வேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிதிருப்பள்ளியெழுச்சி என்பது சிற்றஞ்சிறுகாலை இறைவனை துயிலெழுப்புவது. இரவும், பகலும் நமக்குத்தான் என்றாலும் அதை இறைவன்பால் வைத்து அவனை இரவு பள்ளிக்கு அனுப்புவது, பின் எழுப்புவது எல்லாமே நம் சௌகர்யத்திற்குத்தான். முதலில் ப்ரியா சகோதரிகள் பாடியிருக்கும் வேங்கடேச திருப்பள்ளியெழுச்சிதனை தமிழில் கேளுங்கள். பின் தொடர்வோம் (படத்தைத் தொடுக).மிக அழகான தமிழ், மிக அழகான, தெளிவான வழங்கல். இரண்டு பேர் பாடுகிறார்கள் என்பதைத் துருவித்துருவிக் கேட்டாலும் கண்டு பிடிக்க முடியாது!

இப்பள்ளியெழுச்சிதனை சுப்புலட்சுமி அம்மா பிரபலப்படுத்திய பின்னும் இதன் பொருள் விள்ங்காமலே நம்மில் பலர் கேட்டுக்கொண்டு இருந்திருப்போம். அக்குறை இப்போது தீர்ந்தது. கவனமாகக் கேட்டால் இப்பள்ளியெழுச்சி பல விஷயங்களைச் சொல்வது புரிகிறது.

1. ஆழ்துயில் என்பது 'நான்' என்பது இல்லாமை. கண் விழிக்கும் போது 'நான்' மீண்டும் பிறக்கிறது. எனவே பள்ளியெழுச்சி என்பது பிறந்த நாள் வாழ்த்து.

2. நான் என்பது ஓர் உணர்வு. அது அரூபமானது. அதனால் பார்க்கமுடியும்.எனவே முதலில் கண்ணில் படும் உலகம் பேசப்படுகிறது.

3. பின் யார் பார்ப்பது என்ற கேள்வி வருகிறது? பிரம்மா கண்ணாடி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். கண்ணாடியில் முகம் பார்க்கிறோம். ஓ! அந்த அரூபத்திற்கு புகலிடமாக ஒரு உடல் உள்ளது என்று அறிந்து கொள்கிறோம். 'ஊனுடம்பு ஆலயம்' என்பது ஆன்றோர் வாக்கு. எனவே திருவேங்கடவன் கோயில் பேசப்படுகிறது.

4. உடல் என்ற காரிய வஸ்து உண்டென்றால் அதற்கொரு காரண வஸ்து இருக்க வேண்டும். நம் உடலை உருவாக்கித்தந்தவள் தாய். எனவே மகாதேவி என்றழைக்கப்படும் ஸ்ரீதேவி துதிக்கப்படுகிறாள். அவளை தியாகைய்யர் 'சீதம்மா! மாயம்மா!' என்கிறார். அவள்தான் மாயை. அவளே காணும் உலகிற்குக் காரணம். அவள் ஈசனுடன் இரண்டறக் கலந்தவள்.

5. உலகம் எவ்வளவு வசீகரமானது என்பதைக் கவித்துவத்துடன் வருணிக்கிறார் அண்ணா. தன்னை உலகின் சிறந்த கவிஞனாக்கு என்றும் வேண்டுகிறார்.

6. ஆழ்வார்களின் இன்தமிழை ஞாபகப்படுத்தி, உலகின் ரம்யங்களில் மிக முக்கியமானது இந்த இன்தமிழ் என்கிறார். 'தமிழுக்கும் அமுதென்று பேர்!'

7. இப்படைப்பை உருவாக்கி, காத்து, கெடுத்துழலும் பராசக்தியைப் பலவாறு புகழ்கிறார்.

8. படைத்தவன் ஒருவன் உண்டென்றால் அவனைக் காட்டும் குரு எவ்வளவு முக்கியமானவர். எனவே மணவாள மாமுனிகளின் பாத மலர்களைத் தொழுகிறார்.

9. இறுதியில் மிக முக்கியமான யோகத்தைப் பற்றிச் சொல்கிறார். யோகம் என்றாலே 'கலவி, சேர்க்கை' என்று பொருள். தனியாகப் பிரிந்து காண்பவன், காண்கின்ற உலகம் என்ற இரண்டு இருப்பது போல் போக்குக் காட்டும் மாயை, தன் கிருபையினால் இவனை இறைவனுடன் ஐக்கியப்படுத்திவிடுகிறது. பின் காண்பவன், காண்பவை இரண்டும் ஒன்றாகிவிடுகிறது. அப்போது திருப்பள்ளியெழுச்சி என்பது நமக்குத்தான் என்று புரிகிறது!!

தினமும் இதைக் கேட்க வேண்டும். அப்படிச் செய்வதால் நம் சுயரூபம் தெளிவு பெற்று ஆன்மப் பொலிவுறும்!! ஓம் தத் சத்!

பிகு: இறைச் சரணம் நடைபெறும் காலையில் கிரக தோஷம் என்பது தானாக விலகிவிடுகிறது.

நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (பாரதி)

மூலம் (சமிஸ்கிருதம்): எம்.எஸ்.சுப்புலட்சுமி

படிக்க வேண்டிய வலைப்பதிவு: சுப்ரபாதம்
Keyword: Sree Venkatesa Suprapatham, self awareness, awakening, dawn, prayer, astrology, planets, prabathi, surrender

2 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 1/29/2007 05:05:00 AM

அதென்னமோ தெரியலை, இத்தனைநாள் வரை நம்ம எம்.எஸ். அம்மாவின் சுப்ரபாதம்தான்
(முழுசாப் பொருள் சில இடங்களில் புரியவில்லைன்னாலும் ) மனசுக்குள் அப்படியே
உக்கார்ந்திருக்கு. நம்ம கண்ணபிரான் அதுக்குப் பொருள் விளக்கம் எழுத ஆரம்பிச்சதும்
மனசு துள்ளிக் குதிச்சது.

இப்ப நீங்க கொடுத்த சுட்டியிலே போய்க் கேட்டால்............

அப்பாடா.......... அருமையான தமிழாக்கம்.

எல்லாம் நல்லாப் புரிஞ்சுபோச்சு.

நன்றி கண்ணன்.

என்னே! கண்ணன் திருவிளையாடல்.

நேத்துதான் நம்ம சிங்கை ஜெயந்தி சங்கர், என்னிடம் கொடுத்தனுப்பிய
சுப்ரபாதம் ஸ்தோத்திரப் புத்தகங்களை,(சமஸ்கிருதத்தை அப்படியே
தமிழில் எழுதுனது) இங்கே தமிழ் படிக்கத் தெரிந்தவர்களுக்கு
விநியோகித்தேன்.

நா.கண்ணன் 1/29/2007 08:14:00 AM

வாங்க துளசி! என்ன இருந்தாலும் தமிழில் பொருள் புரிந்து கேட்கும் போது உயிரைப் பிழிகிறது. என்ன புண்ணியம் செய்தோமோ, இதையெல்லாம் பொருள் புரிந்து அனுபவிக்க. கண்ணபிரான் ஒரு தேன் வண்டு. அவர் செய்வது தொண்டு. தொடர்பு கொடுத்துள்ளேன்! ப்ரியா சகோதரிகள் குரல், உச்சரிப்பு, வழங்கல்..Superb!!