பெரியார் படம்


பெரியாரைத் தெரியாத தமிழன் இருக்க முடியாது. சமகாலத் தமிழ்ச் சமூக வளர்ச்சியில் அவரின் அளப்பரிய பங்கை பலர் அறிந்திருந்தாலும் அவரின் முழுச் சரித்திரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்றாலும், அவரை விட அவர் பற்றிய அபிப்பிராயங்களே கேள்விப்பட்டு வளர்ந்திருக்கிறேன். எனவே இப்படம் பார்க்க வேண்டும் என்பது ஒரு கட்டாயச் சரித்திரத்தேவை எனக்கு. முதலில் பெரியார் படப்பாடல்கள்தான் கேட்டேன். அப்போதே பிடித்துவிட்டது. இப்போது படம் பார்த்த போது இன்னும் கூடுதலாகப் பிடித்துப் போயிற்று. இந்திய சரித்திரத்தின் ஒரு முக்கிய கட்டத்தில், அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

சரித்திரபடம் எடுப்பது சிரமம். அதுவும் சமகாலத்தலைவர் ஒருவர் பற்றிய படம் எடுப்பது இன்னும் சிரமம். பல, அரசியல் சமூக அழுத்தம் உண்மையான சரித்திரத்தைச் சொல்லவிடாது. காந்தி படம் வந்த போது சில பிழைகளைச் சுட்டிக்காட்டினார் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி. இப்படம் உண்மைச் சரித்திரத்தைத்தான் சொல்கிறது என்று நம்பி மேற் செல்கிறேன்.

ராஜ ஞானசேகரன் வெற்றிகரமாக இயக்கிய மோகமுள், பாரதியாருக்குப் பிறகு பெரியார் எடுத்திருக்கிறார். இதிலும் அவர் வென்றிருக்கிறார். அவ்வளவு கச்சிதமான பாத்திரப் பொருத்தம். எங்கிருந்துதான் காமராஜர் போலவே, ராஜாஜி போலவே, அண்ணாதுரை போலவே, காந்தி போலவே ஆட்களைப் பிடிக்க முடிந்ததோ! (எம்.ஜி.ஆர் போன்ற முகச்சாயல் கொண்ட ஒருவரை டிவி ஷோவில் பார்த்திருக்கிறேன்). குஷ்பூ கூட மணியம்மை போல! சபாஷ் ஞானசேகரன்.

பெரியார் படம் நம் சமூகத்திற்கு பெரிய படிப்பினை. முதலில் இதற்கு வரி விலக்கு கொடுத்து, சப் டைட்டில் கொடுத்து இந்தியா பூரா வெளியிட வேண்டும். எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம். இப்போது நாம் அனுபவித்து வரும் சம உரிமை என்பது எவ்வளவு இன்னல்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது என்பது அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.

சினிமாவாக ஒருவர் வாழ்வை எடுப்பது சிரமம். சினிமா கேளிக்கை ஊடகம். ஆவணமல்ல. முதலில் கொஞ்சம் மெதுவாக செயற்கையாகச் செல்வது போல் இருந்தாலும் இறுதியில் இயக்கத்தில் வென்றிருக்கிறார்.

எப்படி ஒரு வைணவ குடும்பத்தில் பிறந்த இராமன் பெரியாராக உருவெடுக்கிறார் என்பது யாரையும் புண்படுத்தாத வகையில் படமாக்கப்பட்டுள்ளது. கொள்கை முக்கியமெனக் கருதும் ஒரு செயல் வீரர் அரசியலைக் கிண்டல் அடிப்பது, எக்காலத்திலும் அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்து கொள்ளாதது மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

காந்தி போல்தான் பெரியாரும் என்று தெரிகிறது. காந்தி சுதந்திரம் வாங்கியவுடன் காங்கிரசைக் கலைத்துவிடச் சொன்னார். பெரியாருக்கு அரசியல் அழைப்பு வந்தும் அதைத் தவிர்த்து, கம்யூனிசம் எனும் அரசியல் கொள்கை மீது பிடிப்பு இருந்தும் அதை விட்டுக் கொடுத்து சாதி ஒழிப்பின் மீது கவனம் செலுத்தி திராவிட கழகத்தை கடைசிவரை ஒரு தனிப் பெரும் இயக்கமாக அவர் நடத்திக்காட்டியது இதற்குச் சான்று.

இராமாசாமிப் பெரியார் பிராமணீயத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்தாலும், பிராமணர்களை அவர் தனிப்பட மனிதாபிமானத்துடன் நடத்தியது, கடவுள் மறுப்பை செய்து கொண்டே கோயில் நிர்வாகஸ்தராக இருந்தது, இவை பிராமணர்கள் என்று மட்டுமல்ல, எல்லாத்தமிழர்களுமே தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சரித்திர நிகழ்வு. பெரியாருக்கும், ராஜாஜிக்குமுள்ள உறவும் இவ்வகையில் அடக்கம். (இவை கொஞ்சம் கூடுதலாகவே சொல்லப்பட்டுள்ளதோ என்ற ஒரு உள்ளுணர்வு!)

இந்தியா சுதந்திரம் வாங்கிய காலக்கட்டத்தில் மூன்று மனிதர்கள் சாதீயம், இனம், சமயக் கொள்கைகளைச் சாடுகின்றனர். தந்தை பெரியார் தமிழக அளவில், அம்பேத்கார் இந்திய அளவில், ஜே.கிருஷ்ணமூர்த்தி உலக அளவில். இவர்கள் மூவரும் இந்து மத உள்வட்டத்தில் இருந்து கொண்டு அதை உடைக்கப்பாடுபட்டனர். அம்பேத்கார் பௌத்ததிற்கு மாறி, பெரியாரை அழைக்கும் போது பெரியார் 'இந்து அடையாளத்தை' தக்க வைத்துக் கொள்கிறார். உரிமைக்காக. பௌத்தம் அவருக்குச் சம்மதம் என்று காட்டப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி மட்டும் எந்த சமய, மத, இன அடையாளங்களையும் முழுமையாகப் புறக்கணித்தவர். பெரியாரிடம் இன உணர்வு தங்கிவிடுகிறது. மேலும் கறுப்பான ராஜாஜியையும், கருப்பான காமராஜரையும் ஆரியர்-திராவிடர் என பாகுபடுத்திக் காட்டுவதாகப் படம் சொல்கிறது. அங்கு இனம் என்பதை உள் சாதீயக் கட்டமைப்பு என்றே புரிந்து கொள்கிறேன். (அதாவது உளவியல் சார்ந்த mental conditiong, ஒரு பதப்படுத்தல் என்று). இதை இதே காரணத்தால் கிருஷ்ணமூர்த்தி நிராகரிக்கிறார். தேசியம், இனம் என்பது பொய்மை என்பது ஜே.கே கருத்து.

படத்தின் பாடல்கள் அருமை. எங்கேயிருந்துதான் அந்தக் காலத்துப் பாடகி ஒருவரின் குரலை இந்தக் காலத்தில் தேடிப்பிடித்தாரோ! (தாசி வீட்டுப் பாடற்காட்சி).

பெரியாரின் வாழ்வில் இயற்கையாக உள்ள நகைச்சுவை இயைந்து இடம் கொடுக்கிறது, தனியாக காமெடி டிராக் போட வேண்டாமல் (ஒரு செருப்பை வீசிய இடத்தில் இரண்டு செருப்பு வாங்கும் பெரியாரின் தந்திரம்). பெரியார் வரவு செலவுக் கணக்கில் மிகவும் கெட்டி என்பது ஊர் அறிந்தது. தாசி வீட்டில் இருந்து கொண்டு "பிழைப்பு நஷ்டத்தில் ஓடும் போலுள்ளேதே" என்பது நகைச்சுவை. "ஒரு ரூபாய் கொடுத்தால் அதற்கான பெயர்தான், இரண்டு ரூபாய் கொடுத்தால், நல்ல பேராகத் தரலாம்" என்று பெயர் வைக்கும் இடத்தில் சொல்வது. குழந்தை வரம் வேண்டும் என வரும் தாயிடம் "இந்த சாமியார்களிடம் போய் குழந்தை வரம் கேட்கேதே அம்மா! ஒண்ணு கெடக்க, ஒண்ணு செஞ்சிருவாங்க" எனும் இடம். இப்படி. சாதரணமாகவே சத்யராஜ் இம்மாதிரிப் பேசுபவர். இப்போது சொல்லவா வேண்டும்? கலக்குகிறார்.

படம் பார்த்து முடித்தவுடன் இராமசாமி எனும் பெரியார் வைணவ குலத்தில் பிறந்தது அவர் கொள்கைப் பிடிப்பிற்குக் காரணமோ என்று தோன்றியது. ஆழ்வார்கள் பாசுரங்கள் வீட்டில் ஒலித்த வண்ணம் இருந்திருக்கிறது. பெரியார் இராமானுசரை மேற்கோள் காட்டுகிறார். எல்லோரையும் சாடும் பாரதிதாசன் கூட இராமானுசரை ஏற்றிப் புகழ்ந்திருக்கிறார். ராஜாஜிக்கும், பெரியாருக்கும் இருந்த கடைசி வரையிலுமான நட்பிற்கும் வைணவம் ஒரு காரணமாக இருந்திருக்குமோ என்றொரு சம்சயம்.

மொத்தத்தில் நிறைவான படம். இது வெள்ளி விழா, வைரவிழா எனக் காண வேண்டும். இதுவே தமிழர்கள் சுய மரியாதைக்குக் கொடுக்கும் மரியாதை.

23 பின்னூட்டங்கள்:

TBCD 7/22/2007 07:24:00 PM

/*பெரியாரைத் தெரியாத தமிழன் இருக்க முடியாது*/
மலெசிய தமிழர்களுக்கு நிறைய பேர்க்கு தெரியவில்லை.... நான் மலெசியா வந்த பொழுது தான் இந்த படம் ரிலீஸ்... என் கூல் பணி புரியும் நன்பர்களை இந்த படம் பார்க்க சொன்ன போது...னிறைய பேர்க்கு பெரியாரைத் தெரியவில்லை

குமரன் (Kumaran) 7/22/2007 08:05:00 PM

வித்தியாசமான பார்வை; ஆனால் பெரியாரைக் குறை சொல்லாத பார்வை. ஆத்திகர்கள் என்றாலே பெரியாரைக் குறை சொல்பவர்கள் அல்லது பாராட்டிப் பேசாதவர்கள் என்ற கருத்தினை உடைக்கும் இடுகை. நன்றி கண்ணன் ஐயா.

உங்களது புதிய படம் நன்றாக இருக்கிறது. :-)

நா.கண்ணன் 7/22/2007 09:09:00 PM

TBCD: ஆச்சர்யமான சேதி. மலேசிய இலக்கிய வட்டத்தில் பழகும் போதெல்லாம், தீவிர பகுத்தறிவுப் போக்கையே கண்டுள்ளேன். ஆனால், இளைஞர் வட்டம் சரித்திரம் தெரியாமல் வளர்ந்திருக்கலாம். அப்படியெனில் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.

நா.கண்ணன் 7/22/2007 09:13:00 PM

குமரன்:
கம்பநாட்டான் இராமாயணம் முழுதும் சொல்லிவிட்டு ஸ்ரீராமஜெயம் என்று சொல்லாமல் "மானுடம் வென்றதம்மா!" என்றுதான் முடிக்கிறான். பெரியார் அவர்களும் மானுட மேன்மைக்குத்தானே பாடுபட்டு இருக்கிறார். மேலும் அவர் செய்த கடவுள் நிராகரிப்பு என்பது பழிக்கத்தக்க செயல் அல்லவே. சநாதன தர்மத்தில் அதுவும் ஒரு அங்கம். இந்தியப் பாரம்பரியம் ஆழமானது, விஸ்தாரமானது. இத்தகைய போக்குகளுக்கு முன்னுதாரணம் அங்குண்டு.

நா.கண்ணன் 7/22/2007 09:14:00 PM

குமரன்: இப்படம் சென்றவார களப்பணி போது எடுத்தது. இது பற்றிய பதிவொன்று வரும்.

ramachandranusha 7/22/2007 09:56:00 PM

பெரியாரின் எதையும் காம்பரமைஸ் செஞ்சிக்காத குணம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, கண்ணன் சார், நீங்க நினைத்தா மாதிரி, லொள்ளு பேசும் சத்தியராஜ் அதுக்கு சரியான ஆள் தான் என்று எனக்கும் தோன்றியது.
எம். ஆர். ராதா இந்த படத்தில் நடித்திருந்தால் இன்னும் பொறுத்தமாய் இருந்திருக்காது?
இப்படிக்கு,
ஹூம் எந்த தமிழ் படமும் பார்க்க கிடைக்காத அபாக்கிய"வதி"

நா.கண்ணன் 7/22/2007 10:35:00 PM

உஷா:

என்ன உங்க நிலமை இப்படி ஆயிடுச்சு? கொரியாதான் மோசம்ன்னு நினைச்சேன்!ஹூம்.

சத்யராஜுக்கு பொருந்துகிறது, ஏனெனில் இவரும் கொங்கு நாட்டுக்காரர். எ,.ஆர்.ராதா நடித்திருந்தால் ரொம்பக் காரமாக இருந்திருக்கும். ஆனால், வேஷப் பொருத்தம் வராது. இந்தப் படத்தில் எல்லாம் சரியான டூப்ளிக்கேட். நம்பமுடியா வண்ணம்!

கோவி.கண்ணன் 7/23/2007 12:19:00 AM

பெரியார் படம் குறித்த ஆத்திக விமர்சனம் அருமை.

பாராட்டுக்கள் கண்ணன் ஐயா.

Mugunth 7/23/2007 02:49:00 AM

நா.கண்ணன் அய்யா,
tbcd சொல்லுவது உண்மைதான் என்று நம்புகிறேன்.
நான் மலேசியாவில் இருக்கும்போது, எகலப்பை பற்றி பேசினால், இது எங்க அப்பாவுக்கு உபயோகமாக இருக்கும். எனக்கு தமிழ் எழுத தெரியாது என்றே பெரும்பாலும் பதில் வரும்(தமிழார்வமுள்ள, தமிழ் எழுத படிக்க தெரிந்த மலேசிய இளைஞர் பலர், என் தனிப்பட்ட நண்பர்கள் உட்பட, இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் விதிவிலக்குகள் என்றே கொள்ளவேண்டும்.)இதற்காக இளைய தலைமுறையை குறைசொல்ல மாட்டேன்.
இதற்கு மலேசியாவில் இருக்கும் கல்வி முறை ஒரு காரணமாக இருக்கலாம். எப்படி இருப்பினும் வீட்டிலாவது குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிகொடுத்திருக்கவேண்டியது தமிழ்ப்பெற்றோரின் கடமை. வெளியே தமிழ் - இலக்கியம் பேசிக்கொண்டு வீட்டில் குழந்தைகளை தமிழ் தெரியாமல் வளர்ப்பவர்களை என்னவென்று சொல்ல... இந்த தவறை இந்தத் தலைமுறையில் உலகில் எந்தமூலையில் வாழ்ந்தாலும் நாம் செய்யாமல் இருப்போம்.

நா.கண்ணன் 7/23/2007 07:33:00 AM

நன்றி கண்ணன்.
நன்றி முகுந்த்: மலேசியா பற்றிய உங்குள் குறிப்பு ஆச்சர்யத்தைத் தருகிறது. பெரும்பாலும் நான் அங்கு பழகும் வட்டம் 40-60 வயதுடையவர்கள். அவர்களிடம் பெரியார் பக்தி அதிகம். இளைஞர்களுடன் பழக்கம் அதிகமில்லை. இளைய வட்டப் பிரதிநிதியான உங்கள் பேச்சை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். தமிழ் மொழியை வேறு நாடுகளில் தக்க வைப்பதை விட மலேசியாவில் எளிதாக தக்க வைக்க முடியும். அங்கும் நழுவுகிறது என்றால் வருத்தமே.

வவ்வால் 7/23/2007 07:41:00 AM

ஏங்க கண்ணன் டி.வி.டி கிடைக்க இத்தனை நாளாச்சா, சரி தாமதமா படத்த பார்த்திங்க உங்க மனசுக்கு பிடித்தார் போல விமரிசனம் பண்ணி பதிவும் போட்டிங்க அத்தோட நிப்பாட்டி இருக்கலாம்ல, அது என்ன ,

//மொத்தத்தில் நிறைவான படம். இது வெள்ளி விழா, வைரவிழா எனக் காண வேண்டும். இதுவே தமிழர்கள் சுய மரியாதைக்குக் கொடுக்கும் மரியாதை.//

இப்படி ஒரு வேண்டுகோள் , நக்கல் தானே!(படம் தியேட்டர் விட்டுப் போய் எத்தனை நாலாச்சு) இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை, முதலில் படத்த தியேட்டரில் எங்களைப்போல போய் பாருங்க!

நா.கண்ணன் 7/23/2007 08:25:00 AM

//இப்படி ஒரு வேண்டுகோள் , நக்கல் தானே!(படம் தியேட்டர் விட்டுப் போய் எத்தனை நாலாச்சு) இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை, முதலில் படத்த தியேட்டரில் எங்களைப்போல போய் பாருங்க! //

மன்னிக்க வவ்வால்!
நக்கல் இல்லை. நான் தமிழகத்தில் இல்லை. தியேட்டர் சென்று படம் பார்க்கவியலாது. படம் ஓட வேண்டுமென்ற உண்மையான ஆவலில் சொன்னேன்.

Thangamani 7/23/2007 10:30:00 AM

கண்ணன், பெரியார் பற்றிய உங்களது படப் பார்வைக்கு நன்றி!!

பெரியார் திராவிடக்கருத்தாக்கத்தையே ஒரு எதிர்க் கதையாடலாகவே பயன்படுத்தி உள்ளார். ஆர்ய பெருமிதமும், அடையாளமும், பேச்சில் தொடங்கி, பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கிய, சமய அனுஷ்ட்டானங்கள் என்று சாப்பிடும் ஹோட்டல் தொடங்கி, ஐரோப்பிய பின்ணைனியை சாக்கிட்டு எழுந்த தீவிரமான இன அடையாளத்தையும் ஒரு எதிர் கதையாடலைக் கட்டமைக்க வேண்டிய தேவையை எழுப்பியே இருந்தன. (ஹிட்லர் ஒருவேளை வென்றிருந்தால் ஆர்ய வாதம் தமிழக, இந்தியச்சூழலில் எப்படியான ஒரு நிலையை எடுத்திருக்கும் என்று யோசித்தால் சுவரஸ்யமான பல பதில்கள் கிடைக்கலாம்)

ஆனால் பெரியார் எப்போதும், இன அடையாளங்களையும் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்கியே வந்திருக்கிறார். அம்பேத்கார் எவ்வளவு தூரம் தலித்தோ, எவ்வளவு தூரம் மனிதநேயரோ அதைவிடவும் அதிகமாகவே நான் பெரியாரின் மனித நேயத்தைப் பார்க்கிறேன். இல்லாவிட்டால் சோவியத்துக்குப் போய் ஸ்டாலினின் விருப்பத்துக்கு மாறான கம்யூனிச எதிர்குழுக்களை சந்திக்க முயற்சி செய்திருப்பார்.

இன அடையாளங்களை மட்டுமல்ல; அவர் மனிதனின் அடையாளங்களாக முன்னிருத்திய ஒழுக்கத்தையும், பகுத்தறிவையும் கூட கேள்விக்கு உட்படுத்தி அவற்றின் எல்லையையும் கூட விமர்சனத்துக்கு உள்ளாக்கவே செய்தார்.

திராவிட/ தமிழ் எதிர்கதையாடல்களை அவர் ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தினார் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு மற்ற (பாரதிதாசன் உள்பட) திராவிட இயக்க பற்றாளர்களைப் போல எந்த திராவிட வாழ்வியல்/ கருத்தியல்களை கட்டமைக்கவோ, மீளுமைப்பு செய்யவோ, பெருமிதம் கூறும் பழமையை மீட்டுயிர்ப்பு செய்யவோ முயலவில்லை. இன்னும் சொல்லப்போனால் குடும்ப வழியில் கன்னடரான அவருக்கு அதனால் தான் திராவிட நாடு கேட்பதிலோ, அல்லது தமிழ் நாடு தமிழருக்கே என்று கேட்டதிலோ மனத்தடை இருக்கவில்லை என்று புரிந்துகொள்கிறேன். (இன, மொழி அடையாளங்களை தன்னையறியாமல் நம்புகிறவ, அதே சமயம் நேர்மையான அணுகுமுறை கொண்டவர்களுக்கு இது மிகவும் கடினமானது. தற்போதைய இரஜினியின் மனநிலையை ஊகித்து இதை புரிந்துகொள்ளலாம்)

Thangamani 7/23/2007 10:45:00 AM

மலேசியாவில் பெரியார் விரிவான பயணங்களை மேற்கொண்டிருந்தார். பெரியாரின் நண்பரான தமிழ்வேள் கோ.சாரங்கபாணியின் முயற்சியால் அங்கு தமிழர் சீர்திருந்தத சங்கம் ஏற்படுத்தப்பட்டு அது தமிழர் வாழ்வு மற்றும் அரசியல் வலுப்பெற பெரிதும் பாடுபட்டது. இன்றைய இளைஞர்கள் பெரியாரை அறியாதிருப்பது வியப்பானதே!

நா.கண்ணன் 7/23/2007 11:14:00 AM

அன்பின் தங்கமணி:

பெரியார் பற்றிய என் புரிதலில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ளீர்கள். நன்றி.

1. அவர் வாழ்ந்த காலத்தில் வடமொழி, ஆங்கில ஆதிக்கம் அதிகமாகவே இருந்திருக்கிறது. இதைக் கண்டித்து எழுந்த பலருள் பெரியாரின் போக்கு சமூகம் சார்ந்ததாக அமைந்திருக்கிறது (பாரதி மொழி அடிப்படையில் எழுந்தான்).

கழக ஆட்சி மொழி அரசியலை தீவிரப்படுத்தி ஆட்சியைப் பிடித்தது.

இவர்களுக்குப் பின் வடமொழி ஆதிக்கம் குறைந்து ஆங்கில ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. தமிழ் அடையாளம், மொழி என்பது இன்னும் சோணிப் பிள்ளையாகவே உள்ளது.

2. சமரசம் செய்து கொள்ளாத பாணியில் பெரியார் ஜே.கே போல் இருந்திருக்கிறார். இனம் பற்றிய அவர் எதிர்க் கதையாடல் சுவாரசியமாகவே உள்ளது. தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றது. தமிழ் அடையாளம் என பேணப்படும் சேலை, தாலி, கற்பு, தாய்மை என்பவைகளை கேலிக்குறியாக்கியது அவரது தீரத்தைக் காட்டுகிறது. அரசியலில் புகுந்திருந்தால் இந்தத் தீவிரம் சமனப்பட்டு போயிருக்கும்.

பெரியாரை உள்வாங்கிக் கொள்ள தமிழகம் இன்னும் வளர வேண்டும். மேலை நாடுகள் அவரைப் புரிந்து கொள்ளலாம். தமிழகம் புரிந்து கொண்டதா என்பது கேள்விக்குறியே.

விடாதுகருப்பு 7/23/2007 11:40:00 AM

மன நிறைவான பதிவு.

ஒரு பார்ப்பனர் இந்த அளவுக்கு நடுநிலையாக எழுதுவார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை!

சேற்றில் பிறந்தாலும் செந்தாமரை செந்தாமரைதான்!

வாழ்த்துக்கள் கண்ணன் அவர்களே.

நா.கண்ணன் 7/23/2007 11:49:00 AM

நண்பரே:

ஒரு தலித், ஒரு தலித் குடும்பத்தில் பிறப்பதோ அல்லது அவன் பிராமண குடும்பத்தில் பிறப்பதோ அவன் கையில் உள்ளது என்று தோன்றவில்லை.

பெரியார் தாழ்த்தப்பட்டோரை வெளிநாடு போகச் சொன்னார். ஆனால் அதிகம் வெளியேறியது பார்ப்பனர்களே. அது பலருக்கு தங்கள் கண்களை திறந்து விட்டிருக்கிறது.

என் பெண் தன் குலம் என்னவென்று அறியாது ஒரு மானுடப் பெண்ணாக வளர்கிறாள். இந்தியாவின் அன்பும், வாஞ்சையும், கருணையும் அவளுக்கு தரப்பட்டுள்ளது.

டாக்டர் அப்துல் கலாம் தன் உயர்விற்குக் காரணம் ஒரு குறள் என்று என்னிடம் சுட்டினார்:

வெள்ளத்தனைய மலர் நீட்டம்
மாந்தர்தம் உள்ளத்தனையதுயர்வு

TBCD 7/23/2007 12:38:00 PM

/*TBCD: ஆச்சர்யமான சேதி. மலேசிய இலக்கிய வட்டத்தில் பழகும் போதெல்லாம், தீவிர பகுத்தறிவுப் போக்கையே கண்டுள்ளேன். ஆனால், இளைஞர் வட்டம் சரித்திரம் தெரியாமல் வளர்ந்திருக்கலாம். அப்படியெனில் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்*/


இதில் அவர்களை குற்றம் சொல்ல முடியாது... நம் தமிழ்நாட்டில் எவ்வளவு பேர்க்கு பெரியாரை ஒரு சமுக முன்னெற்றத்திற்கு பாடுபட்டவர் ஆக தெரியும்.. அவரை கடவுள் மறுத்தவர் ஆக தானே தெரியும்...அதுவும் எல்லா நிலையிலும் தெரியாது..

/*தமிழ் தெரியாமல் வளர்ப்பவர்களை என்னவென்று சொல்ல*/
இதை மொதலில் தமிழ்நாட்டில் அமல்படுத்துவோம்..பின்னர் மற்றைய மாநிலததில் ..பின்னர் மலெசியாவில் அமல்படுத்தலாம்...

Thangamani 7/24/2007 07:22:00 PM

நன்றி கண்ணன்.

சமீபத்தில் பெரியார்-ஜேகே சந்திப்புப் பற்றி படித்தேன். வேறு விபரங்கள் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நீங்கள் எங்காவது படிக்க/ கேள்விப்பட நேர்ந்ததுண்டா?

நன்றி

நா.கண்ணன் 7/24/2007 07:55:00 PM

//சமீபத்தில் பெரியார்-ஜேகே சந்திப்புப் பற்றி படித்தேன்./
இதுவே எனக்கு சேதி! இது பற்றி முதலில் சொல்லுங்கள். பெரியாரது எதிர்க்கதையாடல் என்பது புரிந்து கொள்ளப்படாமல் கொச்சைப் படுத்தப்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. அதற்கு தத்துவ பலம் கொடுக்க ஆள் இல்லை! ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களே அதைச் செய்து வந்தனர். என்ன முரண் பாருங்கள்!!ஜே.கே இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) 7/25/2007 02:36:00 PM

பெரியார் படத்தை மிக வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்த்து இருக்கீங்க! அதுவும் பெரியாரின் நகைச்சுவைக் காட்சிகள் நீங்கள் சொன்னதும் இன்னும் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது!

//பெரியார் படம் நம் சமூகத்திற்கு பெரிய படிப்பினை. முதலில் இதற்கு வரி விலக்கு கொடுத்து, சப் டைட்டில் கொடுத்து இந்தியா பூரா வெளியிட வேண்டும்.//

என்னைக் கேட்டா, இந்தியா மட்டுமில்லை...வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்...குறிப்பா எல்லாத் தமிழ்ச் சங்கங்களிலும் ஒவ்வொரு வாரம் ரிலீஸ் பண்ணலாம்!
சிவாஜி படத்துக்கு அமெரிக்கவில் ஒரு ஹிட் என்றால், பெரியார் படத்துக்கும் ஒரு ஹிட் கொடுக்க முடியும்!

//பெரியார் வைணவ குலத்தில் பிறந்தது அவர் கொள்கைப் பிடிப்பிற்குக் காரணமோ என்று தோன்றியது. ஆழ்வார்கள் பாசுரங்கள் வீட்டில் ஒலித்த வண்ணம் இருந்திருக்கிறது. பெரியார் இராமானுசரை மேற்கோள் காட்டுகிறார்//

வித்தியாசமான சிந்தனை ஐயா!
ஒரு வேளை இளம் வயதில் இராமானுசர் பற்றி உள்ளத்தில் பதிந்ததாக இருக்கலாம். ஆனால் பெரியாரின் சிந்தனைகள் நன்கு கிளை பரப்பிய போது....அவர் இதை எல்லாம் தாண்டிய காட்டாறு போல் ஓடுகிறார். பல நூற்றாண்டுச் சழக்குகளையும் குப்பைகளையும் தேங்கி நாறிக் கொண்டிருந்த சமயக் குளமும், பெரியாரே தூர் வாரியது போல் ஆகி விடுகிறது! இது ஆன்மீகத்துக்கு பெரியார் எதிர்மறையாக ஆற்றிய அரும்பணி!

எல்லாம் சரி...கண்ணன் சார்...அந்தப் ஃப்ரொபைல் படம் டாப் டக்கர்! ஹாலிவுட் திட்டம் ஏதாச்சும் கைவசம் இருக்கா என்ன? :-)

நா.கண்ணன் 7/25/2007 03:26:00 PM

//பல நூற்றாண்டுச் சழக்குகளையும் குப்பைகளையும் தேங்கி நாறிக் கொண்டிருந்த சமயக் குளமும், பெரியாரே தூர் வாரியது போல் ஆகி விடுகிறது! இது ஆன்மீகத்துக்கு பெரியார் எதிர்மறையாக ஆற்றிய அரும்பணி!//

நச்!
இப்படி யாரும் இதுவரை சொல்லவில்லை. ஆனால் உண்மை அதுதான். நம் ஆன்மீகத்தில் குறை இல்லை. அதை நம்மவர் புரிந்து கொண்டதில் பெரும் பிழைகள் ஏற்பட்டுவிட்டன. இந்து சமூகம் என்பது முடை நாற்றமெடுத்துக் கிடந்தது. உச்சவிருத்தி எடுத்து வாழ வேண்டிய பார்ப்பனன் உயர் பதவிகளை பிடித்துக் கொண்டான். மற்ற சமூகங்களோ ஏதோ தாழ்வு மனப்பான்மையில் ஊறிக் கிடந்தன. பெண்ணடிமை, ஏழ்மை, நிறவெறி தலைவிரித்தாடிய காலத்தில் தூர் வாரிய பல பெரியவர்களில் ஈ.வே.ராவும் ஒருவர். தங்கமணி சொன்னது போல் இவர் பாணி எதிர்க்கதையாடல். இதைச் சரியாகப் புரிந்து கொள்ள இத்தனை தசாம்ங்கள் ஆகிப்போயின. இன்னும் புரிந்து கொள்ளாதோர் நிரம்ப உள்ளனர். இப்பணி கடுமையானது. கடல் வாருதல் போலத்தான். பலர் துன்புற்றனர், பலர் அலக்கழிந்தனர். அந்த அதிர்ச்சி அலை இன்னும் தமிழகத்தில் ஓயவில்லை. இன்னும் கொஞ்ச காலமாகும். இந்தியா பொருளாதார பூதமாகும் போது சாதீயம் ஒழிந்து போகுமென நம்பலாம். அது அவசியமில்லாத அடையாளச் சின்னம் என்பது புரிந்து போகும்!

வண்ணத்துபூச்சியார் 1/02/2009 07:43:00 PM

நல்ல திரைப்படத்திற்கு நல்ல கருத்துக்கள்

வாழ்த்துக்கள்