கொரிய பிணைக் கைதிகள்

கடந்த 47 நாட்களுக்குப் பின், இரண்டு பேரைத் தவிர மீதமிருக்கும் கொரிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். எங்கே போய் விளையாடுவது என்றில்லையா? பாரிசு தீக்கிரையாகும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக ஆப்கானிஸ்தானில் போய் கிருஸ்தவத்தைப் பரப்பக் கிளம்பின கோஷ்டி இது. [உலகில் மிகப் பெரிய மதமாற்றுக் குழுவைக் கொண்டிருக்கும் நாடு கொரியா என்பது சேதி! உலகின் 2ம் இடம்] "நரகம்" என்றால் என்ன என்று நேரிடை அனுபவம் இப்போது கிடைத்திருக்கும்! அரசு சொல்லையும் மீறி இம்மாதிரி இடங்களுக்குப் போனதால், கொரிய அரசு ரொம்ப கடுப்பாகி இருக்கிறது! இதுவரை செலவான காசுக்கு கிருஸ்தவ சபையும், அக்குடும்பங்களும் பொறுப்பேற்க வேண்டுமென்று அரசு சொல்லிவிட்டது. இது கொஞ்சம் வித்தியாசமான திருப்பம். அரசு வட்டி வசூல் பண்ணுவது! இனிமே அங்கே இங்கே போனே படவா! என்று அம்மா திட்டுவது போல் அரசு இவர்களை மிரட்டி இருக்கிறது. பயங்கரவாத நாடுகள் என்று ஒரு பட்டியலிட்டு அங்கு இனிமேல் வீம்பிற்கேனும் போவேன் என அடம்பிடிக்கும் கொரியர்களுக்கு முழுத்தடை விதித்திருக்கிறது கொரிய அரசு

இதுவொரு நல்ல முடிவு. பிணைக் கைதிகளைக் கொண்டுவர அரசு கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கிறது (இல்லை என அரசு சொன்னாலும், இப்படித்தான் விடுதலை கிடைத்தது என்பதொரு பத்திரிக்கை யூகம்). இப்படி வரும் வருமானத்தில்தான் தாலிபான் போன்ற வன்முறைவாதிகள் பிழைக்கின்றனர். வன்முறைச் செயல்களை வலுவிழக்கச் செய்ய வேண்டுமெனில், வருமான வழிகளைத் தடை செய்ய வேண்டும். பாரிய அளவில் இந்திய அரசு, இனிமேல் இந்தியாவிற்கு காசு அனுப்பினால் அது பற்றிய முழு விவரமும் தர வேண்டுமென சொல்லியிருப்பது ஒரு வகையில் இவ்வருமான வழிகளை அறியவே.

21ம் நூற்றாண்டு போர்த் தந்திரமென்பது ஒன்றுமறியா அப்பாவிகளை பலியாடு ஆக்குவது என்று ஆகிப்போனது, அறம், மறம் போன்றவை மனிதர்களுக்கு மரத்துப் போய், படுகோழை ஆகிவிட்டதையே காட்டுகிறது. குழந்தைப் பருவத்தில் சண்டை வரும் போது "தைர்யமிருந்தால், ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வாடா!" என்போம். இப்போது யாரும் இப்படிப் போர் புரிவதில்லை என அறியும் போது சங்க காலமே தேவலை என்றிருக்கிறது!

0 பின்னூட்டங்கள்: