மொழி பட நினைவுகள்-2

இப்பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் இப்படம் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம் என எண்ண வைக்கிறது. யோசித்துப் பார்த்ததில் "மொழி" தமிழ் சினிமா வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்று தோன்றுகிறது. இதுவரை தமிழ் சினிமா தானாக வரித்துக் கொண்ட சினிமா லட்சணங்கள் என்பவைகளை மறுதலித்து 'மொழி' படம் புதிய லட்சணம் சொல்கிறது. இது மரபைப் புரிந்து புதுக்கவிதை எழுதுவது போல் அமைந்திருப்பது அதன் சிறப்பு.

தமிழ் சினிமா வளர்ச்சி பேசாப்படம், பேசும்படம், பாடல்கள் நிரம்பி வழியும் இசை நாடகம் (மூசிகல்), புராண, இதிகாச மறுஆக்கம், பினனதை ஒட்டி கதாநாயகனை ஆகச்சிறந்த புருஷனாக (இராமனைப் போல்) காட்டும் போக்கு (எம்.ஜி.ஆர்) என்று வளர்ந்து, பின்சினிமாத்துவம் (பின் நவீனத்துவம் போல்) வருகிறது. இக்காலக்கட்டத்தில் வில்லன் சிறப்பிக்கப்படுகிறான் (ரஜனி, ரகுவரன், சத்யராஜ்). வில்லத்துவம் என்பது கதாநாயகத்துவத்திற்கு ஈடாகிறது. வன்முறையின் வெளிப்பாடாக கதாநாயகன் காட்டப்படுகிறான் (பாட்சா, நாயகன், ஆளவந்தான், ஆறு, பிதாமகன், தாமிரபரணி). கதாநாயகனே செய்வதால் வன்முறை நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த வளர்ச்சியின் அங்கமாக நகைச்சுவை என்பதையும் நோக்கலாம். முதலில் அசடு வழியும் ஸ்லோ டைப் நகைச்சுவை (அப்பன் மகனே! சிங்கம்டா!), பின் என்.எஸ்.கேயின் சமூக விழிப்புத்தரும் நகைச்சுவை, நடனம், இசை கலந்து தரும் சந்திரபாபுவின் நகைச்சுவை, டனால் தங்கவேலுவின் குடும்பம் சார்ந்த நகைச்சுவை, நாகேஷ் கொண்டு வரும் சுறு,சுறுப்பான நகைச்சுவை என்று வளர்ந்து கவுண்டமணி, செந்தில் என்ற இருவரிடம் கொச்சைப்பட்டு போய் ஸ்தம்பித்து விடுகிறது! கிராமப்புர நகைச்சுவையாக இயல்பாக வரும் கவுண்டமணியை கல்லூரிப் பேராசிரியர் வரை (காதலர் தினம்) கொண்டு போய், வேறு வழி தெரியாமல் ஸ்தம்பித்து நின்றிருக்கிறது, தமிழக சினிமா. நல்ல வேளையாக கமல் இயல்பான நகைச்சுவையை மீண்டும் கொண்டு வருகிறார். அவர் இதை சிவாஜியின் வழியில் செய்கிறார். சிவாஜிக்கு காமெடி நன்றாக வரும். அவரைத் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கமல் அக்குறையை நிறைவு செய்கிறார். என்.எஸ்.கே வழியில் விவேக் மீண்டும் கொஞ்சம் டீசண்டான காமெடியைக் கொண்டு வருகிறார்.

இப்படியான வளர்ச்சியில் "மொழி" என்பது ஒரு புது ஊடக வளர்ச்சியின் தொடக்கமாக எனக்குப் படுகிறது. மொழி படத்தில் கதாநாயகத்துவம் இல்லை. ப்ரிதிவிராஜ், பிரகாஷ்ராஜ் இருவருமே உபபாத்திரங்கள். எல்லாப் பாத்திரங்களுக்கும் சமமான எடைப் பங்கீடு கொடுக்கப்படுகிறது. மேலும் காமெடி என்பதற்கு தனி டிராக் (பாட்டை) கொடுக்கப்படாமல், இயல்பான மெல்லிய நகைச்சுவை படம் முடியும் வரை ஓடுகிறது. கொஞ்சம் கூட உரத்த வசனங்களோ, கொச்சைப் படுத்ததலோ இல்லை. கடைசிக் காட்சியில் கூட கதாநாயகனும், நாயகியும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால், நண்பன் நண்பனைத் தழுவுகிறான். தோழி, தோழியிடம் போகிறாள். இது யதார்த்தமான தமிழ்ச் சூழலைக் காட்டுகிறது. இசை என்பது இன்னும் தமிழ்ச் சினிமாவின் பிரிக்கமுடியாத அங்கமாக உள்ளது. இப்படம், பாடல் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அது ஓட வேண்டுமெனில் தமிழர்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் போக வேண்டும். அது நடக்கும். இன்னும் 10 வருடமாகலாம். எனவேதான் "மொழி" ஒரு புதிய வளர்ச்சியின் தொடக்கம் என்கிறேன். "மொழி" படத்தில் வணிக ரீதியிலான அம்சங்கள் முதலீட்டாரின் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்று புகுத்தப்பட்டுள்ளன. அதில் கூட ராதாமோகன் வென்றிருக்கிறார். இசைக்கு வித்யாசாகர், பாடல்களுக்கு வைரமுத்து என்பது சரியான தேர்வு. ஆக, மொழி எனும் படம் ஒரு "நியூட்ரல் சினிமாவை" முன் வைக்கிறது. வில்லன் இல்லாத, கதாநாயகன் இல்லாத, செக்ஸ் இல்லாத, கொச்சை நகைச்சுவை இல்லாத ஒரு புதிய ஊடக உருவம்.

மொழி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்பது ஆரோக்கியமான சமிக்ஞை. தமிழ் சினிமாவிற்கு எதிர் காலம் இருக்கிறது. தமிழ் ரசனை என்பதை மெருக படுத்த முடியும்.

14 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 7/21/2007 11:07:00 AM

பின்னூட்டங்களுக்கு இருக்கும் ' வலிமை' யைப் பார்த்தீங்களா?

'மொழி'யை இன்னும் 'பேச' வைக்குது. :-))))

நல்ல அலசல் கண்ணன்.

நா.கண்ணன் 7/21/2007 11:53:00 AM

நன்றி துளசி

இன்னும் பேச நிறைய விஷயம் இருக்கு. இப்படத்தில் கவர்ச்சி புகாததற்குக் காரணம் கதாநாயகி ஊமை என்பது. உடனே நமக்கொரு இரக்கம் உள்ளத்தில் புகுந்து விடுகிறது. அதன் பின் கவர்ச்சி காட்டினால் அது பொருந்தவே பொருந்தாது.

காது கேளாத பீத்தோவனால் எப்படி இசையை உருவாக்க முடிந்தது (பிற்காலத்தில்)?

இறைவன் "கற்ற மொழியாக" தன்னுள் கலப்பதாக திருமழிசை சொல்கிறார். இதன் பொருள் என்ன?

மொழியின் இதர பரிமாணங்கள் என்ன?

Anonymous 7/21/2007 12:19:00 PM

பீதோவன் குறித்து ஒரு சிந்தனை. இவர் பிறவி செவிடராய் இருந்தால் இசை வித்தகராயிருக்க முடியுமா? நன்றாக
இருந்த காலத்தில், இசையை மனதளவில் முழுமையாகப் புரிந்து கொண்ட காரணத்தால், செவிடான பிறகும் இலக்கணம்
மறக்கவில்லை.

தமிழ் சினிமா அவ்வப்போது, நம்பிக்கையை அளித்து வந்திருக்கிறது. அவள் அப்படித்தான், உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்,காதல் எல்லாம் அத்தி பூத்தாற் போல் வந்த நல்ல படங்கள். ஆனால், இவை அனைத்திலும் இல்லாத ஒன்று, மொழி நம்மை எந்த நிலையிலும், கவலைப் படுத்தவில்லை. நீங்கள் இந்தியில் சித்சோர், பார்த்திருக்கிறீர்களா? அருமையான படம். யேசுதாஸ், இந்தியில் பாட ஆரம்பித்தது இங்கேதான். எளிமையான படம். இதைப் பார்த்த போது, இப்படியெல்லாம் தமிழில் படம் வருமா என்று ஏங்கியதுண்டு. Both movies didn't tax my brain and this is unusual for Indian movies என்று சொல்ல வந்தேன்

நா.கண்ணன் 7/21/2007 12:31:00 PM

அன்பின் அனானி:

பீத்தோவன் குறித்த உங்கள் குறிப்பு சரியே. இசை என்ற மொழி இலக்கணம் காது சரியாக இருக்கும் போது அவருக்குப் பாடமாகிவிடுகிறது. இதைத்தான் திருமழிசையும் "கற்ற மொழியாக" என்ற பதத்தால் சுட்டுகிறார்.

மொழி படத்தில் அர்ச்சனாவின் எரிச்சல் சரியே. அவளுக்கு இசை உலகு தெரியாது. அதைப் புகுத்த முடியாது. அதேபோல் அவள் பேசுவது போல் 'பாவித்தலும்' தவறே (அது நமக்காகப் புகுத்தியது என்று தோன்றுகிறது). காதைப் பொத்திக் கொள்வதால் ஊமை உலகில் புகுந்துவிட முடியாது. அப்படியே வாழ்ந்து பார்த்தால்தான் அதன் இலக்கணம் புரியும். அவள் மொழி கண்கள்தான். அதனால்தான் ஜோதிகாவைத் தேர்ந்து எடுத்தது!

"சித்சோர்" பார்க்கவில்லை. கீழிறக்க முகவரி ஏதாவது தெரியுமா?

உண்மைதான் பல படங்கள் காசு வாங்கி நம்மை இம்சிக்கின்றன :-)

Anonymous 7/21/2007 01:00:00 PM

http://www.youtube.com/watch?v=zGQkaH-n-lE

Here are three song clips from You Tube.
I do not know where to download this movie!

Anonymous 7/21/2007 01:13:00 PM

http://rajshri.com/movies/nowplaying.asp?type=subtitle&band=low&fileID=moviesMusical28

This web site says that you watch the entire movie for free!

நா.கண்ணன் 7/21/2007 01:16:00 PM

நன்றி அனானி. பாடல் கேட்டேன். அருமையான இசை. இது முன்பு எனக்கு அறிமுகமான பாடலே! 70 களின் இந்திப் பாடல்கள் ஒரு பொக்கிஷம். அமோல்பாலேகர் நல்ல நடிகர். இந்தப்படத்தைத் தேடி எடுத்துப் பார்க்கிறேன்.

நா.கண்ணன் 7/21/2007 01:28:00 PM

அனானி: இம்சைப் படுத்தாத ஒரு இந்திப் படம் சமீபத்தில் பார்த்தேன். விவாகம் (Vivah). கல்யாணம் பற்றிய எளிய, இனிய படம். ஒரு தொந்திரவு இல்லாமல் இருக்கு.

Anonymous 7/21/2007 01:42:00 PM

I am out of touch with hindi movies. I will check this movie out! Thank you!

நா.கண்ணன் 7/21/2007 11:35:00 PM

அனானி! மிக்க நன்றி. என்ன ஆச்சர்யமெனில் கொஞ்ச நேரம் முன்புதான் என் மராட்டிய நண்பரிடன் இப்படம் பார்ப்பது பற்றிப் பேசினேன். அவர் ராஜ்ஸ்ரீ சென்று பார்க்குமாறு சொன்னார். கணினியைத் திறந்தால் உங்கள் இணைப்பு. படம் ஆரம்பத்திலிருந்து ஓடுகிறது. பார்த்துவிடுகிறேன்.

ramachandranusha 7/22/2007 01:23:00 AM

இந்த மாதிரி சினிமா, ஜோ, பிருதிவிராஜ்ன்னு பதிவுப் போட்ட நாங்களும் பின்னுட்டமாய் போடுவோம்., அதைவிட்டு விட்டு
நம்மாழ்வார், ஆண்டாள் பாசுரம் என்றால் எகிறி குதித்து ஓடிவிடுவோம் :-)
கோஷிஷ்தான் உயர்ந்தவர்கள். ஹிந்தியில் சஞ்சீவ்குமார், ஜெயபாதிரியின் நடிப்பில் அசத்தியிருப்பார்கள். தமிழில் கமல் கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்திருப்பார்.அடுத்து சிட்சோர்- அந்தக்காலக்கட்டத்தில் வங்காள இயக்குனர்கள் தந்த பல படங்கள் யதார்த்த நடிப்புக்கும் அழகான பாடல்களுக்கும் பெயர் பெற்றவை. எங்கே ஆசாத்? இதைப் பற்றி அலசியிருக்கோம், ஒருக்காலத்தில் :-)
பி.கு இன்னும் மொழி பார்க்காத அபாக்கியவாதி

நா.கண்ணன் 7/22/2007 08:43:00 AM

வாங்க உஷா!
சந்தடி சாக்கிலே நம்மாழ்வாரை வம்புக்கு இழுக்கிறீங்க :-) அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. நம்ம பேசறதை அவர் "ஈதென்ன உலக இயற்கை" அப்படின்னு சொல்லி விலகிடுறார்.
பதிவு என்று வரும் போது இரண்டு வழிகள். மற்றவர் மகிழ்ந்து கலந்து கொள்ள எழுதுவது (சினிமா, அரசியல்). நாம் மகிழ்ந்து, அதைப் பகிர்ந்து கொள்வது (நம்மாழ்வார் சமாச்சாரம்). இரண்டும் தவிற்கவியலாதது. சுவை வரும் போது நம்மாழ்வாரும் சினிமா போல் சுவைக்கும் :-)

"மொழி" பார்க்காத அபாக்கியவாதி ன்னு எழுதியிருக்கீங்க. அரசியல் பேசிப் பேசி அரசியல்வாதி போல் ஆயிடுச்சு. அது "அபாக்கியவதி", வாதி அல்ல :-))

சித்சோர் - உள்ளத்திருடன். பார்த்துவிடுகிறேன். 60, 70 களில் வந்த ஹிந்திப்படப்பாடல்கள் ரொம்ப இனிமையானவை. என்றும் கேட்கக்கூடியவை. ஆசாத் அவர்களும் வந்து அலசுங்கள்.

நன்றி உஷா..என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்கு :-)

nayanan 8/04/2007 12:20:00 AM

நண்பர் கண்ணன்,

ஓரிருவர் படம் நன்றாக இருந்தது
என்று சொல்லியும் நான் பார்க்கவில்லை.
(எல்லாம் அணிமைப் படங்களின் மீது
இருக்கும் தெளிவான நம்பிக்கைதான் :-) )

உங்கள் வருணனை அருமை. அவசியம்
பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை
ஏற்படுத்தியிருக்கிறது. பார்ப்பேன்.

//
இறைவன் "கற்ற மொழியாக" தன்னுள் கலப்பதாக திருமழிசை சொல்கிறார்
//

ஆன்மத்தமிழ் என்ற அறிவுத்தமிழை பல விதயங்களோடும்
இணைத்துப் பொருள் காணுவதில்
உங்களுக்கு நிகர் நீங்களே.

பாராட்டுகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

நா.கண்ணன் 8/04/2007 06:59:00 AM

நாக.இளங்கோவன்: அடடா! நலமா? "அந்த நாள் ஞாபகம் வந்ததே! நண்பரே! நண்பரே!"