புயற்பேச்சுதைஃபூன் தாமரை (கொரியப் பெயர் "நாரி) இப்போது எனது தீவைத்தாண்டிக் கொண்டிருக்கிறது!150 கிமீ வேகத்தில் காற்று. ஊ! ஊ! என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது வெளியே! பிலிப்பைன்ஸ் வட கிழக்கில் உருவெடுத்த இக்கோடைப் புயல் தைவான், ஒகினவா (ஜப்பான்) நாடுகளைப் பதம் பார்த்துவிட்டு கொரியாவிற்குள் நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கிறது. பழைய படங்களில் ஆடுவார்களே, பாவடை புஸ்ஸென்று ஊதிப்பருக்க சுழன்று, சுழன்று ஆடுவார்களே! அது போன்ற நடனம். 2003-ல் முதன் முறையாக ஒரு பெரும் புயலை எதிர்பாரதவிதமாக இங்கு ச்ந்தித்தேன். அதன் வீச்சு என்னெவென்று தெரியாமலே குலை நடுக்கிப் போய் ஒரு நேரடி வருணனை இங்கு தந்தேன். மேமி என்ற அந்தப் புயல் கொடுத்த பேரதிர்ச்சிக்குப் பின் கொரியா இப்போது அசட்டையாக இருப்பதில்லை. இரண்டு நாளாகவே கப்பல்களெல்லாம் எங்கள் ஆய்வகக் கிடையில் கட்டிப் போடப்பட்டுள்ளன. இப்படிக் கப்பல்களெல்லாம் இங்கே ஒதுங்குகின்றன என்றால் புயல் வரப்போகிறது என்று நான் தெரிந்து கொள்கிறேன்!

தெற்கிலிருந்து வருவதால் உஷ்ணக்காற்றையும் கூடவே எங்கிருந்தோ கொசுவையும் இந்தப் புயல் நேற்றுக் கொண்டு வந்துவிட்டது. கொசுத்தொல்லை தாங்கவில்லை! முதல் முறையாக இங்கு இப்படியொரு அவஸ்தை! மற்றபடி இந்தப் புயல் சாது. நிறைய மழையைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறது. பயிர் அறுவடைக்கு நிற்கும் போது என்ன வேண்டியிருக்கிறது மழை?

நமக்குத்தான் புயலென்றால் பயம்! போன வாரம் ஜப்பானில் இருந்தபோது ஒரு புயல்! கருத்தரங்கு அது பாட்டிற்கு நடந்து கொண்டு இருந்தது. பாவம் சேவைக்கென்று வந்திருந்த இரு சிப்பந்திகள் புயலில் இறந்துவிட்டார்கள் என்று பத்திரிக்கை சொன்னது. ஆனால் தோக்கியோ பாட்டுக்கு வழக்கம் போல இயங்கிக்கொண்டிருந்தது! கொரியாவில் கூட மழைக்கிடையிலும் பேருந்துகள் நேரத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தன. இன்று காலை விநாயகர் சதுர்த்தி விழாவில் என்னைப் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். போகமுடியவில்லை. பஸ்ஸு போய்க் கொண்டுதான் இருந்தது. மூடிய பஸ்ஸில் 4:30 மணி நேரம் பயணப்படிருந்தால் மூச்சு முட்டி செத்துப் போயிருப்பேன் (எனக்கு காட்சி பார்க்க வேண்டும், ஓரிருமுறையாவது இறங்கி காற்று வாங்க வேண்டும்!)

இவ்வளவு புயலிருந்தும் மின்சாரம் தடைப்படவில்லை. இணையம் பழுதுறவில்லை. நேற்று கொசுத்தொல்லை தாங்காமல் இரவில் அடைக்கு ஊறப்போட்டு, இன்று அடை-அவியல் சாப்பிட முடிந்திருக்கிறது! கொஞ்சம் மெறாஸ் மிக்சரை (ஒரே காரம்!) கொறித்துக் கொண்டே உங்களுக்குச் சேதி சொல்ல முடிகிறது. புயல் எதற்கு வருகின்றதென்று தெரியவில்லை. கோணலாகச் சுற்றும் பூமி கொஞ்சம் நடுங்கும் போது இப்படியெல்லாம் ஆகிறதென்கிறார்கள். புயல் பெரும் அழிவுச்சக்தி என்று பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. எனக்கென்னவோ கடலைக் கலக்கி சுத்தி பண்ணி, காட்டைத் திருத்தி, பெருக்கிச் சுத்தம் செய்ய இப்புயல் தேவை என்று படுகிறது. எல்லாவற்றிற்கும் மேல் கவிதைக்கு இப்புயல் தேவை! என்ன வீச்சு, என்ன கம்பீரம்? என்ன இருந்தாலும் பெரும் சக்திகளுக்கு முன் நாமெல்லாம் சிறுவர்கள் தானே? துபாய்யில் மழை பார்த்ததில்லை என்கிறார்கள். இந்த மழையைக் கொஞ்சம் அனுப்பி வைத்தால் என்னவென்று தோன்றுகிறது! புயலே! நீ! வாழ்க!

2 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 9/16/2007 11:13:00 PM

இன்னும் 25 ஆண்டுகளில் துபாயிலும் மழை பெய்யலாம்,அதான் பருவநிலை உலகம் முழுவதும் மாறிக்கொண்டு வருகிறதே.

நா.கண்ணன் 9/17/2007 09:44:00 AM

இன்று காலை பளிச்சென்று புலர்ந்தது. உலகம் ஸ்படிகம் போல் தெளிவாக உள்ளது. ஆயினும் இந்தத் "தாமரை" 11 பேரைப் பலி வாங்கிவிட்டதாம். காலைச்செய்தி சொல்கிறது!

துபாயில் மழையா? பெய்யலாம். இந்த எண்ணெய் வளம் காட்டுவது என்னவெனில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அது மரம், செடி கொடி கொண்டு செழிப்பாக இருந்திருக்கிறது என்பதே. பருவ நிலைகள் மாறிய வண்ணமே உள்ளன.