பால் வேறுபாடு


உலகம் ஆண், பெண் என்ற இரண்டு கட்டங்களுக்குள் அடங்கிவிடுகிறது. என்பது போல் தோன்றினாலும் இடையில் சில, பல பால் இருப்புகள் உள்ளன, என்று நான் சொல்லவில்லை, சிவ ஸ்வயோதா (Shiva-swayodaya) என்ற பழைய நூல் சொல்கிறது. 14 வகை பால் வேறுபாடு உண்டாம்.

பால் வேறுபாடு பற்றிய நமது சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்கிறது கீழேயுள்ள சுட்டி:

New Bodies, New Lives - Transgener issues in America

இருக்கு வேதம் சொல்கிறது ஆண், பெண் என்ற வேறுபாடு இருந்தாலும், கூர்ந்து கவனித்தால் ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணும் ஒளிந்திருப்பது தெரியுமென்று!

[When the Rigveda acclaims that 'he who is described as male is as much the female and the penetrating eye would not fail to see it', it admits the factum of the outward duality of existence.]இந்தியப் பழம் மரபைப் பேணும் இன்றையத் தமிழர்களும் இது குறித்து மீள்சிந்தனை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. தாய்லாந்தில் அர்த்தநாரிகளின் சிறப்பான ஒரு கலை நிகழ்ச்சி குறித்து இப்பதிவில் சொல்லியுள்ளேன் (தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. பரவாயில்லை ஆங்கில வடிவில் இங்கு கிடைக்கிறது)

பாகவதமெனும் விருந்து

அறிவியல் படித்து விட்டால் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. கேள்விக்கு விடை கிடைக்காதவரை தேடிக்கொண்டே இருக்க வைக்கும் அறிவியல் மனது. பதில் எங்கெங்கு ஒளிந்திருந்தாலும் அங்கெல்லாம் தேடும். எனவேதான், இந்திய மெய்யியல் மரபு அறிவியல் மாணவர்களுக்கு திகட்டாத தேனாக அமைகிறது.

பாகவதம் கிருஷ்ணலீலையைச் சொல்ல வந்தாலும், சொன்னவர் சம்சாரி அல்ல. சுக முனி பரம பிரம்மச்சாரி. ஆண், பெண் பேதமெல்லாம் கடந்த பிரம்மஞானி. ஆயினும் அவர் பாகவதம் சொல்கிறார் என்றால் சொல்லப்படுவது வெறும் பாரதிராஜாவின் , 'தாஜ்மகால்' கதை அல்ல என்று உணர வேண்டும். அது காதல் கதை அல்ல. இந்தியத் தத்துவங்களின் சாரமாக உள்ளது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அனுபவம் பாகவதம். அதுவும் சொல்பவர் சொன்னால் பாகவதம் தேன்! தமிழகத்தில் கிருஷ்ணப்பிரேமியை விட பாகவதம் சொல்வதற்கு இனிமேல் ஒருவர் பிறந்து வந்தால் உண்டு. எப்படி கிருஷ்ண பால லீலையை ஒரு குழந்தை மனோநிலையில் இருந்து கொண்டு அவரால் சொல்ல முடியுமோ, அதே நேரத்தில் பாகவத்தின் பிரபஞ்ச சிருஷ்டி ரகசியங்களை அவரைப் போல் எளிதாக யாரும் சொல்ல முடியாது.

முதல் முறை பாகவதம் கேட்டபோது என்னை உலுக்கியது பிரபஞ்ச சிருஷ்டி பற்றிய நம்மவர்களின் ஆழமான புரிதல். இன்று பயோகெமிஸ்றி எனும் உயிர்வேதிமவியல் சொல்லும் சூட்சுமங்களையெல்லாம் ஒரு எலியைக் கூட கூறு போடாமல் சுகமுனிவர் சொல்வது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

சும்மா, ஒரு சாம்பிளுக்கு அவரது உரையிலிருந்து ஒரு பகுதியை இங்கு இடுகிறேன். தமிழகத்தில் இருப்பவர்கள் இவ்வுரைக்கோவையை மலிவு விலையில் பெறலாம். அவ்விலை பல நல்ல காரியங்களுக்கு செலவிடப்படுகிறது.

பிரம்மாவை சுயம்பு என்றுதான் சொல்வது வழக்கம். ஆனாலும் உருவானவுடனேயே, பிரம்மா கேட்ட முதல் கேள்வி என் தோற்றத்தின் காரணகர்த்தா யார் என்பது? 'தபோ' என்றொலி கேட்டது. அவர் தியானத்தில் மூழ்கிவிட்டார். உள்ளொளியாக இறைமை அவரிடம் பேச ஆரம்பித்தது. முதல் கேள்வியே சொக்க வைக்கும் கேள்வி. "பரவாயில்லையே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயே!" என்பதுதான் அது. நம்மைப் போல அசடா என்ன அவர்? "நீ, உன்னைக் காண வேண்டும் என்று விருப்பப்பட்டாய், நான் காண்கிறேன்!" என்றார். இறைவன் முகமலர்ந்து பிரம்ம சிருஷ்டி பற்றிச் சொல்லத்தொடங்குகிறார். அதன் தொடர்ச்சியாக வருகிறது கிருஷ்ணப்பிரேமியின் கீழ்ச்சுட்டும் உரை. கேட்டு மகிழுங்கள்.

பாகவத உரை: ஸ்ரீ கிருஷ்ணப்பிரேமி அண்ணா

காலம்: 28 நிமிடங்கள்.

இந்திய ஆங்கிலப் பெயர்கள்

ஆறாம் உணர்வு (sixth sense) படமெடுத்த M. Night Shyamalan-ஐப் பலர் அறிந்திருப்பர். ஷியாமளன் என்றவுடன் அது இந்தியப்பெயர் என்பது தெரிந்துவிடும். பிறகென்ன M.Night? ஆகா! அதுதான் உத்தி. தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய வேண்டுமெனில் ஒரு தமிழ்ப் பெயர் வைத்துக் கொண்டால் நல்லதல்லவா? Web CEO எனும் கம்பெனியின் மேனேஜர் பெயர் Steven J. Ram. இவர் இந்தியராக இருக்கலாம். ஆனால், இந்தப் பெயர் மாற்றம் இந்தியர்களிடம் மிகக்குறைவு. ஏனெனில் இந்தியப்பெயர்கள் இந்துப்பெயர்களாக இருப்பதால், மாற்றும் போது அது 'தெய்வக்குற்றம்' என்பது போல் பார்க்கப்படுகிறது. ஆனால் உலகமயமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார கதியில், வியாபார நோக்கில் பெயரை மாற்றிக் கொள்வது தவறில்லை என்று தோன்றுகிறது. அநேகமாக தாய்வான், ஹாங்காங் போன்ற நாடுகளில் மேலைத்தியப் பெயர் இணைப்பு இல்லாத பெயரைப் பார்ப்பது அரிது. இவர்களது பொருளாதார முன்னேற்றம் உலகறிந்தது. இவர்களுக்கு பெயர் செண்டிமெண்டெல்லாம் கிடையாது. வேடிக்கையாகக் கூடப் பெயர் மாற்றம் செய்து கொள்கின்றனர். எனது நண்பரொருவர் வலையில் தேடி ஒரு ஜெர்மன் பெயரை எடுத்துச் சேர்த்துக் கொண்டுள்ளார். இப்படிச் செய்வதால் வெளிநாட்டுக்காரர்களுக்கு இவர்கள் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது எளிதாக உள்ளது (இல்லையெனில் சீனப்பெயர்களை ஞாபகத்தில் வைத்திருப்பதோ, எழுதுவதோ மிகக்கடினம்). கொரியாவில் கூட வேடிக்கையாக ஆங்கிலப் பெயர்களை 'செல்லப் பெயராக' வைத்துக் கொள்ளும் வழக்கமுள்ளது. பெரும்பாலும் ஆங்கில வகுப்பெடுக்கும் போது வெள்ளையர்கள் இவர்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் கொடுக்கும் வழக்கமுண்டு. இது வெள்ளைத்திமிர் என்றுதான் நானும் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது யோசிக்கும் போது இது நடைமுறை வசதியுள்ள ஒரு எளிய திட்டம் என்று தோன்றுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும், மேலும் இந்தியர்களின் பங்கு அதிகரிக்கும் போது இப்படிப் புதுப்புது பெயர்கள் அங்கு தோன்றும். அங்கு ஒரு செனட்டர் இந்திய வம்சாவளியில் வந்திருந்தும் பொதுஜன அங்கீகரிப்பிற்காக தனது பெயரை ஆங்கிலப்பெயராக மாற்றிக் கொண்டுவிட்டார். இது தவறில்லை என்று தோன்றுகிறது. டான் போஸ்கோ என்பது உச்சரிக்கக் கடினம். வீரமாமுனிவர் என்பது இயல்பானதாக உள்ளது. இந்தியர்கள் சீனச் சந்தையை நோக்கி இன்னும் கொஞ்ச காலத்தில் படையெடுக்கும் போது நம்மவர் சீனப் பெயர் வைத்துக் கொள்வர். இதுவொரு எளிய, நடைமுறை உளவியல்!

மெய்ஞானமும் விஞ்ஞானமுமாகிய ஓர் சக்தி

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 23)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

இந்திய மெஞ்ஞான தரிசனங்களில் விஞ்ஞானம்-மெஞ்ஞானம் என்ற பாகுபாடு இல்லை. கேள்விகள் விரும்பியே ஏற்கப்படுகின்றன இந்திய மெஞ்ஞானத் தேடலில். இறைமை உளது-இலது என்பது கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நாத்திகம் இந்திய மெஞ்ஞானத்தின் ஒரு முக்கிய கூறு. நாத்திகனாக இருப்பதால் ஒருவன் இந்து இல்லை என்று ஆகிவிட முடியாது. இந்திய ஆன்மீகம் என்பது காலத்தால் புடம் போடப்பட்டு, அதிகாரச் சுருள் புள்ளி தாண்டி உலாவும் ஒரு பரப்பு. அதன் தரிசனங்கள் இயற்கையானவை, இயல்பானவை, பாசாங்குத்தனம் அற்றவை.

இந்தப் பின்புலத்தில்தான் இப்பத்தியின் சிந்தனை ஓட்டம் அமைகிறது. நான் யார் என்ற கேள்வி இம்மண்ணில் எழுந்த போது அது வெறும் மனிதனுடன் நின்றுவிடவில்லை.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்!

என்று உயிரியல் மூலத்தையே தேடத் தொடங்கிவிட்டது. எனவே இன்றைய அறிவியலால் புகழப்படும் கூர்தலியல் கோட்பாடு என்பதும் இதனுள் அடக்கம். டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கை இந்தியக் கரைகளைத் தொட்டபோது சிறு அலை கூட உருவாக்கவில்லை, ஏனெனில் இங்கு தசாவதாரம் எனும் தரிசனத்தில் கூர்தலியல் சூட்சுமமாய் ஒளிந்திருந்தது. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின்படி பார்க்கும் போது மனிதன் ஒரு கிளையின் முனையில் நின்றுகொண்டு மேற்பிரிதல் இல்லாமல் தொக்கி நிற்கிறான். இயற்கையின் பரிணாம விதி மனித இனங்களுக்குள் பாகுபாடு உருவாக்கிப் பிரிக்க எத்தனிக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அவன் எதிர்கொண்டு பிரிபடாமல் இருக்கிறான். அது மானுடத்தின் ஆன்மீக பலம்.

பிரிக்கும் விதியை 'மலம்' என்கிறது நமது மறை. இப்படிப் பிரிவு படமுடியாத இனங்கள் காலப்போக்கில் அழிந்துபட வாய்ப்புண்டு. இயற்கை அழிவு உண்டாகுமுன்பே, மானுடம் தன் மலங்களால் (அழுக்காறு, அவா, அகங்காரம் இன்ன பிற) அழிந்துபடும் என்கிறார் கார்ல்சாகன். ஆயின் சாகா வரமொன்று உண்டு என்று சொல்கிறது, திகைத்து நிற்கும் மானுடத்திற்கு, நம் மறைகள். அதுதான் ஆன்மீகப் பரிணாமம். உயிர் சார்ந்த உயிரியல் மலங்கள் அழிந்துபடும் போது பிறப்பெடுத்த சீவன் வேறொரு பரிமாணத்தில் வளர்ச்சியுற வாய்ப்புண்டு என்று சொல்கிறது நமது மறை. இது வெறும் ஆறுதல் வார்த்தையா இல்லை இதில் உண்மையுண்டா? என்று இப்பத்தி அலசுகிறது.

சின்னசிறு பாக்டீரியாவில் ஆரம்பித்து சிந்தனை உயிரியாக இன்று மலர்ந்திருக்கும் மனிதனின் அடுத்த கட்ட பரிணாமம் ஆன்மீகப் பரிணாமமே என்று யோகி அரவிந்தரும் சொல்கிறார். வைகுந்தம் / பரமபதம் என்பது சிந்தனை நீட்சியா இல்லை கற்றையியல் தொடர்ச்சியா? 10இன் பத்து எனும் ஓர் கணக்கு குறுக்கிக்கொண்டே போனால் அளவிட முடியாத ஒர் அலகில் (?) நிற்கிறது. விரிந்துகொண்டே போகும் போதும் விரிந்து விரிந்து வெற்றிடத்தில் போய் நிற்கிறது பயணம். இக்கணக்கின் படி பார்க்கும் போது திருமூலரின் இக்கணக்கு பொய்க்குமோ?

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மானால்
ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றே!

சீவன் என்பது நானோ டெக்னாலஜி. Sub atomic physics. அளவிடும் கருவிகள் வந்து சேரும் போது அதுவும் புலப்படும். அடுத்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியற் கேள்வி: நான் எனும் உணர்வு எப்படித் தோன்றுகிறது? ஏன் தோன்றுகிறது என்பதே! இதைப் புரிந்துகொள்ளும் போது மனிதருக்குள் உள்ள உறவுகள் புரிபடும், மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள உறவு புரிபடும். இது புரிந்து மனிதன் உலகைக் காப்பதற்குள் உலகு பெரும்பகுதி அழிவுற்று இருக்கும் என்கிறார் ஜோசப் கேம்பல்.

எனவே இன்றைய மனிதனின் தேடல் அறிவியல்பூர்வமான ஓர் ஆன்மீகமே. இந்திய மெஞ்ஞானத்தில் ஆழங்காட்படும் போது இதற்கான விடைகள் இருப்பது தெரிகின்றது. அதைத் தெளிவுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய அறிவியல் மனிதனின் கடமை. 40 நிமிடங்கள் வரை செல்லும் இச்சிந்தனைகளை இரு பகுதிகளாகக் கேட்கலாம்.

முதல் பகுதி

நேர அளவு: 19.11 நிமிடங்கள்

இரண்டாம் பகுதி

நேர அளவு: 17.34 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி.காம்