தடி எடுத்தவன் தண்டல்காரன்!

கொரிய வம்சாவளியில் வரும் சோ சின் ஹியின் நேற்று 32 மாணவர்களைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். அமெரிக்கா சோகத்தில் கிடக்கிறது. 1992-ல் இவர் அமெரிக்கா போகாமலிருந்தால் துவக்கு என்றால் என்னவென்றே அறியாமல் கிம்சி சாப்பிட்டுக் கொண்டு ஒரு சாதுவான கொரியனாக இருந்திருப்பார். அப்படியே மனப்பிறழ்வு கொண்டிருந்தாலும் ஒரு கட்டையைத் தூக்கிக்கொண்டு யாரையாவது தாக்கி இருப்பாரே அன்றி துவக்கு கொண்டு அல்ல. அமெரிக்கா ஏன் இன்னும் துப்பாக்கி புழக்கத்தைக் கட்டுப் படுத்தவில்லை? வெறும் காடாகக் கிடந்த அமெரிக்காவில் கொள்ளை, கொலை பயம் இருந்த காலத்தில் அது தேவைப்பட்டிருக்கலாம். 21ம் நூற்றாண்டு அமெரிக்காவிற்கு இது தேவையா? வேட்டையாடு விளையாடுவில் இப்படி மனப்பிறழ்வுற்ற இந்திய மாணவர்கள் தொடர் கொலையில் ஈடுபடுவது போல் போகிறது கதை. அது உண்மையில் நிகழ நிறைய சாத்தியங்கள் உள்ளன. கட்டற்ற சுதந்திரம், ஆழமில்லாத சமூகம், உறவுகளற்ற சமுதாயம் இவையே அமெரிக்காவின் பிரச்சனை. கன்பூசியன் வழியில் சமூக அமைப்பு கொண்ட கொரியா மிகப் பாதுகாப்பான நாடு, வன்முறைகள் குறைவான நாடு. இந்த சோ பேசாமல் கொரியாவிலேயே இருந்திருக்கலாம். எல்லோருக்கும் அமெரிக்கா ஒரு கனவு நாடாக இருக்கிறது. கனவில் வரும் கெட்ட காட்சியென இக்கொலையை மறந்துவிட முடியுமோ?

14 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 4/18/2007 10:10:00 AM

என்ன ஒரு அதிர்ச்சியான விஷயம்(-:
மனசு சமாதானமாகவே இல்லை.

உங்க மற்ற பதிவுகளையும் பாருங்க. பின்னூட்டமே தரமுடியலை. எல்லாமே
ஒரே கட்டங்கட்டம். எந்தக் கட்டத்துலே இப்ப நாம் இருக்கோம்?

நா.கண்ணன் 4/18/2007 10:15:00 AM

துளசி:
என்ன அதிர்ச்சி! என் பதிவு தெரியவில்லையா? அதை dynamic font-க்கு கொண்டு வந்திருக்கிறேன்! Set your 'View' font encoding to 'Unicode UTF-8'. Let me know your result. Windows XP? >IE.6.0?

துளசி கோபால் 4/18/2007 10:35:00 AM

எதுக்கு இப்ப இத்தனை அதிர்ச்சி?

என்னோட அதிர்ச்சி, 'கொரியப்பையன் செய்கை'க்கு.

இந்தப் பதிவு நல்லாத் தெரியுது. உங்க மூணாவது கண்தான்
பார்வை கம்மியா இருக்கு.

படத்துக்கு எதுக்கு வார்த்தைன்னு விட்டுட்டீங்களா?

நம்மது ஜன்னல் XPதான்.

நா.கண்ணன் 4/18/2007 10:39:00 AM

சரியான டீச்சர்! நீங்க மட்டும் 'இப்ப எந்தக் கட்டத்திலே இருக்கோம்ன்னு இடக்கடரக்கல் செய்யலாம். நான் மட்டும் செய்யக்கூடாதா? சரி, 'மொழி மேவிய பார்வை' (3ம் கண்) சரி செய்கிறேன். இந்தப் புதிய புளோக்கர் ரொம்பத் தகறாறு பண்ணுது. எல்லாத்தையும் மாட்டிப்புட்டானுக!

பத்மா அர்விந்த் 4/18/2007 10:46:00 AM

ஆழமில்லாத சமூகம், உறவுகளற்ற சமுதாயம் ? What a sweeping statement from you Kannan?

நா.கண்ணன் 4/18/2007 10:54:00 AM

மன்னித்துக் கொள்ளுங்கள் பத்மா! ஆசிய அமெரிக்கர்களுக்கு இன்னும் அவர்களது மூலவேர் தொக்கி இருப்பதால் இது அபத்தமாகப்படலாம். நான் சொல்ல வருவது, அமெரிக்காவின் 200 வருட சரித்திரம், அதன் நாடோடித்தன்மை, ஆசியா, ஐரோப்பாவை நோக்கும் போது ஆழமில்லாத சமூகம். ஐரோப்பாவிலோ, ஆசியாவிலோ இப்படி கல்லூரிக்குள் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு சுட்டுப் பொசுக்க முடியாது. ஏனெனில் அங்கு துவக்குச் சட்டம் கடுமையாக இருக்கிறது. இந்தியாவில் சினிமாவிலும், காவல் நிலையத்திலும்தான் துவக்கு பார்க்கமுடியும். அமெரிக்காவில் அப்படியா? நான் ஜப்பானில் இருந்த போது சும்மா தனியார் சொத்து எனப் புரிந்து கொள்ளாமல் அதில் நடந்துவிட்ட ஒரு ஜப்பானியப் பையன் சுட்டுக் கொல்லப்பட்டான். அமெரிக்காவில் இது சகஜமாக இருக்கலாம். பண்புள்ள நாடுகளில் அது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அமெரிக்கா உலகின் காவல்காரனாக தன்னை நியமித்துக் கொள்ளலாம். ஆனால் அதன் சமூகம் இன்னும் வளர்ச்சியுறாத நிலையிலே இருக்கிறது.

கானா பிரபா 4/18/2007 12:47:00 PM

//ஆழமில்லாத சமூகம், உறவுகளற்ற சமுதாயம் இவையே அமெரிக்காவின் பிரச்சனை.//


இதை சர்வதேசப் பிரச்சனையாகவும் தர்க்கம் செய்யலாம். வெறுமனே சமூகத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அமெரிக்காவில் மட்டும் தானா இந்தப் பிரச்சனை?


ஆள்பவர் கையில் தான் அதிகாரம். அவுஸ்திரேலியாவில் தனி நபர் துப்பாக்கி வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் தினம் தினம் சூடு போய்க்கொண்டு தான் இருக்கிறது.

அந்த நபர் கொரியாவில் இருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பது வெறும் ஊகமளவுக்கே பொருந்தும்.

நா.கண்ணன் 4/18/2007 01:32:00 PM

பிரபா:

இது எப்படி சர்வ தேசப் பிரச்சனையாகும்? நான் துப்பாக்கியே பார்த்ததில்லை. என்னைப் போல் கோடான கோடி ஜனங்கள் இந்தியாவில், ஐரோப்பாவில். அமெரிக்கா துவக்கு சட்டத்தை கட்டுப்படுத்த தயங்குகிறது. ஏனெனில் பெரும் புள்ளிகளின் வருமானம் துவக்கு வியாபாரத்தில் முடங்கியுள்ளது. தற்போதைய அமெரிக்காவிற்கு துப்பாக்கியே அவசியமில்லை. அது நாகரீகம் அடைந்துவிட்டது (எதிர்மறையாக உள்ளதோ :-)

கானா பிரபா 4/18/2007 01:47:00 PM

வணக்கம் கண்ணன்

துவக்குச் சட்டத்தால் ஒரு எல்லை வரை தான் இப்படியான வன்முறையைக் கட்டுப்படுத்த முடியும். கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தால் துவக்கை மட்டுமா இந்தப் பையன் பயன்படுத்துவான்? ஒரு காஸ் சிலிண்டரே போதும்.

அல்லது காரை ஓட்டிக்கொண்டே நாலு பேரைக் காவு கொடுக்கமுடியும்.
சுமூக அமைப்பு என்பது பல மனித நடத்தைகளின் கூட்டு, இது நாட்டுக்கு நாடு வேறுபடும் என்று நான் நினைக்கவில்லை. எல்லா இடத்திலும் ஹிட்லரும் இருக்கிறான், காந்தியும் வாழ்கிறார்.

கானா பிரபா 4/18/2007 01:52:00 PM

விடுபட்ட குறிப்பு ஒன்று : நொய்டாவில் நடந்த கொடூரங்களுக்கு அந்தக் காமுகனுக்கு துப்பாக்கியே தேவைப்படவேயில்லையே?

நா.கண்ணன் 4/18/2007 02:04:00 PM

வணக்கம் பிரபா

இப்படி இதை வெறும் கொலை என்று பொதுமைப் படுத்திவிட்டால் என் பதிவின் நோக்கம் திசை திரும்பிவிடுகிறது. அமெரிக்காவின் துவக்கு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும், அமெரிக்காவில் இன்னும் மாட்டுக்காரன் போக்கு அதிகமாகவே உள்ளது. கலிபோர்னிய செங்காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது ஈராக் போரின் குறிப்பாக ஒரு மூத்த தம்பதியர் அமெரிக்க ஜனாதிபதியை 'மாட்டுக்காரன்' (கவ்பாய்) என்றனர். துவக்கு (அனைத்துவகையும் சேர்த்து) இருப்பதனால்தான் அமெரிக்கா தன்னைத் தண்டல்காரனாக நியமித்துக் கொள்ளமுடிகிறது. துவக்கு இருக்கும் வரை சமாதானத்திற்கு வழியே இல்லை. இக்கொலைக்கும் இந்த உளவியலுக்கும் சம்மந்தமுள்ளது.

kannabiran, RAVI SHANKAR (KRS) 4/18/2007 02:42:00 PM

//நா.கண்ணன் said...
இது எப்படி சர்வ தேசப் பிரச்சனையாகும்? நான் துப்பாக்கியே பார்த்ததில்லை//

ஆகா, கண்ணன் சார்
நானும் இங்கு நியூயார்க்கில் தான் உள்ளேன்...ஆனால் துப்பாக்கியே பார்த்ததில்லை!
இங்கு பலர் வைத்துள்ளார்கள் போலும்! ஆனா எங்கு வாங்கினார்கள் என்று தான் சொல்ல மாட்டங்கறாங்க! :-))

நீங்கள் சொல்வது போல், சட்டம் இயற்றினால் கூட அது முறையாக வைத்திருப்பவரைத் தான் முறைப்படுத்துமே தவிர, இது போன்று தடி எடுத்தவர்களைக் ட்ராக் செய்வது இயலாது!
துவக்கை மட்டுப்படுத்த ஜனநாயகக் கட்சி கூட சற்று தான் முன்வரும்!

மேலும் துவக்கினால் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும், வேறு பல வழிகள், வன்கொடுமை - இவற்றால் ஏற்படும் கொடுமைகள் இன்னும் அதிகம்!

ஜடாயு 4/18/2007 03:24:00 PM

// தற்போதைய அமெரிக்காவிற்கு துப்பாக்கியே அவசியமில்லை. //

சரிதான் கண்ணன்.

// அது நாகரீகம் அடைந்துவிட்டது (எதிர்மறையாக உள்ளதோ :-) //

வெல், உலகின் பல நாடுகளை விட தனிநபர் பாதுகாப்பு சட்டங்கள் வலுவாக உள்ள நாடு என்பதால். இதையும் நாகரீகத்தின் ஒரு கூறு என்று தான் கொள்ள வேண்டும், இல்லையா?

அமெரிக்க சமூக அமைப்பின் பலவீனம் என்பது ஒரு பகுதி தான்.
கொரிய வம்சாவளி மாணவன் அமெரிக்க பல்கலையில் சுட்டுக் கொல்கிறான், இந்தியப் பேராசிரியர் மடிகிறார், மும்பை பெண் தொலைந்து போகிறாள் ..

இதில் உலகமயமாக்கலின் பங்கும் உள்ளது என்று நினைக்கிறேன் - தென் கொரிய சாதாரண குடிமகனை அமெரிக்கா நோக்கி போகவைத்த சக்தி அதுதானே? Thomas Friedman மொழியில் சொல்வதானால் Globalization 3.0 வின் ஒரு பக்க விளைவு இத்தகைய நிகழ்வுகள். இதற்கான விலையை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் கொடுத்து வருகிறது, அமெரிக்கா உட்பட. இருந்தாலும் flattening of the world நடந்து கொண்டே தான் இருக்கிறது, நடந்து கொண்டே தான் இருக்கும்.

நா.கண்ணன் 4/19/2007 03:28:00 PM

கண்ணபிரான், ஜடாயு: நாடு பூரா கிறுக்கன்கள் உண்டு. ஆனால் வலுவான ஆயுதத்தைக் கொடுக்கும் போது பாதிப்பு அதிகமாகிறது. துப்பாக்கி என்பது கோழைகளின் ஆயுதம். இவன் தூர இருந்து கொண்டு மற்றவனைச் சுடுவது. சங்க காலத்துப் போரிலாவது ஒரு நேர்மை இருந்தது! ஒன்றுமறியா லோகநாதன், மும்பாய்ப் பெண், யூத ஒழிப்பில் தப்பிய பெரியவர்.. இப்படி சகட்டு மேனிக்கு ஒன்றுமறியாதவர் பலியானதேன்? யாரைக் குறை சொல்வது? எதைச் சுட்டுவது?