சுப்ரபாதம் version 2எல்லோரும் சுப்ரபாதம் குழந்தையிலிருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம். விருப்பமோ இல்லையோ அது பாட்டிற்கு காதில் விழுந்து கொண்டு இருக்கும். அப்படி விழும் சுப்ரபாதம் இதோ:
இது எம்.எஸ் அம்மா பாடியது. ஒரிஜினல்.

மிக சமீபத்தில்தான் இதற்கு தமிழாக்கம் நடந்தது. திரு.பார்த்தசாரதி என்பவர் மொழிபெயர்க்க அதை மீண்டும் எம்.எஸ் அம்மா பாடினார்கள். அந்த கேசட்டு வீட்டில் இருக்கிறது. அது வலையில் இருந்தால் சுட்டி தரவும்.

கொஞ்ச நாள் முன்னம் ப்ரியா சகோதரிகள் பாடிய சுப்ரபாதம் கேட்டேன்.
அது இங்கே!

சரி இதுவும் பார்த்தசாரதி மொழி பெயர்ப்பாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் நித்யஸ்ரீ பாடியதைக் கேட்டபோதுதான் இவையெல்லாம் வெவ்வேறு படிகள் (versions) என்று உணர்ந்தேன்.

நித்யஸ்ரீ பாடியது!

ப்ரியா சகோதரிகள் பாடுவது எளிய தமிழ். உரைநடை. நித்யஸ்ரீ பாடுவது கவிநடை. இதையெல்லாம் மொழி பெயர்த்தவர்கள் யார் என்று தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பொதுவாக சுப்ரபாதம் நான்கு பாகங்களை கொண்டிருக்கிறது:

மொத்தம் 4 பாகங்கள் கொண்டது இது!
1. சுப்ரபாதம் - பள்ளி எழல்
2. ஸ்தோத்திரம் - துதி, போற்றி
3. பிரபத்தி - திருமகளைப் பற்றித், திருவடிகளில் சரணாகதி
4. மங்களம் - சுபம்

வெவ்வேறு படிகள் இருக்கக் கூடாது என்றில்லை. பாரதியே சுதந்திரதேவி வாழ்த்து என்று இரண்டு படிகள் தருகிறான். முதல் மொழி பெயர்ப்பில் அவனுக்கே திருப்தி இல்லை. அதுபோல் என்று இதையும் கொள்ளலாம் (ஒருவர் எழுதியது என்று தோன்றவில்லை).

இதன் மூலத்தை எழுதிய "பிரதிவாதி பயங்கரம்" என்ற பட்டப் பெயர் கொண்ட அண்ணங்காச்சாரியார் பச்சைத்தமிழர்! ஆழ்வார் தமிழை தலையில் வைத்துக் கொண்டாடுபவர். அவர் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். உரைநடையில் எழுதுவதை "கத்யம்" என்று வடமொழியில் சொல்வர். இராமானுஜர் ஸ்ரீரெங்கநாத கத்யம் அருளியிருக்கிறார்.

எப்படி ஆயினும் வேங்கடேசன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த 'திருப்பள்ளியெழுச்சி'யை முதலில் கேட்டுவிட்டே எழுகிறான். ஆழ்வார் தமிழுக்கு முன் நம் தமிழ் எங்கே? என்றுணர்ந்தே பூர்வாச்சாரியர்கள் சுப்ரபாதத்தை தமிழில் வடித்துத் தரவில்லை. ஆயினும் நம்மைப் போன்ற நிரட்சரகுட்சிகள் கடைத்தேற எளிய தமிழ் சுப்ரபாதங்கள் தேவையாய்தான் இருக்கின்றது! இதை உணர்ந்துதான் திரு.கண்ணபிரான் சுப்ரபாதத்திற்கு என்றே தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்கி வரி, வரியாக பொருள் தருகிறார்.

1 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 2/21/2007 09:13:00 AM

அதென்னவோ நிஜம்தான்.காலையில் சுப்ரபாதம் கேக்கரது பழகிப் போனதா இருக்கு.
தமிழ் சினிமாலேகூடப் பாருங்க,பொழுது விடிஞ்சதுன்னு காமிக்க ரெண்டு வரி சுப்ரபாதம்
பின்னணியிலே ஒலிக்க விட்டாப்போச்சு:-)

உங்களுக்கு விடைகள் கிடைச்சா அது எங்களுக்கும் பகிரப்படும் என்ற நம்பிக்கை இருக்கு.

'குட் லக்' ( இங்கிலிபீஸாப் போச்சோ:-)