போட்டு மிதி!சமீபத்தில் தமிழகம் சென்று வந்த ஒருவர் சொன்னார், ஏதோவொரு கோயிலில் பூசாரி "ஆட்டைக் கடிக்கிறார்" என்று. இரண்டு நாளாகத் தொடர்ந்து இவர் ஆயிரம் ஆடுகளை மென்னியைக் கவ்வி, கடித்துக் கொல்கிறாராம். இதற்கு தமிழக அரசு கூட 'ஆடு' அனுப்புகிறதாம். இது என்ன பயித்தியக்காரத்தனம்? ஆடு, பாவம் சாது! அதுவும் சின்ன வெள்ளாடாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை! இவர் ஆட்டைக் கடிக்கிறாரே என்று புலிக்குட்டியைக் கொண்டு போனால் புலி இவரைக் கடித்துவிடும்! இவரது தெய்வீகம் இவரை அப்போது காக்காது!

இந்த வீடியோவில் இந்த அம்மா போட்டு மிதி, மிதியென்று மிதிக்கிறது. தமிழக மக்களுக்கு நல்ல மசாஜ் பார்லர்கள் வைத்துக் கொடுத்தால் இப்படி மிதி வாங்க மாட்டார்கள். அதற்கெல்லாம் கிழக்கே வரவேண்டும்!

தெய்வத்தின் பெயரால் எத்தனை கூத்து! இயேசுவின் கையில் ஒரு ஆடும், புத்தனின் ஆதரவில் ஒரு ஆடும் இருப்பது தற்செயல் அல்ல! தெய்வம் ஆடு பலி கேட்பதில்லை. அது நம் விலங்கு மனத்திற்கு ஒரு வழிகால். "வெறி விலக்கல்" என்றே ஒரு பத்துப் பாசுரம் நம்மாழ்வார் அருளிச் செய்திருக்கிறார். ஒரு துளசி மட்டும் போதும் அவனை வழிபட! திருமூலரும் இக்கருத்துடன் உடன்படுகிறார் (துளசிக்குப் பதில் வில்வ இலை). அவ்வளவுதான் தேவை!

இந்த உலகிலேயே தேவதைகள் இருக்கின்றன. ராட்சசர்களும் இருக்கிறார்கள். நாம் எந்த வகை என்பதை நம் குழு காட்டிக் கொடுத்துவிடும்!

10 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 3/30/2007 10:53:00 AM

//ஒரு துளசி மட்டும் போதும் அவனை வழிபட.

துளசிக்குப் பதில் வில்வ இலை ?//

வேணாம். துளசியே மதி:-)

நா.கண்ணன் 3/30/2007 10:58:00 AM

துளசி இலை. பசுந்துளசி இல்லையெனில் வாடிய துளசி. அதுவும் இல்லையெனில் வாடிய துளசிச் செடியின் காம்பு, அதுவும் இல்லையெனில் துளசிச் செடி இருந்த வேர் மண். இவையாவும் கண்ணனுக்கு ஏற்புடையதே! நான் சொல்லவில்லை. திருவாய்மொழி சொல்கிறது. துளசிக்கு மேல் பவித்திரமான பொருளுண்டோ!! அதுவும் துளசி தளமென்றால் கேட்கவே வேண்டாம் :-)

kasaikannan 3/30/2007 01:01:00 PM

"இது காண்மின் அன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்"
என்பதன்றோ நம்மாழ்வார் காட்டும் வழி.

நா.கண்ணன் 3/30/2007 01:15:00 PM

//கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்//

அடடா! அப்பத்தும் அபூர்வமான பாசுரங்கள்!! அன்றிலிருந்து இன்றுவரை நம்மவர் மாறவில்லை என்று தெரிகிறது :-(

நாமக்கல் சிபி 3/30/2007 01:23:00 PM

துளசி மேடம், துளசி மாடம் ஆகியவற்றிற்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு!

அப்படித்தானே டீச்சர்?

மலைநாடான் 3/30/2007 01:24:00 PM

கண்ணன்!

நல்ல சிந்தனை. அழகாகக் பதிவு செய்துள்ளீர்கள் நன்றி.

நா.கண்ணன் 3/30/2007 01:37:00 PM

//துளசி மேடம், துளசி மாடம் ஆகியவற்றிற்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு!//

அப்படிப் போடு!

நா.கண்ணன் 3/30/2007 01:41:00 PM

//நல்ல சிந்தனை. அழகாகக் பதிவு செய்துள்ளீர்கள்//

நன்றி மலைநாடன். முன்பு சுபமங்களாவில் "பாலைத்தெய்வம்" என்றொரு கதை எழுதினேன். இது மாறி வரும் திணை நிலையையும், அது தொடர்பான மனோநிலையையும் குறிப்பதாகக் கூடக் கொள்ளலாம். பாலைத் தெய்வம் 'கொற்றவை'. அவள் நினத்தில் ஆடுபவள்!

ஜடாயு 3/30/2007 04:39:00 PM

கண்ணன், அன்பே உருவான இறைவனுக்கு இத்தகைய மிருக பலிகள் எதற்காக?

வேதகால யாகங்களில் பலி என்ற பெயரில் பல பொருள்கள் இடப்பட்டன. பசுபலி என்று மிருகங்களைப் பலியிடும் வழக்கமும் இருந்திருக்கலாம். ஆனால் வேத இலக்கியத்திலேயே பலி என்பது வதை அல்ல, அது ஒரு உருவகம் என்ற கருத்தும் தோன்றிவிட்டது.

புருஷசூக்தத்தில் விராட்புருஷன் தன்னைத் தானே பலியாகத் தந்து சிருஷ்டியை உருவாக்குவதான படிமம் உள்ளது. இதைத் தான்
"தந்தது தன்னை, கொண்டது என்னை,
சங்கரா யார்கொலோ சதுரர்?"
என்று மணிவாசகர் பாடுவார்.

நீங்கள் சொன்னது போல மனிதனுக்குள் உள்ள மிருக குணம் தான் இத்தகைய கொடூர வழிகள் மூலம் மிருகங்களைப் பலியிட வைக்கிறது.

தாயுமானார் "துள்ளுமரியா மனது பலிகொடுத்தேன்" என்கிறார். துள்ளும் மனம் தான் அந்த அடங்காத வெள்ளாடு. அதைத் தான் அன்னையின் திருமுன்பு பலியிட வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ணரும் இதே கருதத்தைக் கூறியிருக்கிறார்.

நா.கண்ணன் 3/30/2007 04:49:00 PM

ஜடாயு:

இப்பலியிடுதல் என்பது உருவகமாகத்தான் இருக்க வேண்டும். இப்படியொன்று நடக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் சட்டென ஒரு உலகில் ஒளிந்திருக்கும் பல உலகங்கள் வெளிப்பட்டன. இடிஅமீன் போன்றோர் இன்னும் நரமாமிசம் சாப்பிடுகின்றனர். எனவே, இராக்கதர், தேவர் என்பதெல்லாம் நாம் மனித நேயத்தில் எவ்வளவு உயர்வுருகிறோம் என்பதைச் சொல்ல வந்த உருவகங்கள் என்று புரிந்தது. இதை மனதில் கொண்டுதான் வள்ளுவனும்:

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்

என்றார். அந்தணர்களைப் பூவுகலத்தேவர் எனச் சொல்லும் வழக்கம் இதனால்தான் போலும்! எனவே ஒழுக்க உயர்வு என்பது மனம் சார்ந்தது, பிறப்பு சார்ந்தது அல்ல. ஆனால், இந்தியாவில் உருவகங்கள் பிறழ்வுற்று நிஜமாகி வருணாசிரமும், பலி போன்ற இழி செயல்களும் வந்தடைந்தன போலும்.

"துள்ளுமரியா மனது பலிகொடுத்தேன்"