தலபுராணம்!

இந்தியப் பண்பாடு காலம் கடந்து நிற்பதற்கு புராண, இதிகாசங்கள் முக்கிய காரணம். இந்திய மெஞ்ஞானிகள் கண்டுணர்ந்த அளப்பரிய பேருண்மைகளை, தத்துவங்களை எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் புராணம். கதை கேட்கும் பழக்கம் என்பது சுவையான மனிதப்பண்பு. எல்லா கலாச்சாரங்களிலும் கதைகளுண்டு. கதைகள் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் நடக்கிறது. இந்தப் பழக்கத்தை ஒரு யுத்தியாக பயன்படுத்தினர் இந்தியப் பெரியவர்கள். தத்துவங்களை இளகாப் பரிமாணத்தில் (abstract) கொடுத்தால் அது பழக்கப்படாத உள்ளங்களுக்கு போய் சேராது என்று கருதி, தத்துவங்களை கதாபாத்திரங்கள் மீது ஏற்றி புராணக் கதைகளாச் சொல்லிப் போயினர். எனவே புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது. கதைக்குப் பின்னாலுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாரம்பரியத்தில் கோயில் தலபுராணங்கள் விசேஷமானவை. தத்தம் ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவன் எல்லா வகையிலும் பேரூர் கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுப்பது தலபுராணங்கள். எல்லோராலும் காசி, ராமேஸ்வரமென்று போகமுடியாது, எனவே உள்ளூர் கோயில் எந்த வகையிலும் இப்பெருங்கோயில்களுக்கு சளைத்ததல்ல என்ற நம்பிக்கையைத் தருவன தல புராணங்கள். மேலும், ஐந்திணைகளாக உலகைப் பகுத்துக் காணும் தமிழ் மரபில், ஒவ்வொரு நில அமைவிற்கும் ஏற்றவாறு இறைப்பண்பு சற்று வேறுபடுவதாகக் கண்டனர். எனவே, வெவ்வேறு பிரதேசங்களில் இறைவனின் திருவிளையாடல் வித்தியாசப் படுகிறது. அதைச் சொல்வதே தலபுராணங்கள். மெய்யானிகளுக்கு அருள் மூலம் இறைவன் இக்காட்சிகளைக் காட்ட, அவர்கள் தல புராணங்களை எழுதி வைத்தனர். எனவே இவை ஒருவகையில் மறை ஞான (mystical)க் காட்சிகளின் தொகுப்பு என்றும் கூறலாம். இவைகளுக்கு ஒரு கனவுத் தன்மையும் இதனாலுண்டு.இத்தலபுராணங்கள், அக்கால வழக்கப்படி கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் புலமை உள்ளவர்களால் எளிதாக வாசித்துப் புரிந்து கொள்ளமுடியும்!

இத்தலபுராணங்கள் தாங்கும் புத்தகங்கள், சுவடிகள் அழிந்து வருகின்றன. சரியான பாதுகாப்பில்லாத சூழலில் இவைகளை இலக்க வடிவில் (digital media) சேமித்து வைப்பதே சாலச் சிறந்தது.

பொங்கல் பரிசாக தமிழ் மரபு அறக்கட்டளை >20 புத்தகங்களை இலக்கவடிவில் எல்லோரும் வாசிக்க அளித்துள்ளது! ஆர்வமுள்ளவர்கள் சென்று பயனடைக!! தமிழகத்தில் தேடியபோது நிறைய சிவன் கோயில் புராணங்கள் கிடைத்தன. எனவே அழகர்கோயில் தலபுராணம் மட்டுமே வைணவத்திற்கு கிடைத்திருக்கிறது. உங்களிடம் தலபுராணங்கள் இருந்தால் அறியத்தாருங்கள் அவைகளைப் பாதுக்காக்கலாம்!

8 பின்னூட்டங்கள்:

சேதுக்கரசி 1/18/2007 08:30:00 AM

எங்கே சென்றாலும் தலபுராணப் புத்தகம் வாங்குவது என் தந்தையின் வழக்கம். எனவே என்னிடமும் ஒருசில புத்தகங்கள் உள்ளன.

தலபுராணம் என்றால் தலை(வர்) புராணமா என்று அடுத்த தலைமுறை கேட்கும் அவல நிலை வந்துவிடுமோ என்றும் தோன்றுகிறது!

வடுவூர் குமார் 1/18/2007 09:35:00 AM

புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது
சரியாகச்சொல்லியுள்ளீர்கள்.

நா.கண்ணன் 1/18/2007 10:03:00 AM

//எனவே என்னிடமும் ஒருசில புத்தகங்கள் உள்ளன//

அவைகளை எனக்கு அனுப்பித் தந்தால் மின் நகல் எடுத்துவிட்டு அனுப்ப முடியும். உங்கள் பெயரில் அவைகளை இத்தொகுப்பில் சேர்த்துவிடலாம். தங்கள் தந்தையிடமும் கேளுங்கள். ஏதாவது பழைய அரிய புத்தகங்கள் உள்ளனவா என்று! (தொடுகுறி சோதித்துப் பார்த்தீர்களா?)

நன்றி, வணக்கம்!

நா.கண்ணன் 1/18/2007 10:05:00 AM

//புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது>>
சரியாகச்சொல்லியுள்ளீர்கள். //

ஜோசப் கேம்பல் இது பற்றி ஆழமாக ஆய்வுகள் செய்துள்ளார். தி.க பாணியில் தல புராணங்களை விமர்சிக்கக் கூடாது!

சேதுக்கரசி 1/18/2007 10:59:00 AM

//அவைகளை எனக்கு அனுப்பித் தந்தால் மின் நகல் எடுத்துவிட்டு அனுப்ப முடியும்.//

இதுகுறித்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன். (முதலில் புத்தகங்களை (தேடிப்)பிடித்து என்னென்ன இருக்கிறதென்று பார்க்கவேண்டும்! :-) பிறகு தெரிவிக்கிறேன்)

//(தொடுகுறி சோதித்துப் பார்த்தீர்களா?)//

உங்களின் முந்தைய பதிவை வாசிக்கவில்லை. விரைவில் பார்க்கிறேன்.

நா.கண்ணன் 1/18/2007 11:05:00 AM

நல்லது. அப்படியே செய்யுங்கள். அச்சு வந்தவுடன் பனையோலை பதிப்புகள் அப்படியே நின்றுவிட்டன. புத்தகப் பதிப்புகள் கூட பழசாகிவருகின்றன. அந்நாளைய தாளின் (பேப்பர்)தரம் படு மட்டமாக அமைவதும் இதற்குக் காரணம் (சரஸ்வதி மகால் பதிப்புக்களில் சில இப்படி இருப்பது, வருத்தமளிக்கிறது)

ஜடாயு 2/02/2007 05:41:00 PM

நா. கண்ணன், தலபுராணங்களில் பல செய்திகள் அடங்கியுள்ளன. இவற்றை மின் உலகுக்குக் கொண்டு வரும் உங்கள் சீரிய முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்.

// தமிழகத்தில் தேடியபோது நிறைய சிவன் கோயில் புராணங்கள் கிடைத்தன. எனவே அழகர்கோயில் தலபுராணம் மட்டுமே வைணவத்திற்கு கிடைத்திருக்கிறது. //

ஸ்ரீவில்லிப் புத்தூர் தலபுராணம் இருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். செய்யுளாக இருக்கும் நூல்களைத் தான் கண்க்கில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், உரை நடையில் பல வைணவ திவ்யதேசப் புராணங்கள் இருக்கின்றனவே !

நா.கண்ணன் 2/02/2007 05:52:00 PM

//உரை நடையில் பல வைணவ திவ்யதேசப் புராணங்கள் இருக்கின்றனவே !//

பிரச்சனை என்னவென்றால் இவைகளைச் சேகரம் செய்வது. ஆர்வமுள்ள யாராவது ஒருவர் புத்தகங்களைப் பெற வேண்டும். நம்பகத்தன்மை முக்கியம். பின் அவைகளை மின்னகலெடுக்கலாம்.

மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி செயற்குழு வேண்டும். என்னால் எல்லாவற்றையும் தொடர முடியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் சேர வேண்டும். We've the tools and expertise. We need people & team.