அன்னமய்யா (தெலுங்கு)

அன்னமாச்சார்யா எனப்படும் அன்னமய்யா பற்றிய திரைப்படத்தை இப்போதுதான் பார்த்தேன். 1997-ல் வந்த படத்தை இப்போதுதான் பார்த்தேன். காரணம் இரண்டு. முதன் முதலாக அவர் கீர்த்தனைகளைக் கேட்டதிலிருந்து அவரிடம் ஓர் ஈர்ப்பு. இரண்டாவது ரவிசங்கர் கண்ணபிரான் அவர் ஒரு தலித் என்று எழுதியது. அவர் கீர்த்தனைக் கேட்டபோது சந்தேகம் வலுத்தது. படம் பார்க்க வேண்டிய அவசியம் வந்தது. நான் பார்த்தது ஒரு டப்பா காப்பி என்றாலும் நல்ல ஒரு இணைப்பு கீழே தந்துள்ளேன், பாருங்கள். அப்படப்பாடல்கள் கேட்க முகவரியும், அன்னமாச்சாரியார் பற்றி அறிந்து கொள்ள வலைத்தள முகவரியும் இணைத்துள்ளேன்.

15ம் நூற்றாண்டு. ஆழ்வார்கள் அவதரித்து, உடையவர் அவதரித்து, ஆச்சார்ய பரம்பரை வட வேங்கடவன் 'கோயில் ஒழுங்கு' செய்த பிறகு அவதரிக்கிறார் அன்னமய்யா. நிச்சயமாக இந்தப் போக்கின் ஒரு தெலுங்கு நீட்சியாக அவர் வருகிறார். ஆழ்வார்களைத் திருமாலின் ஆபரண, ஆயுதங்களின் அவதாரம் என்பர். அதே கோட்பாடு இங்கும் எடுத்தாளப்படுகிறது. நந்தகம் எனும் வாள் அன்னமய்யாவாக வருகிறது. ஹரி கீர்த்தனம் அவரவர் தாய் மொழியில் வரும் போதுதான் சிறப்புறும் எனும் கருத்து பாகவத இயக்கத்தின் அடிவேர். எவ்வளவுதான் தீக்ஷதர் கீர்த்தனைகளை உயர்வாகச் சொன்னாலும் வாக்கியகர்த்தா 'அன்னமய்யாவின்' கீர்த்தனைகள் முன் அவை சாதாரணமாகப் படுகின்றன. ஒன்று அறிவு ஜீவிகளுக்கு, மற்றது எல்லோருக்கும். ஆனால், சாரத்தில் இரண்டுமே சமம். 37,000 கீர்த்தனைகள் பாடி ஸ்தானத்தில் எங்கோ நிற்கிறார் அன்னமய்யா. அவர் வழியொட்டித்தான் பின்னால் தியாகய்யா வருகிறார்.

படம் சுமார்தான். ஆனால் நன்றாக ஓடியிருக்கிறது. நிறைய தமிழ்ப் படக் காப்பி. ஆந்திரா, தமிழ் நாட்டுக்காரர்கள் இனிமேல் சுவாமி படம் எடுத்தால் நல்ல காட்சிகளுக்கு கேரளாதான் போக வேண்டும் என்று தெரிகிறது. ஒன்று அங்கு, கோயில், குளம் இவை சீராக உள்ளன, இரண்டு, கோயிலுக்குள் படமெடுக்க அனுமதிக்கிறார்கள். ஆந்திர கோயில் பின்னணி இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்? ஆந்திர மண்வாடை தெரியாமலே, செட் வைத்து படத்தை முடித்து விட்டார்கள்! அட! நம்ம, படையப்பா ரம்யா கிருஷ்ணனா அது? ரொம்பபப.....அடக்கம்!! யார் அந்த அசடு மோகன்பாபு? ரொம்ப செயற்கையான படம்! ஆனாலும் சினிமா வழியில்தான் இனிமேல் நம் வாழ்வு என்றாகிப் போனபின் இம்மாதிரிப் படங்கள் தேவையாகவும் உள்ளன.

படப்பாடல்கள்

முழுப்படம்

கதைச் சுருக்கம் (ஆங்கிலத்தில்)

அன்னமாச்சாரியர் வலைத்தளம்

ANNAMAYYA
Music: M.M.Keeravani
*ing Nagarjuna, Ramyakrishna, Kasturi, Bhanupriya, Suman, Mohan Babu
Directed by K. Raghavendra Rao

1 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 9/08/2007 03:34:00 AM

//இரண்டாவது ரவிசங்கர் கண்ணபிரான் அவர் ஒரு தலித் என்று எழுதியது. அவர் கீர்த்தனைக் கேட்டபோது சந்தேகம் வலுத்தது. படம் பார்க்க வேண்டிய அவசியம் வந்தது//

அப்படி எங்கும் குறிப்பிட்டேனா கண்ணன் சார்? தலித்களை அரவணைத்து, பிரம்மம் ஒக்கடே என்று பாடல் எழுதி இருப்பார் என்று சொல்லியிருப்பேன்!

அவர் ஒரு தலித் என்று தவறான தகவல் கொடுத்துவிடக் கூடாது அல்லவா? ஒரு கால் அவர் அப்படிப் பிறந்திருந்தால் தமிழ் ஆழ்வார்கள் போல், தெலுங்கிலும் இறைத் தத்துவத்துக்கு இன்னும் ஏற்றம் கூடி இருக்கும்!

ஆனால் அவர் முற்படுத்தப்பட்ட ஸ்மார்த வகுப்பினர் என்பதாய் தான் வரலாறு சொல்கிறது!

//எவ்வளவுதான் தீக்ஷதர் கீர்த்தனைகளை உயர்வாகச் சொன்னாலும் வாக்கியகர்த்தா 'அன்னமய்யாவின்' கீர்த்தனைகள் முன் அவை சாதாரணமாகப் படுகின்றன//

புரந்தரதாசர், அன்னமய்யா இவர்கள் காலத்துக்குப் பின்னர் தான் சங்கீத மும்மூர்த்திகள் வருகிறார்கள்!
அன்னமய்ய கீர்த்தனைகளில் ஆடம்பரம் இருக்காது. எளிய தெலுங்கு தான்! "தெரு வீதில வெலுசிலே தேவதேவுடு" என்று "பாமரத்தனமாக" பாடுவார்.
அவர் வழி ஒற்றி வந்ததே தியாகராஜரின் எளிமைப் பாடல்கள்! ஒரே வித்தியாசம் தியாகராஜர் பலப்பல ராகங்களை எல்லாம் கொண்டு உருவாக்கியதால் இசைக்கும் பெரும்பணி ஆற்றிப் புகழ் பெற்று விட்டார்!

//ஆனாலும் சினிமா வழியில்தான் இனிமேல் நம் வாழ்வு என்றாகிப் போனபின் இம்மாதிரிப் படங்கள் தேவையாகவும் உள்ளன//

சூப்பர்!
இப்ப தான் அன்னமய்யா பார்க்கறீங்களா? சரி பரவாயில்லை!
அப்படியே பக்த ராமதாசு-வும் பார்த்து விடுங்கள்!

//படையப்பா ரம்யா கிருஷ்ணனா அது? ரொம்பபப.....அடக்கம்!!//

ஹிஹி!