பக்திக்கு ஒருமுகமா? பன்முகமா?

இறைமை ஒருமுகமெனப் பார்த்தோம். அதை ஈஸ்வரர், அல்லா, பிதா என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.சொல்லினால் தொடர்ச்சி நீ
சொலப்படும் பொருளும் நீ,
சொல்லினால் சொலப்படாது
தோன்றுகின்ற சோதி நீ,
சொல்லினால் படைக்க நீ
படைக்கவந்து தோன்றினார்,
சொல்லினால் சுருங்க நின்
குணங்கள் சொல்லவல்லரே?
(11)

என்பது திருச்சந்த விருத்தம் (திருமழிசை)

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி என்றும் சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லவர் யார்? என்றும் கேட்பதினால் என்ன பேரில் சொன்னாலும் பாதகமில்லை என்றாகிறது. குழந்தைக்கு அபிதகுசலாம்பாள் என்று அழகான அம்பிகை பேர் வைத்துவிட்டு 'பப்பு' என்று அபத்தமாகக் கூப்பிடுவது போல்தான்! நம்ம ஆசைக்கு ஒரு பெயர்! அவ்வளவுதான்.

ஆனாலும், சொல்லினால் நாம் நம் தியான விளைவால் நாராயணன், சிவன் என்று படைக்க, உடனே அவன் அப்பெயரில் வந்து அமர்கிறான் என்கிறார் திருமழிசை! சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ! என்று வேறு சொல்கிறார். ஏனப்படி? இங்குதான் மனித உளவியல் உருக்கொள்கிறது! நமக்குப் பெயர்கள் அவசியம். பெயரிலி என்று பின்னூட்டமிடும் போதும், அனானி என்று எழுதும் போது பதிலளிக்கத் தடுமாறுகிறோம். நமக்கு ஒரு 'சுட்டு' வேண்டியிருக்கிறது.

எனவேதான் நாம ரூபமற்ற இறைமையை கல்யாண குணங்களுடன் வருணிக்கும் பழக்கம் இந்தியாவில் தோன்றியது. நாரணன் என்று பெயர் வைத்தால் அவனது கல்யாண குணங்களை அனுபவிக்க தோதாக இருக்கிறது. வெறுமே சுவரைப் பார்த்துக் கொண்டு தியானம் செய்யும் ஜென் புத்த சநிநியாசிகள் கூட கண் விழித்தவுடன் நாம, ரூப உலகில்தான் சஞ்சாரிக்க வேண்டியுள்ளது. அந்த உலகிற்கு தொண்டாற்றுவது சிறந்த கடனாகப் பார்க்கப்படுகிறது. ஒன்றுமே இல்லாத இறைமைக்குத்தான் இஸ்தான்புல்லில் உலகின் மிக அழகான மசூதி கட்டப்பட்டிருக்கிறது!

எனவே இல்லை, இல்லை என்பதை விட இருக்கு, இருக்கு என்பதில் மனநிறைவு இருக்கிறது! உண்மையில் 'இல்லை' என்பதொன்றில்லை. எல்லாமே அறியப்படுவவையாகவே உள்ளன. எனவே இறைவன் என்பவன் 'பம்மாத்து வேலை' அல்ல. தெரிந்து கொள்ளக்கூடியவனே. பழகக் கூடியனே! பேசக்கூடியவனே! காணக் கூடியவனே!

அவனை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி உணர வேண்டும், எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விகள் வரும் போதுதான் அத்தனை வேதங்களும், உபநிடதங்களும், புராண, இதிகாசங்களும் பொருள் கொள்ளுகின்றன.

இந்திய உப கண்டத்தைப் பொருத்தவரை, ஒரு தேவ உலகமே நமக்காகக் காத்திருக்கிறது. நமக்குத் தேவையான இஷ்ட தேவதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குழந்தையாய் இருக்கும் போது பிள்ளையார், கண்ணன், முருகன். விடலைப் பருவத்தில் அம்பாள், கண்ணன், முருகன். வளர்ந்து முதிர்ந்த பருவத்தில் நாரணன், சிவன், அம்பாள் (சக்தி). இவற்றின் பல்வேறு ரூபங்கள் நம் தேவைக்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இத்தெய்வங்கள் என்பவை நம் ஆன்ம பந்துக்கள். நம் ஆன்ம வளர்ச்சிக்கு உதவுபவை. இதை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் கண்டு உணரலாம். இந்த வழிமுறையில் வராத கிறிஸ்தவ, யூத, முஸ்லிம் சம்பிரதாயத்தில் கூட நமக்கென உதவும் தேவதைகள் (guardian angels)அவ்வப்போது உண்டு. ஒரு focal point உண்டு.

மெதுவாக இந்த அரூப சக்தியுடன் நமக்கொரு உறவு வளரத் தொடங்குகிறது. சங்கம் இதை 'ஆர்வம்' என்ற பதத்தால் குறிக்கிறது, முதலில் உறவு வளர ஆர்வம் வேண்டும். ஆர்வம் வந்த பின் காதல் வருகிறது. காதல் கனியும் போது பிரேமை/அன்பு/பக்தி உருக்கொள்கிறது.

காதல் என்று வந்தவுடன் பன்மை தானாக மறந்துவிடுகிறது. ஏதாவது ஒன்றுடன்தான் காதல் கொள்ளமுடியும். அதுதான் பக்தி என்பது. எனவே பக்திக்குத் தேவை ஒருமைதான். உலகில் பெண்களுக்கா குறைச்சல்? அம்மா இருக்கிறாள், சகோதரிகள் இருக்கிறார்கள், பக்கத்து வீட்டு, அடுத்த ஊர் பெண்களெல்லாம் இருக்கிறார்கள். இருந்தாலும் நமக்கு யாரோ ஒருவர் மேல்தான் 'கிக்' வருகிறது. அதுவே காதலாக மாறுகிறது.

ஒரு சினிமாப் பாட்டு உண்டு. எஸ்.பி.பி பாடியது.

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.... அது ஏதோ.... அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது~~~~~
அதை அறியாமல் விடமாட்டேன்
அதுவரை உன்னைத் தொடமாட்டேன்
(கேப்டன் மகள்)

ஆன்மீகத்திற்கும் இதுதான். எந்த தெய்வத்திலும் இல்லாத அழகு! அது ஏதோ! அது ஏதோ! நம் இஷ்ட தெய்வத்திடம் காண்கிறோம். அதுவே காதல். அதுவே பக்தி.

மனித உறவில் இருப்பது போலவே இக்காதலை மற்றவருக்குச் சொல்லாமல் வைத்திருக்கும் வழக்கம் கூட உண்டு (கிருபானந்தவாரியார் அப்படியொரு கதை சொல்லுவார்). இது எதைக் காட்டுகிறது என்றால் பக்தி என்பது தனி மனிதனுக்கும் அவன் இஷ்ட தெய்வத்திற்கும் மட்டும் உள்ள உறவு அது என்பதுதான்.

அப்புறம் எப்படி கோடான கோடி மக்கள் ஒரே தெய்வத்திடம் பக்தி செலுத்துகின்றனர்? என்று கேட்கலாம்! கோடான கோடி என்றாலும் பக்தி உருவாகும் இதயம் ஒன்றுதான். அது தனிமையிலேயே செயல்படுகிறது. இராசலீலையில் கண்ணன் செய்வது போல் இறைச் சக்தியால் அக்கோடான கோடி ஜனங்களிடமும் தனித்தனியாக காதல் செய்யும் வல்லமை இருக்கிறது. மதுராபுரியில் கண்ணனுக்கு 64000 மனைவியர் இருந்தனரே என்றால், அவனால் கட்டிக் காக்க முடிகிறது! என்று பொருள். அவனது செய்கைகள் எல்லாமே 'மெகா'தான். வையத்தை அளப்பது, மலையைத் தூக்குவது, சின்ன வாய்க்குள் பிரபஞ்சத்தைக் காட்டுவது!! எனவே தைர்யமாக அவனிடம் காதல் செய்யலாம். சந்தேகமிருந்தால், கண்ணன் பாட்டு என்றொரு வலைப்பூ உள்ளது. அங்கு போய் பாருங்கள். அலுக்காமல், சலிக்காமல் கண்ணனிடம் காதல் செய்பவர்களை!

கிருஷ்ண பக்தி பற்றிச் சொல்வதற்கு கிருஷ்ணப் பிரேமியை விட்டால் வேறு யார் உளர்? இந்த இனிய உரையைக் கேளுங்கள். ஹரி கதை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே! 30 நிமிடத்திற்கும் மேல்! எனவே நேரம் வைத்துக் கொண்டு கேட்டு அனுபவியுங்கள்!


Keyword: religion, hinduism, bakti, multiple gods, god, angels

7 பின்னூட்டங்கள்:

கால்கரி சிவா 1/14/2007 02:14:00 AM

//பக்தி என்பது தனி மனிதனுக்கும் அவன் இஷ்ட தெய்வத்திற்கும் மட்டும் உள்ள உறவு அது என்பதுதான்.//

மிக உண்மையான வரிகள் கண்ணன் சார்

ஜடாயு 1/15/2007 11:59:00 PM

கண்ணன் சார்,

அருமையான பதிவுகள். உங்கள் பழைய பதிவுகள் சிலவற்றையும் இப்போது தான் படிக்கிறேன். உரைகளைக் கேட்க முடிவதில்லையே என்று கஷ்டமாக இருக்கிறது.. நேரமே நேரமே நீ எங்கே??

// மனித உறவில் இருப்பது போலவே இக்காதலை மற்றவருக்குச் சொல்லாமல் வைத்திருக்கும் வழக்கம் கூட உண்டு (கிருபானந்தவாரியார் அப்படியொரு கதை சொல்லுவார்). இது எதைக் காட்டுகிறது என்றால் பக்தி என்பது தனி மனிதனுக்கும் அவன் இஷ்ட தெய்வத்திற்கும் மட்டும் உள்ள உறவு அது என்பதுதான். //

ஆழமான கருத்து. திருமந்திரத்தில் ஒரு பாடல் உண்டு -

"முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல் என்றால் எங்ஙனம் கூறுமே!"

உண்மையான ஆன்ம அனுபவம் என்பது அந்த அளவுக்கு தனிமையானது, அந்தரங்கமானது!

நா.கண்ணன் 1/16/2007 08:07:00 AM

அன்பின் ஜடாயு:

வாருங்கள். என்ன ஆளையே காணோம் என்று காத்திருந்தேன். திருமூலர் ஒளிவு மறைவில்லாத ஞானி. இந்தியத் தத்துவங்களின் உண்மைப் பொருளறிய அவரை விடச் சிறந்த ஆசான் தேவையில்லை.

உரை கட்டாயம் கேளுங்கள். மிகவும் ரசிப்பீர்கள். மிகச் சிரமப்பட்டு அவ்வுரையை எடுத்தேன். நேரம் என்பது நாம் உருவாக்கிக்கொள்வதுதான். மனமிருந்தால் மார்க்கமுண்டு ;-)

S.K 1/16/2007 01:49:00 PM

தங்களிடம் கிருஷ்ணப்ரேமி அவர்களின் ஹரிகதை ரெகார்டிங் இருக்கிறதா? அப்படி ஒரு கலெக்ஷன் இருந்தால் தயவுசெய்து அவற்றை ஒரு CD-யில் காப்பி செய்து எனக்குத் தர இயலுமா?

நன்றியுடன்,

எஸ்.கே
http://kichu.cyberbrahma,com/

நா.கண்ணன் 1/16/2007 02:04:00 PM

//தயவுசெய்து அவற்றை ஒரு CD-யில் காப்பி செய்து எனக்குத் தர இயலுமா?//

தயவுசெய்து சரியாக அறிமுகம் செய்து கொள்ளுங்களேன். இணைப்பு எதுவும் வேலை செய்யவில்லை!

S.K 1/16/2007 02:18:00 PM

புள்ளிக்குப் பதில் கமா போட்டுவிட்டேன். அதுதான் பிரச்னை!

http://kichu.cyberbrahma.com/

இதுதான் என் தமிழ் வலப்பதிவு. அங்கே என்னைப் பற்றிய முழு விவரம் உள்ளது. என் விலாசம், தொலைபேசி முதலியவற்றை தனி மெயிலில் தங்கள் பதில் கண்டபின் அனுப்புகிறேன்.

நன்றி

எஸ்.கே

நா.கண்ணன் 1/16/2007 03:04:00 PM

இவரது பேச்சுக்கள் எக்கச்சக்கமாக தமிழகத்தில் கேசட்டாகக் கிடைக்கின்றன. கிருஷ்ணப்பிரேமி என்று கூகுளில் தேடினால் விநியோகஸ்தர் (சென்னை) தொடர்பு கிடைக்கும். இப்போது சிடி வடிவிலும் வரத்தொடங்கியுள்ளன. என் பதிவில் உள்ளது \'ஆன்லைன் ஸ்டீரீமிங்\' செய்து எடுத்தது. கொஞ்சம் சிரமமான வேலை. நான் வெளிநாட்டில் வாழ்கிறேன். நன்றி. வணக்கம்.
//இச்செய்தியை உங்கள் சேதிப்பெட்டி வழியாக அனுப்ப முயற்சித்தேன்.!!!//