ஸ்ரீநிவாச கத்யம் தரும் உணர்வுகத்யம் என்பது வடமொழிக் கவிதை. கொஞ்சம் வசன கவிதை, கொஞ்சம் மரபு, கொஞ்சம் உரைநடை. ஆம்! எல்லாம் சேர்ந்தது. இது இப்படி இருப்பதற்குக் காரணம் இது தரும் சுதந்திரமே. இறைவனுக்கு பாமாலையாகச் சூட்டப்படும் கத்யம் பெரும்பாலும் ஒரு உணர்ச்சிப் பெருக்கில் உருவாவதே! இவ்வகைக்கு மகுடம் போல் உள்ளது உடையவர் ஸ்ரீராமானுஜர் இயற்றிய ஸ்ரீரங்கநாத கத்யம். சங்கரர் செய்தது போல் ராமானுஜருக்கு கவிதைகள் அதிகம் செய்ய நேரமில்லை. அவரொரு செயல் வீரர். ஆதலால் அவர் செய்த இந்த கத்யம் மிக சிறப்பாகப் போற்றப்படுகிறது.

அன்றொரு நாள் மியூசிக் இந்தியா வலைத்தளத்தில் உலாவிய போது வேங்கடேசன் மீதும் ஒரு கத்யம் இருப்பதை அறிந்தேன். அதைக் கோயில் சாற்றுமுறையாகக் கேட்ட போது அசந்துவிட்டேன். சும்மா புகுந்து விளையாண்டு இருக்கிறார் இக்கத்ய சாகித்யகர்த்தா. அதைப் பற்றி மேலே சிலாகிக்கும் முன், முதலில் அதைக் கேளுங்கள்:

ஸ்ரீநிவாச கத்யம் கோயில் சாற்றுமுறை

அட இப்படியொரு கவிதையை யார் எழுதியிருப்பார் என்று தெரிந்தவர்களிடம் விசாரித்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. சரியென்று விட்டுவிட்டேன். மீண்டும் இக்கத்யத்தை எஸ்.பி.பி பாடிக் கேட்டபோது ஆர்வம் இன்னும் கூடியது. ச்ச..நம் இணையம் இருக்கும் போது ஏன் மனிதர்களிடம் கேட்க வேண்டும்? :-) என்று தோன்றி கண்டுபிடித்துவிட்டேன். ஸ்ரீமான் ஸ்ரீசைல ஸ்ரீரங்காச்சாரியார் என்பவர் எழுதியிருக்கிறார். ஆனால், இதில் சுவாரசியமாக வரும் கர்நாடக, ஹிந்துஸ்தானி ராகங்கள் பற்றியது பிற்சேர்க்கையாம்! கோயில் வேத பாராயண கர்த்தா பி.வி.அனந்தசயனமய்யங்கார் என்பவர் இடைச்சேர்க்கை செய்திருக்கிறார். அது உண்மையில் சுவை கூட்டுகிறது. எப்படியெனில் அதை எஸ்.பி.பி பாடிக் கேட்க வேண்டும். என்னை மாதிரி ஒரு ரசிகருக்கு இவர் இதைப்பாடிக் கேட்டால் எப்படியிருக்கும் என்று தோன்றியிருக்கிறது. நம்மாளு தன் இசை மேதமையை, திரை அனுபவத்தைக் காட்டி அசத்தியிருக்கிறார்.

எஸ்.பி.பி பாடியிருக்கும் கத்யம்

என்ன ஆச்சர்யமெனில், கோயிலில் வேத பாராயணப் பிராமணர்களுக்கு மட்டுமென்று இருந்த சம்பிரதாயம் சினிமாவினால் பொதுவுடமை ஆகியிருக்கிறது. இப்போது எல்லோரும் எல்லாமும் பாடுகின்றனர். பூணூல் போடும் போது யாரும் கேட்கக்கூடாது என்று அங்கவஸ்திரத்தில் மூடிமறைத்து சொல்லப்பட்ட காயத்திரி இப்போது சி.டி ராமில் வந்திருக்கிறது. ஒன்றுக்கு மூன்று என்று எல்லோரும் பாடியிருக்கிறார்கள். ஆக, பிராமண கலாச்சாரம் பொதுவுடமையாகிவிட்டது. பிராமண மொழி கேலியாகவேனும் பொதுவுடமையாகியது சினிமாவினால்தான். இப்போது சினிமாவின் ஆதரவு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது எனும்படி தீவிர ஆளுமை தெரிகிறது. சினிமாப் பிரபலமொருவர் பாடுகிறார் என்றால் உடனே விற்பனையாகிவிடுகிறது. எஸ்.பி.பி வேங்கடேச சுப்ரபாதம் முதல் எல்லாம் பாடியிருக்கிறார். அவரது தெலுங்குப் பின்னணி சமிஸ்கிருத உச்சரிப்பிற்கு நிரம்ப உதவுகிறது என்று தோன்றுகிறது. தமிழர்களுக்கு நிரம்பப் பயிற்சிக்குப் பின்னரே பிழையின்றி சமிஸ்கிருத உச்சரிப்பு வருகிறது. இளையராஜா கூட முயன்றிருக்கிறார். ஏதோ தேவலாமென்றே தோன்றுகிறது. ஆனால் எம்.எஸ் இதில் வென்றது மட்டுமில்லை இன்று பிரபலமாகியிருக்கும் பக்திப் பாடல் மரபிற்கே வித்து இட்டுச் சென்றிருக்கிறார். அவர் கடைபிடித்த தீவிர தரக்கட்டுப்பாடு இதுவரை இருக்கிறது. அதை சினிமா மோகம் கரைத்துவிடக் கூடாது. மந்திரங்கள் பிழையாக உச்சரிக்கப்படும் போது விபரீத விளைவுகளை அளித்துவிடும் என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள் (இது தரக்கட்டுப்பாட்டிற்கான சூட்சுமமா? என்று தெரியவில்லை). ஆனால் இவர்கள் புண்ணியத்தில் எங்கோ கோயிலுக்குள், சில சமூகங்களுக்குள் ஒளிந்திருந்த பொக்கிஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் விநியோகமாகிறது. பாடியதையே பாடாமல், பிரபலமாகாத கீர்த்தனைகளை, ஸ்லோகங்களை, பிரபந்தங்களைப் பிரபலமாக்க வேண்டும். கோதை நாச்சியார் தாலாட்டு என்றொரு கிரந்தம் கிடைத்திருக்கிறது. அதை யாரேனும் முயன்று பிரபலமாக்கினால் வடபத்ரசாயி மகிழ்வான்.

0 பின்னூட்டங்கள்: