பெண் மொழியில் அறிவியல்Jane Goodall எழுதிய Reason for Hope படித்து முடித்த கையோடு இதை எழுதுகிறேன். 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. தலை நகர் சென்று பார்ட்டி, சினிமா என்று பொழுதைக் கழிக்கலாமா? இல்லை நூலகத்திலிருந்த படிக்காத இப்புத்தகத்தை வைத்துக் கொண்டு பொழுதைக் கழிக்கலாமா? என்ற கேள்வி வந்தவுடன் புத்தகம் படிப்பதைத் தேர்ந்தெடுத்தேன். நானொன்றும் சிலர் போல் புத்தகப்புழு அல்ல. வாசிப்பது கொஞ்சம். அதுவும் non-fiction -னாக இருக்கும். காரணம் நான் படிக்கின்ற விஷயங்களை மேலோட்டமாக பார்ப்பதே இல்லை. அதன் ஆழ் பொருள் உள் இறங்காதவரை அடுத்த வரிக்குப் போகமுடியாது. எனவே நான் slow reader!

ஆய்வுலகில் நான் நுழைந்த போது இரண்டு பெண் மணிகள் சூழலியல் ஆய்வையே திசை திருப்பிக் கொண்டிருந்தனர். ஒன்று ஜேன், மற்றது ரேச்சல் கார்சன். நான் பின்னவர் வழியில் போகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஜேன் வழியில் போயிருப்பேன். Ethology எனும் துறை அப்போதுதான் தோன்றி வளர்ந்து கோண்டு இருந்தது. ஜேன் ஆப்பிரிக்க சென்று சிம்பான்சி குரங்கினத்தின் பண்புகளை, வாழ்க்கை வரலாறை ஆராய்ந்து ஒரு பெரிய மாற்றத்திற்கு வித்திட்டார். அவரது முதல் நூலை மாணவனாக இருக்கும் போதே படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கிளாசுக்கு மட்டம் போட்டு சூழலியல் புத்தகங்களைப் படிப்பேன். அவ்வளவு ஆர்வம்.

இத்தனை வருடத்திற்குப் பின் ஜேன் தன் மனது திறந்து அறிவியல், உளவியல், சமயம், நமது எதிர்காலம் இவைகளை ஒரு பெண் மொழியில் எழுதியிருப்பது மிகவும் ஹிதமாக இருக்கிறது. நான் படித்த காலத்தில் பரிணாமவியல் என்பது வரட்டு சித்தாதிகளின் இதயமற்ற துறையாக இருந்தது. அந்த பின்புலத்தில் தேர்வுற்ற என் கல்லூரிப் பேராசிரியர் ஒரு முரட்டு நாத்திகவாதியாக இருந்து என் போன்ற மென்மையான பலரை மிகவும் துன்புறுத்தி இருக்கிறார். ஜேன் அதற்கு மாற்று மருந்து கொடுத்திருக்கிறார். முழுக்க, முழுக்க உணர்வு பூர்வமாக அறிவியல் பேசுகிறார். இறைமை பற்றிய அவரது புரிதல் என் புரிதலிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. அவர் கிருஸ்தவப் பின்ணனியில் பேசினாலும் என் புரிதலைத்தான் பேசுகிறார். நிறைய அற்புதமான கவிதைகளை இப்புத்தகத்தில் அளிக்கிறார். உலகில் நடைபெறும் வன்முறை பற்றி, உணர்வற்ற அறிவியல் பற்றி, சுயநலமிக்க பொருளாதாரம் பற்றி, மேலைக்கலாச்சாரத்தின் நுகர்தல் வெறி பற்றி, புலால் உண்பது பற்றி இப்படி பல்வேறு பொருள் பற்றி மிக ஆழமாகப் பேசுகிறார். குழந்தையிலிருந்து எப்படி இத்துறைக்கு வந்தார் என்று மிக அழகான நடையில் சொல்கிறார். மனிதனின் அறிவின்மையால், மக்கட்பெருக்கத்தால் அவனது கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்டு முழிக்கும் சூழல், அங்கு வாழும் பிற ஜீவன்கள் இவைகளின் கதி என்ன ஆகுமென்று கவலைப் படுவது மட்டுமின்றி மாற்றுவழி உண்டா? என்றும் இப்புத்தகத்தில் ஆராய்கிறார்.

உலகம் மாறுமென்று நாம் காத்திருந்தால் உலகம் மாறாது, ஆனால் நம் பங்கீட்டின் மூலமே அது மாறும் என்பதற்காக அவர் ஆரம்பித்திருக்கும் Roots and Shoots எனும் இயக்கம் பற்றிச் சொல்கிறார். இதைப்படித்த பின் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு சூழல் பாதுகாப்பில் ஈடுபடுவர் என்று நிச்சயமாகச் சொல்லலாம். எத்தனையோ இடங்களில் கண்களைப் பனிக்க வைக்கிறார். இதை ஒரு பெண், ஒரு தாய், ஒரு உணர்வுள்ள மனுஷியால் மட்டுமே செய்யமுடியும் என்பது புத்தகத்தைப் படித்து முடித்த பின் தோன்றுகிறது.

எனக்குப் பல நேரம் தோன்றும், 'நாம் ஏன் வேலை மெனக்கெட்டு ஆழ்வார்கள் பற்றியும், ஆன்மீகம் பற்றியும் இங்கு எழுத வேண்டும்? யார் படிக்கிறார்கள்? யாருக்கு இதிலெல்லலாம் ஆர்வமிருக்கிறது என்று? அதற்காக விடை இப்புத்தகத்தில் இருக்கிறது. உடலியற் பரிணாமம் என்பது மனிதனைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது. ஜேன் அவர்களின் ஆய்வு கலாச்சார பரிணாமத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவியது. மனிதனுக்கு ஒரு எதிர்காலம் உண்டெனில் அது ஆன்மீகப் பரிணாமத்தில் (moral evolution) உள்ளது என்று எழுதுகிறார் ஜேன். முந்தையப் பரிணாமங்கள் பல கோடி வருடங்கள் எடுத்துக் கொண்டன, ஆயின் வரப்போகும் ஆன்மீகப் பரிணாமத்திற்கு நாம் அதிக நாள் காத்திருக்க முடியாது. தேவையான உளவியல் மாற்றம் உடனே நிகழ்ந்தாக வேண்டும் என்கிறார் ஜேன். நாம் ஒவ்வொருவரும் சீல குணங்களான அன்பு, காருண்யம், தயை கொண்ட சாதுக்களாக (saint)மாற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

சூழல் துறையில் ஒரு பிரபல statement உண்டு. சூழல் மாசு (pollution), சூழல் கேடுகள் (habitat destruction) இவைகளைக் கண்ணுறும் போது நமது சந்ததியினருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் அளிக்கவில்லை என்பது கண்கூடு. அது மட்டுமில்லை அவர்கள் எதிர்காலத்தை நாம் கடன் வாங்கிவிட்டோம் என்பார்கள். அவ்வளவு அழிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது. எனவெ இப்பொதுள்ள பெரியவர்களை மாறு!, மாறு! ந்ன்பது 'மயிலே! மயிலே! இறகு போடு! என்பது போன்றது. அதற்குப் பதில் யாருடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளதோ அவர்களிடமே நேரடியாக பேச ஆரம்பித்து இருக்கிறார் ஜேன். உலகமுழுவதுமுள்ள குழந்தைகளின் இயக்கமே வேரும், விழுதும் எனும் இயக்கம்! உங்கள் பகுதியில் வேரும் விழுதும் இல்லையெனில் உடனே ஜேன் குடால் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு ஆரம்பியுங்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லுவார் தற்போதைய நமது மெத்தனம் என்பது 'வீடு பற்றிக்கொண்டு எரியும் போது, தூங்குவது போன்றது' என்று. அரவிந்தர் தனது சாவித்திரி எனும் புத்தகத்தில் மனிதனின் அடுத்தகட்ட பரிணாமம் பற்றிப் பேசுகிறார். அது ஆன்மீகப் பரிணாமம் என்று நிறுவுகிறார். அதைத்தான் ஜேன் உலகளவில் செய்து கொண்டு வருகிறார்.

நாம் வலைப்பதிவில் செய்து வருகின்ற பணி, களத்தில் இறங்கி செய்து வருகின்ற பணி (குறிப்பாக தேன்துளி பத்மாவின் முயற்சிகள்) இவை நல்ல ஒரு எதிர்காலத்தை மானுடத்திற்கு வழங்கும் என எதிர்பார்ப்போம். சின்னச் சின்னக் காரியமாக இருந்தாலும், நல்ல காரியங்கள் பலனளிக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுவோம்!

இப்புத்தகம் 10 டாலருக்கு அமேசான்.வணியில் கிடைக்கிறது! புத்தாண்டுப் பரிசாகத் தரவேண்டிய புத்தகம்.

மிக நல்ல எண்ணங்களுடன் புது வருடம் பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி!!

3 பின்னூட்டங்கள்:

நிர்மல் 1/02/2007 10:14:00 AM

நல்ல பதிவு

Anonymous 1/03/2007 04:02:00 AM

நா.கண்ணன், நல்ல பதிவு. நீங்கள் ஏன் இன்னும் தமிழ் விக்கியில் இது பற்றியெல்லாம் எழுதவில்லை? அருள் கூர்ந்து தமிழ் விக்கியிலும் ஓரள்விற்கேனும் பங்கு கொண்டு இத்தகு நல்ல கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். தமிழ் விக்கியில் ஒரு சிறு குறிப்பே உள்ளது.

செல்வா, வாட்டர்லூ, கனடா.
பார்க்கவும்:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

நா.கண்ணன் 1/03/2007 08:20:00 AM

செய்கிறேன் ஐயா! (?)