இந்திய ஆங்கிலப் பெயர்கள்

ஆறாம் உணர்வு (sixth sense) படமெடுத்த M. Night Shyamalan-ஐப் பலர் அறிந்திருப்பர். ஷியாமளன் என்றவுடன் அது இந்தியப்பெயர் என்பது தெரிந்துவிடும். பிறகென்ன M.Night? ஆகா! அதுதான் உத்தி. தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய வேண்டுமெனில் ஒரு தமிழ்ப் பெயர் வைத்துக் கொண்டால் நல்லதல்லவா? Web CEO எனும் கம்பெனியின் மேனேஜர் பெயர் Steven J. Ram. இவர் இந்தியராக இருக்கலாம். ஆனால், இந்தப் பெயர் மாற்றம் இந்தியர்களிடம் மிகக்குறைவு. ஏனெனில் இந்தியப்பெயர்கள் இந்துப்பெயர்களாக இருப்பதால், மாற்றும் போது அது 'தெய்வக்குற்றம்' என்பது போல் பார்க்கப்படுகிறது. ஆனால் உலகமயமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார கதியில், வியாபார நோக்கில் பெயரை மாற்றிக் கொள்வது தவறில்லை என்று தோன்றுகிறது. அநேகமாக தாய்வான், ஹாங்காங் போன்ற நாடுகளில் மேலைத்தியப் பெயர் இணைப்பு இல்லாத பெயரைப் பார்ப்பது அரிது. இவர்களது பொருளாதார முன்னேற்றம் உலகறிந்தது. இவர்களுக்கு பெயர் செண்டிமெண்டெல்லாம் கிடையாது. வேடிக்கையாகக் கூடப் பெயர் மாற்றம் செய்து கொள்கின்றனர். எனது நண்பரொருவர் வலையில் தேடி ஒரு ஜெர்மன் பெயரை எடுத்துச் சேர்த்துக் கொண்டுள்ளார். இப்படிச் செய்வதால் வெளிநாட்டுக்காரர்களுக்கு இவர்கள் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது எளிதாக உள்ளது (இல்லையெனில் சீனப்பெயர்களை ஞாபகத்தில் வைத்திருப்பதோ, எழுதுவதோ மிகக்கடினம்). கொரியாவில் கூட வேடிக்கையாக ஆங்கிலப் பெயர்களை 'செல்லப் பெயராக' வைத்துக் கொள்ளும் வழக்கமுள்ளது. பெரும்பாலும் ஆங்கில வகுப்பெடுக்கும் போது வெள்ளையர்கள் இவர்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் கொடுக்கும் வழக்கமுண்டு. இது வெள்ளைத்திமிர் என்றுதான் நானும் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது யோசிக்கும் போது இது நடைமுறை வசதியுள்ள ஒரு எளிய திட்டம் என்று தோன்றுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும், மேலும் இந்தியர்களின் பங்கு அதிகரிக்கும் போது இப்படிப் புதுப்புது பெயர்கள் அங்கு தோன்றும். அங்கு ஒரு செனட்டர் இந்திய வம்சாவளியில் வந்திருந்தும் பொதுஜன அங்கீகரிப்பிற்காக தனது பெயரை ஆங்கிலப்பெயராக மாற்றிக் கொண்டுவிட்டார். இது தவறில்லை என்று தோன்றுகிறது. டான் போஸ்கோ என்பது உச்சரிக்கக் கடினம். வீரமாமுனிவர் என்பது இயல்பானதாக உள்ளது. இந்தியர்கள் சீனச் சந்தையை நோக்கி இன்னும் கொஞ்ச காலத்தில் படையெடுக்கும் போது நம்மவர் சீனப் பெயர் வைத்துக் கொள்வர். இதுவொரு எளிய, நடைமுறை உளவியல்!

2 பின்னூட்டங்கள்:

ஜடாயு 6/25/2007 04:24:00 PM

கண்ணன், இது நீங்கள் சொல்வது போல நடைமுறை உளவியல் அல்ல, ஒரு ஆழமான அடையாள, கலாசார மறுப்பு சமாசாரம் என்று நான் நினைக்கிறேன். இன்று இந்தியாவிலேயே நகர்ப்புறங்களில் இந்துக்களே தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் ஆங்கில மயமான பெயர்கள் (ஜோ, ஜிம்,டேவ், பில், டெய்சி, பிங்கி, ரோஸ், ஃபியோனா,... ) வைத்துக் கொள்கிறார்கள். .சகிக்கவில்லை, நாராசமாக இருக்கிறது. இனிமையும், பொருளழகும் கொஞ்சும் விதவிதமான ஏராளமான பெயர்கள் இந்து மரபில் இருக்கும்போது, இதற்கு அவசியம் என்ன? பல இந்தியப் பெயர்கள் ஏற்கனவே உலக அரங்கில் நிலைபெற்றுவிட்டன - டில்பர்ட் கார்ட்டீன்களில் கூட அசோக் என்று ஒரு இந்திய டெக் நிபுணர் பாத்திரம் வந்தாயிற்று!

சொல்லப் போனால், யோகமும், ஆயுர்வேதமும், இந்திய மெய்யியலும், நுண்கலைகளும் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்துப் பெயர்கள் வைத்துக் கொள்வது கௌரவமாக அல்லவா கருதப் பட வேண்டும்? அமெரிக்காவில் எத்தனன இந்திய சாதனையாளர்கள் எத்தனை துறைகளில் வந்திருக்கிறார்கள் - இவர்கள் தங்கள் பெயர்களையா மாற்றிக் கொண்டார்கள்?

கிறித்தவராக மாறிவிட்ட பாபி ஜிண்டால் போன்ற இந்திய வம்சாவளியினர் பற்றி ஏன் பேச வேண்டும் -மதத்தையே மாற்றிக் கொண்டவனுக்கு பெயர் மாற்றமா பெரிய விஷயம்? அந்த ஜிண்டாலை இன்னும் ஒட்டிவைத்திருப்பது இதை வைத்து கொஞ்சம் இந்தியர்களின் அரசியல் ஆதரவு தேறுமா என்பதற்காகத் தான்!

நா.கண்ணன் 6/26/2007 01:55:00 PM

ஜடாயு: இதை ரொம்ப சென்சிடிவாகப் பார்க்க வேண்டாம். உலக அரங்கில் இந்தியா பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொண்டு தொற்று இந்தியாவிற்கு மிக ஆழமான கலாச்சார அடையாளமுண்டு. அதை உலகு அறிந்தே வைத்துள்ளது. நான் சொல்ல வருவது, இந்தியா பொருளாதார ரீதியில் சில சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ளலாம் என்பதே. சீனர்கள் சின்னப் பெயர் மாற்றத்தால் தங்களது பொதுக் கலாச்சார அடையாளத்தை இழந்துவிடவில்லை. தங்களுக்குள் சீனப்பெயரையே பயன்படுத்துகின்றனர். வெளி மனிதர்களுக்கு சௌகர்யமாக இருக்க ஆங்கிலப் பெயர்கள். அவ்வளவே! இந்தியாவில் வாழ்பவர்கள் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது தாழ்வு மனப்பான்மையின் அடையாளம். அதை நாம் கண்டிக்கலாம். ஆனாலும், சாதீய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவில் பெயர் மாற்றம் என்பது கூட சமூக அந்தஸ்தை மாற்றும் விஷயம். அந்த ரீதியில் அதை நான் வரவேற்கிறேன். பெரியாழ்வார் சொல்வது போல் எல்லோரும் நாரணனின் நாமங்களை வைத்துக் கொள்ளலாம். அது ஆன்ம பலமும் கூட!