மின்கோயில்

இந்திய சமயப் பாரம்பரியம் இரு பெரும் பாட்டைகள் கொண்டது. வேத மரபில் மந்திரங்கள், யக்ஞங்கள், வேத பாராயணம் அதன் மூலம் பரஞானம் என்று இருக்கிறது. பொது மக்கள் வழிபடும் கோயில் பாரம்பரியம் தன் மூலத்தை ஆகமங்களிலிருந்து பெற்று பின் வேத பாரம்பரியத்தையும் தன்னுள் உள்வாங்கிக்கொள்கிறது. பக்திப் பெருகிட்ட காலத்தில் இறைவனைக் காண நேரே கோயிலுக்குப் போனால் போதும் என்ற அளவிற்கு எளிதாக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலின் மிக விரிவான சம்பிரதாயங்கள் இக்காலக் கட்டத்தில் எழுந்தவையே. ஆனால் கோயில் மெல்ல, மெல்ல தன் உண்மைப் பொருளை இழந்து சடங்குகள், வழிபாடுகள் என்று போய், ஏதோ வி.ஐ.பியைப் பார்ப்பது போல் இறைவனைக் காசு கொடுத்துப் "பார்த்து" விட்டு வருகின்ற இழிநிலையில் இப்போது நிற்பது பரிதாபம். கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இல்லையென்று சொல்லவில்லை, ஆனால், "பாவம்" போய் விட்டது! பக்தி போய் விட்டது! இந்நிலையில்தான் கோயிலின் கூட்ட நெரிசலில் மாட்டித் திணறாமல், கோயிலின் வழிமுறைகளை அறிந்து கொள்ள, கோயிற் பாவத்தை மீண்டும் பெற, பக்தியை நாம் இருந்த இடத்திலிருந்தே வளர்க்க இணையம் உதவலாம் என்று தோன்றுகிறது.

ஆசார்ய பிரபுபாதா ஒரு வைணவ எழுச்சியை உலகிற்குத் தந்தார். இஸ்கான் கோயில்கள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கு பக்தி இருக்கிறது, பாவம் இருக்கிறது. இதன் தாயகமான தமிழகக் கோயில்களில் அது காணாமல் போய்விட்டது. ஆயினும் இதை மீட்டெடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறது ஒரு குடும்பம். அதுதான் விழுப்புரம் அருகே அமைந்துள்ள பரனூரிலுள்ள ஸ்ரீகிருஷ்ணப்பிரேமி அண்ணாவின் குடும்பம். இவர் பேச ஆரம்பித்தார் என்றால் நம்மை ஒரு காலத்திலிருந்து வேறொரு காலத்திற்கு இட்டுச் சென்று விடுவார். இவருடன் பயணப்படும் பக்தர்களுக்கு வெவ்வேறு காலத்தின் சமய தரிசனங்கள் அபரிதமாகக் கிடைக்கின்றன. இதையறிந்து லண்டன் வாழ் பக்தர் ஒருவர் இவரது பேச்சைப் பதிவு செய்ய, இப்போது அதுவொரு பெரிய தகவல் கிட்டங்கியாக ஆகிவிட்டது. இக்கிட்டங்கி இணையத்திற்குள் நுழையும் போது மறுமலர்ச்சி ஏற்படும். இப்போது இவரால் ஈர்க்கப்பட்ட சில அன்பர்கள் அந்த இன்பத்தை இணையத்தில் வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இணையத்தின் மூலமாக அர்ச்சனைகள் நடக்கின்றன, அபிஷேகங்கள் நடக்கின்றன. கோயில் உலா கூட நடக்கிறது. "ஊனுடம்பு ஆலயம்" என்று திருமூலரும், நம்மாழ்வாரும் சொன்னது போல், சரியான பாவம் நம்முள்ளே முதலில் நிகழ வேண்டும். அது உண்மையில் ஒரு விர்ச்சுவல் அனுபவம் (உள்ளத்தில் நிகழுமொன்று). அது நிகழ்ந்தபின் கோயிலுக்குப் போகும் போது ஏற்படும் உணர்வு வித்தியாசமாக இருக்கும். ஆயினும், கோயில் கூச்சலும், வியாபார அணுகுமுறையும், அரசியல் ஊடுறுவலும் இந்த அனுபவத்தை நம்மிடமிருந்து தட்டிப் பறித்துவிடலாம். அதுபோது, இணையம் இதற்கு துணை வரலாம். இந்த விர்ச்சுவல் அனுபவத்தை இருந்த இடத்திலிருந்தே வழங்கலாம். இதை எப்படிச் சாத்தியப்படுத்தலாமென எண்ண வேண்டிய காலக்கட்டத்திலிருக்கிறோம்.

முதல் முயற்சிகளாக காணக் கிடைக்கும் சிலவற்றுள் இரண்டை மட்டும் இப்போது சொல்லிப் போகிறேன். சிரவன் ரவி சங்கர் கண்ணபிரான் வழங்கும் மாதவிப் பந்தல், நான் வழங்கும் பாசுரமடல்கள். பிற முயற்சிகள் பற்றி பின்னூட்டத்தில் சொல்லுங்கள். இணையமெனும் பல்லூடகத்தன்மை எப்படி நம் பாரம்பரிய மீட்சிக்கு உதவுகிறது என்று சுட்டிக் காட்டுங்கள்.

0 பின்னூட்டங்கள்: