ஹரி கதையின் 21ம் நூற்றாண்டு வளர்ச்சி

நண்பர் மலைநாடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்! விசாகா ஹரியின் ஹரிகதையின் முழுநீள (ஏறக்குறைய 90%?) ஒளிப்பதிவைக் கண்டு சொல்லி இருக்கிறார். தாஜ்மகால் மிகப் பிரபலம் என பலமுறை கேட்டிருந்தாலும் நாம் நேரில் சென்று பிரம்மிக்கும் போதுதான் அபிப்பிராயங்களின் உண்மை உணர்வு புரியும். அதுபோல்தான் விசாகா ஹரி பற்றிய என் புரிதலும். பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லியுள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தோய்ந்த போதுதான் ஹரிகதை என்ன செய்யும் என்று உணர்ந்தேன். சிலருக்கு வெறும் கதை மட்டும் பிடிக்கும். சிலருக்கு சங்கீதம் மட்டும் பிடிக்கும். சிலருக்கு மெல்லிசை மட்டும் பிடிக்கும், கர்நாடக சங்கீதம் பிடிக்காது. ஆனால் என்னைப் போன்ற சிலருக்கு இவை எல்லாம் பிடிக்கும்! சௌகர்யம்! எல்லாவற்றையும் அனுபவிக்க முடியும்.

ஆயினும் விசாக ஹரி எங்கோ என் இதய வீணையை மீட்டி விட்டார். அது இந்த ஜென்ம வாசனை மட்டுமென்று தோன்றவில்லை. பூர்வ, பூர்வ ஜென்ம வாசனைகள். இசைக்குடும்ப வாசனைகள். பக்தி சம்பிரதாய வாசனைகள். இப்படியொரு உள்புதைந்த பூஞ்சோலை வாசனைகளை கிளறி விட்டுவிட்டார். கண்கள் பனிக்க, நெஞ்சு கனக்க, செவிகுளிர அவர் ஹரிகதை கேட்கும் பாக்கியம் பெற்றேன். சாதரணமாகப் பார்த்தால் சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் சாகித்யத்தின் பாவம் பிடிபட பல கதைகளை குருமார்கள் சொல்லதுண்டு. அவர் இப்படிக் கேட்டதைத்தான் பகிர்ந்து கொள்கிறார். ஆனால், அவர் அதை நிகழ்கலையாக நிகழ்த்தும் போது சொல் உணர்வு பெற்று இசை வடிவில் பிரவாகமெடுக்க, அப்போது மாயாஜாலம் நடந்துவிடுகிறது! நாம் மாறி விடுகிறோம். 25 வயது தியாகராஜர் இராம தரிசனம் கிடைக்க வேண்டுமென்று இராமபிரம்மம் எனும் தன் தந்தையிடம் கேட்கிறார். அவர் சொல்லித்தரும் மகாமந்திரம் இரண்டே சொல். ராம! அவ்வளவுதான். ஆனால், அதன் சக்தி அறிய நீங்கள் விசாகா ஹரியின் ஹரிகதா கேட்க வேண்டும்! அது உங்கள் உள்ளதை உலுக்கவில்லையெனில் உங்களுக்கு ஏதோ கோளாறு என்று பொருள். இப்படி ஒன்றா, இரண்டா? பொறுக்கிப், பொறுக்கி, தியாகராஜர் வாழ்வில் நடந்த முக்கிய திருப்புமுனைகளை அடுக்கிச் செல்கிறார். ஒவ்வொரு நிகழ்விலும் (episode) உள்ளம் கரைகிறது. தியாகராஜர் வெறும் உஞ்சவிருத்தி பிராமணர். படு ஏழை. ஆனால், அவர் வாழ்வு எவ்வளவு பூர்ணமாக இருந்திருக்கிறது. அவர் கதை கேட்டாலே நம் வாழ்வும் பூரணமடைகிறதே. அது எப்படி?

ஹரி கதை எனும் வடிவிற்கு புதிய பொருள் தருகிறார் விசாகா ஹரி. சொல் என்பதை மந்திரமாக்கும் திறன் இசைக்கு உண்டு என்று நிகழ்த்திக்காட்டுகிறார். சினிமா என்ற வடிவம் இதைத்தான் பாமரவடிவில் செய்கிறது. சினிமாவின் விர்சுவல் வடிவம்தான் ஹரிகதை எனும் கலை. சினிமா நமக்கு அப்பீல் ஆவதற்குக் காரணம், அதில் கதை இருக்கிறது, நடிப்பு இருக்கிறது, இசை இருக்கிறது. இவை எல்லாம் கொஞ்சம் யதார்த்ததிற்கு மிஞ்சிய அளவில் கலந்திருக்கின்றன. அக்கலவைதான் நம்மை பாதிக்கத்தக்கது. வெறும் யதார்த்தம் நம்மை பாதிக்கும் என்றால் நடைமுறை வாழ்வே நம்மை மாற்றியிருக்க வேண்டும்! கூத்து வடிவில் கொஞ்சம் மிகை இருக்கும். உச்ச ஸ்தாயியில் பாடப்படும் பாடல் எடுக்கிறது. எல்லாமே கொஞ்சம் யதார்தத்திற்கு மிஞ்சியது. ஹரிகதை இதைச் சரியாகச் செய்கிறது என்று உணர்ந்தேன்.

விசாகா ஹரி அவர்கள் குழந்தைக்கு கதை சொல்வது போல்தான் சொல்கிறார். அவர் இன்னும் இளமை என்பதால் அந்த பாவங்கள் கூட மழலைத்தன்மையுடன் இருக்கின்றன. ஆனால், கேட்கும் பாதிப்பேருக்கு மேலே 50 வயதிற்கு மேல்! கதை கேட்க எல்லோருக்கும் பிடிக்கிறது. அதனால்தான் வள்ளுவன் செவிக்கு இல்லாத போதுதான் வயிற்றுக்குச் சோறு என்றான் போலும்! சங்கீதம் கேட்க கொஞ்சம் பக்குவம் வேண்டும். இவர் லால்குடியின் சிஷ்யை! சுத்தமான இசை. பிசிறு இல்லாத குரல். பொதுவாக கதை சொல்லும் போது தொண்டை வரண்டு போகும். பாடுபவர்களால் கதை சொல்ல முடியாது. ஆனால் தொண்டை வரள கதை சொல்லும் போதே பட்டென பிருகா கொடுக்கிறார். கமகம் செய்கிறார். ராகப்பூஞ்சோலையின் பல்வேறு வர்ணங்களைக் காட்டுகிறார். இது எப்படி சாத்தியப்படுகிறது? சினிமா நடிகர்கள் பாடுவதில்லையே (at least, இந்தக்காலதில்). அவர்கள் சுயமாகக் கூட பேசுவதில்லையே இப்போது. ஆனால் விசாகா ஹரி கதை சொல்கிறார், நடிக்கிறார், பாடுகிறார், கேள்வி கேட்டால் பதிலும் சொல்கிறார். ஒரு அறிவுஜீவி இப்படியெல்லாம் செயல்படமுடியுமா? முடியும் என்று காட்டும் 21ம் நூற்றாண்டு வித்தகி விசாகா! முன்பு சிவானந்த சரஸ்வதி ஹரிகதா காலட்சேபம் செய்வார்கள். அவரும் ஒரு தேர்ந்த கலைஞர். அக்ககலை விசாகாவிடம் ஒருபடி மெருகு கொள்கிறது.

ஹரி கதை எனும் கலைக்கு புது வாழ்வு பிறந்துள்ளது. வாழ்க. கையில் ஒரு மணி நேரமிருந்தால் கேட்டு ரசியுங்கள் முழு நிகச்சியையும் (இந்த இடையில் வரும் விளம்பரம் ஒரு இடைஞ்சல். அதை வெட்டி அவரது முழு நிகழ்ச்சியையும் யாராவது எடுத்திருக்கலாம். விசாகா ஹரி அடுத்தமுறை வெளிநாடு வந்தால் முறையாக ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யுங்கள். அது தமிழர் மனதை மாற்றும் மருந்து. புதிய வாழ்விற்கான விருந்து!

2 பின்னூட்டங்கள்:

Karthigesu 7/29/2007 10:14:00 PM

கண்ணன்,
"மொழி" படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிய கருத்துக்கள் இணையத்தில் இருக்குமா என்று தேடிய பொழுது உங்களின் "கவினுலகம்" அகப்பட்டது. மகிழ்ச்சி. (மொழி பற்றி பிறகு கூடிவந்தால் பேசுவோம்.)

விசாகா ஹரி ரொம்ப அழகாக ஹரிகதா சொல்லுகிறார். "மயக்குகிறார்" என்பது பொருந்தும். இவர்கள் சொல்லும் கதைகள் தியாகராஜரின் பாடல்களைப் படித்த பின் எழுப்பப்பட்ட அழகிய கற்பனைகள் என்ற புரிதலுடன் அவற்றை அனுபவிக்கலாம். "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" என்ற வரியைப் பற்றிக் கொண்டு அப்பர் முதுகில் கல் கட்டிக் கடலில் வீசினார்கள் என்ற அழகிய கதை ஜோடித்தது போலத்தான்.

பொதுவாக நம் அன்றாட அலுவல்களில் சோர்ந்து நீத்துப் போன உணர்வுகளை இப்படிப்பட்ட கலைஞர்கள் கிள்ளியும் வருடியும் உயிர்ப்பித்து கொஞ்சநேரம் நம்மை உணர்வுப் பிழம்பாக்குகிறார்கள்.

ஆனால் அதை அனுபவித்துணர ஒரு மனநிலை வாய்க்க வேண்டும். உங்களைப் போலவே எனக்கும் சினிமாவிலிருந்து கர்நாடக சங்கீதம் வரை (இவை எல்லைக் கற்களல்ல எனினும்) அனுபவிக்க முடிகிறது. அந்த நேரத்திற்கு damn our critical faculties!

அது சரி! இராமர் முன்னால் வந்து நிற்கும்போது "பால கனக மய" பாடலாமா? இது "ஏலா நீ தயராது?" என்றல்லவா தொடங்குகிறது.

சும்மா, இது critical faculty-ஐத் தள்ளிவைத்தாலும் "தான் முந்துறும்" விஷயம்.

ரெ.கா.

நா.கண்ணன் 7/29/2007 11:16:00 PM

அன்பின் ரே.கா:

நன்றி.

அகச்சான்றுகள் கொண்டு வரலாறு எழுதுவது என்பதொரு மரபு. உண்மையில் இது நீட்டு (லீனியர்) வரலாறு அல்ல. சுழற்சி வரலாறு. தொன்மம், ஐதீகம். இதன் உளவியல் லாபம் பற்றி நிறையப் பேச இருக்கிறது!

தியாகையாவின் கீர்த்தனைகளை வைத்து ஒரு ஓரங்க நாடகம் உருவாக்குகிறார் விசாகா. இவர் இன்னும் வளரும் கலைஞர்தான். அவருக்கு இப்படியான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றால் தன் கதை சொல்லும் கிரமத்தை மாற்றிக் கொள்ள வழியுண்டு. அநாதை என்னும் போது எழுந்ததா "சீதம்ம, மாயம்ம" எனும் பாடல்? இப்படிக் கேள்விகள் வரும். அவர் தன் குருமார்கள் சொன்ன கதைகளை வைத்து நாடகக்கதையைப் பின்னுகிறார். முன்னால் ஏதோ ஒரு புத்தகம் ஒன்று வைத்திருக்கிறார். அது குரு பரம்பரைக்கதையா என்று தெரியவில்லை.

குழந்தையில் நான் கேட்ட கதையில் சீதாராம வைபவம் இவருக்குக் கிடைக்காமல் இவர் மனைவிக்கு கிடைக்கும். இப்படியான சித்திரம் கூட பார்த்திருக்கிறேன். தொன்மங்கள் சரித்திரமல்ல. அதன் இலக்கணமே தனி.

எப்படிப் பேசினாலும் கடைசியில் நாம் சொக்கிப் போய்விடுகிறோம். அதுதானே கலையின் வெற்றி, கலைஞனின் வெற்றி.