எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!நம்மாளுக்கு 60 வயசு ஆயுடுச்சு! எந்தக் கணக்கிலே பாத்தாலும் அது கிழம் :-) பழுத்த பழம். எல்லோரும் நிறைய எழுதி படம் போட்டுக் காட்டிட்டாங்க. சுதந்திரம் வாங்கிய 60 வயதிற்குள் இந்தியா நிறையவே வளர்ந்திருக்கிறது. "எம் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே" உற்சாகம் வரத்தான் செய்கிறது. ஆனால், இந்தியாவிற்கு இரண்டு முகமுண்டு. பழக்கமற்றோரைப் பயமுறுத்தி விரட்டிவிடும் முகமும், வேண்டியவரை எத்தருணத்திலும் அரவணைக்கும் முகமென்றும் இரண்டு உண்டு. சுதந்திர தின விழாவிற்கு பூசான் போகிறேன் என்றவுடன் 'உனக்கு வேற வேலையே இல்லையா?' என்று கேட்டு சுருதியை இறக்கிய பிஜி நண்பருக்கு இந்தியா முதல் முகத்தையே இருமுறை காட்டி இருக்கிறது. இதற்கும் அவர் இந்திய வம்சாவளியினர். அவர் குறைக்குக் காரணமிருக்கிறது. ஒரு காட்டுமிராண்டித்தனம் அங்கு உண்டு. பிச்சை, குப்பை, சுரண்டல், அழுக்கு, ஒழுங்கின்மை, ஊழல் இவை பல்கிப் பரவிக் கிடக்கின்றன. இந்தியா ஒரு புது வெள்ளம். இன்னும் மண்டிகள் மிதந்த வண்ணமே உள்ளன. இவை அடங்கி இந்தியா ஒரு நாகரீகப் பொலிவுள்ள நாடாக மலர இன்னும் சில பத்தாண்டுகள் ஆகலாம். இல்லை பேரா.அப்துல் கலாம் கனாக் காண்பது போல் விரைவிலும் நடந்து விடலாம்.

இந்தியாவில் வாழப் பயந்து வெளி வந்த வந்தவன் நான். இந்திய சமூக அமைப்பு அப்படி. உலகம் போற்றும் தத்துவங்களை உள்ளடக்கிய அந்நாடு எப்படி சமூகவியலில் கவனம் கொள்ளவில்லை என்பது ஆச்சர்யம்! இந்தியாவிற்குப் போட்டி சீனா என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியாவை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை. காரணம், ஒருமித்த சமூகவியல் அங்கு வளர்ந்திருக்கிறது. கம்யூனிசம் அதற்கு துணை போகியிருக்கிறது. சீனக் கன்பூசியன் தத்துவத்தை சமூக சீரமைப்பிற்கு அடிப்படையாகக் கொண்ட கொரியாவில் பிச்சை இல்லை, ஒழுங்கீனமில்லை, ஜாதி பேதமில்லை. ஆனால் பெரியோருக்கு மரியாதை இருக்கிறது, எங்கும் இன்சொல் இருக்கிறது, குற்றம் மிகக்குறைவாக உள்ளது [இரவு எந்நேரத்திலும் பெண்களும், முதியோரும் பயமில்லாமல் நடமாட முடிகிறது]. 40 ஆண்டுகளுக்குள் ஜனநாயகம் வேரூன்றி இருக்கிறது. அடிமட்டத்திலிருந்து உலகின் செல்வாக்கான 11வது பொருளாதரமாக வளர முடிந்திருக்கிறது.

இத்தனை ஆதங்கம் எதற்கு? இந்தியாவும் வள்ளுவன் பேசும் வலுவான சமூக விழுமியங்களை தன்னுள் உள்வாங்கி மலரும் ஒரு நாகரீக நாடாக விரைவில் வர வேண்டும் என்ற ஆசையால்தான்.

இந்தியாவின் பலம், அதன் கல்வி, வளைந்து கொடுத்து முன்னேறும் தன்மை (adaptability), ஜனநாயக அரசியல், முழு மனிதச் சுதந்திரம், மிகப் பழமையான பண்பாடு போன்றவை. இவை அதன் முன்னேற்றத்திற்கு துணை புரிய இன்று நாம் வாழ்த்துவோம்.

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு!

1 பின்னூட்டங்கள்:

ஜீவா (Jeeva Venkataraman) 8/18/2007 09:22:00 PM

//இந்தியாவும் வள்ளுவன் பேசும் வலுவான சமூக விழுமியங்களை தன்னுள் உள்வாங்கி மலரும் ஒரு நாகரீக நாடாக விரைவில் வர வேண்டும் என்ற ஆசையால்தான்.//
அந்த ஆசை நடைமுறையாகும் நாள் வாராதோ!