விசாகா ஹரி என்னும் இளம் கதைச் சொல்லி

குழந்தையிலிருந்தே எனக்குக் கதை கேட்கப்பிடிக்கும், கதை சொல்லவும் பிடிக்கும். இலக்கியத்தின் ஆணிவேர்கள் இக்கதையாடலில்தான் உள்ளன. இது ஒரு சமூக உத்தியாக இந்தியாவில் பன்னெடும் காலமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. எத்தனையோ கதை சொல்லும் சம்பிரதாயங்கள் உண்டு. விசாகா ஹரி எனும் இவ்விள கதை சொல்லி ஒரு கதை சொல்லும் குடும்பத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறார். இவரது கணவர் கல்லூரி மாணவராக இருக்கும் போது சொல்லிய கதையாடலில் மயங்கியதுண்டு. இவரது மாமனார்தான் இவர்களுக்கு வழிகாட்டி. கிருஷ்ணப்பிரேமி என்பது பெயர். கண்ணன் மேல் இன்னும் காதல் வராதவர் இவர் கதை சொல்லி ஒருமுறை கேட்டால் போதும். பின் கண்ணதாசன் ஆகிவிடுவர். இப்படியான குடும்பத்திலிருந்து வந்திருக்கும் விசாகா ஹரி மிகப்பிரபலாகி வரும் இளம் கலைஞர். நல்ல இசை ஞானம், இவரது பிளஸ் பாயிண்ட். ஆனால், இசை இவரது கதையின் ஒரு அங்கமே. இந்திய முதுசொம் காப்பாளராக வந்திருக்கும் இவரை மின்னுலகம் தன்னுள் வரவேற்றிருக்கிறது. இந்தச் சின்ன புழக்கடை சினிமா, ஜெயா டிவியில் வந்த உபன்யாசத்தின் ஒரு சிறுதுளி என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை யாராவது முழுதும் பதிவு செய்துள்ளனரா? அதைப் பார்க்கும்/கேட்கும் வாய்ப்புக்கிடைக்குமா? (இன்னொரு பிட் உள்ளது. ஆனால் அதுவும் முழுப்பதிவல்ல, நிறைய வெட்டுக்கள் உள்ளன)

விசாகா ஹரியின் பணி சிறக்க எம் வாழ்த்துக்கள்!

5 பின்னூட்டங்கள்:

Aruna Srinivasan 7/29/2007 03:13:00 AM

விசாகா ஹரியின் குறுந்தட்டு வந்துள்ளது. அனேகமாக சென்னையில் பெரும்பாலான இசைக் கடைகளில் கிடைக்கும். குழந்தையாக பிறந்து வளர்ந்தது என் கண் முன்னே.. (என் நெருங்கிய சினேகிதியின் முதல் பெண்)- கேட்க எனக்கே பெருமிதம் - என் சினேகிதி பற்றி கேட்க வேண்டாம் :-) இவரது தம்பியும் - சாகேதராமன் - ஒரு தேர்ந்த இசைக்கலைஞர். மென்பொருள் துறையிலும் கூட. இருவருடைய இசை ஞானத்தின் பின் இவர்கள் பெற்றோர்களின் - விஜயா மற்றும் சந்தானம் - இசையார்வமும், குழந்தைகள் இசையில் ஒளிர வேண்டும் என்று இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் என் கண் முன்னே விரிகிறது. இவர்களின் இடையறாத ஊக்கமும், கல்வியுடன் கூட இசையையும் இணையாக ஊட்டி வளர்த்தது இன்று பார்க்க எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது.Chartered Accountant தேர்வில் இந்தியாவிலேயே முதல் மூவரில் ஒருவராக தேர்வு பெற்றிருந்த நிலையில் பெரும் நிறுவனங்களிலிருந்து வந்த வேலைகளைவிட ஹரி கதையும் இசையும்தான் தன் வழி என்று தீர்மானமாக முடிவெடுத்தவர் விசாகா :-)

நா.கண்ணன் 7/29/2007 08:23:00 AM

மிக்க நன்றி அருணா!

இவரது புக்ககப் பின்னணிதான் எனக்குத்தெரியும். பிறந்தக வரலாறு தெரியாது. இவர் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேற்றுதான் முதன்முறையாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்களது சமீபத்திய இங்கிலாந்து, அமெரிக்கப் பிரயாணத்தின் ஒரு பகுதி ஏற்பாடுகளைச் செய்தவர் என் நண்பர். அப்போது ஸ்ரீஹரியுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது சிடி வெறும் பேச்சு மட்டுமா? இல்லை ஆடியோ சிடியா?

மலைநாடான் 7/29/2007 08:44:00 AM

கண்ணன்!

நீங்கள் இனைத்துள்ள சுட்டியிலுள்ள விசாகா ஹரியின் ஹரிகதையின் முழுநிகழ்வும், கீழேயுள்ள சுட்டியில் கேட்கலாம், பார்க்கலாம். அவருடைய கதைசொல்லும் பாங்கு எனக்கும் பிடித்திருந்தது. ஒரு பழம்பெரும் கலைவடிவம், நம்மிடமிருந்து மறைந்துபோகும் ஒரு கலைவடிவம் என்றவகையில் உங்கள் கருத்துக்களுடன் உடன்பாடுண்டு.

அருணா குறிப்பிட்டது போல், விசாகா தன்வழியைத் தேர்வு செய்திருப்பாயின், அதற்குச் சிறப்பான ஒரு பாராட்டுத் தெரிவிக்கலாம்.

பதிவுக்கு நன்றி.

http://video.google.com/videoplay?docid=8112153368163986381&q=%22vishaka+hari%22&hl=en

ஜீவா (Jeeva Venkataraman) 7/29/2007 09:51:00 AM

ஆம் கண்ணன் சார், விசாகா ஹரி என்னை பிரம்மிக்க வைத்தவர்!.
இவரைப்பற்றி பதிவொன்று எழுத நெடுநாள் ஆசை! தங்கள்
பதிவை படிக்கும் படியாவது கிட்டியதே!

ஜெயா டி.வி மார்கழி உற்சவத்தின் போது இந்த தியாகராஜ ஹரிகதை சொன்னார்.
அப்போது அதன் ஆடியோவை அன்பர்கள் பதிவு செய்ய இணையத்தில் கேட்க கிடைத்தது.

நா.கண்ணன் 7/29/2007 10:37:00 AM

நன்றி ஜீவா!
விசாகா, ஹரி இருவருமே கதை சொல்லிகள். இருவராலும் ஆங்கிலத்திலும் நம் கதை சொல்லமுடியும். ஒரு பழம் தமிழ்க் கலையை இப்போது இருவரும் வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். விசாகா ஆங்கிலப் பாராளுமன்ற கலை வளாகத்தில் பேசி இருப்பதாக லண்டன் நண்பர் சொன்னார். இத்தம்பதியர் பதினாறும் பெற்று நிறைவுற வாழ வேண்டும்.