யார் பிழை?

கொரிய இந்தியர்கள் எனும் மடலாடற்குழுவில் ஒரு தமிழர் கலைஞரைக் கன்னாபின்னாவென்று திட்டி எழுத, அதற்கெழுந்த எதிர்வினையில் கழக அரசியல் பேசப்பட்டு தமிழின் முதன்மைத்துவம் சந்திக்கு வந்தது. தமிழ் என்றால்தான் உடனே தோள் தட்டிக் கொண்டு வந்துவிடுவேனே (இது பதப்படுத்தலா? இயல்பா? ஏன் இந்தப் பதட்டம்?)! அப்போது பல விஷயங்கள் பிடிபட்டன.

1. வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு இந்தி தெரியவில்லை என்று சொல்லும் போது "உங்கள் தேசிய பாஷை" தெரியவில்லையா?" என வெளிநாட்டார் கேட்கும் போது வரும் அவமானம். (இந்தியாவின் சரித்திரம் தெரியாமல் இருப்பது இதற்கு உட்காரணம்!)

2. வெளிநாட்டில் ஒரு விசேஷம், வைபவம் என்றால் தமிழனைத் தவிர மற்ற எல்லோரும் கொஞ்சமாவது ஹிந்தியில் கதைக்கும் போது வரும் தாழ்வு மனப்பான்மை. குழந்தைகள் அம்மாவைக் கோபித்துக் கொள்வதுபோல் இளம் தமிழர்கள் தமிழக அரசியல்வாதிகளைக் கோபித்துக் கொள்கின்றனர்.

3. தமிழ் என்பது செம்மொழி என்று நாம் காட்டுக் கூச்சல் போட்டாலும் மற்ற இந்தியர்களுக்கு அது "வெறும்" இன்னொரு இந்திய மொழி. வேடிக்கை என்னவெனில் எவ்வளவு ஆதாரம் காட்டினாலும் அது அரசியல்வாதிகளின் கூலிக்கு மாறடித்த அறிஞர்கள் கண்ட முடிவு அதை நம்ப வேண்டிய அவசியமில்லை எனும் துணிபு.

4. சமிஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்பதில் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை.

5. தமிழ் எளிய மொழி, அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னாலும் தெலுங்கர்கள் கூட, "அட! அதை இப்போது கற்றுக் கொண்டு என்ன ஆகப்போகிறது?" அதற்குப் பதில் சமிஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாமே? எனும் முடிவு! தமிழின் அரிய வளம், சமிஸ்கிருதத்தின் வளத்தின் முன் கூலிக்காரன் நிலையிலேயே நிற்கும் அவலம்.

இவை என்னைக் கொஞ்சம் ஆட வைத்துவிட்டன.

1.தமிழ் மொழி பற்றிய சரியான புரிதல். அதன் தோற்றம், அதன் வளமை, அதன் முக்கியம் ஏன் இந்திய உபகண்டத்தில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகவே தெரியாமல் போய்விட்டது? உண்மையில் நாம் பீடுகொள்ளும் தமிழ் அரியதா? இல்லை நாமே உருவாக்கிக்கொண்ட பிரமையா?

2. சுதந்திர இந்தியாவில் தமிழின் கேடு கெட்ட நிலைக்கு யார் காரணம்? தமிழ் மொழி பற்றிய இந்திய சரித்திரம் ஏன் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் போதிக்கப்படவில்லை. தமிழின் பெயரில் நாம் வஞ்சிக்கப்பட்டுள்ளோமா?

3. தமிழ் மொழி சார்ந்த அரசியல் ஒரு காலக்கட்டத்தின் அவசியத் தேவை. ஆனால், அதுவே தமிழைப் பற்றிய அவதூறுக்கும் வித்திட்டுவிட்டதே. இனி எவ்வளவுதான் தமிழ் உயர்வு பற்றிப் பேசினாலும் அதில் அரசியல் பூச்சைக் காண்பதால் தமிழ் பற்றி இந்திய அரங்கில் பேசவே முடியாது உள்ளதே!

4. செம்மொழி என்றால் என்ன? என்பது பற்றிய தெளிவின்மை. இது தமிழர்களுக்கும்-இந்தியர்களுக்கும் பொது. ஒரு இந்தியர் எழுதுகிறார். இந்தியாவில் ஹிந்திதான் அதிகம் பேசப்படுகிறது (இந்தக் கணக்கு உண்மையா? இல்லை போஜ்புரி, குஜராத்தி என்று மானாவாரியாக ஹிந்தி போல் பேசப்படும் மொழிகள் அனைத்தும் சேர்த்து கணக்கிடுகிறார்களா?), அடுத்து பெங்காலி, அடுத்து தெலுங்கு, அடுத்து மராத்தி, பின் தமிழ் என்று இருக்கும் போது தமிழுக்கு மட்டும் ஏன் செம்மொழி என்ற பட்டம்? இது "மைனாரிட்டி ரைட்" எனும் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ? என்று. இதற்கு நான் பதில் சொல்லும் முன் இந்தத் தொடர் நிறைவுற்று என் கடிதம் வெளிவரவில்லை.

ஒட்டு மொத்தத்தில் இந்திய உபகண்டத்தில் தமிழ் பற்றிய புரிதல் மிகக் கேவலமாக உள்ளது. தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லி நாங்கள் ஒரு தலைமுறை பாழாய் போனோம்!


Statement on the Status of Tamil as a Classical Language


The classical status of Tamil


Statement on the Status of Tamil as a Living Classical Language

குறும்படங்கள் "உன்குழலுக்குள்" வாராதா?

சென்னையில் நடக்கும் நாட்டார் கழக விஷயங்கள் குறித்த அழைப்பிதழ் வந்து கொண்டே இருக்கும். அங்கு இல்லையே எனும் வருத்தத்தைத்தரும் அளவு விஷயகனமுள்ளவை நடந்து வருகின்றன. இந்த அழைப்பிதழைப் பாருங்கள் (சொடுக்கினால் பெரிதாகும்). இந்தப் படங்களைக் காண வேண்டுமென்ற ஆவல். எத்தனையோ குப்பை கூளங்கள் "உன்குழல்" (YouTube) அரங்கில் வீடியோவாக வருகின்றன, தமிழ்க் குறும்படங்கள் இப்படி உன்குழல் வீடியோவாக வரும் காலம் என்றோ?

உன்னாலே-உன்னாலே

கொரிய நாட்டின் தேசியக் குறியீட்டுடன் (யின்-யான்) படம் ஆரம்பிப்பதால் மட்டும் இந்தப்படம் எனக்குப் பிடிக்கிறது என்றில்லை. மேலும் பல காரணங்களுண்டு. முதற் காரணம். படப்பிடிப்பு. என்ன இது? தமிழ் சினிமாதான் பார்க்கிறேனா இல்லை ஹாலிவுட் படம் பார்க்கிறேனா என்ற பிரம்மிப்பு. இந்த பிரம்மிப்பை கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் ஏற்படுத்தினார். ஆனால் அதில் சில சீன்கள் மட்டும். இதில் படம் முழுவதும். இதுவொன்னும் மெகா ஸ்டார்ஸ் நடிக்கும், கிகா படமில்லை. புது முகங்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். இதுவே இப்படியென்றால், தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை மீண்டும் துளிர்க்கிறது.

அடுத்த காரணம், தமிழ் சினிமா இந்த கோரமான முகங்களைக் கொண்டு, கோரமான வன்முறை காட்டி, காட்டுக் கூச்சல் போட்டு, கொச்சை வசனம் பேசி, காமெடி என்ற பேரில் இந்துநேசன் வசனம் பேசும் காலக்கட்டத்தைத் தாண்டி விட்டது என்பதற்கு அச்சாரம் போல் இந்தப் படம் அமைந்துள்ளது. இளமை உண்மையிலேயே துள்ளுகிறது. சிக்கென்ற கதாநாயகிகள். சுமாரான கதாநாயகன். மோசமில்லை. ஆனாலும் அவனது சகாக்களாக பழைய 40 வயசு ஆட்கள்தான் மீண்டும். இது தமிழகத் தலைவிதி போலும். ஆனாலும், செந்தில், கவுண்டமணி முகங்களைப் பார்த்து புண்ணாகிப் போன கண்களுக்கு இந்தப்படம் விருந்தே!

கதை! அடடே! தமிழ் சினிமாவால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதா? படக்கதை சொல்லப் போவதில்லை. ஒருமுறை கட்டாயம் பாருங்கள். இரண்டாம் முறை கூடப் பார்க்கலாம்.

விமர்சனம் படித்த போதுதான் தெரிந்தது, எனக்குப் பிடித்த 12B பட இயக்குநர்தான் இதையும் இயக்கி இருக்கிறாரென்று. ஜீவா! உமக்கு ஜீவன் இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜீவனைக் காக்கும் ஜீவ சக்தியும் இருக்கிறது!

படப்பாடல்கள் சுமார்தான் (ஹரீஸ் ஜெயராஜ்). அசல் அசின் போல் கதாநாயகி. பேர் சாதாவாம் இல்லை, சதாவாம்! அந்தக் காலத்தில் ஸ்ரீதர் காஞ்சனாவை அறிமுகப்படுத்தினார். அது போல் ஜீவா, தனிஷா என்பவரை அறிமுகப்படுத்துகிறார் (மாற்றிச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும், யார் தனிஷா, யார் சதா என்று இன்னும் பிடிபடவில்லை). வினய் தேறுவார் என்று தோன்றவில்லை. இந்தப்படத்தில் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

ஒரு காலத்தில், சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று பார்த்துவிட்டு இடையில் பல கலக்கல்கள் வந்து தமிழ் சினிமாவின் அழகியலை மாற்றிவிட்டன. மீண்டும் தமிழ் சினிமாவின் அழகியல் சரியான பாதையில் ஓடுவது போலுள்ளது. ஆனாலும் இந்த டப்பிங் வந்த பிறகு, எல்லாக் கதாநாயகிகளும் ஜோதிகா-சிம்ரன் பேசுவது போலவே உள்ளது :-)) இறைவா! இறைவா! இந்தத் தமிழை மட்டும் சினிமா உலகில் என்ன செய்வதாய் உத்தேசித்துள்ளாய்?

புயற்பேச்சுதைஃபூன் தாமரை (கொரியப் பெயர் "நாரி) இப்போது எனது தீவைத்தாண்டிக் கொண்டிருக்கிறது!150 கிமீ வேகத்தில் காற்று. ஊ! ஊ! என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது வெளியே! பிலிப்பைன்ஸ் வட கிழக்கில் உருவெடுத்த இக்கோடைப் புயல் தைவான், ஒகினவா (ஜப்பான்) நாடுகளைப் பதம் பார்த்துவிட்டு கொரியாவிற்குள் நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கிறது. பழைய படங்களில் ஆடுவார்களே, பாவடை புஸ்ஸென்று ஊதிப்பருக்க சுழன்று, சுழன்று ஆடுவார்களே! அது போன்ற நடனம். 2003-ல் முதன் முறையாக ஒரு பெரும் புயலை எதிர்பாரதவிதமாக இங்கு ச்ந்தித்தேன். அதன் வீச்சு என்னெவென்று தெரியாமலே குலை நடுக்கிப் போய் ஒரு நேரடி வருணனை இங்கு தந்தேன். மேமி என்ற அந்தப் புயல் கொடுத்த பேரதிர்ச்சிக்குப் பின் கொரியா இப்போது அசட்டையாக இருப்பதில்லை. இரண்டு நாளாகவே கப்பல்களெல்லாம் எங்கள் ஆய்வகக் கிடையில் கட்டிப் போடப்பட்டுள்ளன. இப்படிக் கப்பல்களெல்லாம் இங்கே ஒதுங்குகின்றன என்றால் புயல் வரப்போகிறது என்று நான் தெரிந்து கொள்கிறேன்!

தெற்கிலிருந்து வருவதால் உஷ்ணக்காற்றையும் கூடவே எங்கிருந்தோ கொசுவையும் இந்தப் புயல் நேற்றுக் கொண்டு வந்துவிட்டது. கொசுத்தொல்லை தாங்கவில்லை! முதல் முறையாக இங்கு இப்படியொரு அவஸ்தை! மற்றபடி இந்தப் புயல் சாது. நிறைய மழையைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறது. பயிர் அறுவடைக்கு நிற்கும் போது என்ன வேண்டியிருக்கிறது மழை?

நமக்குத்தான் புயலென்றால் பயம்! போன வாரம் ஜப்பானில் இருந்தபோது ஒரு புயல்! கருத்தரங்கு அது பாட்டிற்கு நடந்து கொண்டு இருந்தது. பாவம் சேவைக்கென்று வந்திருந்த இரு சிப்பந்திகள் புயலில் இறந்துவிட்டார்கள் என்று பத்திரிக்கை சொன்னது. ஆனால் தோக்கியோ பாட்டுக்கு வழக்கம் போல இயங்கிக்கொண்டிருந்தது! கொரியாவில் கூட மழைக்கிடையிலும் பேருந்துகள் நேரத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தன. இன்று காலை விநாயகர் சதுர்த்தி விழாவில் என்னைப் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். போகமுடியவில்லை. பஸ்ஸு போய்க் கொண்டுதான் இருந்தது. மூடிய பஸ்ஸில் 4:30 மணி நேரம் பயணப்படிருந்தால் மூச்சு முட்டி செத்துப் போயிருப்பேன் (எனக்கு காட்சி பார்க்க வேண்டும், ஓரிருமுறையாவது இறங்கி காற்று வாங்க வேண்டும்!)

இவ்வளவு புயலிருந்தும் மின்சாரம் தடைப்படவில்லை. இணையம் பழுதுறவில்லை. நேற்று கொசுத்தொல்லை தாங்காமல் இரவில் அடைக்கு ஊறப்போட்டு, இன்று அடை-அவியல் சாப்பிட முடிந்திருக்கிறது! கொஞ்சம் மெறாஸ் மிக்சரை (ஒரே காரம்!) கொறித்துக் கொண்டே உங்களுக்குச் சேதி சொல்ல முடிகிறது. புயல் எதற்கு வருகின்றதென்று தெரியவில்லை. கோணலாகச் சுற்றும் பூமி கொஞ்சம் நடுங்கும் போது இப்படியெல்லாம் ஆகிறதென்கிறார்கள். புயல் பெரும் அழிவுச்சக்தி என்று பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. எனக்கென்னவோ கடலைக் கலக்கி சுத்தி பண்ணி, காட்டைத் திருத்தி, பெருக்கிச் சுத்தம் செய்ய இப்புயல் தேவை என்று படுகிறது. எல்லாவற்றிற்கும் மேல் கவிதைக்கு இப்புயல் தேவை! என்ன வீச்சு, என்ன கம்பீரம்? என்ன இருந்தாலும் பெரும் சக்திகளுக்கு முன் நாமெல்லாம் சிறுவர்கள் தானே? துபாய்யில் மழை பார்த்ததில்லை என்கிறார்கள். இந்த மழையைக் கொஞ்சம் அனுப்பி வைத்தால் என்னவென்று தோன்றுகிறது! புயலே! நீ! வாழ்க!

ஜப்பான் விஜயம்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் ஒரு கருத்தரங்கிற்காக ஜப்பான் சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேச ஜப்பானிய இளவரசர் வந்திருந்தார். கீழே வீடியோ காண்க.ஒரு நாட்டில் சில வருடங்கள் வாழ்ந்து விட்டால் பின் அது நம் சரிதமாகிவிடுகிறது. தன்னையறியாமல் ஒரு பிடிப்பு! தோக்கியோவின் கின்சா, அசாகுசா, மெய்ஜி பூங்கா என்று சுற்றும் போதெல்லாம் நெகிழ்வாக இருந்தது. தாய் வீட்டிற்கு வருவது போல். கருத்தரங்கம் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது (அரசு அழைப்பு என்றால் சும்மாவா?) அந்த விருந்தில் எதிர்பாராத விதமாக 'விருந்தின் நாயகன்' என்ற பட்டம் எனக்கு சூட்டப்பட்டது. என்ன விஷயமென்றால் அக்கா கொடுத்த பைஜாமா, குர்தாவைப் போட்டுக் கொண்டு பளிச்சென்று இருந்தேன். அதுதான்! ஷாருகான் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டார்கள் :-)

பறவைக்கிரங்கல்


உலகம் எவ்வளவு மாறி வருகிறது. அலெக்ஸ் எனும் பேசும் பறவை இறந்துவிட்டது என்று சி.பி.எஸ் நியூஸ் இரங்கல் செய்தி வெளியிடுகிறது! இப்பேசும் பறவை பற்றிய சின்ன ஆவணப்படம் இருக்கிறது!

உலகில் அதிசயப்பட எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அறிவு என்பது மனிதனுக்கு மட்டும் எனும் மமதை என்று ஒழிகிறதோ அன்று அடக்கமும், அன்பும் பீரிட்டு எழும். இப்பறவை பேசுகிறது, கணக்குப் போடுகிறது, கல்லா? மரமா என்று உணர்ந்து சொல்கிறது! கொரியத் தொலைக்காட்சியில் ஒரு நாய் குட்டி ஒற்றை ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கும் வித்தியாசம் காட்டியதைக் கண்டு அதிசயத்தேன். இவையெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது? அறிவே மயமான ஒன்று உள்ளே இருந்து கொண்டு செயல்படுவதால்தான். பாகவதம் சொல்லிய சுகமுனி கூட ஒரு கிளி தான். வாழ்க!

அன்னமய்யா (தெலுங்கு)

அன்னமாச்சார்யா எனப்படும் அன்னமய்யா பற்றிய திரைப்படத்தை இப்போதுதான் பார்த்தேன். 1997-ல் வந்த படத்தை இப்போதுதான் பார்த்தேன். காரணம் இரண்டு. முதன் முதலாக அவர் கீர்த்தனைகளைக் கேட்டதிலிருந்து அவரிடம் ஓர் ஈர்ப்பு. இரண்டாவது ரவிசங்கர் கண்ணபிரான் அவர் ஒரு தலித் என்று எழுதியது. அவர் கீர்த்தனைக் கேட்டபோது சந்தேகம் வலுத்தது. படம் பார்க்க வேண்டிய அவசியம் வந்தது. நான் பார்த்தது ஒரு டப்பா காப்பி என்றாலும் நல்ல ஒரு இணைப்பு கீழே தந்துள்ளேன், பாருங்கள். அப்படப்பாடல்கள் கேட்க முகவரியும், அன்னமாச்சாரியார் பற்றி அறிந்து கொள்ள வலைத்தள முகவரியும் இணைத்துள்ளேன்.

15ம் நூற்றாண்டு. ஆழ்வார்கள் அவதரித்து, உடையவர் அவதரித்து, ஆச்சார்ய பரம்பரை வட வேங்கடவன் 'கோயில் ஒழுங்கு' செய்த பிறகு அவதரிக்கிறார் அன்னமய்யா. நிச்சயமாக இந்தப் போக்கின் ஒரு தெலுங்கு நீட்சியாக அவர் வருகிறார். ஆழ்வார்களைத் திருமாலின் ஆபரண, ஆயுதங்களின் அவதாரம் என்பர். அதே கோட்பாடு இங்கும் எடுத்தாளப்படுகிறது. நந்தகம் எனும் வாள் அன்னமய்யாவாக வருகிறது. ஹரி கீர்த்தனம் அவரவர் தாய் மொழியில் வரும் போதுதான் சிறப்புறும் எனும் கருத்து பாகவத இயக்கத்தின் அடிவேர். எவ்வளவுதான் தீக்ஷதர் கீர்த்தனைகளை உயர்வாகச் சொன்னாலும் வாக்கியகர்த்தா 'அன்னமய்யாவின்' கீர்த்தனைகள் முன் அவை சாதாரணமாகப் படுகின்றன. ஒன்று அறிவு ஜீவிகளுக்கு, மற்றது எல்லோருக்கும். ஆனால், சாரத்தில் இரண்டுமே சமம். 37,000 கீர்த்தனைகள் பாடி ஸ்தானத்தில் எங்கோ நிற்கிறார் அன்னமய்யா. அவர் வழியொட்டித்தான் பின்னால் தியாகய்யா வருகிறார்.

படம் சுமார்தான். ஆனால் நன்றாக ஓடியிருக்கிறது. நிறைய தமிழ்ப் படக் காப்பி. ஆந்திரா, தமிழ் நாட்டுக்காரர்கள் இனிமேல் சுவாமி படம் எடுத்தால் நல்ல காட்சிகளுக்கு கேரளாதான் போக வேண்டும் என்று தெரிகிறது. ஒன்று அங்கு, கோயில், குளம் இவை சீராக உள்ளன, இரண்டு, கோயிலுக்குள் படமெடுக்க அனுமதிக்கிறார்கள். ஆந்திர கோயில் பின்னணி இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்? ஆந்திர மண்வாடை தெரியாமலே, செட் வைத்து படத்தை முடித்து விட்டார்கள்! அட! நம்ம, படையப்பா ரம்யா கிருஷ்ணனா அது? ரொம்பபப.....அடக்கம்!! யார் அந்த அசடு மோகன்பாபு? ரொம்ப செயற்கையான படம்! ஆனாலும் சினிமா வழியில்தான் இனிமேல் நம் வாழ்வு என்றாகிப் போனபின் இம்மாதிரிப் படங்கள் தேவையாகவும் உள்ளன.

படப்பாடல்கள்

முழுப்படம்

கதைச் சுருக்கம் (ஆங்கிலத்தில்)

அன்னமாச்சாரியர் வலைத்தளம்

ANNAMAYYA
Music: M.M.Keeravani
*ing Nagarjuna, Ramyakrishna, Kasturi, Bhanupriya, Suman, Mohan Babu
Directed by K. Raghavendra Rao