

பாரதியைத் தெரிந்த அளவிற்கு சமகாலத் தமிழனுக்கு சடகோபனைத் தெரியுமா? என்றறியேன். இவரும் அதே திருநெல்வேலிக்காரர்தான். இவரும் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர். மானுடத்தின் மீதுள்ள இவரது நம்பிக்கை ஒரு தமிழ்ச் சமய நெறியையே உருவாக்கித்தந்துள்ளது. மிக்க அடக்கம், தீராத காதல், உலகின் மீதான அன்பு, நம்பிக்கை இவற்றின் மொத்த உருவம் நம்மாழ்வார். அவர் சொல்கிறார் "வாழி, மனமே! கைவிடேல்!!" என்று. உலகு இன்று இருக்கும் இருப்பில் மானுடத்தின் மீதான நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாகத் தளர்ந்து வருகிறது. ஆயினும், மானுடம் ஓர் நாள் வெல்லும்! அதைப் பறை சாற்றுவனவே இக்கவிதைகள்.

ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன், உலகுஎல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துஉழலும்
ஆழி வண்ணன், என்அம்மான்,
அம்தண் திருமாலிருஞ்சோலை
வாழி, மனமே! கைவிடேல்;
உடலும் உயிரும் மங்கஒட்டே. (திருவாய்மொழி)10.7.9
(நன்றி: மதுரைத் திட்டம்)

உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

0 பின்னூட்டங்கள்: