வியத்தல் வியப்பே!

புது வருடத்தைக் கொண்டாட அருகிலிருக்கும் ஒரு பேரூருக்குச் சென்றேன் (தேஜோன்). சுமார் 20 தமிழர்கள் வந்து சேர்ந்தனர். எல்லோரும் முதுகலை, முனைவர், முதுமுனைவர் எனப் பட்டப்படிப்பிற்கு வந்தவர்கள். முதன் முறையாக KAIST (Korean Advanced Institute of Science & Technology) வளாகத்திற்குச் சென்றேன். தேஜோன் என்பது சோல் நகரத்திற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு தலைநகரை மாற்றிவிட வேண்டுமென்ற ஒரு திட்டமுமுண்டு! பேருந்தை விட்டுக் கீழே இறங்கியவுடன் பார்த்த முதற்காட்சி இந்த புத்த பிட்சுதான். கையில் ஒரு மணியை வைத்துக்கொண்டு ஆட்டிக் கொண்டே மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவிலிருந்து வரும் நமக்கு இறை வழி செல்லும் எவருக்கும் வந்தனை செலுத்தும் பண்பு உண்டு. அப்படியே அவருக்கு அஞ்சலி செய்து, காணிக்கை அளித்தேன். அவரது குடை போன்ற தொப்பி மற்றவர் மீதான அவரது கவனத்தைக் குறைத்து ஜபத்தில் கூர்மைப்படுத்த உதவியது. வருவோர் போவோர் அவரைக் கண்டு கொண்டனர், கண்டு கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் மணி அடிப்பதை நிறுத்திவிட்டு ஒரு உடுக்கை அடிக்க ஆரம்பித்தார். வண்டிலியிலிருந்து இறங்கிய ஒரு தாய், தன் சிறு பெண்ணை அழைத்துக் கொண்டு போக, அது பாம்புப் பிடாரன் கை குழல் கண்ட நாகம் போல் அந்த பிட்சுவையே பார்த்துக் கொண்டு இருந்தது. அம்மா மெல்ல இழுத்துப் பார்த்தாள். நம்ம ஊர் தாய்மார்கள் முதுகில் இரண்டு சாத்து சாத்தி, கடத்திக் கொண்டு போய் விடுவர். ஆனால் அவள் அக்குழந்தை வேடிக்கை பார்ப்பதை அனுமதித்தாள். அக்குழந்தையின் வியப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமக்கும் வேடிக்கை பார்க்க ஆசை வரும். ஆனால் சமூகக்காரணிகள் நம் வியப்பை மட்டுப்படுத்திவிடும். வியத்தல் என்பது எவ்வளவு பெரிய சமாச்சாரம்! அக்குழந்தையின் விரிந்த கண்கள், பிட்சுவைத் தொடத்துணியும் கை அசைவுகள். தாயின் இழுப்பு. இவை சேர்ந்து அங்கொரு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தன. உலகம் எங்களைச் சுற்றி ஊர்ந்து கொண்டு இருந்தது!

0 பின்னூட்டங்கள்: