சம்பவாமி யுகே! யுகே!இந்தியாவின் தத்துவ சாரமாக பகவத் கீதை அமைந்துள்ளதை எல்லா இந்தியப் பெரியவர்களும் சொல்லியிருக்கின்றனர். ஆதி சங்கர பகவத் பாதாள், ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா, ஸ்ரீ மாத்வர், பிரபுபாதா, மகாத்மா காந்தி, பரம்ஹம்ச யோகாநந்தர், விவேகாநந்தர், ரமண மகரிஷி, பாரதி, வள்ளுவன், சின்மயானந்தா இப்படி...இந்த வரிசை இந்தக் கண்ணன் வரை நீளும். என்ன சந்தடி சாக்கிலே நம்ம பேரையும் சேத்துட்டேன்னு பாக்கிறீங்களா? அது நம் முதுசொம். அதை அணுகுவதற்கு, அனுபவிப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்து தர்மத்தின் பலமே இதுதான் (இதை துஷ்பிரயோகம் செய்பவர்களும் உள்ளனர் ;-(

கீதை ஆழமானது. அதைப் பல்வேறு கோணங்களில் அணுகலாம். வரி, வரியாக வியாக்கியானம் செய்யலாம். அதையெல்லாம் பாரதி போன்ற பெரியவர்கள் செய்யட்டும். ஒரே ஒரு சொற்றொடருக்கு மட்டும் இன்று காலையில் எனக்குத்தோன்றிய ஒரு விளக்கத்தைத் தந்துவிட்டு, சலாம் போட்டு அமர்ந்துவிடுகிறேன்."சம்பவாமி யுகே! யுகே!" சோ! இதே தலைப்பில் நாடகம் போட்டிருக்கிறார். அதர்மம் தலைதூக்கி தர்மம் அழியும் போது ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுவேன் என்பது கீதாச்சார்யனின் வாக்குமூலம். ராகா.வணியில் திரு.கே.கல்யாணராமனின் உபன்யாசம் கேட்டுக் கொண்டிருக்கும் போது, "தர்மத்தை நிலை நாட்ட வருவேன் என்று சொன்னானே தவிர அதர்மத்தை ஒட்டு மொத்தமாக அழிக்க வருவேன் என்று சொல்லவில்லை" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். ஆனால், அவரின் இச்சொல் என்னை விட்டு இன்னும் நகரவில்லை!

அப்படியென்றால்? அதர்மத்தை அழிக்க முடியாது என்று பொருளா? இல்லை இறைவனுக்குத்தான் அந்த வல்லமை இல்லையா? இத்தகைய கேள்விகள்தான் இந்து தர்மத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அதர்மம் என்பதை நம் முன்னோர்கள் disorder, chaos, ignorance என்று கொள்கின்றனர்.

ஒருவகையான இராசயன மாற்றத்தைப் பற்றி நம்மவர் பேசுகின்றனர். முதலில் எல்லாமே சேரும், மண்டியுமாகக் குழம்பிக் கிடக்கிறது. அதிலிருந்து பின் தெளிவு பிறக்கிறது. அதர்மம் என்பது தெளிவற்ற தன்மை. அதர்மம் அக்ஞானத்தின் விளைவு.

பாருங்கள்! உலகின் கொடுங்கோன்மையர் அனைவரும் மகாமடையர்களாக இருப்பர். இரண்யன், தான்தான் கடவுள் என்றான். ஆனால் விஷமுண்டு சாகக்கிடக்கும் மகனுக்கு உயிர் உண்டாக்கமுடியவில்லை. அப்போதாவது புரிந்திருக்க வேண்டும். இராவணன் பராக்கிரமசாலி. தனது நண்பனான வாலி பிறன் மனை கவர்ந்து இறந்த சேதி அறிந்த பின்னும், விபிஷணன் புத்திமதி சொல்லி அகர்ந்த பின்னும் மடத்தனமாக இருந்து எல்லோரையும் இழந்தான். ஹிட்லர் ஏடாகூடமாக ஆர்ய உயர் வாதம் பேசி அற்பச்சாவு அடைந்தான். இவையெல்லாம் மடமை.

மடமையிலிருந்துதான் ஞானம் பிறக்க வேண்டும். சேர் மண்டிய குளத்திலிருந்துதான் செந்தாமரை பூக்கிறது! எனவே, அதர்மம் என்பது, கொடுங்கோன்மை என்பது, அறிவின்மை என்பது இராசாயன மாற்றத்திற்குத் தேவையான அடிச்சாறு. அதைக் காய்ச்ச, காய்ச்ச நல்மருந்து அதிலிருந்து வருகிறது! கடலைக் கடைந்த போது காமதேனு வந்தது, திருமகள் வந்தாள், தன்வந்திரி வந்தார். கடலின் அடிமட்டம் வாழ முடியாத ஓரிடம். கடலைக் கலக்கினால் எவ்வளவு மண்டி வரும்! ஆனாலும், அதிலிருந்து பல நல்ல சமாச்சாரங்களும் வந்திருக்கின்றன.

பத்மநாபன், பிரம்மாவைப் படைத்த கையோடு கூற்றுவனையும் படைத்தானாம்! நம்மாழ்வார் சொல்கிறார். இதுதான் அவன் சிருஷ்டி! நல்லது கெட்டது கலந்தே இருக்கும் படைப்பு. நமக்கு நிம்மதி வேண்டுமெனில் நன்மையை நாடுவோம். துரியோதனன் மாதிரி உலகின் கெட்ட விஷ்யங்களையே பார்த்துக் கொண்டிருந்தால் நாம் வாழவே முடியாது. இதை அறிந்துதான் உபநிஷத்து கேட்கிறது இறைவனிடம்:

அசதோமா சத் கமய
தமசோமா ஜ்யோதிர் கமய
ம்ரித்யோர்மா அமிர்தம் கமய
சாந்தி: சாந்தி: சாந்தி

என்று.

கெட்டவைகள் சூழ்ந்துள்ள என் உலகில் எனக்கு நல்லவை காண்பிக்க;
சோம்பிக்கிடக்கும் போழ்துகளில் உள்ளொளி தந்து உய்விக்க;
மரணம் சூழ்ந்துள்ள இவ்வுலகில் எனக்கு அமிழ்தம் தருக!
இதுவே எனக்கு சாந்தியைத் தரும்!
Keywords: Order, disorder, primordial chemistry, Goodness, Evil, Gita, Krishna, Upanishat, reincarnation

2 பின்னூட்டங்கள்:

கபீரன்பன் 1/20/2007 09:23:00 PM

தில்லை நாதனின் கூத்தில் அவன் காலடியில் கிடக்கும் முயலகனைப் பற்றிய விளக்கத்திலும் "அதர்மத்தைக் கட்டுக்குள்" வைத்திருப்பதின் சின்னமாகக் கொள்வர். அதர்மம் என்று ஒன்று இல்லாவிட்டால் பின் நாடகமேது ? வில்லன் இல்லாமல் நாயகன் எதற்கு?

கடலை கடைந்தபின் ஆலாஹல விஷமும் வந்தது. ஒவ்வொரு பெரும் சோதனையும் இறைவனின் அளவில்லாத ஆற்றல் வெளிவருவதற்கான ஒரு காரண காரியமாகவே காட்டப்படுகிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. அதனால் தான் சாக்ஷி பாவத்தை வளர்த்துக் கொண்டால் சாந்தி கிடைக்கும் என்றனர் பெரியோர். அது உங்கள் கட்டுரையில் பிரதிபலிக்கிறது. சிறக்கட்டும் உங்கள் பணி

நா.கண்ணன் 1/20/2007 09:29:00 PM

மிகச்சரியாகச் சொன்னீர்கள்! திருவிளையாடலுக்கு ஒரு சாக்கு :-) இந்த விடை இன்னும் மின் தமிழ் வரை போகவில்லை. அங்கே ஒருவர் கேட்டிருக்கிறார். இங்கே ஒருவர் பதில்! என்ன திருவிளையாடல்!!