முற்பகல் செய்யின்.....

ஆங்கிலம் புரியக்கூடியவர் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு புழக்கடை சினிமா இதோ!

நெத்தியடி என்றால் அப்படியொரு நெத்தியடி! அம்மாடி!!

காலம் மாறுகிறது! நிச்சயமாக!!
Keywords: World Stands Up! talk show, YouTube, India, british, call center, computer, it, comedy, humor

வேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிதிருப்பள்ளியெழுச்சி என்பது சிற்றஞ்சிறுகாலை இறைவனை துயிலெழுப்புவது. இரவும், பகலும் நமக்குத்தான் என்றாலும் அதை இறைவன்பால் வைத்து அவனை இரவு பள்ளிக்கு அனுப்புவது, பின் எழுப்புவது எல்லாமே நம் சௌகர்யத்திற்குத்தான். முதலில் ப்ரியா சகோதரிகள் பாடியிருக்கும் வேங்கடேச திருப்பள்ளியெழுச்சிதனை தமிழில் கேளுங்கள். பின் தொடர்வோம் (படத்தைத் தொடுக).மிக அழகான தமிழ், மிக அழகான, தெளிவான வழங்கல். இரண்டு பேர் பாடுகிறார்கள் என்பதைத் துருவித்துருவிக் கேட்டாலும் கண்டு பிடிக்க முடியாது!

இப்பள்ளியெழுச்சிதனை சுப்புலட்சுமி அம்மா பிரபலப்படுத்திய பின்னும் இதன் பொருள் விள்ங்காமலே நம்மில் பலர் கேட்டுக்கொண்டு இருந்திருப்போம். அக்குறை இப்போது தீர்ந்தது. கவனமாகக் கேட்டால் இப்பள்ளியெழுச்சி பல விஷயங்களைச் சொல்வது புரிகிறது.

1. ஆழ்துயில் என்பது 'நான்' என்பது இல்லாமை. கண் விழிக்கும் போது 'நான்' மீண்டும் பிறக்கிறது. எனவே பள்ளியெழுச்சி என்பது பிறந்த நாள் வாழ்த்து.

2. நான் என்பது ஓர் உணர்வு. அது அரூபமானது. அதனால் பார்க்கமுடியும்.எனவே முதலில் கண்ணில் படும் உலகம் பேசப்படுகிறது.

3. பின் யார் பார்ப்பது என்ற கேள்வி வருகிறது? பிரம்மா கண்ணாடி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். கண்ணாடியில் முகம் பார்க்கிறோம். ஓ! அந்த அரூபத்திற்கு புகலிடமாக ஒரு உடல் உள்ளது என்று அறிந்து கொள்கிறோம். 'ஊனுடம்பு ஆலயம்' என்பது ஆன்றோர் வாக்கு. எனவே திருவேங்கடவன் கோயில் பேசப்படுகிறது.

4. உடல் என்ற காரிய வஸ்து உண்டென்றால் அதற்கொரு காரண வஸ்து இருக்க வேண்டும். நம் உடலை உருவாக்கித்தந்தவள் தாய். எனவே மகாதேவி என்றழைக்கப்படும் ஸ்ரீதேவி துதிக்கப்படுகிறாள். அவளை தியாகைய்யர் 'சீதம்மா! மாயம்மா!' என்கிறார். அவள்தான் மாயை. அவளே காணும் உலகிற்குக் காரணம். அவள் ஈசனுடன் இரண்டறக் கலந்தவள்.

5. உலகம் எவ்வளவு வசீகரமானது என்பதைக் கவித்துவத்துடன் வருணிக்கிறார் அண்ணா. தன்னை உலகின் சிறந்த கவிஞனாக்கு என்றும் வேண்டுகிறார்.

6. ஆழ்வார்களின் இன்தமிழை ஞாபகப்படுத்தி, உலகின் ரம்யங்களில் மிக முக்கியமானது இந்த இன்தமிழ் என்கிறார். 'தமிழுக்கும் அமுதென்று பேர்!'

7. இப்படைப்பை உருவாக்கி, காத்து, கெடுத்துழலும் பராசக்தியைப் பலவாறு புகழ்கிறார்.

8. படைத்தவன் ஒருவன் உண்டென்றால் அவனைக் காட்டும் குரு எவ்வளவு முக்கியமானவர். எனவே மணவாள மாமுனிகளின் பாத மலர்களைத் தொழுகிறார்.

9. இறுதியில் மிக முக்கியமான யோகத்தைப் பற்றிச் சொல்கிறார். யோகம் என்றாலே 'கலவி, சேர்க்கை' என்று பொருள். தனியாகப் பிரிந்து காண்பவன், காண்கின்ற உலகம் என்ற இரண்டு இருப்பது போல் போக்குக் காட்டும் மாயை, தன் கிருபையினால் இவனை இறைவனுடன் ஐக்கியப்படுத்திவிடுகிறது. பின் காண்பவன், காண்பவை இரண்டும் ஒன்றாகிவிடுகிறது. அப்போது திருப்பள்ளியெழுச்சி என்பது நமக்குத்தான் என்று புரிகிறது!!

தினமும் இதைக் கேட்க வேண்டும். அப்படிச் செய்வதால் நம் சுயரூபம் தெளிவு பெற்று ஆன்மப் பொலிவுறும்!! ஓம் தத் சத்!

பிகு: இறைச் சரணம் நடைபெறும் காலையில் கிரக தோஷம் என்பது தானாக விலகிவிடுகிறது.

நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (பாரதி)

மூலம் (சமிஸ்கிருதம்): எம்.எஸ்.சுப்புலட்சுமி

படிக்க வேண்டிய வலைப்பதிவு: சுப்ரபாதம்
Keyword: Sree Venkatesa Suprapatham, self awareness, awakening, dawn, prayer, astrology, planets, prabathi, surrender

மின்மினிப் போர் (ஸ்டார் வார்ஸ்)

Star Wars பற்றி புதிதாய் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்போது அதுவொரு இதிகாசமாகிவிட்டது (a legend). ஆனால் அப்படம் உருவானதற்கான பின்னணி எப்போதும் சுவாரசியமானது. எப்படி இந்திய சினிமாவில் கதாநாயகன் என்பவன் கையாளப்படுகிறான், செயல்படுகிறான், ஏன் எம்.ஜி.ஆர் (a hero) செத்துப்போவது போல் ஒரு படம் எடுத்தால் ஓடாது என்பது போன்ற பல விஷயங்களைப் புரிந்து கொள்ள இந்த நேர்காணல் உதவும்.

அதெல்லாம் விட நாம் ஜோசப் கேம்பல் எனும் ஞானியை, தத்துவ சித்தரை அறிந்து கொள்ள உதவும். இந்த நேர்காணலில் 'ஜோ' என பேசப்படுபவர் அவர்தான்.Keywords: myth, hero, psychology, religion, cinema, Joseph Campbell

நாணய நண்பன் (Paypal)

பணம் செயற்கை. அது இன்னும் செயற்கையாகிக் கொண்டு போகிறது! பண்டமாற்று என்பது போய் பணம் என்பது நாகரீக வளர்ச்சியடைந்ததன் அடையாளமாகிப் போனது. நான் சிறுவனாக இருந்த போது பண்டமாற்று இருந்தது. இரண்டு ஆழாக்கு (?) அரிசி கொடுத்துவிட்டு காய்கறி வாங்கி வருபவருண்டு. இப்போதுள்ள தமிழகத்தில் இது பற்றியாவது பேசமுடியுமா? இப்போது காசுப் புழக்கம் கூட வழக்கொழிந்து வருகிறது. எனது வெளிநாட்டுப் பயணங்களில் நான் hard cash எடுத்துச் செல்வதில்லை. எல்லாம் credit card வழியாகவே செலாவணி! இதை பிளாஸ்டிக் மணி (money) என்கின்றனர். அமெரிக்காவில் credit card கொண்டு டாக்சி ஓட்டுனருக்குக் கூட காசு கொடுக்க முடிகிறது. அந்த அளவிற்கு செலாவணி செயற்கையாகிக் கொண்டு வருகிறது.

இப்போது இணையம் வந்தவுடன், காசைக் கண்ணிலே காட்டவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது ;-) பண்டமாற்று போய், பொற்காசுகள் வந்தன, அது போய் செப்புக் காசுகள் வந்தன, அது போய் ஒன்றும் உதவாத அலுமினியக்காசு வந்தது, அது போய் பிளாஸ்டிக் காசு வந்தது. இப்போது அதுவும் போய் இலத்திரன் காசாகி (electronic cash) நிற்கிறது.

Paypal கணக்கை முதன் முதலில் பல வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் துவங்கினேன். இ-வாணிபம் என்பது பிரபலமான போது Paypal எனும் கருதுகோள் நிலை பெற்றது. நமக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதை Paypal கணக்குடன் சேர்த்துவிடலாம். உங்களிடம் இதுபோல் ஒரு கணக்கு இருந்தால், பெயர் கூட வேண்டாம், மின்னஞ்சல் முகவரியிலேயே காசை அனுப்பிவிடலாம்.

இது சிறு செலாவணிக்கு மிகவும் அனுகூலமாக இருக்கிறது. Freeware அல்லது Shareware வாங்குவதற்கு இது மிக எளிது! நான் எனது தொலைபேசி அட்டைகளை Paypal மூலமே வாங்குகிறேன். வங்கி வழியாகப் போய் வியாபாரம் செய்வதெல்லாம் நேரமெடுக்கக் கூடியது. ஒரே சொடுக்கில் விற்பனையாளரும், நுகர்வோரும் இதன் மூலம் இணைக்கப் படுகின்றனர். சின்ன நன்கொடைகள் செய்ய இது ரொம்ப வசதி. 1 டாலரிலிருந்து 100 டாலர்வரை சிரமில்லாமல் அனுப்பலாம். பேங்கில் போய் ஒரு டாலர் அனுப்பமுடியாது, பாருங்கள்.

Paypal வங்கியை விட சிறப்பாகச் செயல்படுகிறது! தமிழ் மரபு அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க இதை இப்போது பயன்படுத்தத் துவங்கியுள்ளோம். "கொடை மனது" சில நொடிகள்தான் நிற்கும். ரொம்ப யோசித்தால் எதற்கும் காசு கொடுக்கத் தோன்றாது. அந்த நொடிப்பொழுதுகளை சரியாக உப்யோகப்படுத்த Paypal உதவுகிறது. முதல் முயற்சியாக தொடங்கியுள்ள பக்கத்தைக் காண இங்கே சொடுக்குக!

ஆனால் அதற்கு முன் ஒரு Paypal கணக்கை ஆரம்பிக்க இங்கே சொடுக்குக!

கணக்கு ஆரம்பிக்க எந்தச் செலவும் கிடையாது! அதே போல் குறைந்த அளவாவது நமது கணக்கில் காசு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் கிடையாது. என் கணக்கு எப்போதும் 0.00 டாலர்தான். உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால் இணைத்துக் கொள்ளவும். இங்கு seller-தான் கமிஷன் கொடுக்க வேண்டும். Buyer அல்ல! எனவே மிகவும் சௌகர்யமானது!

எனவே காசுகள் உள்ளவர் (நிதி மிகுந்தவராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை பாருங்கள் :-) நன்கொடை தாரீர்! :-)

100 மில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கும் நிருவனமாக இது இப்போது வளர்ந்து நிற்கிறது. எல்லா நாடுகளிலும் செலாவணியாகும்படி செய்கிறார்கள். சிறு தொழில் அதிபர்களுக்கு உதவும் வண்ணம் பல மடலாடற்குழுக்கும், உதவி யோசனை வழங்கும் குழுக்கள் இப்போது உள்ளன. ஒருவரை நாம் அறிமுகப்படுத்தினால் reward bonus உண்டு.

கணக்கு ஆரம்பித்த பின் Paypal உங்களிடம் கணக்கு verification என்று எந்த மின்னஞ்சலும் அனுப்பாது. அப்படி நிறைய குப்பை அஞ்சல்கள் வரும். அதை அப்படியே கடாசி விடுங்கள். காசு அனுப்பியவுடன் அல்லது பெற்றவுடன் உங்களுக்கு வரும் வரவு, செலவுக் கணக்கையும் கடாசி விடாதீர்கள். காசு அனுப்பிய அடுத்த நொடி உங்களுக்கு மின்னஞ்சல் வந்து நிற்கும். வாழ்க உங்கள் இ-வாணிபம், மின் கொடைகள், மின் பரிசுகள், மின் தீபாவளிகள்!!

Keywords: Paypal, internet banking, e-commerce

சம்பவாமி யுகே! யுகே!இந்தியாவின் தத்துவ சாரமாக பகவத் கீதை அமைந்துள்ளதை எல்லா இந்தியப் பெரியவர்களும் சொல்லியிருக்கின்றனர். ஆதி சங்கர பகவத் பாதாள், ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா, ஸ்ரீ மாத்வர், பிரபுபாதா, மகாத்மா காந்தி, பரம்ஹம்ச யோகாநந்தர், விவேகாநந்தர், ரமண மகரிஷி, பாரதி, வள்ளுவன், சின்மயானந்தா இப்படி...இந்த வரிசை இந்தக் கண்ணன் வரை நீளும். என்ன சந்தடி சாக்கிலே நம்ம பேரையும் சேத்துட்டேன்னு பாக்கிறீங்களா? அது நம் முதுசொம். அதை அணுகுவதற்கு, அனுபவிப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்து தர்மத்தின் பலமே இதுதான் (இதை துஷ்பிரயோகம் செய்பவர்களும் உள்ளனர் ;-(

கீதை ஆழமானது. அதைப் பல்வேறு கோணங்களில் அணுகலாம். வரி, வரியாக வியாக்கியானம் செய்யலாம். அதையெல்லாம் பாரதி போன்ற பெரியவர்கள் செய்யட்டும். ஒரே ஒரு சொற்றொடருக்கு மட்டும் இன்று காலையில் எனக்குத்தோன்றிய ஒரு விளக்கத்தைத் தந்துவிட்டு, சலாம் போட்டு அமர்ந்துவிடுகிறேன்."சம்பவாமி யுகே! யுகே!" சோ! இதே தலைப்பில் நாடகம் போட்டிருக்கிறார். அதர்மம் தலைதூக்கி தர்மம் அழியும் போது ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுவேன் என்பது கீதாச்சார்யனின் வாக்குமூலம். ராகா.வணியில் திரு.கே.கல்யாணராமனின் உபன்யாசம் கேட்டுக் கொண்டிருக்கும் போது, "தர்மத்தை நிலை நாட்ட வருவேன் என்று சொன்னானே தவிர அதர்மத்தை ஒட்டு மொத்தமாக அழிக்க வருவேன் என்று சொல்லவில்லை" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். ஆனால், அவரின் இச்சொல் என்னை விட்டு இன்னும் நகரவில்லை!

அப்படியென்றால்? அதர்மத்தை அழிக்க முடியாது என்று பொருளா? இல்லை இறைவனுக்குத்தான் அந்த வல்லமை இல்லையா? இத்தகைய கேள்விகள்தான் இந்து தர்மத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அதர்மம் என்பதை நம் முன்னோர்கள் disorder, chaos, ignorance என்று கொள்கின்றனர்.

ஒருவகையான இராசயன மாற்றத்தைப் பற்றி நம்மவர் பேசுகின்றனர். முதலில் எல்லாமே சேரும், மண்டியுமாகக் குழம்பிக் கிடக்கிறது. அதிலிருந்து பின் தெளிவு பிறக்கிறது. அதர்மம் என்பது தெளிவற்ற தன்மை. அதர்மம் அக்ஞானத்தின் விளைவு.

பாருங்கள்! உலகின் கொடுங்கோன்மையர் அனைவரும் மகாமடையர்களாக இருப்பர். இரண்யன், தான்தான் கடவுள் என்றான். ஆனால் விஷமுண்டு சாகக்கிடக்கும் மகனுக்கு உயிர் உண்டாக்கமுடியவில்லை. அப்போதாவது புரிந்திருக்க வேண்டும். இராவணன் பராக்கிரமசாலி. தனது நண்பனான வாலி பிறன் மனை கவர்ந்து இறந்த சேதி அறிந்த பின்னும், விபிஷணன் புத்திமதி சொல்லி அகர்ந்த பின்னும் மடத்தனமாக இருந்து எல்லோரையும் இழந்தான். ஹிட்லர் ஏடாகூடமாக ஆர்ய உயர் வாதம் பேசி அற்பச்சாவு அடைந்தான். இவையெல்லாம் மடமை.

மடமையிலிருந்துதான் ஞானம் பிறக்க வேண்டும். சேர் மண்டிய குளத்திலிருந்துதான் செந்தாமரை பூக்கிறது! எனவே, அதர்மம் என்பது, கொடுங்கோன்மை என்பது, அறிவின்மை என்பது இராசாயன மாற்றத்திற்குத் தேவையான அடிச்சாறு. அதைக் காய்ச்ச, காய்ச்ச நல்மருந்து அதிலிருந்து வருகிறது! கடலைக் கடைந்த போது காமதேனு வந்தது, திருமகள் வந்தாள், தன்வந்திரி வந்தார். கடலின் அடிமட்டம் வாழ முடியாத ஓரிடம். கடலைக் கலக்கினால் எவ்வளவு மண்டி வரும்! ஆனாலும், அதிலிருந்து பல நல்ல சமாச்சாரங்களும் வந்திருக்கின்றன.

பத்மநாபன், பிரம்மாவைப் படைத்த கையோடு கூற்றுவனையும் படைத்தானாம்! நம்மாழ்வார் சொல்கிறார். இதுதான் அவன் சிருஷ்டி! நல்லது கெட்டது கலந்தே இருக்கும் படைப்பு. நமக்கு நிம்மதி வேண்டுமெனில் நன்மையை நாடுவோம். துரியோதனன் மாதிரி உலகின் கெட்ட விஷ்யங்களையே பார்த்துக் கொண்டிருந்தால் நாம் வாழவே முடியாது. இதை அறிந்துதான் உபநிஷத்து கேட்கிறது இறைவனிடம்:

அசதோமா சத் கமய
தமசோமா ஜ்யோதிர் கமய
ம்ரித்யோர்மா அமிர்தம் கமய
சாந்தி: சாந்தி: சாந்தி

என்று.

கெட்டவைகள் சூழ்ந்துள்ள என் உலகில் எனக்கு நல்லவை காண்பிக்க;
சோம்பிக்கிடக்கும் போழ்துகளில் உள்ளொளி தந்து உய்விக்க;
மரணம் சூழ்ந்துள்ள இவ்வுலகில் எனக்கு அமிழ்தம் தருக!
இதுவே எனக்கு சாந்தியைத் தரும்!
Keywords: Order, disorder, primordial chemistry, Goodness, Evil, Gita, Krishna, Upanishat, reincarnation

தலபுராணம்!

இந்தியப் பண்பாடு காலம் கடந்து நிற்பதற்கு புராண, இதிகாசங்கள் முக்கிய காரணம். இந்திய மெஞ்ஞானிகள் கண்டுணர்ந்த அளப்பரிய பேருண்மைகளை, தத்துவங்களை எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் புராணம். கதை கேட்கும் பழக்கம் என்பது சுவையான மனிதப்பண்பு. எல்லா கலாச்சாரங்களிலும் கதைகளுண்டு. கதைகள் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் நடக்கிறது. இந்தப் பழக்கத்தை ஒரு யுத்தியாக பயன்படுத்தினர் இந்தியப் பெரியவர்கள். தத்துவங்களை இளகாப் பரிமாணத்தில் (abstract) கொடுத்தால் அது பழக்கப்படாத உள்ளங்களுக்கு போய் சேராது என்று கருதி, தத்துவங்களை கதாபாத்திரங்கள் மீது ஏற்றி புராணக் கதைகளாச் சொல்லிப் போயினர். எனவே புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது. கதைக்குப் பின்னாலுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாரம்பரியத்தில் கோயில் தலபுராணங்கள் விசேஷமானவை. தத்தம் ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவன் எல்லா வகையிலும் பேரூர் கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுப்பது தலபுராணங்கள். எல்லோராலும் காசி, ராமேஸ்வரமென்று போகமுடியாது, எனவே உள்ளூர் கோயில் எந்த வகையிலும் இப்பெருங்கோயில்களுக்கு சளைத்ததல்ல என்ற நம்பிக்கையைத் தருவன தல புராணங்கள். மேலும், ஐந்திணைகளாக உலகைப் பகுத்துக் காணும் தமிழ் மரபில், ஒவ்வொரு நில அமைவிற்கும் ஏற்றவாறு இறைப்பண்பு சற்று வேறுபடுவதாகக் கண்டனர். எனவே, வெவ்வேறு பிரதேசங்களில் இறைவனின் திருவிளையாடல் வித்தியாசப் படுகிறது. அதைச் சொல்வதே தலபுராணங்கள். மெய்யானிகளுக்கு அருள் மூலம் இறைவன் இக்காட்சிகளைக் காட்ட, அவர்கள் தல புராணங்களை எழுதி வைத்தனர். எனவே இவை ஒருவகையில் மறை ஞான (mystical)க் காட்சிகளின் தொகுப்பு என்றும் கூறலாம். இவைகளுக்கு ஒரு கனவுத் தன்மையும் இதனாலுண்டு.இத்தலபுராணங்கள், அக்கால வழக்கப்படி கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் புலமை உள்ளவர்களால் எளிதாக வாசித்துப் புரிந்து கொள்ளமுடியும்!

இத்தலபுராணங்கள் தாங்கும் புத்தகங்கள், சுவடிகள் அழிந்து வருகின்றன. சரியான பாதுகாப்பில்லாத சூழலில் இவைகளை இலக்க வடிவில் (digital media) சேமித்து வைப்பதே சாலச் சிறந்தது.

பொங்கல் பரிசாக தமிழ் மரபு அறக்கட்டளை >20 புத்தகங்களை இலக்கவடிவில் எல்லோரும் வாசிக்க அளித்துள்ளது! ஆர்வமுள்ளவர்கள் சென்று பயனடைக!! தமிழகத்தில் தேடியபோது நிறைய சிவன் கோயில் புராணங்கள் கிடைத்தன. எனவே அழகர்கோயில் தலபுராணம் மட்டுமே வைணவத்திற்கு கிடைத்திருக்கிறது. உங்களிடம் தலபுராணங்கள் இருந்தால் அறியத்தாருங்கள் அவைகளைப் பாதுக்காக்கலாம்!

தொடுகுறி சாஸ்திரம்

ஜோதிடத்தில் எனக்கு அதிக நம்பிக்கை என்று சொல்லமுடியாது. காரணம் அரைகுறை ஜோதிடர்கள் சொல்லும் குறி தவறிப்போவதால் இருக்கலாம். ஆனால் எதிர்காலம் பற்றிச் சொல்லும் சில கலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு. ஆத்ம அறிவு கொண்டவர்கள் சொல்லும் 'ஆரூடம்' பலிப்பதுண்டு. இதில் தொடுகுறி சாஸ்திரமும் ஒன்று. கற்றை (குவாண்டம்) இயற்பியல் சொல்கிறது 'பட்டுப்பூச்சியின் சிறகை ஒடித்தால் பருவ காலங்கள் மாறும்' என்று. பிரபஞ்சத்தின் நிகழ்வுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. 'பட்டுப்பூச்சி விளைவு' எனும் இக்கோட்பாட்டை வைத்து சினிமாப்படம் கூட வந்திருக்கிறது. இதற்கு சமீபத்தில் வரக்கூடிய தமிழ் சினிமா 12B. இது ஒரு ஆங்கிலப்படத்தின் தமிழ் நகல்!

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் தொடுகுறி சாஸ்திரத்தில் வல்லவர். இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்கு லண்டன் சென்ற போது, பிரித்தானிய நூலகத்தில் இது குறித்த ஒரு பழைய நூலொன்று கண்டேன். அது இப்போது இலக்க வடிவில் காணக்கிடைக்கிறது. இதை வைத்து ஒரு சிறு விளையாட்டு செய்தேன். உங்களின் இன்றைய பலன் அறிய கீழே உள்ள வலைத்தளம் செல்க. இன்று நல்ல நிமித்தமா என்று பார்க்க இது உதவுகிறது. நீங்கள் இத்தளத்திற்கு வருகின்ற வேளை, இங்குள்ள சக்கரத்தைத் தொடுகின்ற பொழுது உங்களின் நாட்பலனை தீர்மானிக்கிறது. இதில் சொல்லியபடி நடந்ததா என்று சோதித்துப் பார்த்து எழுதவும்.

http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html (ஆங்கிலம்)http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html (தமிழ்)

சக்கரத்தைத் தொட்டவுடன் (சொடுக்கியவுடன்), உங்கள் பலனுக்குரிய தேவதை வரும். அதை மீண்டும் சொடுக்கினால், உங்கள் பலன் வந்து சேரும். இது முழுக்க, முழுக்க randomized! ஒரே பலன் திரும்ப வரவே, வராது. அப்படி வந்தால் அது உங்கள் விதி என்று கொள்க! ஆனால், ஒரே ஒரு முறை, காலையில் சொடுக்குங்கள். தினபலன் அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பின்னூட்டம் நிமித்த சாஸ்திரம், தொடுகுறி சாஸ்திரம் பற்றி அறிந்து கொள்ள மேலும் உதவும்.

இவ்வலைத்தளத்திலுள்ள மூலப் புத்தகத்தில் மேல் விளக்கம் காணலாம்!

வாழ்க!!

Keywords: fortune telling, horoscope, astrology, quantum physics, butterfly effect, indian art, science

ஸ்பானிஷ் ஜல்லிக்கட்டு!


மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!!


Keyword: sports, hazard, bull fight, spain

உலக நாடுகளில் வேளாண்மை

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 20)


பொங்கல் என்பது, உழவர் திருநாள். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் ஏனையோர் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பலரும் அறிந்த உண்மை. அதனால்தான் உழந்தும் உழவே தலை என்றார் வள்ளுவர். உழவுக்குத் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதியார். நிலத்துக்கும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அவர்கள் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

அந்தச் சிறப்பு மிக்க உழவர்களைப் பற்றியும் வேளாண்மை பற்றியும் நா.கண்ணன் இங்கே நம்முடன் உரையாடுகிறார். ஆற்றங்கரை நாகரிகம் தொடங்கி, வேளாண்மையின் வரலாறு, அதன் பயனான நாகரிக வளர்ச்சி, தொழில் புரட்சிக்குப் பிறகு வேளாண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், வேளாண்மையில் எந்திரமயம், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்பட உலக நாடுகளில் வேளாண்மை, விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகள்..... எனப் பலவற்றைப் பற்றியும் நா.கண்ணன் செறிவான உரை நிகழ்த்தியுள்ளார்.

அழுக்குப் படும் இந்த உழவுத் தொழிலில் முதியவர்கள் மட்டுமே அதிகம் ஈடுபடுவது; இந்தத் தொழில் செய்யும் இளைஞர்களுக்கு மணம் முடிக்கப் பெண் கிடைக்காத நிலை எனப் பல நேரடி உண்மைகளை எடுத்துக் காட்டியுள்ளார். பசிக் கொடுமையை ஓட்டுவதற்கு என்ன வழி என்பதையும் அவர் கூறியுள்ளார்.

'ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை' என்ற பாடலோடு தொடங்கும் இந்தப் பதிவு, 'இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா' என்ற பாடலோடு நிறைவடைகிறது.

காலத்திற்கு ஏற்ற இந்த இனிய உரையைக் கேட்டு மகிழுங்கள்:


this is an audio post - click to play


நேர அளவு: 24 நிமிடங்கள்
www.Sify.comKeyword: voice column, agriculture, history, korea, japan, germany, india, knowledge, white-color job, farmers, foreign labour, philippines, vietnam, migration

பக்திக்கு ஒருமுகமா? பன்முகமா?

இறைமை ஒருமுகமெனப் பார்த்தோம். அதை ஈஸ்வரர், அல்லா, பிதா என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.சொல்லினால் தொடர்ச்சி நீ
சொலப்படும் பொருளும் நீ,
சொல்லினால் சொலப்படாது
தோன்றுகின்ற சோதி நீ,
சொல்லினால் படைக்க நீ
படைக்கவந்து தோன்றினார்,
சொல்லினால் சுருங்க நின்
குணங்கள் சொல்லவல்லரே?
(11)

என்பது திருச்சந்த விருத்தம் (திருமழிசை)

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி என்றும் சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லவர் யார்? என்றும் கேட்பதினால் என்ன பேரில் சொன்னாலும் பாதகமில்லை என்றாகிறது. குழந்தைக்கு அபிதகுசலாம்பாள் என்று அழகான அம்பிகை பேர் வைத்துவிட்டு 'பப்பு' என்று அபத்தமாகக் கூப்பிடுவது போல்தான்! நம்ம ஆசைக்கு ஒரு பெயர்! அவ்வளவுதான்.

ஆனாலும், சொல்லினால் நாம் நம் தியான விளைவால் நாராயணன், சிவன் என்று படைக்க, உடனே அவன் அப்பெயரில் வந்து அமர்கிறான் என்கிறார் திருமழிசை! சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ! என்று வேறு சொல்கிறார். ஏனப்படி? இங்குதான் மனித உளவியல் உருக்கொள்கிறது! நமக்குப் பெயர்கள் அவசியம். பெயரிலி என்று பின்னூட்டமிடும் போதும், அனானி என்று எழுதும் போது பதிலளிக்கத் தடுமாறுகிறோம். நமக்கு ஒரு 'சுட்டு' வேண்டியிருக்கிறது.

எனவேதான் நாம ரூபமற்ற இறைமையை கல்யாண குணங்களுடன் வருணிக்கும் பழக்கம் இந்தியாவில் தோன்றியது. நாரணன் என்று பெயர் வைத்தால் அவனது கல்யாண குணங்களை அனுபவிக்க தோதாக இருக்கிறது. வெறுமே சுவரைப் பார்த்துக் கொண்டு தியானம் செய்யும் ஜென் புத்த சநிநியாசிகள் கூட கண் விழித்தவுடன் நாம, ரூப உலகில்தான் சஞ்சாரிக்க வேண்டியுள்ளது. அந்த உலகிற்கு தொண்டாற்றுவது சிறந்த கடனாகப் பார்க்கப்படுகிறது. ஒன்றுமே இல்லாத இறைமைக்குத்தான் இஸ்தான்புல்லில் உலகின் மிக அழகான மசூதி கட்டப்பட்டிருக்கிறது!

எனவே இல்லை, இல்லை என்பதை விட இருக்கு, இருக்கு என்பதில் மனநிறைவு இருக்கிறது! உண்மையில் 'இல்லை' என்பதொன்றில்லை. எல்லாமே அறியப்படுவவையாகவே உள்ளன. எனவே இறைவன் என்பவன் 'பம்மாத்து வேலை' அல்ல. தெரிந்து கொள்ளக்கூடியவனே. பழகக் கூடியனே! பேசக்கூடியவனே! காணக் கூடியவனே!

அவனை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி உணர வேண்டும், எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விகள் வரும் போதுதான் அத்தனை வேதங்களும், உபநிடதங்களும், புராண, இதிகாசங்களும் பொருள் கொள்ளுகின்றன.

இந்திய உப கண்டத்தைப் பொருத்தவரை, ஒரு தேவ உலகமே நமக்காகக் காத்திருக்கிறது. நமக்குத் தேவையான இஷ்ட தேவதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குழந்தையாய் இருக்கும் போது பிள்ளையார், கண்ணன், முருகன். விடலைப் பருவத்தில் அம்பாள், கண்ணன், முருகன். வளர்ந்து முதிர்ந்த பருவத்தில் நாரணன், சிவன், அம்பாள் (சக்தி). இவற்றின் பல்வேறு ரூபங்கள் நம் தேவைக்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இத்தெய்வங்கள் என்பவை நம் ஆன்ம பந்துக்கள். நம் ஆன்ம வளர்ச்சிக்கு உதவுபவை. இதை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் கண்டு உணரலாம். இந்த வழிமுறையில் வராத கிறிஸ்தவ, யூத, முஸ்லிம் சம்பிரதாயத்தில் கூட நமக்கென உதவும் தேவதைகள் (guardian angels)அவ்வப்போது உண்டு. ஒரு focal point உண்டு.

மெதுவாக இந்த அரூப சக்தியுடன் நமக்கொரு உறவு வளரத் தொடங்குகிறது. சங்கம் இதை 'ஆர்வம்' என்ற பதத்தால் குறிக்கிறது, முதலில் உறவு வளர ஆர்வம் வேண்டும். ஆர்வம் வந்த பின் காதல் வருகிறது. காதல் கனியும் போது பிரேமை/அன்பு/பக்தி உருக்கொள்கிறது.

காதல் என்று வந்தவுடன் பன்மை தானாக மறந்துவிடுகிறது. ஏதாவது ஒன்றுடன்தான் காதல் கொள்ளமுடியும். அதுதான் பக்தி என்பது. எனவே பக்திக்குத் தேவை ஒருமைதான். உலகில் பெண்களுக்கா குறைச்சல்? அம்மா இருக்கிறாள், சகோதரிகள் இருக்கிறார்கள், பக்கத்து வீட்டு, அடுத்த ஊர் பெண்களெல்லாம் இருக்கிறார்கள். இருந்தாலும் நமக்கு யாரோ ஒருவர் மேல்தான் 'கிக்' வருகிறது. அதுவே காதலாக மாறுகிறது.

ஒரு சினிமாப் பாட்டு உண்டு. எஸ்.பி.பி பாடியது.

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.... அது ஏதோ.... அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது~~~~~
அதை அறியாமல் விடமாட்டேன்
அதுவரை உன்னைத் தொடமாட்டேன்
(கேப்டன் மகள்)

ஆன்மீகத்திற்கும் இதுதான். எந்த தெய்வத்திலும் இல்லாத அழகு! அது ஏதோ! அது ஏதோ! நம் இஷ்ட தெய்வத்திடம் காண்கிறோம். அதுவே காதல். அதுவே பக்தி.

மனித உறவில் இருப்பது போலவே இக்காதலை மற்றவருக்குச் சொல்லாமல் வைத்திருக்கும் வழக்கம் கூட உண்டு (கிருபானந்தவாரியார் அப்படியொரு கதை சொல்லுவார்). இது எதைக் காட்டுகிறது என்றால் பக்தி என்பது தனி மனிதனுக்கும் அவன் இஷ்ட தெய்வத்திற்கும் மட்டும் உள்ள உறவு அது என்பதுதான்.

அப்புறம் எப்படி கோடான கோடி மக்கள் ஒரே தெய்வத்திடம் பக்தி செலுத்துகின்றனர்? என்று கேட்கலாம்! கோடான கோடி என்றாலும் பக்தி உருவாகும் இதயம் ஒன்றுதான். அது தனிமையிலேயே செயல்படுகிறது. இராசலீலையில் கண்ணன் செய்வது போல் இறைச் சக்தியால் அக்கோடான கோடி ஜனங்களிடமும் தனித்தனியாக காதல் செய்யும் வல்லமை இருக்கிறது. மதுராபுரியில் கண்ணனுக்கு 64000 மனைவியர் இருந்தனரே என்றால், அவனால் கட்டிக் காக்க முடிகிறது! என்று பொருள். அவனது செய்கைகள் எல்லாமே 'மெகா'தான். வையத்தை அளப்பது, மலையைத் தூக்குவது, சின்ன வாய்க்குள் பிரபஞ்சத்தைக் காட்டுவது!! எனவே தைர்யமாக அவனிடம் காதல் செய்யலாம். சந்தேகமிருந்தால், கண்ணன் பாட்டு என்றொரு வலைப்பூ உள்ளது. அங்கு போய் பாருங்கள். அலுக்காமல், சலிக்காமல் கண்ணனிடம் காதல் செய்பவர்களை!

கிருஷ்ண பக்தி பற்றிச் சொல்வதற்கு கிருஷ்ணப் பிரேமியை விட்டால் வேறு யார் உளர்? இந்த இனிய உரையைக் கேளுங்கள். ஹரி கதை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே! 30 நிமிடத்திற்கும் மேல்! எனவே நேரம் வைத்துக் கொண்டு கேட்டு அனுபவியுங்கள்!


Keyword: religion, hinduism, bakti, multiple gods, god, angels

தெய்வம் ஒன்றா? இரண்டா?

படி ஒன்று:

ஒரு தாய்க்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை. அம்மா போல ஒன்று, அப்பா போல ஒன்று, அத்தை போல ஒன்று, மாமா போல ஒன்று, பாட்டி போல ஒன்று இப்படி. ஒண்ணு சிவப்பா இருக்கும், இன்றொன்று கருப்பா இருக்கும், ஒன்று சுட்டி, மற்றது புத்தகப்புழு இப்படி.

ஊருக்குள் பார்த்தால் ஆயிரம் ஜாதிகள். உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்று எந்தக் குலத்தில் பார்த்தாலும் உள்ளுக்குள் ஜாதிகள். ஒன்றுக்கொன்று கொடுக்கல் வாங்கல் கிடையாது.

மதங்கள் என்று பார்த்தால்? பெரிதாக சிவன் கோயில் இருக்கு. அதற்குப் பக்கத்திலே பிள்ளையார் கோயில். சின்னதாக அடுத்த தெருவில் முருகன் கோயில். இரண்டு தெரு தள்ளி பெருமாள் கோயில். ஊருக்கு மூலையில் ஆஞ்சநேயர் கோயில். ஊருக்கு வெளியே ஐயனார் கோயில், பிடாரி கோயில். ஊரின் ஒரு பக்கத்தில் சர்ச. காலையில் கேட்கும் 'பாங்கு (வாங்கு)' முஸ்லிம் மசூதியிலிருந்து வரும்.

காட்டிற்குப் போனாலோ ஆயிரம் விலங்குகள்! யானை, குதிரை, புலி, சிங்கம், பாம்பு, கழுகு, வண்டுகள், நத்தைகள், நுண்ணுயிர் கிருமிகள். தாவரங்களும் பல்கிப் பெருகி இருப்பது கண்கூடு.

எதுவுமே ஒன்றில்லை. இரண்டுதான். பன்முகம் பயிலும் வையமாகவே இருக்கிறது. ஆக, காட்சிக்குப் பலவாக வையமுள்ளது. இப்பன்முகம் மட்டுமே உண்மை என்று காண்பவன் எல்லாவற்றிலும் பேதம் காண்கிறான்.

படி 2.

ஆனால் எல்லோராலும் எப்போதும் பேதத்தில் வாழ முடியாது. 'பேய்கள் அரசாண்டால் பினம் தின்னும் சாத்திரங்கள்' என்பான் பாரதி. ஆனானப்பட்ட கம்சனுக்கும், இராவணனுக்கும், ஹிட்லருக்கும் ஒரு முடிவு வரத்தான் செய்தது. எனவே மனிதர்கள் குழுமங்களை அமைத்துக் கொள்கின்றனர். இதை வர்க்கமென்றும், சமய ஒழுக்கமென்றும், மேல்தட்டுக் குழு என்றும் எப்படி வேண்டுமானாலும் காணலாம். ஆனால், குழுவான போதும் பிரிவினை 'சும்மா' உட்கார்ந்து இருக்காது. அதற்குள்ளும் 'பேதம்' காட்டும். உதாரணமாக, கிறிஸ்தவத்தில் ஜாதி கிடையாது என்று சொன்னாலும், சிரியன் கிறிஸ்தவர்கள் 'பிராமணர்களை' விட உசத்தி எனும் கருத்துண்டு (படிக்க அருந்ததிராயின் God of small things). மேலும் இந்திய கிறிஸ்தவத்தில் நாடார் கிறிஸ்தவர், பிள்ளை கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்ற பாகுபாடெல்லாம் உண்டு. முஸ்லிம்களிடம் ஜாதி கிடையாது என்று சொன்னாலும், பெரும் பிரிவாக சன்னி, ஷித்தே, சுஃபி என்ற பாகுபாடு உண்டு. தோப்பில் முகம்மது மீரான் தனது நாவல்களில் அங்குள்ள பேதங்கள் பற்றிப் பேசுவார். வெள்ளை மரைக்காயரும், கருப்பு முஸ்லிமும் ஒன்றல்ல. மலேய் முஸ்லிமும், நாகூர் முஸ்லிமும் ஒன்றல்ல. ஒன்றாகத் தொழுகை செய்யலாம், சாப்பிடலாம் என்றாலும், கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளமுடியாது. நிறம், பணம், அந்தஸ்து, படிப்பு போன்றவை மனிதனை எந்தக் குழுவிலிருந்தாலும் பிரித்து வைத்திருக்கும்.

படி 3.

இப்படிப் பலவாய்த் தெரியும் உலகம் பற்றி நவீன அறிவியல் ஆராய்ச்சி செய்திருக்கிறது. சார்லஸ் டார்வின் என்பவர் ஹச்.எம்.எஸ்.பீகிள் எனும் கப்பலில் உலகமெல்லாம் சுற்றி, இறுதியில் விலங்கு, தாவரங்கள் இவைகளுக்கு தோற்றம் ஒன்று என்று காண்பித்தார். அதாவது குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதுக்கப்புறம் ஒரு நூற்றாண்டாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து இன்று Human Genome வரைக்கும் வந்துட்டாங்க. இப்போ என்னடான்னா, National Geographic channel, Animal Planet, Discovery, BBC (special)ன்னு எல்லோரும் இயற்கையின் விந்தை பற்றிச் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாத்துக்கும், எல்லாமும் உறவு அப்படின்னு நவீன ஆய்வு சொல்லிவிட்டது.

இதை ஆராய்ச்சி பண்ணி அறியனுமாகும்ன்னு சில பேர் கேக்கிறது புரியுது. உதாரணமா, கீழே உள்ள சின்ன வீடியோவை முதலில் பாருங்க!

என்னடா! பாண்டா கரடி தும்பல் போடுமான்னு கேக்கிறீங்களா? அது முக்கியமில்லை, தாய்க் கரடியோட ரியாக்சனைப் பாருங்க. "அம்மாடி! தூக்கிவாரிப் போட்டதுன்னு" சொல்லற மாதிரி இல்லே? அதுதாங்க ஒத்துமை!!

இவங்களெல்லாம் சொல்லறதுக்கு முன்னாடியே நம்ம ஆளுக உயிர்களுக்குக்குள்ள ஒற்றுமை பற்றிச் சொல்லிட்டாங்க. நம்ம தசாவதாரம் டார்வினுக்கு முன்னோடி. மேல் விவரங்கள் ஆழ்வார்க்கடியனில் பாருங்க!

அது மட்டுமில்லே, மத்த எந்த சமயமும் சொல்லாத அளவுக்கு ஒற்றுமை பற்றி இந்திய வேதங்கள் சொல்லுது. வேதமறிந்த ஒருவர் ஆற்றிய உரையைக் கீழே தருகிறேன். அவர் பெயர் பரனூர் அண்ணா.

தெய்வம் ஒன்று என்று சொல்கிறது வேதம். மூர்த்திகள் பலவாக இருக்கின்றன என்று சொல்லுகின்றன. இது அப்படியே டார்வின் சொல்வதை ஆன்மீக பரிமாணத்தில் சொல்வது போல் உள்ளது இல்லையா? அது மட்டுமில்லை, உளவியல் ரீதியாகவும் மனிதம் ஒன்று என்று இரண்டு பேர் சென்ற நூற்றாண்டில் உரக்கச் சொல்லிப் போயினர். ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி, மற்றது ஜோசப் கேம்பல். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'நீதான் உலகம்' என்பது ஆழமான பொருள் உள்ளது. அவரது பேச்சுக்களைக் கேட்டவர்களுக்குப் புரியும், அவர் ஒரு நிலையில் தனி மனிதன் (individual) என்பது 'தோற்றப்பிழை' என்று சொல்லுவார். ஜோசப் கேம்பல் பற்றி விரிவாகப் பின்னால் பார்ப்போம்.

ஆக, முதல் நிலை தாண்டி, இரண்டாம் நிலை தாண்டி மூன்றாம் நிலைக்கு வரும் போதுதான் இந்த ஒற்றுமை புரிகிறது. புரிந்தால் போதாது, அப்புரிதல் நம் ஒவ்வொரு விழிப்பிலும் இருக்க வேண்டும். அதுதான் சவால்!!

மால்_Mall எனும் உலகம்!

உலகம் வெகு வேகமாக மாறிவருகிறது. சந்தைப் பொருளாதாரம் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக நூதன வழிகளைக் கண்டவண்ணம் உள்ளது. முன்பெல்லாம் பண்டிகை என்றால் பொங்கல், தீபாவளி என்று முடிந்துவிடும். வருஷப்பிறப்பு, ராம நவமி, கோகுலாஷ்டமி, சிவ ராத்திரி என்று சிறு, சிறு பண்டிகைகள் வருடம் பூரா வந்தவண்ணம் இருக்கும். ஆனால், அவையெல்லாம் பழசாகிவிட்டன என்று துபாயிலிருந்து திரு.சுப்பிரமணியன் மின்தமிழில் எழுதினார். ஆங்கில வருடப் பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. வாலண்டைன் தினம் என்பது புத்தம் புதிதாக உருவாகியுள்ளது! சந்தைப் பொருளாதாரம், அமெரிக்க முன்னணியில் பல புதிய விழாக்களை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது. எல்லா நாடுகளும் மெல்ல, மெல்ல ஒருங்கிணைந்த சந்தைப் பொருளாதார விழாக்களுக்குப் பழகி வருகின்றன. புது வருட விழா வர, வர மிக விமர்சையாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. பெரிய, பெரிய பார்டிகள், வாண வேடிக்கைகள், ஆட்டம் பாட்டமென்று!

நமது பண்டிகைகள் எல்லாம் உறவை வளர்க்கப் பிறந்தவை. முதல் உறவு நாம் வாழும் பூமி, அது தரும் இருப்பு, உணவு, வாழ்வு. பொங்கல், பூமிக்கு நன்றி சொல்லும் விழா. இதுவே தமிழரின் பெரிய விழா. அடுத்து, வருடம் பிறப்பது. வருடப் பிறப்பன்று கூட கோயில், குடும்பம் என்பதோடு முடிந்துவிடும். குடும்பம் என்பது இந்திய குணாம்சத்தின் ஆணி வேர் என்றும், அதைச் சரியாகத் திரையில் சித்தரித்தவர் சிவாஜி கணேசன் என்றும் பேரா.சிவத்தம்பி கூறுகிறார்.

ஆனால் இவையெல்லாம் மாறிவருகின்றன. குடும்பங்கள் தன் தன்மையை இழந்து, கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள், இவர்களது தேவைக்கு amusement part, hotels (with swimming pool) restaurants..அட! மறந்து விட்டேனே! மால்! ஆம் Mall. இதுதான் இனிமேல் வரும் சந்ததியினரின் கூடுமிடமாக இருக்கும். எல்லாம் மாலில் கிடைக்கும். மால் என்று தமிழில் சொன்னால் அது கவர்ச்சி, காந்தம், இழுப்பு என்று பொருள். திருமால் என்றால் லக்ஷ்மிகாந்தன் என்று பொருள். இது அப்படியே இங்கிலீஷ் Mallக்குப் பொருந்துவது ஆச்சர்யம் ;-)

அமெரிக்க மால்கள் அட்டகாசமாக இருக்கின்றன. உள்ளே போனால் பொழுது போவதே தெரியாது. 1922-ல் முதல் மால் கான்சாஸ் நகரில் உருவானதாம். எடினா, மினசோடாவில் 1956-ல் இப்போது காணக்கூடிய மாலின் வரைவு தோன்றுகிறது. சார்லி சாப்ளின் படத்திலேயே இதைப் பற்றிய ஆவணம் வந்துவிடுகிறது. 1981 மேற்கு எட்மண்ட்டன் மால், அல்பெர்ட்ட, கானடாவில் கட்டப்படுகிறது. இதனுள் 800 கடைகள், hotel, amusement park, miniature-golf course, church, "water park" for sunbathing and surfing, a zoo and a 438-foot-long lake என்பவை எல்லாமடங்கும்! எட்மண்டனில் இது போல், தரைக்கு உள்ளே அமைந்திருக்கும் மிகப்பெரிய மாலொன்று உண்டு. வெளியே வரவே வேண்டாம்!!

காசுப் பொழக்கம் இல்லாத எங்கள் பிள்ளைப் பருவ காலத்தில் சிறுவர்கள் கூடி கோலிக்குண்டு ஆடுவோம், பம்பரம் சுற்றுவோம், ஆளில்லாத போது கொடுக்காப்புளி விதையை வைத்துக் கொண்டு மேற்தொலியை நாசூக்காக உரித்துக் கொண்டிருப்போம், தோப்பிற்குள் போய் மாங்காய் களவாடுவோம், பம்பு செட்டில் குளித்து கும்மாளம் போடுவோம். இது எதிலும் செலவே கிடையாது! குட்டிப் பெண்கள் இதிலும் கெட்டி. சிறுவானிமுடிச்சு என்று தனியாக காசு சேர்த்து வைத்திருப்பர். ஆனால் இன்று!

என் மருமானின் பிள்ளைக்கு அவன் தாத்தா தெருவோரத்தில் இருந்த ஒரு கடையில் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்தார். அவன் ஓவென்று அழுதுவிட்டான். அது அவமானமாம். அவனுக்கு Spencer plaza போய் 500 ரூபாய்க்கு சட்டை எடுத்துக் கொடுக்கணுமாம்! இதைத்தான் சந்தைப் பொருளாதாரம் விரும்புகிறது! நம்மைச் செலவாளியாக்கி, கடைசியில் ஓட்டாண்டியாக்கிவிடுகிறது! இப்போதுள்ள credit society-ல் எல்லோருக்கும் கடன் இருக்கும்! நாம்தான் கடனாளியாகிறோம், ஆனால், உலகின் 6 பெரிய பணக்காரர்கள் கையில் உலகின் 56% பொருளாதாரம் முடங்கிவிடுகிறது. இந்த அறுவரும் அமெரிக்கர்கள் என்று சொல்லத் தேவையில்லை!அமெரிக்காவின் மால் கலாச்சாரம் உலகமெங்கும் பரவிவிட்டது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, வியட்நாம் (கவனியுங்கள், இவை கம்யூனிச நாடுகள்!!),கொரியா, ஜப்பான் என்று. கேட்டால் 'நாம் எப்பதான்' அனுபவிப்பது என்று சொல்லுகிறார்கள். சந்தைப் பொருளாதாரம் ஒரு நுகர் கலாச்சாரம். எல்லாவற்றையும் சுயதேவைக்கு கபளீகரம் பண்ணிவிடும். அது உலகின் மிக அரிய, தொன்மையான tropical forest-ஆக இருக்கலாம், அல்லது உலகின் மிக ஆழமான, தொன்மையான கலாச்சாரமாக இருக்கலாம். எல்லாம் இங்கு நுகரப்படும்! மீனாட்சி கோயிலுக்குப் போய் பாருங்கள். கோயில்கடையில் விபச்சாரம்கூட நடக்கிறது! எல்லாம் நுகரப்பட வேண்டியவையே!

மால் என்றால் முன்பு நமக்கு திருமால்தான் தெரியும். வரும் காலத்தில் 'மால்' என்றால் அது பேரங்காடிகளையே குறிக்கும். இப்போதே 'அவதாரம்' என்று கூகுளில் தேடுங்கள். தசாவதாரம் வராது! சந்தைப் பொருளாதாரம் உருவாக்கியுள்ள கணினி அவதாரங்கள்தான் வரும். இயற்கையுடம் நமக்குள்ள தொப்புள் கொடியை நுகர் கலாச்சாரம் துண்டித்து வருகிறது. வாழ உருவானது இயற்கை. நுகர அல்ல. விவிலியத்தில் வருகின்ற 'dominion' எனும் பதம் கூட தவறான மொழிபெயர்ப்பு என்று ஜேன்குடால் சொல்கிறார். விவிலியம் சொல்வது இயற்கையின் மீதான பொறுப்புள்ள மேலாண்மை'. நுகர்வு அல்ல!

தாயின் இதயத்துடிப்பு

அமெரிக்கா தனது 200வது ஆண்டுவிழாவைக் (இதுவே பிரச்சனைக்குரியது) கொண்டாடியபோது சியாட்டல் பிரதேச செவ்விந்தியத்தலைவன் வெள்ளை அமெரிக்கர்களுக்குச் சொன்னதாக ஒரு ஆவணம் கிடைத்தது. அதை முதன்முறை படித்தபோதே நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. உடனே, அப்போதைய ஹிந்து நாளிதழில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன், இப்பேச்சின் சிறப்புக் குறித்து! இப்போது அது மீண்டும் கண்ணில் பட்டது. இதைப்பேசிக் கொடுத்து இருப்பவர் அமெரிக்காவின் தத்துவ ஞானிகளுள் ஒருவரான ஜோசப் கேம்பல். இவர் பற்றி பின்னால் பார்ப்போம்.

பிறந்த குழந்தை எப்படித் தன் தாயின் இதயத்துடிப்பை வேண்டுமோ, ரசிக்குமோ, அது போல் இந்தப் பூமியை நேசியுங்கள் என்கிறார் இச்செவ்விந்தியத் தலைவர்! ஒவ்வொரு வரியும் பொருள் செரிந்த இப்பேச்சு, இப்பூமியை நேசிப்பவர்களுக்கு, மானுடத்தை ஆராதிப்பவர்களுக்கு 'தேன் வந்து பாயுது காதினிலே!' என்பது போல் இருக்கும். இம்மண் நமக்குச் சொந்தமில்லை! நாம்தான் இம்மண்ணிற்குச் சொந்தம்!!பட்டுக் கோட்டையார் பாடலொன்று, பழசு. இதையும் கேளுங்கள்:

ஸ்ரீவித்யாஎன்ன அநியாயம் ஸ்ரீவித்யா காலமாகிவிட்டாராம். இப்போதுதான் தெரிந்தது. தமிழ் திரை உலகில் மிகவும் லட்சணமான பூரண அழகு கொண்ட சில முகங்களில் ஸ்ரீவித்யா ஒருவர். எவ்வளவு திறமையான நடிப்பு! ஆயினும் பிற்காலங்களில் பாட்டி ரோலிலெல்லாம் நடித்து ரசிகர்களை கஷ்டப்படுத்திவிட்டார் (எல்லோராலும் சிம்ரன் மாதிரி உடலை ஒரே மாதிரியாகவா வைத்திருக்க முடிகிறது!ம்ம்).

எல்லோரும் போய்தான் ஆக வேண்டும். ஸ்ரீவித்யாவும் போய் விட்டார். சே! வருத்தமா இருக்கு!

ஒப்பு நோக்கும் கல்வி! ஜே.கே.

சிந்தனை என்பது என்ன என்று சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி. வாக்கு, சிந்தனை, மனம், புத்தி இவையெல்லாம் என்னவென்று இந்திய மெய்ஞானம் ஆராய்ந்து அறிந்துள்ளது. சில கலாச்சாரங்களில் 'சிந்தனை' என்றால் 'புறம்' என்று பொருள் படுவதாக, ஒரு புதிய கோணத்தை முன் வைக்கிறார் ஜே.கே! சிந்தனை என்பது, எவ்வளவு சிறந்த சிந்தனையாக இருந்தாலும் அது 'குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல' என்று கருதுகிறார் ஜே.கே. கற்றது (சிந்தனை) கைமண் அளவு! என்பது இதனால்தான்.

சிந்தனை உலகை தேசங்களாக, மதங்களாக, வர்ணாசிரமமாக பிரித்து வைத்திருக்கிறது. சிந்தனை முறையில் அமையும் கல்வி, ஒப்பு நோக்குதல் எனும் அலகு கொண்டு மனிதத் திறனை அளக்கிறது. மனிதம் என்பது அழகானது. மானுடம் அழகு. ஆனால் அழகை சிந்தனையால் அளக்க முடியாததால், அவனை அலகுக்குள் அடக்கி அளந்துவிடுகிறது. இது உண்மைக்குப் புறம்பான செயல் என்கிறது இந்த உரையாடல்.

ஒப்புமை இல்லாத கல்வி முறையை கிருஷ்ணமூர்த்தி பள்ளிகள் உலகெங்கும் செயல்படுத்தி வருகின்றன. உபநிடதம் ஜீவனை ஞான சொரூபன் என்றே வருணிக்கிறது. நாம் பள்ளிக்குப் போவது ஞானம் இல்லாததால் அல்ல. ஞானம் இருப்பதால்தான் மேலே கற்க வேண்டுமென்ற ஆசையே பிறக்கிறது. எனவே நமது சொரூபமான ஞானத்தில் நாம் எப்போதும் நிலை பெறும்படி செய்வது எப்படி? சிந்தனை அதற்கு ஹேதுவா? விரோதியா?

அன்பு வழியே நன்மை பயக்கும் - ஜே.கே

தருமமிகு சென்னை தந்த தவப்புதல்வன் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இவர் மதனபள்ளி (ஆந்திரா)-இல் பிறந்தாலும் வளர்ந்தது சென்னையில். படித்தது இங்கிலாந்தில். வாழ்ந்தது கலிபோர்னியாவில். 20ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களுள் மிக அதிக அளவில் உலகின் இதயத்தை, அறிவைத் தொட்டவர்களுள் இவர் ஒருவர். இவரைப் பற்றி அறியாதோருக்கு ஒரு எளிய அறிமுகம் கீழே.

"எதிர்மறை இல்லாத அன்பு ஒன்றுதான் நல்லதைப் பயக்கும். அன்பு இல்லாத செயல்கள் அனைத்தும் எதிர்வினையை, வன்முறையை, பிளவை உருவாக்கும்" என்பது இவரின் முக்கிய போதனை.

அறிந்து கொள்ளுங்கள் முதலில். தொடர்வோம் அவரது சிந்தனையை அடுத்த பதிவுகளில்.

உறவு - ஜே.கே'நான்' என்று பல சமயம் பேசுகிறோம். இந்த 'நான்' என்பது என்ன? கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக இதை விளக்குகிறார் (the structure of me).

Creative என்ற பதத்தின் பொருளை விளக்கும் போது பாரதி சொல்வது போல், 'நித்தம் நவமென ஒளிவிடும் உயிர் கேட்டேன்!' என்று சொல்கிறார் ஜே.கே.

உறவு என்று வரும் போது இந்த creativityக்கு நிறைய வேலை இருக்கிறது என்கிறார் ஜே.கே. அதாவது, நமது உறவுப் பரிவர்த்தனை என்பது புத்தம், புதியதாக எப்போதும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் ஜே.கே.

எனவே 'பார்க்கின்றவர்' ஊறிப் போன மட்டை போல் இருக்கும் போது பார்க்கப்படும் பொருள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை என்பது ஜே.கேயின் புரிதல். நாம் கவனமாகப் பார்க்காத போது பார்க்கப்படும் பொருளின் உண்மை தெரியாததால் பிரச்சனை எழுகிறது என்கிறார். இதை கணவன்- மனைவி என்ற நிலையில் வைத்துப் பார்த்தாலும் சரி, பாகிஸ்தான் - இந்தியா என்று வைத்துப் பார்த்தாலும் சரி.

இந்த 'நான்' என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளுதலே 'தியானம்' எனப்படுவது.

நீ மாறு! உலகம் மாறும் தானாக..

சென்ற பதிவின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். அவரது (Jane Goodall)எண்ணங்களைத் தொடர்கிறேன் என் மொழியில் இங்கு.

'உலகம் ரொம்பக் கெட்டுக் கிடக்கு சார்! நம்மால என்ன செய்ய முடியும்?' இது நாம் எல்லோரும் தினப்படி கேட்கின்ற வசனம்தான். இதில் உண்மை உள்ளதா? உண்மை இருப்பது போல் தோன்றினாலும் உண்மை இல்லை. ஏனெனில் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரியாமல் பேசுகிறோம் என்று பொருள். நம் ஒவ்வொருவரையும் சேர்த்ததுதான் நாம் காணும் உலகம். இதைப் புரிந்து கொள்ள வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். வீடு என்பது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் கொண்டது. வீட்டில் ரூமுக்கு ரூமு லைட் இருக்கிறது. சிறுவர்களாக இருக்கும் போது போட்ட லைட்டை அணைக்கத் தோன்றாது. ஏனெனில் லைட் (விளக்கு) என்பது சக்தி ஈர்க்கும் சமாச்சாரம், அதற்கொரு விலையுண்டு என்று தெரியாது. ஆனால், அப்பா சொல்லுவார், 'யாரு ரூமுக்குள்ளே போயிட்டு வெளியே வந்தாலும் லைட்டை அணைக்கனும்' அப்படின்னு. அவருக்கு பயந்து இதைச் செய்வோம். பின் அதுவே பழகிவிடும். இதை நாம் செய்யாமல் வீடு மாறும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? இல்லையா! யாராவது ஒருவர் ஆரம்பித்து, எல்லோரும் அதைப் பின் பற்றும் போது மாற்றம் நிகழ்கிறது.

எனவே பாடம்:

1. எங்கு விளக்கு வெட்டியாக எரிந்தாலும் அணைக்கவும். அது உங்கள் வீட்டில், ஆபீஸில், லாட்ஜில் என்று எங்கு இருந்தாலும். ஏனெனில் விளக்கெரிய சக்தி தேவைப்படுகிறது. அச்சக்திக்கு விலையுண்டு. அதை நாம்தான் கட்டுகிறோம்.

2. தெருவில் குப்பை கிடக்கிறது. உங்களால் எடுக்க முடிந்ததை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

3. முதலில் குப்பை உருவாவதைத் தவிர்க்கப் பாருங்கள். அதிகமாக குப்பை போடாதீர்கள். பிளாஸ்டிக் பை தேவையானால் மட்டுமே பயன்படுத்துங்கள். தேவை முடிந்தவுடன் அதைத்தனியாக குப்பையில் போடவும். பிளாஸ்டிக்கை மீண்டும் உருக்கி பயன்படுத்தலாம். அப்ப்டியே விட்டால் அது மக்கி, மண்ணாகாது. அது விரைவில் அழியாது!

4. குப்பைகளைப் போடும் போது வகை வாரியாகப் பிரித்துப் போடவும். காய்கறித் தோல், மிஞ்சிய சோறு, கெட்டுப்போன குழம்பு இவையெல்லாம் பசுந்தாள் உரக்கிடங்கில் புழக்கடையில் போடுங்கள். அது உண்மையில் உரம். அதை பிளாஸ்டிக்குடன் சேர்த்து குப்பையில் போடாதீர்கள். காகிதம் மீண்டும் பயன்படும் பொருள். எனவே அதைத் தனியாகப் போடவும். ஜெர்மனியில் இது புழக்கத்தில் வந்து பல வருடமாகிறது. இப்படிச் செய்வதால் அங்கு அனாவசிய வரிச் செலவு பொது மக்களுக்குக் குறைவதைக் கண்டுள்ளனர்.

5. ஷேவ் செய்யும் போது கண்ணுக்கு எதிரே கொட்டிக் கொண்டிருக்கும் குழாய் தண்ணீரை நிறுத்தவும். வேண்டும் போது மட்டும் குழாயைத் திறக்கவும். மழைக் காலத்தில் எங்கு பார்த்தாலும் நீர் இருப்பது போல் தோன்றினாலும், நீர் ஒரு அரிய பொருள். உலகு ஒரு பெரிய உலை போல் வேலை செய்கிறது. கடலிலிருந்து நீராவியாகிவரும் நீர் குடிக்கும் தண்ணீராக மாறுகிறது. இந்த நீரைத் தரையில் சேமித்து வைத்துப் பழக வேண்டும். உங்கள் ஊரில் ஊரணி இருந்தால், ஏரி இருந்தால் அதை தூர் எடுத்து ஆழப்படுத்துங்கள். ஏரி, குளங்களை பிளாட் போட்டு விற்கும் செயலை நிறுத்த முயற்சி செய்யுங்கள். வீட்டு மாடியில் மழை நீரைச் சேகரியுங்கள். குளிக்கும் போது நீரை வீணாக்காமல குளியுங்கள். மீண்டும் சொல்கிறேன் குடிநீர் அரிய பொருள். இது இந்தியா என்றில்லை எங்கே இருந்தாலும் அடிப்படை உண்மை. (விஷேமாக அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்கு! புதிதாக சௌகர்யங்களை நுகரும் இவர்கள் நிறைய வீணாக்குவதைக் கண்டுள்ளேன்).

6. டாய்லெட் போய்விட்டு வரும் போது நனைத்த கையை உலர்த்த பேப்பரை உபயோகிக்காதீர்கள். நன்றாக உதறிவிட்டு ஜீன்ஸ் பாண்டில் துடைத்துக் கொள்ளுங்கள். கேட்டால் I'm Environmental Friendly! என்று பெருமையாகச் சொல்லுங்கள். அங்குள்ள பேப்பரை உருவாக்க காட்டு மரங்கள் வெட்டப்படுகின்றன என உணர்க. மரங்கள் வெட்டப்படுவதால் காடுகள் அழிகின்றன. காடுகள் அழியும் போது வனவிலங்குகளின் வாசம் (habitate) அழிகிறது. எனவே ஒரு வகையில் பல உயிர்க்கொலைகளுக்குக் காரணமாகிறீர்கள். மேலும் காடுகள் அழியும் போது Top Soil எனும் சத்துள்ள மேல் மண் காற்றில் தூசாகப் போய்விடுகிறது. அது போழ்து நிலம் சத்தை இழந்து வரண்டு போகிறது. நாம் நினைத்துப் பார்க்காத அளவு பாலை வனங்கள் உருவாகி வருகின்றன. இதைத் தவிர்க்கலாம்.

7. உயிர்க்கொலையைத் தவிர்க்கப் பாருங்கள். எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமையுண்டு. எல்லா உயிர்களுக்கும் வாழ ஆசையுமுண்டு. நமக்கு இருப்பது போல் அவைகளுக்கும் தாய் தந்தையர் உண்டு. குஞ்சு குளுவான்களுண்டு.

8. முன்பு போல் இல்லாமல் இப்போதெல்லாம் கோழிப்பண்ணைகள் வந்துவிட்டன. இந்தக் கோழிகள் குறைந்த இடத்தில் அடர்த்தியாக வைத்து வளர்க்கப்படுகின்றன. நாலு பேர் இருக்க வேண்டிய இடத்தில் நாற்பது பேர் இருந்தால் எரிச்சல் வருமா, வராதா? நீங்கள் உண்ணும் சிக்கன் இப்படி ஆத்திரப்பட்டு, வதையுண்டு செத்துப்போன சிக்கன் என்பதை உணர்க. நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். பன்றிகள் பல கொடுமைகளுக்கு ஆளான பின்னே கொலை செய்யப்பட்டு உங்கள் அடுப்படிக்கு வருகின்றன. ஒர் உயிர் நிறைய stress-ல் இருக்கும் போது தேவையில்லாத enzyme, hormone இவையெல்லாம் சுரக்கின்றன. அது மட்டுமல்ல, ஆடு, மாடுகள் கொழுப்புள்ளதாக இருக்க வேண்டுமென அவைகளுக்கு நிறைய ஹார்மோன் இன்செக்சன் (hormone injection) போடுகிறார்கள். இந்த ஹார்மோன்கள் அப்படியே நம் உடலுக்கு வந்து விடுகின்றன. இதனால் நமக்கு கான்சர் மற்றும் பிற நோய்கள் வருகின்றன. முடியுமென்றால், வெஜிடேரியனாக மாறிவிடுங்கள்.

9. கறிக்கு என்று வளர்க்கப்படும் மாடுககளுக்குத் தீவனம் போட காடுகள் அழிக்கப்படுகின்றன. அந்தக் காடுகளில் முறையாகப் பயிர் செய்தால் இந்த விலங்குகள் தருகின்ற புரதச் சத்தைவிட அதிக மடங்கு புரதைத்தை எடுக்க முடியும். Tofu என்று சொல்லப்படுகின்ற பட்டாணி புரதம் நிரம்பியது. பருப்பு வகைகள் அனைத்தும் புரதம்தான். வெஜிடேரியனாக இருந்தால் புரதம் சரி விகிதத்தில் கிடைப்பதில்லை என்பது பொய். நீங்கள் நினைப்பதை விட மேலதிக வெள்ளையர்கள் வெஜிடேரியனாக மாறிக் கொண்டு வருகிறார்கள். நான் ஒருவன் மாறுவதால் என்ன ஆகிவிடப்போகிறது...என்று கேட்காதீர்கள்.

10. இந்தியாவில் புலால் மறுப்பு என்பது வள்ளுவர் காலத்திற்கு முன்பே ஒரு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு, சமய அளவில் வளர்தெடுக்கப்பட்டதால்தான் இன்று உலகிலேயே மிக அதிக சாகபட்சிணிகள் (vegetarians) அங்கு வாழ்கின்றனர். நினைத்துப் பாருங்கள்! 600 கோடி இந்தியர்களும் நாளைக்கு புலால் சாப்பிட ஆரம்பித்தால் என்ன ஆகுமென்று. எங்கு போவது இவர்களுக்குத் தீனி போட? எனவே சிறு துளிதான் பெரு வெள்ளம் என உணர்க.

ஏதோ இவையெல்லாம் எட்டுக்கட்டி என் விழுமியங்களை (values) உங்கள் தலையில் கட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். இவையெல்லாம் Jane Goodall தரும் காரணங்கள். விலங்குகள் படும் அவதியைப் பார்த்துவிட்டு அவர் வெஜிடேரியனாக மாறியவர். மேலே சொன்ன கருத்துக்களை இன்னொருமுறை படியுங்கள்.

உன்னால் முடியும் தம்பி!!

பெண் மொழியில் அறிவியல்Jane Goodall எழுதிய Reason for Hope படித்து முடித்த கையோடு இதை எழுதுகிறேன். 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. தலை நகர் சென்று பார்ட்டி, சினிமா என்று பொழுதைக் கழிக்கலாமா? இல்லை நூலகத்திலிருந்த படிக்காத இப்புத்தகத்தை வைத்துக் கொண்டு பொழுதைக் கழிக்கலாமா? என்ற கேள்வி வந்தவுடன் புத்தகம் படிப்பதைத் தேர்ந்தெடுத்தேன். நானொன்றும் சிலர் போல் புத்தகப்புழு அல்ல. வாசிப்பது கொஞ்சம். அதுவும் non-fiction -னாக இருக்கும். காரணம் நான் படிக்கின்ற விஷயங்களை மேலோட்டமாக பார்ப்பதே இல்லை. அதன் ஆழ் பொருள் உள் இறங்காதவரை அடுத்த வரிக்குப் போகமுடியாது. எனவே நான் slow reader!

ஆய்வுலகில் நான் நுழைந்த போது இரண்டு பெண் மணிகள் சூழலியல் ஆய்வையே திசை திருப்பிக் கொண்டிருந்தனர். ஒன்று ஜேன், மற்றது ரேச்சல் கார்சன். நான் பின்னவர் வழியில் போகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஜேன் வழியில் போயிருப்பேன். Ethology எனும் துறை அப்போதுதான் தோன்றி வளர்ந்து கோண்டு இருந்தது. ஜேன் ஆப்பிரிக்க சென்று சிம்பான்சி குரங்கினத்தின் பண்புகளை, வாழ்க்கை வரலாறை ஆராய்ந்து ஒரு பெரிய மாற்றத்திற்கு வித்திட்டார். அவரது முதல் நூலை மாணவனாக இருக்கும் போதே படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கிளாசுக்கு மட்டம் போட்டு சூழலியல் புத்தகங்களைப் படிப்பேன். அவ்வளவு ஆர்வம்.

இத்தனை வருடத்திற்குப் பின் ஜேன் தன் மனது திறந்து அறிவியல், உளவியல், சமயம், நமது எதிர்காலம் இவைகளை ஒரு பெண் மொழியில் எழுதியிருப்பது மிகவும் ஹிதமாக இருக்கிறது. நான் படித்த காலத்தில் பரிணாமவியல் என்பது வரட்டு சித்தாதிகளின் இதயமற்ற துறையாக இருந்தது. அந்த பின்புலத்தில் தேர்வுற்ற என் கல்லூரிப் பேராசிரியர் ஒரு முரட்டு நாத்திகவாதியாக இருந்து என் போன்ற மென்மையான பலரை மிகவும் துன்புறுத்தி இருக்கிறார். ஜேன் அதற்கு மாற்று மருந்து கொடுத்திருக்கிறார். முழுக்க, முழுக்க உணர்வு பூர்வமாக அறிவியல் பேசுகிறார். இறைமை பற்றிய அவரது புரிதல் என் புரிதலிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. அவர் கிருஸ்தவப் பின்ணனியில் பேசினாலும் என் புரிதலைத்தான் பேசுகிறார். நிறைய அற்புதமான கவிதைகளை இப்புத்தகத்தில் அளிக்கிறார். உலகில் நடைபெறும் வன்முறை பற்றி, உணர்வற்ற அறிவியல் பற்றி, சுயநலமிக்க பொருளாதாரம் பற்றி, மேலைக்கலாச்சாரத்தின் நுகர்தல் வெறி பற்றி, புலால் உண்பது பற்றி இப்படி பல்வேறு பொருள் பற்றி மிக ஆழமாகப் பேசுகிறார். குழந்தையிலிருந்து எப்படி இத்துறைக்கு வந்தார் என்று மிக அழகான நடையில் சொல்கிறார். மனிதனின் அறிவின்மையால், மக்கட்பெருக்கத்தால் அவனது கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்டு முழிக்கும் சூழல், அங்கு வாழும் பிற ஜீவன்கள் இவைகளின் கதி என்ன ஆகுமென்று கவலைப் படுவது மட்டுமின்றி மாற்றுவழி உண்டா? என்றும் இப்புத்தகத்தில் ஆராய்கிறார்.

உலகம் மாறுமென்று நாம் காத்திருந்தால் உலகம் மாறாது, ஆனால் நம் பங்கீட்டின் மூலமே அது மாறும் என்பதற்காக அவர் ஆரம்பித்திருக்கும் Roots and Shoots எனும் இயக்கம் பற்றிச் சொல்கிறார். இதைப்படித்த பின் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு சூழல் பாதுகாப்பில் ஈடுபடுவர் என்று நிச்சயமாகச் சொல்லலாம். எத்தனையோ இடங்களில் கண்களைப் பனிக்க வைக்கிறார். இதை ஒரு பெண், ஒரு தாய், ஒரு உணர்வுள்ள மனுஷியால் மட்டுமே செய்யமுடியும் என்பது புத்தகத்தைப் படித்து முடித்த பின் தோன்றுகிறது.

எனக்குப் பல நேரம் தோன்றும், 'நாம் ஏன் வேலை மெனக்கெட்டு ஆழ்வார்கள் பற்றியும், ஆன்மீகம் பற்றியும் இங்கு எழுத வேண்டும்? யார் படிக்கிறார்கள்? யாருக்கு இதிலெல்லலாம் ஆர்வமிருக்கிறது என்று? அதற்காக விடை இப்புத்தகத்தில் இருக்கிறது. உடலியற் பரிணாமம் என்பது மனிதனைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது. ஜேன் அவர்களின் ஆய்வு கலாச்சார பரிணாமத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவியது. மனிதனுக்கு ஒரு எதிர்காலம் உண்டெனில் அது ஆன்மீகப் பரிணாமத்தில் (moral evolution) உள்ளது என்று எழுதுகிறார் ஜேன். முந்தையப் பரிணாமங்கள் பல கோடி வருடங்கள் எடுத்துக் கொண்டன, ஆயின் வரப்போகும் ஆன்மீகப் பரிணாமத்திற்கு நாம் அதிக நாள் காத்திருக்க முடியாது. தேவையான உளவியல் மாற்றம் உடனே நிகழ்ந்தாக வேண்டும் என்கிறார் ஜேன். நாம் ஒவ்வொருவரும் சீல குணங்களான அன்பு, காருண்யம், தயை கொண்ட சாதுக்களாக (saint)மாற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

சூழல் துறையில் ஒரு பிரபல statement உண்டு. சூழல் மாசு (pollution), சூழல் கேடுகள் (habitat destruction) இவைகளைக் கண்ணுறும் போது நமது சந்ததியினருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் அளிக்கவில்லை என்பது கண்கூடு. அது மட்டுமில்லை அவர்கள் எதிர்காலத்தை நாம் கடன் வாங்கிவிட்டோம் என்பார்கள். அவ்வளவு அழிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது. எனவெ இப்பொதுள்ள பெரியவர்களை மாறு!, மாறு! ந்ன்பது 'மயிலே! மயிலே! இறகு போடு! என்பது போன்றது. அதற்குப் பதில் யாருடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளதோ அவர்களிடமே நேரடியாக பேச ஆரம்பித்து இருக்கிறார் ஜேன். உலகமுழுவதுமுள்ள குழந்தைகளின் இயக்கமே வேரும், விழுதும் எனும் இயக்கம்! உங்கள் பகுதியில் வேரும் விழுதும் இல்லையெனில் உடனே ஜேன் குடால் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு ஆரம்பியுங்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லுவார் தற்போதைய நமது மெத்தனம் என்பது 'வீடு பற்றிக்கொண்டு எரியும் போது, தூங்குவது போன்றது' என்று. அரவிந்தர் தனது சாவித்திரி எனும் புத்தகத்தில் மனிதனின் அடுத்தகட்ட பரிணாமம் பற்றிப் பேசுகிறார். அது ஆன்மீகப் பரிணாமம் என்று நிறுவுகிறார். அதைத்தான் ஜேன் உலகளவில் செய்து கொண்டு வருகிறார்.

நாம் வலைப்பதிவில் செய்து வருகின்ற பணி, களத்தில் இறங்கி செய்து வருகின்ற பணி (குறிப்பாக தேன்துளி பத்மாவின் முயற்சிகள்) இவை நல்ல ஒரு எதிர்காலத்தை மானுடத்திற்கு வழங்கும் என எதிர்பார்ப்போம். சின்னச் சின்னக் காரியமாக இருந்தாலும், நல்ல காரியங்கள் பலனளிக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுவோம்!

இப்புத்தகம் 10 டாலருக்கு அமேசான்.வணியில் கிடைக்கிறது! புத்தாண்டுப் பரிசாகத் தரவேண்டிய புத்தகம்.

மிக நல்ல எண்ணங்களுடன் புது வருடம் பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி!!