பாகவதமெனும் விருந்து

அறிவியல் படித்து விட்டால் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. கேள்விக்கு விடை கிடைக்காதவரை தேடிக்கொண்டே இருக்க வைக்கும் அறிவியல் மனது. பதில் எங்கெங்கு ஒளிந்திருந்தாலும் அங்கெல்லாம் தேடும். எனவேதான், இந்திய மெய்யியல் மரபு அறிவியல் மாணவர்களுக்கு திகட்டாத தேனாக அமைகிறது.

பாகவதம் கிருஷ்ணலீலையைச் சொல்ல வந்தாலும், சொன்னவர் சம்சாரி அல்ல. சுக முனி பரம பிரம்மச்சாரி. ஆண், பெண் பேதமெல்லாம் கடந்த பிரம்மஞானி. ஆயினும் அவர் பாகவதம் சொல்கிறார் என்றால் சொல்லப்படுவது வெறும் பாரதிராஜாவின் , 'தாஜ்மகால்' கதை அல்ல என்று உணர வேண்டும். அது காதல் கதை அல்ல. இந்தியத் தத்துவங்களின் சாரமாக உள்ளது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அனுபவம் பாகவதம். அதுவும் சொல்பவர் சொன்னால் பாகவதம் தேன்! தமிழகத்தில் கிருஷ்ணப்பிரேமியை விட பாகவதம் சொல்வதற்கு இனிமேல் ஒருவர் பிறந்து வந்தால் உண்டு. எப்படி கிருஷ்ண பால லீலையை ஒரு குழந்தை மனோநிலையில் இருந்து கொண்டு அவரால் சொல்ல முடியுமோ, அதே நேரத்தில் பாகவத்தின் பிரபஞ்ச சிருஷ்டி ரகசியங்களை அவரைப் போல் எளிதாக யாரும் சொல்ல முடியாது.

முதல் முறை பாகவதம் கேட்டபோது என்னை உலுக்கியது பிரபஞ்ச சிருஷ்டி பற்றிய நம்மவர்களின் ஆழமான புரிதல். இன்று பயோகெமிஸ்றி எனும் உயிர்வேதிமவியல் சொல்லும் சூட்சுமங்களையெல்லாம் ஒரு எலியைக் கூட கூறு போடாமல் சுகமுனிவர் சொல்வது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

சும்மா, ஒரு சாம்பிளுக்கு அவரது உரையிலிருந்து ஒரு பகுதியை இங்கு இடுகிறேன். தமிழகத்தில் இருப்பவர்கள் இவ்வுரைக்கோவையை மலிவு விலையில் பெறலாம். அவ்விலை பல நல்ல காரியங்களுக்கு செலவிடப்படுகிறது.

பிரம்மாவை சுயம்பு என்றுதான் சொல்வது வழக்கம். ஆனாலும் உருவானவுடனேயே, பிரம்மா கேட்ட முதல் கேள்வி என் தோற்றத்தின் காரணகர்த்தா யார் என்பது? 'தபோ' என்றொலி கேட்டது. அவர் தியானத்தில் மூழ்கிவிட்டார். உள்ளொளியாக இறைமை அவரிடம் பேச ஆரம்பித்தது. முதல் கேள்வியே சொக்க வைக்கும் கேள்வி. "பரவாயில்லையே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயே!" என்பதுதான் அது. நம்மைப் போல அசடா என்ன அவர்? "நீ, உன்னைக் காண வேண்டும் என்று விருப்பப்பட்டாய், நான் காண்கிறேன்!" என்றார். இறைவன் முகமலர்ந்து பிரம்ம சிருஷ்டி பற்றிச் சொல்லத்தொடங்குகிறார். அதன் தொடர்ச்சியாக வருகிறது கிருஷ்ணப்பிரேமியின் கீழ்ச்சுட்டும் உரை. கேட்டு மகிழுங்கள்.

பாகவத உரை: ஸ்ரீ கிருஷ்ணப்பிரேமி அண்ணா

காலம்: 28 நிமிடங்கள்.

2 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/26/2007 12:27:00 AM

//முதல் முறை பாகவதம் கேட்டபோது என்னை உலுக்கியது பிரபஞ்ச சிருஷ்டி பற்றிய நம்மவர்களின் ஆழமான புரிதல்//

"அண்டம் மோழை யெழ முடி பாத மெழ" என்றெல்லாம் நம்மாழ்வார் சொல்லும் போது மலைக்காமல் இருக்க முடிவதில்லை கண்ணன் சார்.

//ஒரு எலியைக் கூட கூறு போடாமல்//

Non Destructive Testing என்பார்கள்.
அது போல் எந்த ஒரு அழிவு ஆராய்ச்சியும் இல்லாது, ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சியால் மட்டுமே இது போன்ற உண்மைகளைச் சொல்வது தான், இந்திய மெய்யியல் மீது, பிரமிப்பு ஏற்படுத்துகிறது.

பரனூர் அண்ணா சுட்டி வேலை செய்யமாட்டங்குதே!

நா.கண்ணன் 5/27/2007 01:52:00 PM

//பரனூர் அண்ணா சுட்டி வேலை செய்யமாட்டங்குதே!//

ஆமாம்! ஏன் என்று புரியவில்லை. மாற்றி விட்டார்கள் போல.