கலக்கல்

மலேசியாவில் ஒருமுறை RTM வானொலி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரே கலக்கல்! நன்றாக இருந்தது என்று நான் சொல்ல வருவதாக நீங்கள் நினைக்கலாம். ஏனெனில் அச்சொல்லுக்கு அப்படியொரு பொருள் இப்போது வழங்குகிறது. நான் சொல்ல வருவது தமிழும்-ஆங்கிலமும் கலந்து கலக்கும் கலக்கலை. இப்போது இப்படிப் பேசுவது ஒரு 'பேஷன்' ஆகிவிட்டது (தமிழ் கூறு நல்லுலகம் முழுவதும்). ஆனால் இவர்கள் முயன்றால் முழுவதும் தமிழில் பேசலாம். எப்படி?

1. இந்தக் கலக்கல் மொழியை ஆங்கிலேயனும் புரிந்து கொள்ள முடியாது, தமிழ் தவிற பிற மொழி அறியாத தமிழனாலும் புரிந்து கொள்ள முடியாது. எனவே, இது ஒரு சின்ன வட்டார வழக்காக (இளைஞர் வட்டாரம்) நின்று போய்விடும். முழுப் பறிமாற்றம் இருக்காது. (Your communication is not effective)

2. இப்படிப் பேசுவதை அந்தக் காலத்தில் 'பட்லர் இங்கிலீஷ்' என்பார்கள். அதாவது சமையற்காரன் மொழி. ஆங்கில துறைகளுக்கு சமையல் பண்ணிப் போடும் தமிழன் அரைகுறையாய்க் கேட்ட ஆங்கில அறிவைக் கொண்டு ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுவான். அதில் பல தவறு இருக்கும். இப்போது இளைஞர்கள் பேசும் கலக்கலும் தவறுகள் நிரம்பியே இருக்கின்றன. இவர்களால் முழுவதுமாக கோர்வையாக ஆங்கிலம் பேச முடியாது, அதே போல் கோர்வையாக தமிழ் பேசமுடியாது. இந்த அவலத்தை ஏன் 'பேஷன்' என்று நினைக்க வேண்டும். எனவே இந்த மாயையிலிருந்து விடுபட முயல வேண்டும்.

3. மொழி என்பது பயிற்சியினால் தெளிவு பெறும். நல்ல தமிழைப் பேசிப்பழகினால் வந்துவிடும். கிராமத்திலிருக்கும் நம் மக்கள் தமிழ் பேசவில்லையா? அவர்களென்ன செந்தமிழா பேசுகின்றனர்? அது தமிழ் இல்லையா? ஏன் அது போல் நாம் தமிழ் பேசக்கூடாது? கழகம் அரசோட்சுவதற்கு செந்தமிழ் ஒரு ஆயுதமாகப் பயன்பட்டது. எனவே எல்லோரும் தமிழில் பேசுங்கள் ஐய்யா! என்றால் கலைஞர் போல் பேச வேண்டுமென்று எண்ணுகிறார்கள். இந்த மனப்பான்மையும் தவறு. வீட்டில் பேசும் தமிழை வெளியிலும் பேசலாம். தவறில்லை. ஆங்கிலக் கலப்பு இல்லாமல் வீட்டு மொழி பேசிப் பழகலாம். சித்திரமும் கைப்பழக்கம். இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. வீட்டில் பேசும் மொழியில் 'சாதி வழக்கு' கலந்தே வரும். பேசினால் என்ன சாதி என்று புரிந்துவிடும். எனவேதான் கழகம் செந்தமிழுக்கெ மாறியது. செந்தமிழும் கடினமல்ல. சாதி வழக்கில் பேசுவதும் தவறில்லை (சாதீய எண்ணமில்லாத வரை).

4. தமிழில் எழுதுவது? அதுவும் பயிற்சியில் வந்துவிடும். இந்தியா முழுவதுமே ஒரு ஆங்கில மாயையில் கிடக்கிறது. இப்போது மாநில மொழிகளில் எழுதும் பழக்கம் வலைப்பதிவால் ஊக்குவிக்கப்படுகிறது. இப்படி ஒரு மகாராஷ்டிரர் பேசுகிறார்:

“Somehow I had always been a little shy about my vernacular background because English is not my language, but over the last two years, I have formed my niche bloggers’ community in Marathi and we discuss everything under the sun,” she says. Truly, language is no longer a barrier.

இது நமக்கும் பொருந்தும். எழுதிப் பழகினால் வந்துவிடும். உண்மையில் எழுதும் போது செந்தமிழில் எழுதுவது எளிது. வட்டார வழக்கு பலுப்பலை எழுத்தில் கொண்டு வருவது கடினம்.

5. ஒருமுறை நானும் எழுத்தாளர் சுஜாதாவும் சன் டிவிக்காக ஒரு நிகழ்ச்சி தந்தோம். கலக்கல் மொழித் தந்தை சுஜாதா என்பது தெரியும். ஆனால் அவர் தமிழ் அறிவு அபாரமானது. வீம்புக்கு அப்படிப் பண்ணுகிறார். எனவே அவரிடம் அந்த நிகழ்ச்சியை ஆங்கிலம் கலக்காமல் செய்ய முயல்வோம் என்று சொல்லி எடுத்தோம். மிக அற்புதமாக வந்தது. எல்லோராலும் முடியும். முயல வேண்டும். மாயை அகல வேண்டும்.

தமிழ் நம் தாய் மொழி. அன்னை பாலுடன் ஊட்டிய மொழி. அதை அப்படியே பேசுவதில் என்ன வெட்கம்? உலகம் பூரா அவரவர் தாய் மொழியில்தான் சரளமாகப் பேசி வருகிறது. கேடுகெட்ட காலம் ஆங்கில மேலாண்மையை நம் மீது போர்த்திவிட்டது. அந்தப் பீடை ஒழியும் போது நம் தாய் மொழி மீது இயல்பாக இருக்க வேண்டிய வாஞ்சை வந்து சேரும்.

5 பின்னூட்டங்கள்:

ஜோ / Joe 4/12/2007 10:42:00 AM

அருமையான பதிவு கண்ணன் ஐயா!

துளசி கோபால் 4/12/2007 11:34:00 AM

//அந்தப் பீடை ஒழியும் போது//

எப்போ?

நா.கண்ணன் 4/12/2007 11:41:00 AM

//எப்போ? //

காலம் வரும். 20 நூற்றாண்டு தொடக்கம் ஒரு புதிய எழுச்சி வந்துள்ளது. சுயமரியாதை, தாய்மொழிப் புரிதல், தலித் எழுச்சி இப்படி. தமிழன் தாய் மொழியின் அருமை, பெருமைகளை உணரும் போது அது நிகழும். உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் இம்முயற்சியில் ஒருங்கிணைய வேண்டும். மிக ஆச்சர்யமாக ஆல்ப்ஸ் மலையின் அடியில் வாழும் தமிழ் குழந்தைகள் சுத்தமாக தமிழ்க் கதைக்கின்றனர். அது அங்கு நிகழும் போது ஏன் இங்கு நிகழாது. முடியும். முடிய வைப்போம்.

வடுவூர் குமார் 4/12/2007 12:11:00 PM

வீட்டில் பேசாமல் வெளியில் வராது.
என் மகன் இங்கு படிக்கும் பொழுது,"என்னப்பா? தமிழ் வகுப்பிலேயே ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள்?" என்று கேட்டது ஞாபகம் வந்தது.
இங்கு பல வீடுகளில்(தமிழர்களின்)ஆங்கிலம் தான் பேச்சு மொழி.
(உ-ம்)I go and see my அம்மா
அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது,பார்ப்போம் எவ்வளவு பயனளிக்கிறது என்று.

நா.கண்ணன் 4/12/2007 01:25:00 PM

திருடனாய் பார்த்து
திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க
முடியாது!