மால்_Mall எனும் உலகம்!

உலகம் வெகு வேகமாக மாறிவருகிறது. சந்தைப் பொருளாதாரம் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக நூதன வழிகளைக் கண்டவண்ணம் உள்ளது. முன்பெல்லாம் பண்டிகை என்றால் பொங்கல், தீபாவளி என்று முடிந்துவிடும். வருஷப்பிறப்பு, ராம நவமி, கோகுலாஷ்டமி, சிவ ராத்திரி என்று சிறு, சிறு பண்டிகைகள் வருடம் பூரா வந்தவண்ணம் இருக்கும். ஆனால், அவையெல்லாம் பழசாகிவிட்டன என்று துபாயிலிருந்து திரு.சுப்பிரமணியன் மின்தமிழில் எழுதினார். ஆங்கில வருடப் பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. வாலண்டைன் தினம் என்பது புத்தம் புதிதாக உருவாகியுள்ளது! சந்தைப் பொருளாதாரம், அமெரிக்க முன்னணியில் பல புதிய விழாக்களை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது. எல்லா நாடுகளும் மெல்ல, மெல்ல ஒருங்கிணைந்த சந்தைப் பொருளாதார விழாக்களுக்குப் பழகி வருகின்றன. புது வருட விழா வர, வர மிக விமர்சையாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. பெரிய, பெரிய பார்டிகள், வாண வேடிக்கைகள், ஆட்டம் பாட்டமென்று!

நமது பண்டிகைகள் எல்லாம் உறவை வளர்க்கப் பிறந்தவை. முதல் உறவு நாம் வாழும் பூமி, அது தரும் இருப்பு, உணவு, வாழ்வு. பொங்கல், பூமிக்கு நன்றி சொல்லும் விழா. இதுவே தமிழரின் பெரிய விழா. அடுத்து, வருடம் பிறப்பது. வருடப் பிறப்பன்று கூட கோயில், குடும்பம் என்பதோடு முடிந்துவிடும். குடும்பம் என்பது இந்திய குணாம்சத்தின் ஆணி வேர் என்றும், அதைச் சரியாகத் திரையில் சித்தரித்தவர் சிவாஜி கணேசன் என்றும் பேரா.சிவத்தம்பி கூறுகிறார்.

ஆனால் இவையெல்லாம் மாறிவருகின்றன. குடும்பங்கள் தன் தன்மையை இழந்து, கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள், இவர்களது தேவைக்கு amusement part, hotels (with swimming pool) restaurants..அட! மறந்து விட்டேனே! மால்! ஆம் Mall. இதுதான் இனிமேல் வரும் சந்ததியினரின் கூடுமிடமாக இருக்கும். எல்லாம் மாலில் கிடைக்கும். மால் என்று தமிழில் சொன்னால் அது கவர்ச்சி, காந்தம், இழுப்பு என்று பொருள். திருமால் என்றால் லக்ஷ்மிகாந்தன் என்று பொருள். இது அப்படியே இங்கிலீஷ் Mallக்குப் பொருந்துவது ஆச்சர்யம் ;-)

அமெரிக்க மால்கள் அட்டகாசமாக இருக்கின்றன. உள்ளே போனால் பொழுது போவதே தெரியாது. 1922-ல் முதல் மால் கான்சாஸ் நகரில் உருவானதாம். எடினா, மினசோடாவில் 1956-ல் இப்போது காணக்கூடிய மாலின் வரைவு தோன்றுகிறது. சார்லி சாப்ளின் படத்திலேயே இதைப் பற்றிய ஆவணம் வந்துவிடுகிறது. 1981 மேற்கு எட்மண்ட்டன் மால், அல்பெர்ட்ட, கானடாவில் கட்டப்படுகிறது. இதனுள் 800 கடைகள், hotel, amusement park, miniature-golf course, church, "water park" for sunbathing and surfing, a zoo and a 438-foot-long lake என்பவை எல்லாமடங்கும்! எட்மண்டனில் இது போல், தரைக்கு உள்ளே அமைந்திருக்கும் மிகப்பெரிய மாலொன்று உண்டு. வெளியே வரவே வேண்டாம்!!

காசுப் பொழக்கம் இல்லாத எங்கள் பிள்ளைப் பருவ காலத்தில் சிறுவர்கள் கூடி கோலிக்குண்டு ஆடுவோம், பம்பரம் சுற்றுவோம், ஆளில்லாத போது கொடுக்காப்புளி விதையை வைத்துக் கொண்டு மேற்தொலியை நாசூக்காக உரித்துக் கொண்டிருப்போம், தோப்பிற்குள் போய் மாங்காய் களவாடுவோம், பம்பு செட்டில் குளித்து கும்மாளம் போடுவோம். இது எதிலும் செலவே கிடையாது! குட்டிப் பெண்கள் இதிலும் கெட்டி. சிறுவானிமுடிச்சு என்று தனியாக காசு சேர்த்து வைத்திருப்பர். ஆனால் இன்று!

என் மருமானின் பிள்ளைக்கு அவன் தாத்தா தெருவோரத்தில் இருந்த ஒரு கடையில் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்தார். அவன் ஓவென்று அழுதுவிட்டான். அது அவமானமாம். அவனுக்கு Spencer plaza போய் 500 ரூபாய்க்கு சட்டை எடுத்துக் கொடுக்கணுமாம்! இதைத்தான் சந்தைப் பொருளாதாரம் விரும்புகிறது! நம்மைச் செலவாளியாக்கி, கடைசியில் ஓட்டாண்டியாக்கிவிடுகிறது! இப்போதுள்ள credit society-ல் எல்லோருக்கும் கடன் இருக்கும்! நாம்தான் கடனாளியாகிறோம், ஆனால், உலகின் 6 பெரிய பணக்காரர்கள் கையில் உலகின் 56% பொருளாதாரம் முடங்கிவிடுகிறது. இந்த அறுவரும் அமெரிக்கர்கள் என்று சொல்லத் தேவையில்லை!அமெரிக்காவின் மால் கலாச்சாரம் உலகமெங்கும் பரவிவிட்டது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, வியட்நாம் (கவனியுங்கள், இவை கம்யூனிச நாடுகள்!!),கொரியா, ஜப்பான் என்று. கேட்டால் 'நாம் எப்பதான்' அனுபவிப்பது என்று சொல்லுகிறார்கள். சந்தைப் பொருளாதாரம் ஒரு நுகர் கலாச்சாரம். எல்லாவற்றையும் சுயதேவைக்கு கபளீகரம் பண்ணிவிடும். அது உலகின் மிக அரிய, தொன்மையான tropical forest-ஆக இருக்கலாம், அல்லது உலகின் மிக ஆழமான, தொன்மையான கலாச்சாரமாக இருக்கலாம். எல்லாம் இங்கு நுகரப்படும்! மீனாட்சி கோயிலுக்குப் போய் பாருங்கள். கோயில்கடையில் விபச்சாரம்கூட நடக்கிறது! எல்லாம் நுகரப்பட வேண்டியவையே!

மால் என்றால் முன்பு நமக்கு திருமால்தான் தெரியும். வரும் காலத்தில் 'மால்' என்றால் அது பேரங்காடிகளையே குறிக்கும். இப்போதே 'அவதாரம்' என்று கூகுளில் தேடுங்கள். தசாவதாரம் வராது! சந்தைப் பொருளாதாரம் உருவாக்கியுள்ள கணினி அவதாரங்கள்தான் வரும். இயற்கையுடம் நமக்குள்ள தொப்புள் கொடியை நுகர் கலாச்சாரம் துண்டித்து வருகிறது. வாழ உருவானது இயற்கை. நுகர அல்ல. விவிலியத்தில் வருகின்ற 'dominion' எனும் பதம் கூட தவறான மொழிபெயர்ப்பு என்று ஜேன்குடால் சொல்கிறார். விவிலியம் சொல்வது இயற்கையின் மீதான பொறுப்புள்ள மேலாண்மை'. நுகர்வு அல்ல!

2 பின்னூட்டங்கள்:

லொடுக்கு 1/11/2007 06:48:00 PM

நல்ல தகவல் ஐயா!

//எல்லா நாடுகளும் மெல்ல, மெல்ல ஒருங்கிணைந்த சந்தைப் பொருளாதார விழாக்களுக்குப் பழகி வருகின்றன. புது வருட விழா வர, வர மிக விமர்சையாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. பெரிய, பெரிய பார்டிகள், வாண வேடிக்கைகள், ஆட்டம் பாட்டமென்று!//
சோகமான உண்மை.

//இயற்கையுடம் நமக்குள்ள தொப்புள் கொடியை நுகர் கலாச்சாரம் துண்டித்து வருகிறது. வாழ உருவானது இயற்கை. நுகர அல்ல.//
நன்றாக சொன்னீர்கள்.

நா.கண்ணன் 1/12/2007 08:05:00 AM

நன்றி, நண்பரே!